About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, July 10, 2015

29. சாது மிரண்டால்...

குப்புசாமி வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அரசு அலுவலகத்தில் முப்பத்தைந்து வருடப் பணி. 

பொதுவாக வேலையிலிருந்து ஒய்வு பெறுபவர்களுக்குப் பெரிய அளவில் வழியனுப்பு விழா நடத்துவது அந்த அலுவலகத்தில் வழக்கம். ஒய்வு பெற்றுப் போகிறவருக்கு விலையுயர்ந்த பரிசும் வழங்கப்படும். 

குறிப்பிட்ட தொகையைச் சொல்லி அந்தத் தொகைக்கு ஈடாக என்ன பொருள் வேண்டும் என்று ஒய்வு பெறப் போகிறவரிடமே கேட்டு அதையே பரிசுப் பொருளாக வாங்கிக் கொடுப்பார்கள்.

குப்புசாமிக்கு முன்பு ஒய்வு பெற்றவர்களுக்கு ஏர் கண்டிஷனர், எல்.ஈ.டி. டிவி போன்ற பொருட்கள் பரிசாகக் கொடுக்கப்பட்டன. 

பெரிய அளவில் பணம் புழங்கும் அலுவலகம் என்பதாலும், பல ஊழியர்கள் பணி புரியும் அலுவலகம் என்பதாலும் பரிசுப் பொருள் வாங்கவும், பாராட்டு விழா நடத்தவும், ஊழியர்களிடம் பணம் வசூல் செய்வது ஒரு பிரச்னையாக இருந்ததில்லை.

ஆனால் குப்புசாமி விஷயம் வேறு. குப்புசாமிக்கு அவர் அலுவலகத்தில் சாது, சந்நியாசி, பிழைக்கத் தெரியாதவர், தானும் பிழைக்காமல் மற்றவர்களையும் பிழைக்க விடாமல் செய்பவர் என்றெல்லாம் பட்டப்பெயர்கள் உண்டு. 

பெருமளவு லஞ்சப் பணம் புழங்கும் அந்த அலுவலகத்தில் குப்புசாமி ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியது கிடையாது.

தன் வேலையை முறையாகச் செய்வது என்ற கொள்கையை வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் முதல் ஒய்வு பெறும் நாள் வரை தவறாமல் கடைப் பிடித்தவர் குப்புசாமி.

ஆயினும் அவர் யாரிடமும் சண்டை போட்டதில்லை. விதிகளுக்கு முரணாக எதையாவது செய்யம்படி அவர் மேலதிகாரிகளோ, மற்ற ஊழியர்களோ அழுத்தம் கொடுத்தால், 'முடியாது' என்று ஒரே வார்த்தையில் மறுத்து விடுவார்.

'நான் நேர்மையானவன். விதிகளுக்கு முரணாக எதுவும் செய்ய மாட்டேன்' என்றெல்லாம் தன்னிலை விளக்கம் அளிக்க மாட்டார். 

விவாதத்தில் ஈடுபட்டால் ஒரு நிலையில் மற்றவர் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று  நினைத்தாரோ என்னவோ! இதனால் அவருக்குக் 'கல்லுளி மங்கன்' என்றும் ஒரு பெயர் உண்டு.

"மனிதன் வாயைத் திறந்து பேசினால் எதையாவது சொல்லி அவரைச் சம்மதிக்க வைத்து விடலாம். வாயையே திறக்காமல் சின்னக் குழந்தைகள் பிடிவாதமாகத் தலையை மட்டும் ஆட்டி 'முடியாது' என்று சொல்லுமே, அதுபோல் 'முடியாது' என்று ஒரே வார்த்தையில் பேச்சை முடித்து விடுகிறாரே, இவரிடம் எப்படிப் பேச முடியும்?" என்று அவரது மேலதிகாரி ஒருவர் ஒரு ஊழியரிடம் ஒரு முறை அலுத்துக் கொண்டார்.

குப்புசாமியின் வழியனுப்பு விழா எளிமையாக நடந்து முடிந்தது. அருகில் இருந்த டீக்கடையில் வாங்கிய எளிமையான சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டன.

சில மேலதிகாரிகள் உட்படப் பல ஊழியர்கள் 'வேறு வேலை' காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஒப்புக்கு ஓரிருவர் குப்புசாமியின் கடின உழைப்பைப் பற்றிப் பேசினர். ஒரு ஊழியர் 'குப்புசாமி மற்றவர்களுக்கு இன்னும் சிறிது ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் அவருக்கும், மற்றவர்களுக்கும் உதவியாக இருந்திருக்கும்' என்று குறிப்பிட்டார்.

ஒரு சுமாரான சுவர்க் கடிகாரம் 'நினைவுப் பரிசாக' வழங்கப்பட்டது. குப்புசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்துச் சுருக்கமாகத் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

பொதுவாக ஒய்வு பெற்ற ஊழியருக்கு ஒய்வு பெற்ற இரண்டு மாதங்களில் ஓய்வூதியம் சாங்ஷன் ஆகி விடும். ஆனால் குப்புசாமிக்கு ஆறு மாதங்கள் ஆகியும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. 

தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, அவர் வேலை பார்த்த அலுவலகத்திலிருந்து விவரங்கள் வரவில்லை என்று சொன்னார்கள். குப்புசாமி தான் வேலை பார்த்த அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தார்.

"எப்போதோ அனுப்பி விட்டோமே!" என்றார் இதற்குப் பொறுப்பான ஊழியர்.

"பொய் சொல்லாதீர்கள்" என்றார் குப்புசாமி. 

அவருடைய குரல் உயர்ந்திருந்ததை ஊழியர் கவனித்தார்.

"என்னிடம் கேட்காதீர்கள். ஆஃபீஸரிடம் போய்க் கேட்டுக் கொள்ளுங்கள்" என்றார் ஊழியர் அலட்சியமாக.

"எங்கே உங்கள் ஆஃபீஸர்? வெளியே வரச் சொல்லுங்கள் அவரை." 

குப்புசாமியின் குரல் ஓங்கி ஒலித்தது. அலுவலகம் முழுவதும் அவர் குரல் கேட்டது. பல ஊழியர்கள் ஆச்சரியத்துடன் அவர் பக்கம் திரும்பினர். பக்கத்து அறையிலிருந்த அதிகாரி வெளியே வந்தார். 

"என்ன இங்கே சத்தம்?" என்றார் தோரணையாக.

"வாருங்கள் மிஸ்டர் தர்மலிங்கம். என் பென்ஷன் பேப்பர்களை அனுப்பி விட்டதாக உங்கள் ஊழியர் பொய் சொல்கிறார். கொஞ்சம் விசாரியுங்கள்." 

குப்புசாமியின் குரல் சற்றும் இறங்கவில்லை! குப்புசாமியால் இப்படிப் பேச முடியுமா என்று அவரது முன்னாள் சக ஊழியர்கள் நம்ப முடியாமல் பார்த்தனர்.

"இங்கே பாருய்யா! பொய்ன்னு எப்படிச் சொல்றே?" என்றார்  ஊழியர்  கோபத்துடன்.

"இங்கே பாருங்கள் மிஸ்டர் தர்மலிங்கம். உங்கள் ஊழியரைக் கொஞ்சம் மரியாதையாகப்  பேசச் சொல்லுங்கள்"  என்றார் குப்புசாமி. "அனுப்பி விட்டீர்கள் என்றால் என்றைக்கு அனுப்பினீர்கள், லெட்டர் நம்பர் என்ன என்ற விவரங்கள் வேண்டும் எனக்கு."

"நாளைக்கு வாருங்கள். பார்த்து வைக்கிறேன்" என்றார் அதிகாரி.

"நாளைக்கெல்லாம் வர முடியாது. ஒரு மாதத்தில் அனுப்ப வேண்டிய பேப்பரை ஆறு மாதம் ஆகியும் அனுப்பவில்லை. விவரம் தெரியாமல் நான் இந்த ஆஃபீஸை விட்டுப் போக மாட்டேன்"

"கொஞ்சம் பார்த்துச் சொல்லேன்யா!" என்றார் அதிகாரி ஊழியரிடம்.

"தேட வேண்டும் சார். இப்போது முடியாது" என்றார் ஊழியர் பிடிவாதமாக.

அதிகாரி குப்புசாமியையும் ஊழியரையும் மாற்றி மாற்றிப் பார்த்து விட்டு, ஊழியரிடம் குனிந்து, "அவர் ஃபைலைத் தேடி எடுங்கள். ஆபீசுக்கு வந்திருக்கிற பொது மக்கள் வேறு வேடிக்கை பார்க்கிறார்கள்" என்றார் தாழ்ந்த குரலில்.

ஊழியர் சற்று நேரம் தேடி விட்டு, "இங்கேதான் இருக்கிறது. நாளைக்கு அனுப்பி விடுகிறேன்" என்றார் அதிகாரியிடம், சுரம் இறங்கிய குரலில்.

"அப்படியானால் அனுப்பி விட்டேன் என்று நீங்கள் முதலில் சொன்னது பொய்தானே?" என்றார் குப்புசாமி குரலை உயர்த்தி. "ஏன் இத்தனை நாட்களாக இதை ப்ராசஸ் பண்ணவில்லை? பொது மக்களிடம் லஞ்சம் வாங்குவது போல் என்னிடமும் ஏதாவது கறக்கலாம் என்று நினைத்தீர்களா?"

"நீங்கள் கிளம்புங்கள் சார்! நாளைக் காலையில் முதல் வேலையாக இதை அனுப்பி விடுகிறேன். இது என்னுடைய பொறுப்பு" என்றார் அதிகாரி கெஞ்சாத குறையாக.

"ஏன், இன்றைக்கே அனுப்பலாமே!" என்று ஆரம்பித்த குப்புசாமி, "சரி. நாளைக்கே அனுப்புங்கள். நாளை மறுநாள் இந்த பேப்பர் தலைமை அலுவலகத்துக்கு வராவிட்டால் உங்கள் மீது விஜிலன்ஸில் புகார் கொடுப்பேன்!" என்று எச்சரித்து விட்டுக் கிளம்பினார்.

அவர் சென்றதும் அதிகாரி ஊழியரிடம், "இதை இன்றைக்கே பிராசஸ் பண்ணி அனுப்புங்கள். நாளைக்குத் தள்ளிப் போட வேண்டாம்!" என்றார்.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 3
நீத்தார் பெருமை
(நீத்தார் - புலன்களை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி 
நெறியோடு வாழ்பவர்)
குறள் 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

பொருள்:
தங்கள் நற்குணங்களால் உயர்ந்த நிலையில் இருக்கும் சான்றோர்கள் கோபம் கொண்டால், அந்தக் கோபத்தின் கடுமையை மற்றவர்களால் ஒரு கணம் கூடத் தாங்க முடியாது. ('குணங்களால் உயர்ந்த சான்றோர்களுக்குக் கோபம் வந்தால் அந்தக் கோபம் அவர்களிடம் ஒரு கணம் கூட நிலைத்திருக்காது - அவர்கள் உடனே சாந்தம் அடைந்து விடுவார்கள்' என்று திரு மு.கருணாநிதி அவர்கள் இந்தக் குறளுக்குப் பொருள் கூறி இருக்கிறார். இதுவும் பொருத்தமான பொருளாகத்தான் தோன்றுகிறது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'When the virtuous is provoked'
 the English version of this story.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment