ரகுராமன் சம்பளப் பணத்தை மனைவி சுசீலாவிடம் கொடுத்தான்.
"அதே தொகை, அதே பங்கீடு!" என்றாள் சுசீலா.
"என் சம்பளத் தொகையை என்னால் அதிகரிக்க முடியாது. பங்கீடு செய்வதில் வேண்டுமானால் சில மாற்றங்கள் செய்யலாம்" என்றான் ரகுராமன்.
"என்ன மாற்றம்? வீட்டுச் செலவுக்கான தொகையைக் குறைத்து விட்டு, தர்மம் கொடுக்கும் தொகையை அதிகப் படுத்துவதா?" என்றாள் சுசீலா கேலியாக.
"உன்னால் வீட்டுச் செலவைக் குறைத்துக் கொள்ள முடிந்தால் அப்படிச் செய்யலாம்!" என்றான் ரகுராமன் விட்டுக் கொடுக்காமல்.
"ஆமாம், சம்பாதிப்பதில் பத்து சதவீதம் தர்மத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா?"
"அப்படி ஒன்றும் இல்லை. வருமான வரிக்குத்தான் குறிப்பிட்ட சதவீதம் என்று விதித்திருக்கிறார்கள். தர்மத்துக்கு, பத்து சதவீதத்துக்கு அதிகமாகவும் கொடுக்கலாம்!"
"உங்கள் சிந்தனையே எனக்குப் புரியவில்லை. உங்கள் வருமானத்தில் பத்து சதவீதத்தை தர்மத்துக்குக் கொடுக்கிறீர்கள், சரி. அதை ஏன் மூன்று பிரிவாகப் பிரித்துக் கொடுக்கிறீர்கள்?"
"ஒரு பிரிவு அநாதை இல்லங்களுக்கு. ஒரு பிரிவு முதியோர் இல்லங்களுக்கு. இன்னொரு பிரிவு நான் பின்பற்றும், சமூகச் சேவைகள் செய்து வரும் ஸ்வாமிஜியின் மடத்துக்கு."
"மூன்று பேருக்கும் பிய்த்துப் பிய்த்துக் கொடுப்பதை விட யாராவது ஒருவருக்குக் கொடுக்கலாமே!"
"என் வருமானம் அதிகமாக இருந்தால் மூன்று பேருக்கும் ஆளுக்குப் பத்து சதவீதம் கொடுப்பேன். என்னால் கொடுக்க முடிந்தது பத்து சதவீதம்தான் என்பதால் அதை மூன்றாகப் பிரித்துக் கொடுக்கிறேன்."
"அதுதான் ஏன் என்று கேட்கிறேன்."
"முன்காலத்தில் மனித வாழ்க்கை நான்கு நிலைகளில் இருந்தது. பிரம்மச்சரியம், இல்லறம், சுகங்களைத் துறந்து காட்டில் போய் வசிக்கும் வானப்பிரஸ்தம், துறவறம் என்று. இவர்களில் இல்லறத்தில் இருப்பவர்களுக்குத்தான் வருமானம் உண்டு. அதனால் இல்லறத்தில் இருப்பவர்கள்தான் மற்ற மூன்று நிலையில் இருப்பவர்களுக்கும் உதவி வந்தார்கள். அது அவர்கள் கடமை கூட.
"ஆனால் இப்போது இந்த நான்கு நிலை வாழ்க்கை முறை நம்மிடையே இல்லை. இல்லறம் மட்டும்தான் அப்படியே இருக்கிறது. பிரம்மச்சரியம், வானப்பிரஸ்தம், துறவறம் ஆகிய மூன்றும் இல்லை. ஆனால் இவை வேறு வடிவில் இருக்கின்றன.
"பிரம்மச்சாரிகளுக்குப் பதிலாக அநாதை இல்லங்களில் வசிக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். வானப்பிரஸ்தத்துக்குப் பதிலாக முதியோர் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வாழும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். துறவிகளுக்குப் பதிலாகத் தங்கள் வாழ்க்கையைத் துறந்து சமூக சேவைக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், மதத் தலைவர்களும் இருக்கிறார்கள். நான் போலிச் சாமியார்களை இங்கே சேர்க்கவில்லை. அவர்கள் செய்வது வியாபாரம் என்பதால் அவர்களையும் இல்லறத்தில் இருப்பவர்களாகத்தான் கருத வேண்டும்! எனவேதான் இந்த மூன்று வகையினருக்கு என்னால் முயன்ற உதவியைச் செய்து வருகிறேன்."
ரகுராமன் சொல்லி முடித்ததும், முதல் முறையாக அவனை வியப்புடனும் மதிப்புடனும் பார்த்தாள் சுசீலா. "ஆமாம் இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"என் அப்பா சொன்னார்."
"உங்கள் அப்பாவுக்கு யார் சொன்னார்கள்?"
"ஒரு பெரியவர்."
"பெரியவரா? யார் அந்தப் பெரியவர்?"
"அவர் பெயர் திருவள்ளுவர்!" என்றான் ரகுராமன்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 41இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பொருள்:
இல்லறத்தில் இருப்பவர்கள் (பிரம்மச்சரியம், வானப்ரஸ்தம், சந்நியாசம் அல்லது துறவு என்ற) மற்ற மூன்று நிலைகளிலும் இருப்பவர்கள் அறவழியில் தங்கள் வாழ்க்கையை நடத்த உதவ வேண்டும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment