About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, January 30, 2018

125. காடாறு மாதம்!

"பி.ஈ படிச்சுட்டு அவன் அவன் அம்பதாயிரம், ஒரு லட்சம்னு சம்பளம் வாங்கறான். நமக்கு என்னடான்னா பிச்சை போடற மாதிரி பத்தாயிரம் ரூபா ஸ்டைபெண்ட் கொடுக்கறாங்க. என்ன பொழைப்புடா இது?" என்று அலுத்துக் கொண்டான் சுகுமார்.

"இது ட்ரெயினிங் பீரியட்தானே? தங்க இடம் கொடுத்து, சாப்பாடு போட்டு, அதுக்கு மேல பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்களே, அது போதாதா?" என்றான் ராம்குமார்.

"உன்னை மாதிரி பிச்சைக்காரனுக்கெல்லாம் இது பெரிய தொகையா இருக்கலாம். என்னை மாதிரி ராயல் ஃபேமிலில பொறந்து வளர்ந்தவங்களுக்கெல்லாம் இது ஒரு பிச்சைக்காசுதான். தண்ணி அடிக்கறதை விடு, சிகரெட்டுக்குக் கூடப் பத்தாதே இது!" என்றான் சுகுமார்.

"ஆறு மாசத்துக்குத்தானே இந்த ஸ்டைபெண்ட்? அப்புறம்தான் அம்பதாயிரம் சம்பளம் வருமே நமக்கு?" என்றேன் நான் சமாதானமாக, ராம்குமாரைப் பார்த்தபடி.

எங்கெங்கோ படித்து விட்டு, இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபின், அறிமுகம் ஆனவர்கள் நாங்கள். இந்த நிலையில், சுகுமார், ராம்குமாரைப் பிச்சைக்காரன் என்று தூக்கி எறிந்து பேசியது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், ராம்குமார் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதாது போல், மௌனமாக இருந்து விட்டான்.

"இந்தக் காட்டில ஒரு ட்ரெயினிங் ஸ்கூல் கட்டி, அதில நம்மளைத் தங்க வச்சிருக்காங்க. ஆறு மாசம் ஜெயில் வாழ்க்கைதான் நமக்கு. ஞாயித்துக்கிழமை ஒரு நாள்தான், ஜெயில் கைதிகள் பரோல்ல போற மாதிரி, வெளியில போயிட்டு வர முடியும்!" என்று புலம்பினான் சிவசு என்கிற சிவசுப்பிரமணியன்.

று மாதங்கள் ஓடி விட்டன. எங்கள் பயிற்சிக் காலம் முடிந்தது. விடுதியில் கடைசி நாள். அனைவரும் ஒன்று கூடி இருந்தோம்.

"ஆறு மாசத்துல அறுபதாயிரம் ரூபா மொத்த சம்பளம்! ஒரே மாசத்துல சம்பாதிக்க வேண்டிய தொகை இது. என்ன செய்யறது? நீங்கள்ளாம் என்ன பண்ணினீங்களோ தெரியாது. நான் மாசா மாசம் எங்கப்பாகிட்டேயிருந்து செலவுக்குப் பத்தாயிரம் ரூபா வாங்கினேன்!" என்றான் சுகுமார்.

"நான் அவ்வளவு மோசம் இல்ல. அறுபதாயிரம் ரூபாயில ஒரு இருபதாயிரம் ரூபாய் மிச்சம் பிடிச்சிருக்கேன்" என்றேன் நான்.

ஒவ்வொருவரும் தாங்கள் சேமித்த தொகை எவ்வளவு என்று சொன்னார்கள். கடைசியாக ராம்குமார் என்ன சொல்லப் போகிறான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நானும் கொஞ்சம் மிச்சம் பிடிச்சிருக்கேன்" என்றான் ராம்குமார்.

"கொஞ்சம்னா, எவ்வளவு?"

"இங்க செலவு என்ன இருக்கு? லாண்டரி கூட ஃப்ரீதானே? மாசம் ஆயிரம் ரூபா செலவானா அதிகம். மீதி சுமார் அம்பத்தஞ்சாயிரம் ரூபா அப்படியே பேங்க் அக்கவுண்ட்டிலதான் இருக்கு!" என்றான் ராம்குமார்.

"கஞ்ச மகாப் பிரபுன்னு உனக்குப் பட்டம் கொடுக்கலாம்டா! உனக்கெல்லாம் எதுக்கு சம்பளம்? சாப்பாடு போட்டுட்டா போதும், நாய் மாதிரி உழைக்கத் தயாரா இருப்ப போலருக்கு!" என்றான் சுகுமார் ஏளனத்துடன்.

"சுகுமார்! திஸ் இஸ் டூ மச்! ராம்குமார் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கலாம். அதனால, சிக்கனமா இருக்கறது அவனுக்கு இயல்பா இருக்கலாம். இதுவரையிலும், அவன் தன் குடும்பத்தைப் பத்தி எதுவுமே சொன்னதில்லை. அவனை மட்டமாப் பேசறது தப்பு" என்றேன் நான்.

"நான் ஒண்ணும்  தப்பா சொல்லலியே! அவனுக்குப் பணமே அவசியம் இல்லேன்னு சொன்னேன். அவ்வளவுதான்" என்றான் சுகுமார்.

"சரி. ஹாஸ்டல் வாழ்க்கை இன்னியோட முடிஞ்சு போச்சு. இனிமே நாம சென்னையிலதான் தங்கப் போறோம். என் வீடு மாம்பலத்தில இருக்கு. உன் வீடு எங்கே இருக்கு?" என்றேன் ராம்குமாரிடம்.

"எம் ஆர் சி நகர்" என்றான் ராம்குமார்.

"அது மேட்டுக்குடி ஏரியா ஆச்சே! அங்க எங்கே தங்கப் போறே நீ? ஐயப்பன் கோவில் வாசலிலேயா?" என்றான் சுகுமார் இளக்காரமாக.

"உன் அப்பா என்ன செய்யறாரு?" என்றேன் நான்.

"ஒரு கம்பெனியில வேலை செய்யறாரு?"

"என்ன வேலை? எந்தக் கம்பெனி?"

"மானேஜிங் டைரக்டர். நம்ப கம்பெனியிலதான்!" என்றான் ராம்குமார், அமைதியாக.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து.


பொருள்:  
பணிவு என்பது அனைவருக்கும் ஏற்ற பண்பு. அதிலும், செல்வம் படைத்தவர்களிடம் இருக்கும் பணிவு, அவர்களுக்கு இன்னொரு செல்வமாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Six Months of Forest Lifethe English version of this story.
குறள் 124 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

















Wednesday, January 17, 2018

124. அரசியல் பிரவேசம்!

"இன்னிக்கு நடிகர் சௌம்யன் தன்னோட அரசியல் பிரவேசத்தைப் பத்தி அறிவிக்கிறதா சொல்லியிருக்காரே! என்ன முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறீங்க?" என்றான் சங்கர்.

"இதில என்ன சந்தேகம்? அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னுதான் அறிவிப்பார். அரசியல்ல இறங்கப் போறதில்லன்னு சொல்றதா இருந்தா, சாதாரணமா சொல்லி இருப்பாரே! இது மாதிரி தேதி எல்லாம் கொடுத்து அறிவிக்கிறதுன்னா, அரசியல்ல குதிக்கப் போறதாத்தான் அர்த்தம்" என்றான் நடராஜ்.

இருவருமே பத்திரிகை நிருபர்கள். வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினாலும், அடிக்கடி சந்தித்துத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

"அவர் அப்படிப் பண்ணினார்னா, எனக்கு அவர் மேல இருக்கிற மதிப்பு கொஞ்சம் குறைஞ்சுடும்!" என்றான் சங்கர்.

"ஏன், அவர் அரசியலுக்கு வரது உங்களுக்குப் பிடிக்கலியா?" என்றான் நடராஜ்.

"எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கலைங்கறது விஷயம் இல்ல. இத்தனை வருஷமா அவர் சினிமாவைத் தவிர மத்த விஷயங்கள்ள மூக்கை நுழைக்காம ரொம்ப கண்ணியமா நடந்துக்கிட்டு இருந்திருக்காரு. சினிமாவில கூட தனக்கு நடிப்பைத் தவிர வேற எதுவும் தெரியாது, நடிப்பில் கூட தான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு வந்திருக்காரு. இப்ப சில பேர் அவர் அரசியலுக்கு வரணும்னு சொல்றதுனால, அவர் அப்படி ஒரு முடிவை எடுத்தா, அது தன்னோட திறமைகள் என்ன, எல்லைகள் என்னன்னு கவனமா சிந்திச்சு, இத்தனை வருஷமா அவர் நடந்துக்கிட்டதுக்கு முரணாக இருக்கும்கறது என்னோட கருத்து."

"பாக்கலாம், என்ன செய்யப் போறார்னு! இன்னும் ஒரு மணி நேரத்தில தெரிஞ்சுடப் போகுது!"

டிகர் சௌம்யனின் ஊடக சந்திப்பு ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெரிய மண்டபம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களால் நிரம்பி வழிந்தது.

சரியாகக் காலை 11 மணிக்கு, சௌம்யன் பேச ஆரம்பித்தான்.

"உங்களை எல்லாம் இந்த மண்டபத்துக்கு வரவழைச்சதுக்கு நீங்க என்னை மன்னிக்கணும். நான் இந்த அறிவிப்பை, என் வீட்டில இருந்துக்கிட்டே, ஒரு அறிக்கையா வெளியிட்டிருக்கலாம். ஆனா, சில விஷயங்களைத் தெளிவா, விளக்கமா சொல்லணும்னுதான் இந்த ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணினேன்.

"நான் அதிகம் படிக்கல. நான் வேலைக்குப் போயிருந்தா, எனக்கு ஏதாவது சின்ன வேலைதான் கிடைச்சிருக்கும். ஏதோ, என்னோட அதிர்ஷ்டம், நண்பர்களோட விளையாட்டா நாடகங்கள்ள நடிச்சுக்கிட்டிருந்தேன். 

"மரியாதைக்குரிய டைரக்டர் நாராயணன், நான் நடிச்ச ஒரு நாடகத்தைப் பாத்துட்டு, எனக்கு சினிமாவில வாய்ப்புக் கொடுத்தார். என்னோட நடிப்பு மக்களுக்குப் பிடிச்சதனால, நான் ஒரு பெரிய நடிகனாயிட்டேன்! 

"ஆனா, இப்பவும், என்னை விட நல்லா நடிக்கக் கூடிய பல நடிகர்களோட நடிப்பைப் பாத்து, மனசுக்குள்ள, 'இவங்களோட நடிப்புக்கெல்லாம் முன்னே என் நடிப்பு எம்மாத்திரம்?'னு அடிக்கடி நெனச்சுக்கிட்டுத்தான் இருப்பேன். இதை நான் பல தடவை வெளியிலேயும் சொல்லி இருக்கேன்.

"நான் ஒரு கார் தயாரிக்கிற தொழில்ல ஈடுபடப் போறேன்னு சொன்னா, எல்லாரும் என்ன சொல்லுவாங்க? வங்கியில கடன் கேட்டா, அவங்க என்ன சொல்லுவாங்க? 'உங்களுக்கு இந்தத் தொழில்ல என்ன அனுபவம் இருக்கு?'ன்னு கேக்க மாட்டாங்களா?

"ஆனா, நான் ஏதாவது ஒரு காரோட விளம்பரப் படத்தில் நடிச்சு, 'இதுதான் மிகச் சிறந்த கார்'னு சொன்னா, என் பேச்சை நம்பி, சில பேர் அந்தக் காரை வாங்கலாம்! 'காரைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?'னு அப்ப யாரும் கேக்க மாட்டாங்க! அதுதான் நடிகனா இருக்கிறதில ஒரு அட்வான்ட்டேஜ்! 

"ஆட்டோமொபைல் எஞ்சினீரிங் படிச்ச ஒத்தர், காரைப் பத்தி நல்லா ஆராய்ந்து, இந்தக் காரோட அமைப்பு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றதை விட, காரைப் பத்தி எதுவுமே தெரியாத நான் சொல்ற கருத்துக்கு அதிக மதிப்பு இருக்கும்! இது தப்பு இல்லியா? அதனாலதான், நான் விளம்பரப் படங்கள்ள நடிக்க ஒத்துக்கறதுல்ல.

"எல்லாரும் செய்யற மாதிரியே, நானும் அரசியல் நடப்புகளை கவனிச்சுக்கிட்டிருக்கேன். தேர்தல்கள்ள ஓட்டுப் போட்டுக்கிட்டிருக்கேன். ஆனா, இதுவரையிலும் எந்த ஒரு நிகழ்வையும் பத்தி நான் கருத்துச்  சொன்னதில்லை. எந்த ஒரு கட்சியையோ, தலைவரையோ ஆதரிச்சோ, எதிர்த்தோ பேசினதில்ல.

"அரசியல்ல, பல தலைவர்கள், தொண்டர்களா இருந்துதான் தலைவர்களா ஆகியிருக்காங்க. நான் என்னோட சினிமா பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி, ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சு, ஆட்சியைப் பிடிக்கணும்னு நெனைக்கறது ஹெலிகாப்டர்ல வந்து ஒரு வீட்டோட மொட்டை மாடியில இறங்கற மாதிரி! ஒரு வீட்டுக்குள்ள நுழையணும்னா, வாசப்படி வழியாத்தான் நுழையணும்னு நான் நினைக்கறேன்.

"ஒரு அரசியல் கட்சித் தலைவரோ, ஒரு பிரபல தொழில் அதிபரோ, சினிமாவில சேர்ந்து ஹீரோ ஆகணும்னு யாராவது சொல்லுவீங்களா? ஆனா, ஒரு நடிகன் அரசியல் தலைவனாகணும்னு மட்டும் ஏன் சொல்றீங்க? நடிகன்னா, அவனுக்கு எல்லாத் தகுதியும் இருக்குன்னு அர்த்தமா?

"எனக்கு எப்பவாவது அரசியல்ல இறங்கணும்னு தோணினா, எந்தக் கட்சியோட செயல்பாடுகள்ள எனக்கு அதிக நம்பிக்கை இருக்கோ, அந்தக் கட்சியில ஒரு தொண்டனா சேருவேன். அப்படி எந்தக் கட்சியும் புடிக்காட்டா, அரசியலுக்கு வராமயே இருப்பேன். 

"இப்ப நான் எந்தக் கட்சியிலேயும் இல்லைங்கறதினால, எனக்கு எந்தக் கட்சியையும் பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை. அரசியல்ல ஈடுபடறதில இப்ப எனக்கு விருப்பம் இல்லைன்னு அர்த்தம். அவ்வளவுதான்!

"நான் என்னோட வாழ்க்கையில இத்தனை வருஷமா கடைப்பிடிச்சுக்கிட்டிருக்கிற ஒரு விஷயம் என்னோட தகுதி, என்னோட நிலைமை இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்குத் தகுந்தாப்பல நடந்துக்கறதுதான். 

"ஒரு நடிகனா நான் எந்த ஒரு வேஷமும் போடலாம். ராஜாவா நடிக்கலாம், பிரதமரா நடிக்கலாம், அமெரிக்க ஜனாதிபதியா நடிக்கலாம், மகாத்மா காந்தியா கூட நடிக்கலாம். 

"ஆனா, நான் ஒரு நடிகன் என்பதை எப்பவுமே நினைவில் வச்சுக்கிட்டிருப்பேன். நடிப்புத் தொழில்ல எனக்குக் கிடைச்சிருக்கிற அங்கீகாரத்திற்குக் கூட என்னோட இந்த மனப்பான்மைதான் காரணம் என்பது என்னோட கருத்து.

"எனவே, நான் அரசியல் கட்சி எதுவும் தொடங்கப் போவதில்லை. உங்கள் எல்லோரையும் போல அரசியலை கவனித்து, தேர்தல்ல என் விருப்பப்படி ஓட்டுப் போட்டுக்கிட்டிருப்பேன். 

"என் மேல நீங்க எல்லோரும் வச்சிருக்கிற நம்பிக்கைக்கு என்னோட நன்றி. இந்த நம்பிக்கையை நான் பெற்றது ஒரு நடிகனாகவும், ஒரு மனிதனாகவும் நான் செயல்பட்ட விதம்தான். 

"அதேபோல் தொடர்ந்து செயல்படுவதுதான் நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும், நல்லெண்ணத்துக்கும் நான் செய்யக் கூடிய கைம்மாறு."

தன் பேச்சை முடித்து விட்டு, அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு சௌம்யன் வெளியேறினான். செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.

"சௌம்யன் என்னை ஏமாத்தல. அவர் மேல எனக்கு இருக்கிற மதிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு!" என்று நடராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சங்கர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது.


பொருள்:  
தன் நிலையிலிருந்து பிறழாமல் அடக்கமாகச் செயல்படுபவனுடைய தோற்றம் மலையை விட உயர்ந்து காணப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Star Speaksthe English version of this story.
 குறள் 123 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்



Wednesday, January 10, 2018

123. ஜூனியர், ஜூனியர்!

"இன்னும் சீனியர் வரலையே?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜேஷ்.

"இல்லை. வழக்கம் போல, இன்னிக்கும் லேட்தான் நீ!" என்றான் சிவா.

"நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடிஞ்சா, நேரத்துக்கு வரலாம். தினமும் வீட்டுக்குப் போக ஒம்பது பத்துன்னு ஆகுது. காதலியோடு ஒரு சினிமாவுக்குப் போகக் கூட முடியல!"

"உனக்குக் காதலி இருக்காளா என்ன? எங்கிட்ட சொல்லலியே!"

"ஒரு பேச்சுக்குச் சொன்னேன். இனிமேதான் யாரையாவது தேடிப் பிடிக்கணும்! அதுக்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்குது, இந்த வக்கீலுக்கு ஜூனியரா இருக்கற தொழில்ல? உன்னை மாதிரி வேலையைக் கட்டிக்கிட்டு அழ என்னால முடியாது. ஏன்தான் இந்த வக்கீலுக்குப் படிச்சோமோன்னு இருக்கு. அவன் அவன் படிச்சு முடிச்சதும், ஏதாவது ஒரு வேலைக்குப் போய், சம்பளம் வாங்கிக்கிட்டு, ஹாயா இருக்கான்! நம்ம வக்கீல் தொழில்லதான், சீனியர்கிட்ட அடிமை சேவகம் பண்ணிட்டு, அப்புறம்தான் பிராக்டீஸ் பண்ண முடியும்கற நிலைமை!"

"இரைஞ்சு பேசாதே! சீனியர் வர நேரம். நல்ல வேளையா, டைப்பிஸ்ட் சுகந்தி கூட இன்னிக்கு லீவு!" என்றான் சிவா,

அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, வக்கீல் ராமதுரை உள்ளே நுழைந்தார்.

"உக்காருங்க, உக்காருங்க. என்ன சிவா, நான் சொன்ன ப்ரீஃபை ரெடி பண்ணிட்டியா?" என்றார்.

"முடிச்சுட்டேன், சார். உங்க மேஜை மேல வச்சிருக்கேன்" என்றான் சிவா.

"சரி. இப்ப என்ன செஞ்சுக்கிட்டிருக்க?"

"சார்! அடுத்த வாரம் மகாதேவனோட பிராப்பர்டி மேட்டர் ஹியரிங்குக்கு வருது. அதுக்கு ரெஃபரன்ஸ் ஜட்ஜ்மென்ட் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"குட். நம்ப லைப்ரரில சரியா ரெஃபரன்ஸ் கிடைக்கலேன்னா, ஹைகோர்ட் லைப்ரரில போய்ப் பாரு. நீ கலெக்ட் பண்ணின ரெஃபரன்ஸை எல்லாம் நாளைக்கு நான் பாத்துட்டு, வேற ஏதாவது வேணுமான்னு சொல்றேன். ராஜேஷ், நீ என்ன பண்ணிக்கிட்டிருக்க?"

"சார்! ராமகிருஷ்ணனோட இன்ஷ்யூரன்ஸ் கேஸ் டாகுமெண்ட்ஸை எல்லாம் அரேஞ்ஜ் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"மூணு நாளா இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கே! நான் ஆஃபீஸ்ல இல்லாதபோது, நீ ஒரு வேலையும் செய்யறதில்ல போலருக்கே!"

"இல்ல, சார்! பேப்பர்ஸ் எல்லாம் நிறைய இருக்கு..."

"எனக்குத் தெரியாதா? ரெண்டு மணி நேர வேலை இது. இங்க பாரு. என்னை மாதிரி ஒரு பிஸியான வக்கீல்கிட்ட ஜூனியரா இருக்கறது பெரிய லேர்னிங் ஆப்பர்சூனிட்டி. அதை சரியாப் பயன்படுத்திக்கலேன்னா, உனக்குத்தான் நஷ்டம். சரி. நான் கோர்ட்டுக்குப் போகணும். சாயந்திரம் வந்து பாக்கறேன். முக்கியமா யாராவது என்னைப் பாக்க வந்தா, எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்று சொல்லி விட்டு வெளியேறினார் ராமதுரை.

"கொடுக்கறது சுண்டைக்கா சம்பளம். வேலை மட்டும் மலை மாதிரி குவிஞ்சுக்கிட்டே இருக்கும்!" என்றான் ராஜேஷ், அவர் போனவுடன்.

"அவர்தான் சொன்னாரே, இது ஒரு லேர்னிங் ஆப்பர்சூனிட்டின்னு! இதை ஒழுங்காப் பயன்படுத்திக்கிட்டாத்தான், ஏர்னிங் ஆப்பர்ச்சுனிடி வரும்!" என்றான் சிவா.

"இவரை மாதிரி ஆசாமிகள் எல்லாம் உன்னை மாதிரி இளிச்சவாயன் கிடைச்சா, அவன் தலையில நல்லா மொளகா அரைப்பாங்க! நாமளும் ஆறு மாசமா இவருகிட்ட ஜூனியரா இருக்கோம். என்னத்தைப் பெரிசாக் கத்துக் கொடுத்துட்டாரு நமக்கு?"

"டேய்! இது காலேஜ் இல்லை, யாராவது நமக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு. வேலையை செஞ்சுக்கிட்டேதான், நாம வேலையைக் கத்துக்க முடியும். ரெண்டு வருஷம் பொறுமையா இருந்து, அவர் சொல்ற வேலையைச் செஞ்சுக்கிட்டு, அவர் செயல்படறதை கவனிச்சுப் பல விஷயங்களைக் கத்துக்கிட்டா, அப்புறம் நாம தனியா பிராக்டீஸ் பண்ண முடியும்."

"நெனச்சுக்கிட்டிருக்க நீ! அவர் தொண்ணுறு வயசு வரையிலும் பிராக்டீஸ்  பண்ணுவாரு. அதுவரையிலும், நீ அவர்கிட்ட ஜூனியராத்தான் இருக்கப் போற! அவரும் உன்னை வளர விட மாட்டாரு. நீயும் தைரியமா வெளியில வர மாட்டே!"

"சரி, நீ என்ன பண்ணப் போற?"

"ஆறு மாசம் பாத்தாச்சு. இவர் நமக்கு நல்ல சம்பளமும் கொடுக்க மாட்டாரு. நாம கத்துக்கற அளவுக்கு முக்கியமான வேலையையும் நமக்குக் கொடுக்க மாட்டாரு. கோர்ட்ல அவர் பக்கத்தில உக்காந்துக்கிட்டு, அவருக்கு பேப்பர் எடுத்துக் கொடுக்கலாமே தவிர, ஒருநாளும், நீயும் நானும் கோர்ட்ல வாதாட முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல பாரு. நானே தனியா கிளையன்ட்டைப் புடிச்சு, பிராக்டீஸை ஆரம்பிச்சுடறேன்."

ராஜேஷ் தான் சொன்னபடியே, இரண்டு மாதங்களில் ராமதுரையிடமிருந்து விலகித் தனியே பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தான்.

ரு வருடம் கழித்து, ஒரு பொது நிகழ்ச்சியில், ராஜேஷும், சிவாவும் சந்தித்துக் கொண்டனர்.

"உன் பிராக்டீஸ் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றான் சிவா.

"நான் எதிர்பார்த்தபடி வரல. அதனால, லாயர் சாமிநாதன்கிட்ட ஜூனியரா சேந்துட்டேன்."

"நான் கேள்விப்பட்டதில்லையே அவர் பேரை! எப்படிப் போய்க்கிட்டிருக்கு?"

"என்னத்தைச் சொல்றது? அவருக்கு அதிகமா கேஸ் இல்லை. அதனால, எனக்கும் வேலை அதிகமா இல்லை. சம்பளமும் ஒழுங்கா வரதில்லை. ராமதுரைகிட்டயே இருந்திருக்கலாம். அவசரப்பட்டுட்டேன். ஆமாம், நீ எப்படி இருக்கே?" என்றான் ராஜேஷ்.

"உனக்குத்தான் தெரியுமே, ராமதுரை சார்கிட்ட வேலை நிறைய இருக்கும். அதனால, நிறையக் கத்துக்க முடியுது. அடுத்த வருஷம் நான் தனியே பிராக்டீஸ் பண்ணலாம்னு அவரே சொல்லிட்டாரு. இப்ப ரெண்டு மாசமா, கோர்ட்ல வாதம் பண்ண, எனக்கு அப்பப்ப வாய்ப்புக் கொடுக்கறாரு."

"நீ அதிர்ஷ்டக்காரன்டா!" என்றான் ராஜேஷ்.

"அதிர்ஷ்டக்காரனோ என்னவோ எனக்குத் தெரியாது. பொறுமையா இருந்து, கஷ்டப்பட்டு உழைச்சுத் தொழிலைக் கத்துக்கிட்டா, எதிர்காலத்தில் முன்னேறலாம்னு நெனச்சேன். அப்படி நடக்கும்னு நம்பிக்கை இருக்கு."

"நீ தனியா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சப்பறம், சொல்லு. நான் உன்கிட்டயே ஜூனியரா சேர்ந்துடறேன்" என்றான் ராஜேஷ்.

ராஜேஷ் விளையாட்டுக்குச் சொல்கிறானா இல்லை, உண்மையாகச் சொல்கிறானா என்று சிவாவுக்குப் புரியவில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின்.


பொருள்:  
அறிய வேண்டியவற்றை அறிந்து, ஒருவன் அடக்கத்துடன் நடந்து கொண்டால், அந்தப் பண்பு பிறரால் அறிந்து கொள்ளப்பட்டு, அவனுக்கு மேன்மையைத் தரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Junior, Junior
the English version of this story.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
















"

Tuesday, January 9, 2018

122. "திமிர் பிடித்தவன்"

"இவ்வளவு பெரிய விஞ்ஞானியா இருந்து என்ன பிரயோஜனம்? மத்தவங்களை மதிக்கத் தெரிய வேண்டாம்? திமிர் பிடிச்சவன்!" என்று பொரிந்து தள்ளினான் சம்பந்தம்.

"யாரைப் பத்திடா சொல்றே?" என்றான் குணா.

"எல்லாம் நம்ப நண்பன் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் சேகர் என்கிற மாமேதையைப் பத்தித்தான்!"

"ஏன், அவனுக்கென்ன?"

"நம்ம காலேஜில, அவனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தணும்னு விரும்பறாங்க. பிரின்சிபாலுக்கு என்னைத் தெரியும், இல்லியா? அவர் என்னைக் கூப்பிட்டு, 'சேகர் உங்க கிளாஸ்மேட்தானே? நீங்க அவர்கிட்ட பேசி, பாராட்டு விழாவில கலந்துக்கறதுக்கு சம்மதம் வாங்குங்க'ன்னு சொன்னாரு. 

"நான் ரொம்ப உற்சாகத்தோட அவன்கிட்ட கேட்டா, அவன் பெரிசா பிகு பண்ணிக்கறான்."

"வர மாட்டேன்னுட்டானா?"

"ஆமாம். அவன் பெரிய விஞ்ஞானி ஆகி, இப்ப தேச அளவில அவன் பேர் பரவியிருக்கு. நாம ஏதோ படிச்சுட்டு, என்னவோ ஒரு வேலையைப் பாத்துக்கிட்டு, காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கோம். நம்மைப் பாத்தா, அவனுக்கு இளப்பமாத்தான் இருக்கும்!"

"முதல்ல, நாம ஒண்ணும் மோசமான நிலைமையில இல்ல. நீயும், நானும் நல்ல வேலையிலதான் இருக்கோம். ரெண்டாவது, சேகர் இப்படியெல்லாம் நினைக்கிற ஆyf இல்ல" என்றான் குணா.

"நீ சேகரைப் பாத்து, எத்தனையோ வருஷம் ஆச்சு. காலேஜில படிச்சப்ப உன் காலையே சுத்திக்கிட்டு வந்த அந்த சேகர்னு நினைச்சியா? அவன் மாறிட்டாண்டா! இத்தனை வருஷமா, அவன் ஏன் நம்மோட தொடர்பு வச்சுக்கல, சொல்லு?"

"நாம யாருமே ஒருத்தருக்கொருத்தர் அதிகமா தொடர்பு வச்சுக்கலியே! நீயும், நானும் ஒரே கல்லூரியில வேலை பாக்கறோம். அதனால, நெருக்கமா இருக்கோம். காலேஜில, நானும் சேகரும் நெருக்கமாத்தான் இருந்தோம். ஆனா அதுக்கப்புறம், நானும் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலியே! அவன் பெரிய விஞ்ஞானி ஆகிப் பிரபலமானதால, அவனைப் பத்தின நியூஸ் நமக்குத் தெரிஞ்சுக்கிட்டிருக்கு. ஆனா, அவனைச் சந்திக்கவோ, பேசவோ நான் முயற்சி பண்ணலியே! நீ எப்படிப் பேசின அவன்கிட்ட, ஃபோன்லியா?"

"ஆமாம். அவன் ஹைதராபாத்ல இல்ல இருக்கான்?"

"பல வருஷம் கழிச்சு, அவன்கிட்ட ஃபோன்ல பேசியிருக்க. அதை வச்சு, அவனை எடை போடக் கூடாது. நான் அடுத்த வாரம் ஹைதராபாத் போறேன். அப்ப அவனைப் பாத்துப் பேசறேன்."

"நீ சொன்னாலாவது ஒத்துக்கறானான்னு பாக்கலாம்!"

ஹைதராபாதில், சேகருக்கு குணா ஃபோன் செய்தபோது, சேகர் மிகவும் உற்சாகமாகப் பேசினான். குணாவைத் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தான்.

சேகரின் வீட்டுக்கு குணா சென்றதும், பல வருடங்கள் கழித்துச் சந்தித்த மகிழ்ச்சியில் இருவருமே மனம் விட்டு நீண்ட நேரம் பேசினர். 

'இவனையா திமிர் பிடித்தவன் என்று சொன்னான் சம்பந்தம்?'

"ஆமாம், நம்ம காலேஜில உனக்குப் பாராட்டு விழா நடத்தறதுக்கு சம்பந்தம் கூப்பிட்டப்ப, நீ வர மாட்டேன்னு சொல்லிட்டியாமே?" என்றான் குணா.

சேகரின் முகம் சட்டென்று மாறியது. "அதைப் பத்திப் பேச வேண்டாமே!" என்றான்.

"ஏன், சம்பந்தம் மேல உனக்கு ஏதாவது கோபமா?"

"சேச்சே! அவனைப் பாத்தே பல வருஷம் ஆச்சு. அவன் மேல எனக்கென்ன கோபம் இருக்க முடியும்?"

"பின்னே? அவனை நீ மதிக்காத மாதிரி பேசினதா, அவன் நினைக்கிறானே!"

"ஒருவேளை, அவன்கிட்ட நான் கொஞ்சம் கடுமையாப் பேசியிருக்கலாம்."

"ஏன் அப்படிப் பேசின?"

"குணா! நீ என்னைப் புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு."

"என்ன ஜாக்கிரதை?"

"இப்ப, நான் பாராட்டு விழா வேண்டாம்னு சொன்னா, என்ன ஆகும்? பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி, முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுவான், அப்புறம் வற்புறுத்தினா சரின்னு ஒத்துப்பான்னு நினச்சு, அவன் என்னை வற்புறுத்தி இருப்பான். 

"அப்புறம், அவனை மறுத்துப் பேசறது எனக்குக் கஷ்டமா இருந்திருக்கும். அதனாலதான், முதலிலேயே கொஞ்சம் கடுமையாப் பேசிட்டா, அப்புறம் வற்புறுத்த மாட்டான்னு நெனைச்சுத்தான் அப்படிப் பேசினேன். 

"அவன்கிட்ட மட்டும் இல்ல, இது மாதிரி பாராட்டு விழா நடத்தறேன்னு வரவங்க, என்னைப் புகழ்ச்சியாப் பேசறவங்க எல்லார்கிட்டயும் இப்படிக் கடுமையாத்தான் நடந்துக்கறேன். அப்பதானே, இது மாதிரி பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்க முடியும்?"

"பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்கணும்னு நீ ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே? பாராட்டினா, அதைக் கேட்டுத் தலையாட்டிட்டு, நன்றி சொல்லிட்டு வர வேண்டியதுதானே?"

"உனக்குப் புரியல, குணா! பணம் இருக்கறவங்க பாங்க்கில பணத்தைப் போட்டு வைக்கறாங்க, நகைகளை லாக்கர்ல கொண்டு வைக்கறாங்க. ஏன்?"

"ஏன்னா? அதெல்லாம் பாதுகாப்பா இருக்கட்டும்னுட்டுத்தான். தங்களோட பொருள், பணம் எதையும்  இழந்துடக் கூடாதுங்கறதுக்காகத்தான்."

"அது மாதிரிதான், எங்கிட்ட இருக்கிற சொத்தையும் நான் பாதுகாக்க விரும்பறேன்."

"உங்கிட்ட இருக்கிற சொத்துன்னா, உன் விஞ்ஞான மூளையா? பாராட்டு விழாவில கலந்துக்கறதுனால, உன் மூளைக்கு என்ன ஆபத்து வந்துடும்?"

"எங்கிட்ட இருக்கிற சொத்து என் மூளை இல்லை, குணா. விலை மதிக்க முடியாத சொத்தா நான் நினைக்கிறது என்னோட அடக்கத்தைத்தான். 'எனக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம்' என்கிற எண்ணம்தான் என்னை இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஊக்குவிக்குது. 

"இது மாதிரி பாராட்டுக்கள், புகழுரைகளையெல்லாம் கேட்டா, என்னை அறியாமலே  நான் ரொம்ப உயர்ந்தவன் என்கிற எண்ணம் ஏற்பட்டு, என்னோட அடக்கம் போயிடும். அதுக்கப்பறம், என்னால எதையும் கத்துக்கவும் முடியாது, சிந்திக்கவும் முடியாது. 

"அதனாலதான், அடக்கம் என்கிற என்னோட சொத்தைப் பாதுகாக்கணும் என்பதில நான் ரொம்ப கவனமா இருக்கேன். சம்பந்தத்துக்கு இதைப் புரிய வச்சு, என்னை மன்னிக்கச் சொல்லு!"

சேகரின் அடக்கமே, சம்பந்தத்துக்கு ஆணவமாகத் தோற்றமளித்த விந்தையை நினைத்து வியந்தான் குணா.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு


பொருள்:  
அடக்கம் என்ற பண்பை ஒரு விலையுயர்ந்த பொருளைப் பாதுகாப்பது போல் காக்க வேண்டும். ஒருவருக்கு அடக்கத்தை விட நன்மை பயக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Conceited?' the English version of this story.


 குறள் 121 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்



















"


Monday, January 8, 2018

121. அரசியல் வாரிசு

முதலமைச்சர் வெற்றிவேல், தான் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்றும், தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போவதாகவும் அறிவித்தது அவர் கட்சிக்குள் மட்டுமின்றி, ஊடகங்களிலும், பொதுமக்களிடையேயும் கூட ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆயினும், வெற்றிவேலின் ஓய்வுக்குப் பிறகு கட்சித் தலைவராகவும், தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும் அவர் தம்பி திருமூர்த்திதான் வருவார் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.

"என்னங்க, தலைவர் அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போறதாக அறிவிச்சுட்டாரு. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருஷம்தான் இருக்கு. நாம என்ன பண்ணப் போறோம்?" என்றான் கதிர்.

"என்ன செய்யணும்?" என்றான் நீலவண்ணன்.

"நீங்கதான் அடுத்த தலைவரா வரணும்கறதுதான் தொண்டர்களோட எதிர்பார்ப்பு. உங்க தலைமையில தேர்தலைச் சந்திச்சா, நமக்கு வெற்றி நிச்சயம். நீங்கதான் அடுத்த முதல்வர்."

"நீங்க சொல்லிட்டா போதுமா? தலைவர் என்ன நினைக்கிறார்னு தெரியலியே!"

"தலைவர் தன்னோட தம்பிதான் வரணும்னு நினைப்பாரு."

"அப்புறம் நான் எப்படி வர முடியும்?"

"நம்ம கட்சித் தொண்டர்கள் எல்லாம் உங்களைத்தான் விரும்பறாங்க. அவங்க திருமூர்த்தியை ஏத்துக்க மாட்டாங்க. மக்கள்கிட்டயும் உங்களுக்குத்தான் செல்வாக்கு. திருமூர்த்தி தலைமையில நாம தேர்தல்ல போட்டி போட்டா, நாம படு மோசமாத் தோப்போம்."

"தலைவர் எல்லாத்தையும் யோசிச்சு முடிவு பண்ணுவாரு. அதுவரையிலும் பொறுமையா இருப்போம்."

"நீங்க இப்படி அடங்கிப் போறதனாலதான், திருமூர்த்தி ஆட்டம் போடறான். உங்களைத்தான் அடுத்த தலைவராக்கணும்னு செயற்குழுவில நான் பேசப் போறேன். முக்கால்வாசிப் பேர் உங்களைத்தான் ஆதரிப்பாங்க" என்றான் கதிர்.

"அவசரப்பட்டு ஒண்ணும் செஞ்சுடாதீங்க. பொறுமையா, கட்சி வேலைகளைப் பாத்துக்கிட்டிருப்போம். எனக்குத் தலைவர் ஆகற தகுதி இருக்குன்னு நீங்க நினைக்கிற மாதிரி தலைவரும் மத்தவங்களும் நெனைச்சா, அப்ப, தானே எனக்கு வாய்ப்பு வந்துட்டுப் போகுது!" என்றான் நீலவண்ணன்.

"அரசியல்ல அதிரடியாச் செயல்பட்டாத்தான் ஜெயிக்க முடியும். உங்களை மாதிரி அடங்கிப் போறவங்களை, திருமூர்த்தி மாதிரி ஆட்கள் எல்லாம் ஒரேயடியா அமுக்கிடுவாங்க" என்றான் கதிர்.

வெற்றிவேலின் அறிவிப்பைத் தொடர்ந்து, தான் அப்போதே தலைவராகி விட்டது போல் திருமூர்த்தி செயல்பட ஆரம்பித்தான். தலைவரின் தம்பி என்பதால், அவனுடைய அத்துமீறல்களை எதிர்க்க யாருக்கும் துணிவு வரவில்லை. 

ஆட்சியிலோ, கட்சியிலோ எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையிலும், ஆட்சிக்கும் கட்சிக்கும் திருமூர்த்திதான் தலைமை வகிப்பது போன்ற தோற்றம் உருவாகியது. இது கட்சித் தொண்டர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் ஏற்படுத்திய அதிருப்தியையும், கோபத்தையும் பற்றித் திருமூர்த்தி கவலைப்படவில்லை.

தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதமே இருந்த நிலையில், வெற்றிவேல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

"நான் முன்பே அறிவித்தபடி, வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தீவிர அரசியலிலும் இனி ஈடுபடப் போவதில்லை. எதிர்வரும் தேர்தலை நம் கட்சி ஒரு புதிய தலைவரின் தலைமையில் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். வரும் பதினைந்தாம் தேதி காலை, நான் என் ராஜினாமாவை ஆளுநரிடம் அளிக்க இருக்கிறேன். அன்று முற்பகல், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். அதில், சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அன்று மாலையே, அவர் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொள்வார்."

"வரும் தேர்தலில் எப்படியும் இவர்கள் கட்சி தோற்று விடும். அதனால், தன் தம்பி ஆறு மாதமாகவாவது முதல்வராக இருக்கட்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு!" என்று ஊடகங்கள் விமரிசித்தன.

"கோட்டை விட்டுட்டமே! திருமூர்த்தியைக் கொண்டு வரத்துக்குத் தலைவர் ஏற்பாடு பண்ணிட்டாரே!" என்று புலம்பினான் நீலவண்ணனின் ஆதரவாளனான கதிர். நீலவண்ணன் எதுவும் சொல்லாமல், அமைதியாக இருந்தான்.

ட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்குச் சில மணி நேரங்கள் முன்பு, சற்றும் எதிர்பாராத வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

'இது போல் நடந்ததே இல்லையே! ஏதோ நடக்கப் போகிறது!' என்ற எதிர்பார்ப்பில், கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதுமே தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு அமர்ந்திருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், வெற்றிவேல் பேசத் தொடங்கினார்:

"இந்தக் கட்சியை, எனக்கு முன்பிருந்தவர்களும், நானும், எங்கள் கடின உழைப்பால் வளர்த்திருக்கிறோம். எத்தனையோ சோதனைகளைக் கடந்து, நம் கட்சி இன்று ஒரு அசைக்க முடியாத கோட்டையாக இருக்கிறது என்றால், அதற்கு இந்தக் கட்சியை வழி நடத்திய தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அயராத உழைப்புதான் காரணம். எதிர்காலத்திலும், நமது கட்சியை வழி நடத்திச் செல்லும் திறமையும், தகுதியும் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர்களுக்கே உண்டு. அந்த வகையில், கடந்த பல வருடங்களாக நம் கட்சிக்காகக் கடினமாக உழைத்து, உங்கள் எல்லோருடைய அன்பையும் பெற்றிருக்கும் என் அருமைத் தம்பி நீலவண்ணனையே நீங்கள் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்."

அவர் பேச்சை முடிக்கும் முன்பே, கரவொலி அரங்கை அதிர வைத்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
        அடக்கமுடைமை      
குறள் 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.


பொருள்:  
அடக்கம் ஒருவருக்கு உயர்வைத் தரும். அடக்கம் இல்லாமல் நடந்து கொள்வது வீழ்ச்சியை ஏற்படுத்தும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Who Will be the Successor?' the English version of this story.

 குறள் 120 

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
















Sunday, January 7, 2018

120. மர பீரோ

கிராமத்து வீட்டை விற்று விட்டுக் கிளம்பியபோது, வீட்டிலிருந்த சிறிய பொருட்கள் எல்லாவற்றையும் ஊரில் இருந்தவர்களுக்குப் பெரும்பாலும் இலவசமாகவும், ஒரு சிலவற்றை எடைக்குப் போடுவது போன்ற விலைக்கும் கொடுத்த பிறகு, மூன்று பெரிய மரச் சாமான்கள் மிஞ்சின. ஒரு பீரோ, ஒரு சாய்வு நாற்காலி, ஒரு பெரிய மேஜை.

மூன்று சகோதரர்களும் ஆளுக்கு ஒன்று என்று பிரித்துக் கொண்டோம். என் பங்குக்கு மர பீரோ கிடைத்தது. சாய்வு நாற்காலியையும், பெரிய மேஜையையும் என் சகோதரர்கள் ஊரில் இருந்த ஒரு புதுப்பணக்காரருக்கு நல்ல விலைக்கு விற்று விட்டார்கள். புதுப்பணக்காரர் என்னிடம் பீரோவை விலைக்குக் கேட்டார். ஆனால் நான் அதை விற்க விரும்பவில்லை.

பீரோவைச் சென்னையிலிருந்த என் (வாடகை) வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். 'கொண்டு வந்து விட்டேன்' என்று சாதாரணமாகச் சொல்லி விட்டேனே தவிர, கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக இல்லை. பீரோ மிகவும் கனம் என்பதால் பல ஆட்களை வைத்து அதை மாட்டு வண்டியில் ஏற்றி, 10 கிலோமீட்டர் தூரத்தில், நகரத்தில் இருந்த லாரி ஆஃபீசுக்குக் கொண்டு வந்தேன்.

லாரி ஆஃபீசில் பீரோவை இறக்கவும் பல ஆட்கள் தேவைப்பட்டனர். முதலில் லாரி ஆஃபீசில் பீரோவை லாரியில் ஏற்றி அனுப்ப முடியாது என்று சொல்லி விட்டார்கள். கெஞ்சிக் கூத்தாடி அவர்களைச் சம்மதிக்க வைத்தேன். அவர்கள் கேட்ட லாரி வாடகைத் தொகையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, பீரோவை அங்கேயே விட்டு விட்டு, அவர்கள் கவனிக்காதபோது நழுவி ஒடி விடலாமா என்று கூட யோசித்தேன். ஆயினும் வேறு வழியின்றி அவர்கள் கேட்ட வாடகையைக் கொடுத்து பீரோவை லாரியில் அனுப்ப ஏற்பாடு செய்தேன். 

சென்னைக்கு பீரோ வந்ததும், அதை லாரி ஆஃபீசிலிருந்து வீட்டுக்குக்  கொண்டு வர நான் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கொள்ளை அடிப்பது போல் என்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்ட லாரி நிறுவனமும், கூலி ஆட்களும் ஏதோ எனக்கு இலவச சேவை செய்வது போல் நடந்து கொண்டார்கள். ஒவ்வொருவரிடமும் நான் கெஞ்ச வேண்டியிருந்தது.

"என்ன சார் பீரோ இது? பொணம் கனம் கனக்குது!" என்ற விமரிசனத்தைப் பலமுறை பலர் வாயிலிருந்தும் கேட்டு விட்டேன். 

பீரோவைத் தூக்குபவர்கள் கவனமாகத் தூக்காமல் கீழே போட்டு விட்டால் பீரோவுக்குச் சேதம் ஏற்பட்டு விடுமே என்ற பயத்தில் "பார்த்து மெதுவாத் தூக்குங்க!" என்று அடிக்கடி அவர்களிடம் கெஞ்சிக் கொண்டே இருந்தேன்.

ஒரு வழியாக பீரோ வீட்டுக்கு வந்து சேர்ந்ததுமே, கழுகுக்கு மூக்கில் வியர்த்தது போல் ஒடி வந்த வீட்டுச் சொந்தக்காரர் "என்ன சார் இது? எங்கேந்து கொண்டு வரீங்க இதை? தரை உடைஞ்சுடப் போகுது. பார்த்துக்கங்க!" என்று எச்சரித்தார்.

'இரும்பு பீரோவால்தான்யா தரை உடையும், மர பீரோவால் உடையாது, இது கூட உன் மர மண்டைக்குத் தெரியாதா?' என்று மனதில் எழுந்த வார்த்தைகளை விழுங்கி விட்டு அசட்டுத்தனமாகச் சிரித்து விட்டு "நான் பாத்துக்கறேன் சார்! கவலைப்படாதீங்க" என்று பொறுமையாக பதில் சொன்னேன்.

ஒரு வழியாக பீரோ வீட்டுக்குள் வந்து நிலை கொண்டது. பீரோவைக் கொண்டு வந்து சேர்த்ததற்கு ஆன மொத்த செலவைக் கேட்டதும் என் மனைவி மயங்கி விழாத குறையாக "இவ்வளவு செலவழிச்சதுக்கு, நாலு காட்ரேஜ் பீரோ வாங்கி இருக்கலாம் போலிருக்கே!" என்றாள்

15 வருடங்களில் மூன்று முறை வீடு மாறிய போதும் பீரோவை இடம் மாற்ற நிறையச் செலவாயிற்று.

ப்போது சொந்த வீடு வாங்கிக் கொண்டு போகும்போது பீரோவை எடுத்துக் கொண்டு போக முடியவில்லை. என் சொந்த வீட்டில் பீரோவை வைக்க இடம் இல்லை என்று என் குடும்பத்தினர் அனைவரும் (என்னைத்தவிர) சேர்ந்து முடிவு செய்து விட்டனர்.

"இந்த பீரோவுக்காக நீங்க செலவழிச்சதெல்லாம் போதும். இதை வித்துத் தொலையுங்க" என்றாள் என் மனைவி.

வேறு வழியின்றி பீரோவை விற்க முடிவு செய்தேன்.

பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்தபோது, பழைய பொருட்களை வாங்க இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று வியப்பாக இருந்தது. ஐந்தாறு வியாபாரிகளிடம் காட்டி யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களிடம் விற்று விடலாம் என்று (புத்திசாலித்தனமாக!) நினைத்துக் கொண்டேன்.

ஆனால் பீரோவைப் பார்த்த யாருமே அதற்கு ஒரு சுமாரான விலை கொடுக்கக் கூடத் தயாராயில்லை.

"இதெல்லாம் போகாது சார்! விறகுக்குக் கூட யாரும் வாங்க மாட்டாங்க. வேணும்னா சொல்லுங்க. வண்டியில எடுத்துக்கிட்டுப் போயி எங்கேயாவது போட்டுட்டு வரேன். விலை எதுவும் கிடைக்காது" என்றார் ஒருவர்.

இன்னொருவர் பழைய பேப்பருக்குக் கொடுக்கும் விலையை விடக் குறைவான விலைக்குக் கேட்டார்.

ஐந்தாறு பேர் வந்து பார்த்தபின், ஜனார்த்தனன் என்று ஒருவர் வந்தார்.

பீரோவை நன்கு திறந்து ஒவ்வொரு பகுதியாகத் தொட்டுப் பார்த்து விட்டு, "ரொம்பப் பழைய பீரோவா இருக்கும் போலருக்கே! எவ்வளவு எதிர்பாக்கறீங்க?" என்றார்.

"அஞ்சாயிரம் ரூபாய் கொடுப்பீங்களா?" என்றேன், தயக்கத்துடன்.

ஜனார்த்தனன் சிரித்தார். "சார்! நான் ஒரு வியாபாரி. நான் விற்பனை செய்யற சரக்குக்கு அதுக்கு உரிய விலை கிடைக்கணும்னு எதிர்பார்ப்பேன். அதுபோல மத்தவங்களோட பொருளுக்கும் உரிய விலை அவங்களுக்குக்  கிடைக்கணும்னு நினைக்கறவன் நான்."

"என்ன சொல்ல வரீங்க?" என்றேன் நான், குழப்பத்துடன்.

"சார்! இது மாதிரி பழைய பொருட்களுக்கெல்லாம் நிறைய விலை கொடுக்க சில பேர் தயாரா இருக்காங்க. நான் உங்ககிட்ட அஞ்சாயிரம் ரூபா கொடுத்து இந்த பீரோவை வாங்கிட்டுப் போய் ஒரு ஆன்ட்டிக் டீலர் கிட்ட நிறைய விலைக்கு வித்துடலாம். ஆனா அது உங்களை ஏமாத்தறதா இருக்கும். நான் எனக்குத் தெரிஞ்ச ஆன்ட்டிக் டீலர்கள் சிலரோட ஃபோன் நம்பர் தரேன். அவங்களுக்கு ஃபோன் பண்ணிப் பாருங்க. அவங்க வந்து பார்த்துட்டு என்ன விலைக்கு எடுத்துக்கறோம்னு சொல்லுவாங்க. வேற சில டீலர்கள்கிட்டேயும் கேட்டுப் பாருங்க. யார் நல்ல விலை கொடுக்கறாங்களோ அவங்ககிட்ட வித்துடுங்க."

"இது சுமாரா என்ன விலைக்குப் போகும்னு நினைக்கிறீங்க?" என்றேன் நான், வியப்புடன்.

"என்னால கரெக்ட்டா சொல்ல முடியாது. எப்படியும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல போகும்!" என்றார் ஜனார்த்தனன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

பொருள்:  
வியாபாரம் செய்பவர்கள் பிறர் பொருளையும் தங்கள் பொருள் போல் கருதிச் செயல்பட்டால் அதுவே சிறந்த வணிக முறை ஆகும்.

Read 'The Wooden Bureauthe English version of this story.
பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்



































Saturday, January 6, 2018

119. ஆன்மீகச் சொற்பொழிவு!

நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கத்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 

அதனால், பிரச்னையை ஒரு நடுவர் மூலம் தீர்த்துக் கொள்வது என்று இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.

ஒரு நடுவரை நியமிக்கும்படி இரு தரப்பினரும் தொழிலாளர் ஆணையரைக் கேட்டுக் கொள்ள, அவர் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி உமாபதியின் பெயரைப் பரிந்துரைத்தார். 

இரு தரப்பினரும் அவரை ஏற்காவிட்டால், ஆணையர்  வேறொரு நபரைப் பரிந்துரைப்பார் என்று ஏற்பாடு.

நிர்வாகத்தினர் அவரை உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

"உமாபதி ஒரு நேர்மையான அதிகாரியா இருந்தவர்னு சொல்றாங்க. ஆனா நம்ம பக்க நியாயத்தைப் புரிஞ்சுப்பாரான்னு சந்தேகமா இருக்கு! பொதுவா இது மாதிரி ஒயிட் காலர் ஆசாமிகளுக்கெல்லாம் தொழிலாளின்னாலே கொஞ்சம் இளப்பம்தான்! நம்ம பக்கத்தில நியாயம் இருக்குன்னு ஒத்துக்குவே மாட்டாங்க" என்றார் செயலாளர் ஜெகதீசன்.

"அப்படி எல்லாரையும் பொதுப்படையா எடை போட்டுடக் கூடாது. அப்படிப் பாத்தா, நம்மால யாரையுமே ஏத்துக்க முடியாது. இவரு எப்படிப் பட்டவர்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்" என்றார் தலைவர் செல்வராஜ்.

"தெரிஞ்சுக்கறதுக்கு என்ன இருக்கு? இவர் ஒரு பழமைவாதி. பழமைவாதிங்கள்ளாம் முதலாளிங்களுக்குத்தான் சாதகமா இருப்பாங்க!" என்றார் துணைத்தலைவர் முகுந்தன்.

"இவர் ஒரு பழமைவாதின்னு எப்படிச் சொல்றீங்க?" என்று கேட்டார் செல்வராஜ்.

"அவருதான் ஆன்மீகச் சொற்பொழிவெல்லாம் நிகழ்த்தவராச்சே!"

"அப்படியா? இன்னிக்கு அவரு சொற்பொழிவு ஏதாவது இருக்கான்னு பாருங்க!" என்றார் செல்வராஜ்.

முகுந்தன் அன்றைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்து விட்டு "இருக்கு தலைவரே! நங்கநல்லூர்ல இன்னிக்கு சாயந்திரம் ராமாயணச் சொற்பொழிவு இருக்கு" என்றார்.

"அதுக்கு நாம மூணு பேரும் போவோம்" என்றார் செல்வராஜ், சிரித்தபடி.

மூவரும் நங்கநல்லூரில் உமாபதியின் சொற்பொழிவைக் கேட்டு முடித்தபின், செல்வராஜின் வீட்டில் கூடிப் பேசினர்.

"கடவுள் நம்பிக்கை இல்லாத மூணு பேரும் கதாகாலட்சேபத்துக்குப் போயிட்டு  வந்தீங்களே, எப்படி இருந்தது?" என்றாள், அவர்களுக்கு காப்பி கொடுத்து உபசரித்த செல்வராஜின் மனைவி கற்பகம்.

"பொதுவா, புராணக் கதைகள் சொல்றவங்கள்ளாம் புராணங்களில் வருகிற சம்பவங்களை நியாயப்படுத்தித்தான் பேசுவாங்க. ஆனா இவரு ராமர் பண்ணின சில விஷயங்களைத் தன்னால ஒத்துக்க முடியாதுன்னு சொன்னாரு."

"அது என்ன விஷயங்கள்?" என்றாள் கற்பகம், சற்று வியப்புடன்.

"நீயும் உக்காந்து கேளு. உனக்குத்தான் புராணக் கதைகள்ள ஆர்வம் உண்டே!" என்றார் செல்வராஜ்.

"சொல்லுங்க! ராமர் அப்படி என்ன தப்புப் பண்ணிட்டாராம்?" என்றாள் கற்பகம், அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி.

"சுவாரசியமான விஷயம் என்னன்னா, உமாபதி நேத்திக்குத் தன்னோட சொற்பொழிவில, ராமர் வாலியை மறைஞ்சிருந்து கொன்னது தப்புன்னு சொல்லியிருக்காரு. அவர் அப்படிச் சொன்னது புராணங்களை அவமதிக்கிற மாதிரியும், பக்தர்கள் மனசைப் புண்படுத்தற மாதிரியும் இருக்கறதா இன்னிக்கு ஆடியன்ஸில ஒருத்தர் ஆவேசமாப் பேசினாரு. அவருக்கு பதில் சொன்ன உமாபதி, ராமர் இன்னும் சில தப்புகளும் பண்ணியிருக்கறதா சொல்லி அவருக்கு ஷாக் கொடுத்தாரு!"

"வாலியைக் கொன்னதையே தப்புன்னு பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்க. இதில இன்னும் சில தப்பு வேறயா? அது என்ன?" என்றாள் கற்பகம்.

"பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு நீ சொல்றே! ஆனா தமிழ்ல ராமாயணத்தை எளிமையா எழுதின ராஜாஜியே, வாலியை ராமர் மறைஞ்சு கொன்னது தப்புன்னு சொல்லியிருக்கார்னு உமாபதி சொன்னாரு."

"அப்படியா? எனக்குத் தெரியாதே இது!" என்றாள் கற்பகம்.

"அதைச் சொல்லிட்டு, 'ராமர் இன்னும் ரெண்டு தப்பு பண்ணியிருக்கறதா நான் நினைக்கிறேன்'னாரு உமாபதி! சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னது ஒரு தப்பாம்..."

"இதில என்ன தப்பு? சீதை சுத்தமானவங்கதான்னு உலகத்துக்குக்  காட்டறதுக்காகதானே ராமர் அவங்களை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னாரு?" என்றாள் கற்பகம்.

"அப்படின்னா, தான் சுத்தமானவர்னு காட்டறதுக்கு ராமரும் இல்ல அக்கினிப் பிரவேசம் பண்ணி இருக்கணும்? ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமான்னு கேக்கறாரு உமாபதி!"

"என்னவோ! இப்படிக் கேள்வி கேக்கறதெல்லாம் எனக்கு சரியாப் படலை. சரி. இன்னொரு தப்பு என்ன?"

"கடைசியில சீதையைக் காட்டுக்கு அனுப்பினது!"

"ஏங்க, ஒரு அரசனா, தன்னோட கடமையைத்தானே அவர் செஞ்சாரு? நாட்டு மக்கள்ள ஒருத்தர் சீதையைப் பத்தித் தப்பாப் பேசினதுனாலதானே அப்படிச் செஞ்சாரு?"

"ஊர்ல யாரோ தப்பாப் பேசினா அதுக்காக மனைவிக்கு தண்டனை கொடுக்கறதா? இதை நான் கேக்கல. உமாபதிதான் கேட்டாரு! அதுதான் ஒரு தடவை அக்கினிப் பிரவேசம் செஞ்சு சீதை தன்னோட கற்பை நிரூபிச்சுட்டாங்களே, அதுக்கப்பறமும் யாரோ சொன்னதுக்காக அவங்களைக் காட்டுக்கு அனுப்பியது கொடுமை இல்லையான்னு கேட்டாரு?"

"அதுக்காக, ஒரு அரசர் மக்கள் பேசறதைப் புறக்கணிச்சுட முடியுமா?"

"இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் டாப்! ராமர் என்ன செஞ்சிருக்கணும்? 'என் மனைவி குற்றமற்றவள். அவளை நீங்க சந்தேகப்பட்டதுக்கு அப்புறம், அவளை நான் ராணியா வச்சுக்க முடியாது. அதுக்காக அவளைக் கைவிடவும் முடியாது. நான் அரசனா இருந்தாத்தானே இப்படியெல்லாம் பேசுவீங்க? நான் அரசனா இருக்கப் போறதில்ல. என் மனைவியோட எங்கேயாவது போய் இருந்துக்கறேன், நீங்க வேற ஒரு அரசனைப் பாத்துக்கங்க'ன்னு சொல்லிட்டு ராமர் நாட்டை விட்டே போயிருக்கணும்கறது அவரோட கருத்து."

"அடேயப்பா! இப்படி ஒரு நியாயமா?"

"ஆமாம். கேள்வி கேட்டவருக்கு ஏன் கேட்டோம்னு ஆயிடுச்சு. 'இப்படியெல்லாம் பேசற நீங்க ஏன் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்திறீங்க?'ன்னு அவரு கோபமாக் கத்திப் பேசினாரு. அதுக்கும் உமாபதி பொறுமையா பதில் சொன்னாரு. 'நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான். ராமரை தெய்வமா வணங்கறவன்தான். ராமாயணத்தில் ராமர் என்கிற பாத்திரம் செஞ்ச சில தவறுகளைச் சொன்னேன். அவ்வளவுதான். ஒரு விஷயம் தப்புன்னு தோணிச்சுன்னா அதைத் தப்புன்னுன்னு சொல்றதுதான் நியாயம். நமக்குப் பிடித்தமானவங்க, நமக்கு வேண்டியவங்கங்கறதுக்காக அவங்க செய்யறதையெல்லாம் சரின்னு நியாயப்படுத்த முடியாதுன்னு அவர் கொடுத்த விளக்கம் எனக்குப் பிடிச்சிருந்தது."

"அப்ப, என்ன முடிவு எடுக்கப் போறோம்?" என்றார் ஜெகதீசன்

"நீங்களே சொல்லுங்க! நீங்களும்தானே அவர் பேச்சைக் கேட்டீங்க? ஒருத்தர் மனசில இருக்கறதுதான் வார்த்தையிலே வரும். அவர் அடிப்படையில எந்த விஷயத்தையும் நடுநிலையாப் பாக்கறவர்னுதான் எனக்குத் தோணுது. அதனாலதான் ஆன்மீகச் சொற்பொழிவுல கூட தன்னோட ஆடியன்ஸ் விரும்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சும் தனக்கு சரின்னு பட்டதைச் சொல்லியிருக்காரு. இப்படிப்பட்டவர் நம்ம பக்கத்தில இருக்கிற நியாயத்தை ஒத்துப்பார்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?" என்று செல்வராஜ் மற்ற இருவரையும் பார்த்தார்.

"நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்" என்றார் முகுந்தன். ஜெகதீசன் அதை ஆமோதித்துத் தலையாட்டினார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

பொருள்:  
சிந்தனை கோணல் இல்லாமல் நேராக இருந்தால், பேச்சும் நேர்மை தவறாமல் இருக்கும். இதுதான் நடுநிலைமை.

Read 'Religious Discoursethe English version of this story.
பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்