About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, July 8, 2015

27. சாப்பாட்டு ராமன்!

"ஐயையோ! இந்த சாப்பாட்டு ராமன் இங்கே எப்படி வந்தான்?" என்று பதைபதைத்தார் சமையல்காரர் ராஜகோபால்.

"வாங்க மூர்த்தி. நான் இப்பதான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போறேன். நீங்களும் என்னோட சாப்பிடலாமே!" என்றார் நீலகண்டன்.

"இல்லை இல்லை நான் இவ்வளவு சீக்கிரம் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட மாட்டேன். நீங்க சாப்பிடுங்க. நீங்க சாப்பிடும்போதே உங்ககிட்ட கொஞ்சம் பேசிட்டுக் கிளம்பிடறேன்" என்றார் மூர்த்தி.

"அப்ப காப்பி மட்டுமாவது சாப்பிடுங்க" என்றார் நீலகண்டன்.

"நிச்சயம். உங்க வீட்டு சமையல்காரர் ராஜகோபாலோட கைமணம் காப்பியில கூட ஜொலிக்குமே!" என்றார் மூர்த்தி.

"என்ன இன்று இவர் நம்மைப் புகழ்ந்து பேசுகிறார்?" என்று வியந்த ராஜகோபால் எச்சரிக்கையுடன் காப்பி கலந்து எடுத்து வந்தார்.

"உங்களுக்கு இவரைத் தெரியுமா?" என்றார் நீலகண்டன் வியப்புடன்.

"ஒரு கல்யாணத்தில பாத்திருக்கார். அப்பவே என் சமையலைப் பாராட்டி இருக்கார் சார்!" என்றார் ராஜகோபால் முந்திக் கொண்டு.

காப்பியை அருந்துவதற்கு முன்பே, "என்ன ராஜகோபால், பாலைக் கொஞ்சம் அதிகமாகக் காய்ச்சி விட்டீர்கள் போலிருக்கே! காப்பி வாசனையிலேயே தெரிகிறதே!" என்றார் மூர்த்தி.

"எனக்குத் தெரியலியே!" என்றார் நீலகண்டன்.

"அதுதானே பார்த்தேன். குற்றம் சொல்லாமல் இருக்க முடியாதே இவரால்!" என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்டார் ராஜகோபால்.

காப்பியை ஒரு வாய் உறிஞ்சிய மூர்த்தி, "ஆகா காப்பியின் மணம் அருமை. ஆமாம். எப்பவும் உங்க வீட்டிலே ஏஆர் காப்பிதானே வாங்குவீர்கள். இப்ப எம்கே பொடிக்கு மாறிட்டீங்க போலிருக்கே!" என்றார்.

"என்ன மூர்த்தி இது? காப்பியைக் குடிச்சுப் பாத்துட்டு என்ன பிராண்ட் என்றெல்லாம் சொல்றீங்களே!" என்றார் நீலகண்டன் வியப்புடன்.

'என்ன பிராண்ட் என்று மட்டுமா சொல்லுவார்? எந்தத் தோட்டத்தில விளைந்த காப்பின்னு கூடச் சொல்லுவார். மூக்குக்கும் நாக்குக்கும் அப்படி ஒரு சக்தி. நான் அனுபவிச்சிருக்கேனே!' என்று நினைத்துக்கொண்டார் ராஜகோபால்.

ரண்டு மாதங்களுக்கு முன், ராஜகோபால் ஒரு கல்யாணத்தில் சமையல் பொறுப்பை ஏற்றிருந்தார். பந்தியில் சாப்பிட்டு விட்டு, சமையற்கட்டுக்கு வந்த மூர்த்தி ராஜகோபாலிடம் வந்து, "நீங்கள்தான் சமையலா? சாப்பாடு நன்றாகத்தான் இருந்தது. ஆனா ரெண்டு மூணு விஷயத்தில் கோட்டை விட்டு விட்டீர்கள்" என்றார்.

"எதில்?" என்றார் ராஜகோபால்.

"தேங்காய்த் துவையல் அரைத்திருக்கிறீர்கள். ஆனால் அழுகல் தேங்காயைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்."

"முப்பது தேங்காய் போட்டு அரைத்திருக்கிறேன். அதில் ஒரு தேங்காய்தான் அழுகல்."

"ஒரு பால் குடத்தில் ஒரு துளி விஷம் கலந்தால் போதாதா? ...அப்புறம் மோர்க் குழம்பில் மஞ்சள் பொடி அதிகம் போட்டு விட்டீர்கள். அதனால் குழம்பில் ஒரு கசப்பு வந்து விட்டது."

"எல்லோரும் மோர்க் குழம்பு நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்."

"சொல்லி விட்டு, வாயில் தங்கி இருக்கும் இந்தக் கசப்பு எங்கிருந்து வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள்!... அப்புறம் பாயசத்தில் போட்ட முந்திரிப் பருப்பு பழைய சரக்காக இருக்கும் போலிருக்கிறது. ஒரு மாதிரி பாச்சை உருண்டை வாசனை வருகிறது."

"வேறு ஏதாவது உண்டா?"

"மற்றதெல்லாம் சின்ன விஷயங்கள். அதானால் அவற்றைச் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கு சமையல் நன்றாக வருகிறது. இது போன்ற குறைகள் வராமல் பார்த்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். வரட்டுமா? ...அப்புறம் ரசத்தில் கருவேப்பிலையைப் போட்டுக் கொதிக்க விட்டிருக்கிறீர்கள். கொதி வந்ததும் கருவேப்பிலையைப் போட்டு ரசத்தை இறக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் கருவேப்பிலையின் கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக ரசத்தில் இறங்கும். கடைசிப் பந்தியில் சாப்பிடுபவர்கள் பாவம் ரசத்துக்குப் பதிலாக கஷாயத்தைத்தான் குடிக்க வேண்டி இருக்கும்!"

புயல் போல் வந்து திடீர் மழை போல் பெய்து விட்டு மின்னல் போல் மறைந்து விட்டாரே' என்று நினைத்துக் கொண்டார் ராஜகோபால்.

'ன்று மறுபடியும் நாம் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இடத்தில் வந்து... நல்ல வேளை காப்பியை மட்டும் குடித்தார். இல்லாவிட்டால் இட்லி வேகவில்லை, தோசை கருகி விட்டது, பொங்கலில் உப்பு அதிகம் என்று ஏதாவது சொல்லி விட்டுப் போயிருப்பார்.'

"ஒரு நிமிடம் இருங்கள். கை கழுவி விட்டு வருகிறேன்" என்று நீலகண்டன் எழுந்து வெளியே போனார்.

"நான் நீங்கள் செய்த டிஃபன் அயிட்டங்களைச் சாப்பிடவில்லையே என்று வருத்தப் படாதீர்கள். 'நான் இன்னும் கொஞ்ச நேரம் கழித்துத்தான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவேன்' என்று நீலகண்டனிடம் ஒரு சால்ஜாப்புக்காகத்தான் சொன்னேன். இது நான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடும் நேரம்தான்.

"உங்கள் சமையலில் எண்ணெய், காரம், நெய் எல்லாமே தூக்கலாக இருக்கும். அதனால்தான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டேன். நான் பதமான உணவை அளவோடு சாப்பிடும் பழக்கம் உள்ளவன். என் உடம்புக்கு ஒன்றும் இல்லை. ஒன்றும் வரக் கூடாது என்றுதான் கட்டுப்பாடாக இருக்கிறேன்.

"என் நாக்கு நீளம்தான். அது ருசி பார்ப்பதில் மட்டும்தான். வயிற்றுக்குள் உணவு வகைகளை அனுப்புவதில் இல்லை. அடுத்த தடவை இங்கே வரும்போது கண்டிப்பாக உங்கள் சமையலைச்  சாப்பிடுகிறேன் அதாவது ருசி பார்க்கிறேன்" என்று எழுந்த மூர்த்தி, மேஜையின் மீதிருந்த சாம்பாரைப் பார்த்து விட்டு, "அவசரத்தில் சாம்பாரைச் சரியாகக் கொதிக்க வைக்கவில்லை போல் இருக்கிறது. பொடி வாசனை அடிக்கிறது. நீலகண்டன் பாவம் இதையெல்லாம் கவனிக்க மாட்டார்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 3
நீத்தார் பெருமை
(நீத்தார் - புலன்களை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி நெறியோடு வாழ்பவர்)
குறள் 27
சுவை ஒளி  ஊறு ஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

பொருள்:
சுவை, காட்சி, தொடு உணர்ச்சி, ஓசை, மணம் ஆகிய ஐந்து உணர்வுகளை நுகரும் ஐம்புலன்களின் பலனை உணர்ந்து அவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவனை உலகம் போற்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Connoisseur of Food' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment