About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, July 11, 2015

30. உயிர்களிடத்து அன்பு வேண்டும்!

கணபதி சிறுவனாக இருந்தபோது அவன் பார்த்த சில சம்பவங்கள் அவனை மிகவும் பாதித்து விட்டன. 

அவன் ஊர் எல்லையில் இருக்கும் ஆற்றில் கோடையில் நீர் இருக்காது. அப்போது மாலை வேளையில் அவன் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்று மணலில் விளையாடுவான். சில சமயம் மணலில் உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பான்.

ஆற்றின் ஓரத்தில் ஒரு குட்டை போல் நீர் தேங்கி இருக்கும். அந்தத் தண்ணீரில் தண்ணீர்ப் பாம்புகள் இருக்கும். சில சிறுவர்கள் அந்தப் பாம்புகளைப் பிடித்து அவற்றின் கழுத்தில் அழுத்தமாகக் கையை வைத்து மூச்சுத் திணறச் செய்து பிறகு அவற்றைச் சுழற்றி தூரத்தில் எறிவார்கள்.

இன்னும் சிலர் ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த ஆலமரத்தின் விழுதில் முடிச்சுப் போட்டு பாம்புகளின் கழுத்தை அந்த முடிச்சில் இறுக்கித் தூக்கில் போடுவார்கள். மற்ற சிறுவர்கள் இதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பார்கள்.

கணபதியால் பாம்புகள் படும் அவஸ்தையைப் பொறுக்க முடியவில்லை. ஆற்றங்கரைக்குப் போவதை நிறுத்தி விட்டான். 

திடீரென்று ஒரு நாள் வீட்டில் செய்த அசைவ உணவை உண்ணவும் மறுத்து விட்டான். அவன் பெற்றோர் வற்புறுத்தியும் அவன் கேட்கவில்லை. "ஏண்டா நீ என்ன ஐயர் வீட்டுப் பிள்ளையா?" என்று அவன் அம்மா கேட்டதற்கு "பிற உயிர்களைக் கொல்வதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது" என்றான்.

கணபதி வளர்ந்து பெரியவனாகி வேலையில் சேர்ந்ததும் வீட்டில் அவனுக்குப் பெண் பார்த்தார்கள். அவன் இயல்பை அறிந்து அசைவம் உண்ணாத குடும்பத்தில்தான் அவன் பெற்றோர் அவனுக்குப் பெண் பார்த்தார்கள். பெற்றோர்கள் தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணைப் பார்த்த பின் அவளிடம் தனியாகப் பேச விரும்பினான் கணபதி.

தனியாக இருந்த போது அவளிடம், "நம் வீட்டில், எலிப்பொறி, கொசுவத்தி, கரப்பான் கொல்லி போன்ற மற்ற உயிரினங்களைக் கொல்லும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. இதற்கு நீ சம்மதித்தால்தான் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியும்" என்றான் .

"கொசுக்கடியைத் தாங்கிக்கொண்டுதான் வாழ வேண்டுமா?" என்றாள் அந்தப் பெண்.

"வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் கொசுத்தொல்லை குறைவாகத்தான் இருக்கும். கொசுவலையில் தூங்கலாம். நம் உடலில் கொசுக்கடியைத் தடுக்கும் ஆயின்ட்மென்ட்டைத் தடவிக் கொள்ளலாம். அப்படியும் கொசு நம்மைக் கடித்தால் கையால் அதை அடித்துக் கொல்வதைத் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் உயிரினங்களை வேட்டையாடும் செயல் வேண்டாமே!" என்றான்.

அந்தப் பெண் "ஐ ஆம் சாரி" என்று சொல்லி அவனை நிராகரித்தாள்.

வேறு பல பெண்களும் அவன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. 

ஒருமுறை அவன் இது பற்றி அந்தண குலத்தைச் சேர்ந்த அவன் நண்பனிடம் கூறியபோது, "என்னடா இப்படி இருக்கிறாய்? தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது" என்றான் அவன். (எந்த சாஸ்திரம் என்று கேட்டிருந்தால் அவனிடம் பதில் இருந்திருக்காது. அவனிடம் மட்டும் இல்லை, அவனுக்கு இதை உபதேசித்த பெரியவர்களிடமும்தான்!)

"நம்மைக் கொல்ல வந்த ஜீவனைத் தற்காப்புக்காகக் கொல்வது வேறு. நாமே வலுவில் போய்ப் பிற உயிர்களைக் கொல்வது வேறு" என்றான் கணபதி.

"ஐ.நா.வில் சர்வதேசக் கொசு ஒழிப்புத் துறையில் ஒரு வேலை காலியாக இருக்கிறதாம். நீ அந்த வேலையில் சேர்ந்து ஐந்து வருடம் உலகெங்கும் சுற்றி உலகக் கொசுக்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைத்து விட்டு வா. வேலையில் சேர்ந்த பிறகு கடமைக்காகவாவது கொசு ஒழிப்பில் ஈடுபட்டுத்தானே ஆக வேண்டும்! அப்போதுதான் நீ திருந்துவாய்!" என்றான் அந்தண நண்பன்.

கணபதியின் பெற்றோர்கள் சலிப்படைந்து அவனுக்குப் பெண் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள். உங்களுக்குத் தெரிந்த, கணபதியின் நிபந்தனைகளுக்கு ஒத்து வரும் பெண் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்!

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 3
நீத்தார் பெருமை (
நீத்தார் - புலன்களை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி
நெறியோடு வாழ்பவர்)
குறள் 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

பொருள்:
எல்லா உயிர்களிடமும் கருணையோடு இருக்கும் அறவோர்தான் அந்தணர் என்று கருதப்படுவர். 

இந்தக் கதையின் காணொளி வடிவம்:


Read 'A Bride for Ganapathy'
 the English version of this story.

பொருட்பால்                                                                                                  காமத்துப்பால்





















No comments:

Post a Comment