About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, July 14, 2015

33. இங்கே இப்படித்தான்!

"இப்பல்லாம் அரசாங்க வேலை கிடைக்கிறதே குதிரைக் கொம்புன்னு ஆயிடுச்சு. சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி உனக்கு அரசாங்க வேலை கிடைச்சிருப்பது பெரிய விஷயம். நம்பள மாதிரி சாதாரணக் குடும்பங்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய அதிர்ஷ்டம். நல்லபடியா, பார்த்து நடந்துக்க" என்று அருணின் தந்தை  அவனுக்கு புத்தி சொல்லி அவனை வேலைக்கு அனுப்பி வைத்தார்.

அவன் அம்மா அவனைத் தனியாகக் கூப்பிட்டு, "டேய் அருண்! நீதி, நேர்மைன்னு சொல்லி உங்கப்பா தன்னோட வாழ்க்கையை வீணடிச்சுட்டாரு. நீயாவது புத்திசாலித்தனமா நடந்துக்க!" என்று அறிவுரை செய்து அனுப்பினாள்!

அலுவலகத்துக்குச் சென்று வேலை உத்தரவைக் காட்டி அருண் வேலையில் சேர்ந்தான். அவனை ஒரு இருக்கையில்  உட்கார வைத்தார்கள்.

பக்கத்து சீட்டில் இருந்த நடராஜன் நடுத்தர வயதுக்காரர். ஆனால் அருணிடம் மிகவும் நட்பாகப் பழகினார். "பொதுவா பல அரசு அலுவலகங்கள்ள எல்லா ஊழியர்களும் உட்கார இடம் இருக்காது. உன்னை மாதிரிப் புதுசா வேலைக்குச் சேர்கிறவர்களுக்கு நிரந்தர சீட் கிடைக்க ரெண்டு மூணு வருஷம் கூட ஆகும். அது வரையில் மியூஸிகல் சேர் மாதிரி யாராவது லீவில போறவங்க சீட்டில மாத்தி மாத்தி உட்கார வேண்டியதுதான். ஆனா நம்ம ஆஃபீஸ்  அப்படி இல்லை. அந்த விதத்தில நீ அதிர்ஷ்டக்காரன்தான்!" என்றார்.

ஒரு வாரம் வரை அருணுக்கு என்ன வேலை, யார் மேலதிகாரி என்றே தெரியவில்லை. பிறகு ஒருநாள் ஒரு அதிகாரி அவனைத் தன் அறைக்கு அழைத்து அவன் தன் இலாகாவில்தான் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். அவன் அவர் அறையில் இருந்தபோது அங்கே வந்த பியூனிடம், "செல்வம். இவரு என்னோட செக்‌ஷன்லதான் வேலை செய்யப் போறாரு. பாத்துக்க" என்றார்.

அதற்குப் பிறகும் அவனுக்கு வேலை எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் மாலையில் ஒரு அதிசயம் நடந்தது. பியூன் செல்வம் கையில் ஒரு பட்டியலுடனும் சில ரூபாய் நோட்டுக்களுடனும் வந்து, பட்டியலைப் பார்த்து விட்டு அவன் கையில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தான்.

"என்னங்க இது?" என்றான் அருண்.

"அதான் ரகு சார் சொன்னாரே, நீங்க அவரு செக்‌ஷன்ல வேலை செய்யப் போறதா?"

"அதுக்கு?"

"நான் போய் மீதிப் பேருக்கெல்லாம் பட்டுவாடா பண்ணணும். சார் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கங்க" என்று சொல்லி நடராஜனைக் கை காட்டி விட்டு செல்வம் போய் விட்டான்.

"என்ன சார் இது?" என்றான் அருண் நடராஜனிடம்.

"இன்னைக்கு வெள்ளிக் கிழமை இல்லையா? அதுதான் பூஜை பண்ணிப் பிரசாதம் கொடுத்துட்டுப் போறாரு!" என்றார் நடராஜன், சிரித்துக்கொண்டே. அவர் கையிலும் சில நோட்டுக்கள் இருந்தன.

"பூஜையா?"

"தம்பி. இந்த ஆஃபீஸ்ல என்ன வேலை செய்யறோம்னு உனக்குத் தெரியும்ல? தினமும் நூறு இருநூறு பேரு வந்துட்டுப் போற ஆஃபீஸ் இது. டெய்லி கலெக்‌ஷனைச் சேர்த்து வச்சு வெள்ளிக்கிழமை அன்னிக்கு எல்லோருக்கும் விநியோகம் பண்ணுவாங்க. அதைத்தான் பிரசாதம்னு சொன்னேன். யாருக்கு எவ்வளவுங்கறதுக்கெல்லாம் கணக்கு இருக்கு! அதிகாரிகளுக்கு நிறைய வரும். நீ புதுசுங்கறதினால உனக்குக் கம்மியாதான் வரும்."

"என்ன சார் நடக்குது இங்கே? இவ்வளவு வெளிப்படையாவா?"

"நமக்குள்ளதானப்பா?"

"நான் இன்னும் வேலை செய்யவே ஆரம்பிக்கலியே?"

"அதைப் பத்தி என்ன? உனக்குத்தான் செக்‌ஷன் அலாட்  பண்ணிட்டாங்களே! உனக்கும் பங்கு குடுக்கச் சொல்லி உன்னோட ஆஃபீஸர் சொல்லி இருப்பாரு!"

"ஓ! நான் அவர் ரூம்ல இருந்த போது இந்த செல்வத்துக்கிட்ட என்னைப் பத்திச் சொன்னாரு. இதுக்குத்தானா அது?"

அப்போது செல்வம் திரும்பவும் அங்கே வந்தான்.

அருண் அவரை அழைத்தான். "செல்வம் அண்ணே! இங்கே வரீங்களா?"

"என்ன? கம்மியா இருக்கா? அதையெல்லாம் உங்க ஆஃபீஸர் கிட்ட கேட்டுக்கங்க!"

"அதில்லை. எனக்கு இந்தப் பணம் வேண்டாம். இன்னிக்கு மட்டும் இல்ல, என்னிக்குமே வேண்டாம்" என்று சொல்லிப் பணத்தைத் திரும்பக் கொடுத்தான்.

"அவசரப்படாதே தம்பி" என்றார் நடராஜன். "இந்த ஆஃபீஸில பணம் இல்லாம எதுவுமே நடக்காது. இங்கே யாரும் பணம் வாங்காமயும் இருக்க முடியாது. மற்ற இடங்கள்ள நேர்மையா இருந்தவங்கள்ளாம் இந்த ஆஃபீஸுக்கு வந்த பிறகு மாறி இருக்காங்க. நான் கூட அப்படித்தான். உனக்கென்ன கஷ்டம்? நீ யார்கிட்டேயும் பணம் கேட்கப் போறதில்லே! யாரோ வசூல் பண்ணி உனக்கு ஒரு பங்கு வச்சுக்கன்னு உன் சீட்டுக்கு வந்து கொடுக்கறாங்க!"

"இல்லை சார். எந்த இடத்தில இருந்தாலும் என்னோட இயல்புப்படி நேர்மையாத்தான் இருப்பேன். இது என் அப்பா எனக்குச் சொல்லித் தந்தது" என்றான் அருண்.

இந்தக் கதையின் காணொளி வடிவத்தை இங்கே காணலாம்.


அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

பொருள்:
நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நாம் செய்யும்  செயல்கள் அறச் செயல்களாகவே இருக்க வேண்டும். ('இந்த இடத்தில் இதெல்லாம் சரியாக வராது' என்று காரணம் சொல்லி அறத்திலிருந்து வழுவக்கூடாது.)
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment