About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, March 20, 2019

244. அஞ்சுகத்தின் கவலை

கதவு படபடவென்று, ஆனால் அதிக சத்தமின்றித் தட்டப்பட்டது.

அஞ்சுகம் கதவைத் திறந்தாள்.

மணி பதட்டதுடன் நின்று கொண்டிருந்தான்.

"என்னடா ஆச்சு? உள்ள வா" என்றாள் அஞ்சுகம்.

"அத்தை! ஊர்ல ஒரே கலவரமா இருக்கு. யாரும் வெளியில போகாதீங்க. அதைச் சொல்லத்தான் வந்தேன்"

"நாங்க எங்கேயும் போகல."

"ஜாக்கிரதை, அத்தை!" என்று சொல்லி விட்டுக் கிளம்ப யத்தனித்த மணி, திரும்பி உள்ளே பார்த்து விட்டு,"மாமா எங்கே?" என்றான்.

"அவர் எப்ப வீட்டில இருந்திருக்காரு? யாருக்கோ உடம்பு சரியில்லைன்னு பாத்துட்டு வரேன்னுட்டுப் போனாரு. வர நேரம்தான்."

"கலவர சமயத்தில வெளியே போயிருக்காரே! வந்தப்புறம் எங்கேயும் போகாம பாத்துக்கங்க" என்றான் மணி.

ணி மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, மாலை மணி நான்கு ஆகியிருந்தது.

கதவைத் திறந்த அஞ்சுகம், "காலையில போனவர் இன்னும் வரவே இல்லியேடா. மதியம் சாப்பாட்டுக்கே வர வேண்டியவரு. எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு" என்றாள், கவலையுடன்.

"அப்படியா?" என்ற மணி, "நான் போய்ப் பாத்துட்டு வரேன். இப்ப வெளியில கொஞ்சம் அமைதியாயிருக்கு. தைரியமா இருங்க" என்று சொல்லி விட்டுப் போனான்.

மாலை ஆறு மணிக்கு மணி வந்து பார்த்தபோதும், அஞ்சுகத்தின் கணவர் சுந்தரமூர்த்தி வீட்டுக்கு வந்திருக்கவில்லை.

அஞ்சுகம் கவலை அதிகமாகி அழுது விடுவாள் போலிருந்தாள். "யாருக்காவது ஏதாவது உதவி செய்யறேன்னு அடிக்கடி வெளியே போயிட்டு லேட்டா வரது வழக்கம்தான். ஆனா ஊர்ல கலவரமா இருக்கறப்ப, அவர் இவ்வளவு நேரமா வராததுதான் கவலையா இருக்கு" என்றாள்.

"அவருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?" என்றாள் தொடர்ந்து.

"அப்படியெல்லாம் இருக்காது அத்தை" என்று மணி சொன்னபோது, அவன் குரல் நம்பிக்கையாக ஒலிக்கவில்லை. சற்றுத் தயங்கி விட்டு, "கலவரத்தில் அடிபட்டவங்களைப் பக்கத்து ஊர் ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம். நான் போய்ப் பாத்துட்டு வரேன்" என்றான் மணி.

அஞ்சுகத்திடமிருந்து வெடித்து வந்த விம்மல்தான் அவனுக்கு பதிலாக இருந்தது.

ணி மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, மருத்துவமனையின் வாசலிலும், படிக்கட்டுகளிலும், வராந்தாவிலும் நீல நிற மருந்திடப்பட்ட திறந்த காயங்கள், கட்டுக்கள் இவற்றுடன் பலர் அமர்ந்த நிலையிலும், படுத்துக் கொண்டும் இருந்ததைப் பார்த்தான்.

அதிகமாக அடிபட்டவர்கள் உள்ளே கட்டில்களில் படுக்க வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.
 
அதிகம் அடிபடாமல் வெளியில் இருந்தவர்களிடையே சுந்தரமூர்த்தி இல்லாததால், மணி கலக்கத்துடன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து. ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக் கொண்டு வந்தான்.

ஒரு கட்டிலில் சுந்தரமூர்த்தி படுத்திருப்பது சற்றுத் தொலைவிலிருந்தே தெரிந்தது. அருகில் ஓடிச் சென்று பார்த்தபோது, அவர்தான் என்று உறுதியாயிற்று.

எங்கே அடிபட்டிருக்கிறது என்று தெரியவில்லை. மேலே போர்வை போர்த்தப்பட்டிருக்க, கண் மூடிப் படுத்திருந்தார். நினைவில்லாமலோ, உறங்கிக் கொண்டோ இருந்தார். மேலே தொங்கிய பாட்டிலிலிருந்து குழாய் மூலம் மணிக்கட்டில் மருந்து இறங்கிக் கொண்டிருந்தது.

யாரைக் கேட்பது என்று மணி யோசித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த ஒருவர் கட்டிலில் படுத்திருந்த சுந்தரமூர்த்தியைப் பார்த்து விட்டு, "எல்லாரும் கலவரத்துக்கு பயந்து ஓடிக்கிட்டிருக்கச்சே, இவர் மட்டும் உயிரைப் பத்திக் கவலைப்படாம, தெருத்தெருவா நடந்து போய், அடிபட்டவங்களையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செஞ்சுக்கிட்டிருந்தாரு. கடைசியில, இவருக்கே கலவரத்தில் காயம் பட்டுடுச்சு போலருக்கு. பாவம்!" என்று சொல்லி விட்டுப் போனார்.

சில நிமிடங்கள் கழித்து அங்கே வந்த ஒரு நர்ஸிடம் "என்னங்க! இவருக்கு பலமா அடிபட்டிருக்கா?" என்றான் மணி.

"அடிபடறதா? இவர் காலையிலேந்து அடிபட்டவங்களையெல்லாம் தேடிப் பிடிச்சு, ஆட்டோவிலேயும், வண்டியிலேயும் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிக்கிட்டிருந்திருக்காரு. எப்ப சாப்பிட்டாரோ தெரியல. களைப்பு அதிகமாகி மயங்கி விழுந்துட்டாரு. இவரை யாரோ இங்கே கொண்டு வந்து சேத்தாங்க. குளூகோஸ் ஏத்திக்கிட்டிருக்கோம். இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு இவரை நீங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகலாம்" என்றாள் நர்ஸ்.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

பொருள்:  
உலகில் உள்ள உயிர்களிடம் அன்பு கொண்டு, அவற்றைப் பேணி வளர்ப்பவருக்குத் தன் உயிர் பற்றி அஞ்சும் நிலை ஏற்படாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

Monday, March 4, 2019

243. புதிய நிர்வாகி

இளம் வயதிலேயே ஒரு நிறுவனத்தின் நிர்வாகி என்ற பதவி கிடைத்தது முகுந்தனுக்குப் பெருமையாக இருந்தது. 

அது ஒரு சிறிய நிறுவனம்தான். மொத்த ஊழியர்கள் முப்பது பேர்தான்.

முகுந்தனை வேலையில் நியமிக்கும்போது, அந்த நிறுவனத்தின் முதலாளி அவனிடம் சொன்னார்;

 "இங்க பாரு, முகுந்தன்! உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அதனாலதான், உனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கேன். 

"இந்த சுண்டைக்காய் கம்பெனியை என்னாலேயே பாத்துக்க முடியும். இத்தனை நாளா நான்தானே பாத்துக்கிட்டு வந்திருக்கேன்? 

"ஆனா, எனக்கு ரொம்பக் கோபம் வரும். இங்கே வேலை செய்யறவங்க யாருக்கும் பொறுப்பே கிடையாது. இவங்களோட போராடி, எனக்கு பிளட் பிரஷர் வந்துடுச்சு. அதுக்குத்தான் உன்னைப் போட்டிருக்கேன். 

"மூணு மாசம் நான் ஆஃபீசுக்கே வர மாட்டேன். நீதான் பாத்துக்கணும். நீ சரியா மானேஜ் பண்ணலேன்னா, உன்னைத் தூக்கிடுவேன். 

"எனக்கு ஒழுங்கு, கட்டுப்பாடெல்லாம் முக்கியம். அதைப் பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா, சங்கர்கிட்ட கேட்டுக்க. ரொம்ப முக்கியம்னாலே ஒழிய, எங்கிட்ட வராதே!" 

முதலாளியின் அறிவுரை முகுந்தனைச் சற்றுக் கவலை கொள்ளச் செய்தாலும், 'பார்க்கலாம்' என்று நினைத்துப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். 

பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, பிரச்னை என்னவென்று அவனுக்குப் புரிந்தது. முதலாளியின் கடுமையான அணுகுமுறையினால், ஊழியர்கள் பயத்திலும், குழப்பத்திலும் விரக்தியிலும் இருந்தனர்.

சிறு விஷயங்களில் கூட முடிவெடுக்க முடியாமலும், முதலாளியிடம் கேட்க பயந்து கொண்டும், தத்தளித்தார்கள். ஒருவேளை இதைப் புரிந்து கொண்டுதான், முதலாளி தன்னை நியமித்திருக்கிறாரோ?

சங்கர் முதலாளியின் உறவினன் (அவன் அவரை 'மாமா' என்றுதான் அழைப்பான்) என்பதையும், அலுவலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களையும் தன் மாமாவிடம் கண் காது வைத்துச் சொல்லிப் பிரச்னைகளை உண்டாக்கி வந்திருக்கிறான் என்பதையும் முகுந்தன் விரைவிலேயே புரிந்து கொண்டான்.

முகுந்தனின் அணுகுமுறை முதலாளியின் அணுகுமுறைக்கு நேர்மாறாக இருந்தது. ஊழியர்களிடம் கடுமை காட்டாமல், கனிவாகப் பேசினான். அவர்கள் தவறுகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி, அவர்களைச் சரியாகச் செயல்பட வைத்தான். அவர்கள் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு ஆலோசனைகள் கூறினான்.

சிலர் அவனிடம் தங்கள் தனிப்பட்ட பிரச்னைகளைக் கூடக் கூற ஆரம்பித்தனர். அவனால் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும், அவர்கள் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு ஆறுதல் அளிக்கும் விதத்தில் பேசியது, அவர்களுக்கு இதமளிப்பதாக இருந்தது.

சங்கர் அவ்வப்போது முகுந்தனிடம், "சார்! மாமா இப்படியெல்லாம் செய்ய மாட்டார்" என்று கூறி, அவன் செய்கைகளுக்கு முட்டுக்கட்டை போட முயன்றான். முகுந்தன் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தான்.

ஒருமுறை, "நீங்க எல்லாருக்கும் லீவு கொடுக்கறீங்க. மாமா இருக்கறப்ப, லீவு கேக்கவே எல்லாரும் பயப்படுவாங்க" என்றான் சங்கர்.

"பெரியவர்கிட்ட லீவு கேக்க பயந்துகிட்டு, சொல்லாம லீவு போட்டுட்டு, அப்புறம் வந்து உடம்பு சரியில்லேன்னு சொல்லுவாங்க. இப்ப எங்கிட்ட காரணத்தைச் சொல்லி லீவு கேக்கறாங்க. நியாயமான காரணமா இருந்தா, லீவு கொடுக்கறேன். முன்னாலேயே சொல்லிட்டு லீவு போடறதால, அவங்க செய்ய வேண்டிய வேலையை  வேற ஒத்தரை செய்யச் சொல்லறது சுலபமா இருக்கு. சொல்லாம லீவு போட்டா, அப்புறமா ஏற்பாடு பண்றது கஷ்டம் இல்லையா?" என்றான் முகுந்தன் .  

முகுந்தன் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதம் கழித்து, முதலாளி அவனைத் தன் வீட்டுக்கு வரச் சொன்னார். 

"எப்படிப் போயிட்டிருக்கு?" என்றார் முதலாளி.

"நல்லாப் போகுது சார். நீங்க வேலைக்கு வச்சிருக்கற ஆளுங்கள்ளாம் ரொம்பத் தங்கமானவங்க. நல்லா வேலை செய்யறாங்க. போன மாசம் சேல்ஸ், கலெக்‌ஷன் ரெண்டுமே அதிகமாயிருக்கு. இந்த மாசம் இன்னும் இம்ப்ரூவ் ஆகும்னு எதிர்பாக்கறேன். ரிப்போர்ட் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். பாருங்க" என்று அவரிடம் சில தாள்களை நீட்டினான் முகுந்தன்.

முதலாளி சற்று வியப்புடன் அவனைப் பார்த்தார். "ஆட்கள்ளாம் ரொம்ப சோம்பேறித்தனமா இருக்காங்க. வேலையே நடக்கறதில்லேன்னு இல்ல நான் கேள்விப்பட்டேன்?" என்றார்.

"நீங்க ரிப்போர்ட்களைப் பாருங்க சார். ஆஃபீசுக்கு வந்து ரிகார்டுகளை வேணும்னாலும் பாருங்க" என்றான் முகுந்தன்.

"அது சரி. எல்லாருக்கும் நிறைய லீவு கொடுக்கறியாமே?"

"இல்ல, சார். தேவையானாதான் கொடுக்கறேன். ஆப்சென்ட்டியிஸம் இப்ப குறைஞ்சிருக்கு" என்றான் முகுந்தன்..

"சரி. ரெண்டு மாசம் ஆச்சு. அடுத்த மாசமும் இதையே மெயின்ட்டெய்ன் பண்ணினா, நான் ஆஃபீஸ் பக்கமே வர மாட்டேன். நீதான் பாத்துக்கணும் எல்லாத்தையும்!" என்று சிரித்தார் முதலாளி.

அவன் கிளம்பியபோது, "ஆஃபீசுக்குத்தானே போறே? கார்ல கொண்டு விடச் சொல்றேன்" என்றார் அவர்.

"வேண்டாம் சார்" என்று முகுந்தன் சொல்ல முயன்றபோதே, "டிரைவர்!" என்றார் அவர்.

காரில் போகும்போது, டிரைவர் சொன்னார். "நான் சார்கிட்ட பத்து வருஷமா வேலை செய்யறேன். சார் ரொம்ப நல்லவரு, ஆனா கோவக்காரரு. கடுமையாப் பேசுவாரு. அவர் கோபமாப் பேசறப்ப செத்துடலாம் போல இருக்கும். அவ்வளவு கடுமையாப் பேசுவாரு. ஆஃபீஸ்ல எல்லாரும் ரொம்ப மனசு நொந்து போயிருந்தாங்க. நீங்க வந்ததும் எல்லாம் மாறிப் போச்சு. எல்லாரும் உங்களை தெய்வமா நினைக்கறாங்க."

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் கொஞ்சம் கனிவாப் பேசுவேன். அவ்வளவுதான்!" என்றான் முகுந்தன் சங்கடத்துடன்.

"அதான் சார் வேணும். உங்க அன்பு ஆஃபீஸ் சூழ்நிலையையே மாத்திடுச்சு. ஐயா கூட உங்களைப் புரிஞ்சுக்கிட்டாரு. 'நான் ரொம்பக் கடுமையா இருந்திருக்கக் கூடாது'ன்னு என்கிட்டயே சொன்னாருன்னா பாத்துக்கங்களேன்!"

"அப்படியா?"

"ஆமாம். நான் உங்ககிட்ட வேலை செய்யலேன்னேன்னாலும் நான் பாத்ததையும், கேட்டதையும் வச்சு சொல்றேன். எல்லார்கிட்டயும் அன்பு காட்டற உங்களுக்கு வாழ்க்கையில ஒரு கஷ்டமும் வராது" என்றார் டிரைவர்.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

பொருள்:  
இருள் நிறைந்த துன்ப உலகில் வாழும் நிலை அருள் நிறைந்த உள்ளம் உள்ளோர்க்கு ஏற்படாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்












Sunday, March 3, 2019

242. ஆன்மீகத் தேடல்

"சுவாமிகள் உங்களைக் கூப்பிடறாரு."   

சாமிநாதனுக்கு வியப்பு, மகிழ்ச்சி, பயம் எல்லாம் கலந்த உணர்வு ஏற்பட்டது. 

அந்த மடத்தில் சேர்ந்த ஒரு மாதத்தில், மடத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களில் (அல்லது சீடர்களில்) ஒருவனாக அவன் இருந்து வந்திருக்கிறான். 

சுவாமிகள் அவனை ஒருமுறை கூட நேருக்கு நேராகப் பார்த்தது போல் தெரியவில்லை. எதற்குக் கூப்பிடுகிறார்?

"உக்காரு" என்றார் சுவாமிகள்.

"பரவாயில்லை. நிக்கறேன்" என்றான் சாமிநாதன்.

"பள்ளிக்கூடத்துல பையங்க உக்காந்திருப்பாங்க. ஆசிரியர் நின்னுக்கிட்டிருப்பார். அதனால, பையன்களுக்கு ஆசிரியர் மேல மரியாதை இல்லைன்னு அர்த்தமில்லை."

சாமிநாதன் சட்டென்று உட்கார்ந்தான். சுவாமிகளின் இது போன்ற கூர்மையான, யதேச்சையான பேச்சு அவனை எப்போதுமே பிரமிக்க வைத்திருக்கிறது. 

"உன் பேர் சாமிநாதன்னு சொன்னாங்க."

"ஆமாம், சுவாமி."

"என்னை எல்லாரும் சாமிங்கறாங்க. நீ சாமிநாதன், எனக்கே நாதன்!" சுவாமிகள் சிரித்தார்.

சாமிநாதன் மௌனமாக இருந்தான்.

"இத்தனை நாளா இந்த மடத்திலே இருக்கே. என் பேச்சையெல்லாம் கேட்டிருக்கே. நான் செய்யற விஷயங்கள், இங்கே வரவங்க எங்கிட்ட சொல்றது, கேக்கறது, நான் அவங்ககிட்ட சொல்றது இதையெல்லாம் பாத்திருக்கே, கேட்டிருக்கே. இங்க வந்து என்ன கத்துக்கிட்டிருக்க?"

"சுவாமி! நான் இங்கே வந்து ஒரு மாசம்தான் ஆச்சு."

"ஓ, இஞ்சினியரிங், மெடிகல் படிப்பு மாதிரி, நாலஞ்சு வருஷம் ஆகணுமா, கத்துக்க? அங்கே கூட வீக்லி டெஸ்ட், மன்த்லி டெஸ்ட், செமஸ்டர் பரீட்சை எல்லாம் வைக்கறாங்களே!"

சாமிநாதன் மௌனமாக இருந்தான்.

"சரி. இதுக்கு முன்னே எங்கே இருந்தே?"

"ரெண்டு மூணு மடத்தில இருந்தேன்."

"எந்த மடங்கள்?"

சாமிநாதன் தான் இருந்த மடங்களின் பெயர்களைச் சொன்னான்.

சுவாமிகள் சற்று வியப்புடன், "அவங்கள்ளாம் வேற வழிகளைக் கடைப்பிடிக்கறவங்களாச்சே!" என்றார்.

"ஆமாம், சுவாமி. ஒவ்வொரு வழியும் எப்படின்னு பாக்கத்தான் அங்கல்லாம் இருந்தேன். ஆனா, எனக்குத் திருப்தி இல்ல. அப்புறம் உங்க பேச்சை ஒரு தடவை கேட்டுட்டு இங்க வந்தேன்."

"இங்கே எவ்வளவு நாள் இருப்ப?" என்றார் சுவாமிகள், சிரித்தபடி.

சாமிநாதன் பேசாமல் இருந்தான்.

"வீட்டை விட்டு ஓடி வந்து எவ்வளவு நாளாச்சு?"

சாமிநாதன் திடுக்கிட்டு,"சுவாமி! நான் வீட்டை விட்டு ஓடி வந்தேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றான்.

"நீ சின்ன வயசுப் பையன். கல்யாணம் ஆகியிருக்காதுன்னு நினைக்கறேன். ஏதோ ஒரு வேகத்தில வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்னு ஊகிச்சேன். அவ்வளவுதான். நான் எல்லாம் தெரிஞ்ச ஞானியெல்லாம் இல்லை!"

சாமிநாதனுக்குச் சட்டென்று அழுகை வெடித்தது. பிறகு கண்களைத் துடைத்துக் கொண்டு, "ஆமாம், சுவாமி. சின்ன வயசிலேந்தே எனக்கு ஆன்மீக விஷயங்கள்ள ஈடுபாடு உண்டு. ஆன்மிகம் பத்தி புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் படிப்பேன். வீட்டில எனக்குக் கல்யாணம் பண்ணப் பாத்துக்கிட்டிருந்தாங்க. எனக்கு அதில ஈடுபாடு இல்ல. சந்நியாசி ஆகணும்னு நினைச்சு, வீட்டிலேந்து ஓடி வந்துட்டேன்."

"சாமிநாதா! நீ படிச்சதெல்லாம் ஆன்மீகம் இல்ல. அரை வேக்காடு விஷயங்கள். நீ படிச்சது ஆன்மீக விஷயங்களா இருந்தா, அவை உன் அப்பா அம்மா மேல உனக்கு இருக்கற அன்பை இன்னும் வலுவாக்கி இருக்கும். வீட்டை விட்டு ஓடி வந்திருக்க மாட்டே."

"எனக்குப் புரியல சாமி."

"புரியறதுக்கு ஒண்ணுமில்ல, சாமிநாதா. நீ ரெண்டு மூணு மடங்கள்ள இருந்திருக்கே. அங்கே எல்லாம் நீ என்ன கத்துக்கிட்ட?"

"ஒண்ணும் கத்துக்கல, சாமி. எல்லா இடத்திலேயும், சேவை செய்யறது, உதவி செய்யறதுன்னு பேசினாங்களே தவிர, ஆன்மிகம் பத்தி ஒண்ணும் இல்ல!" என்றான் சாமிநாதன்.

"அதுதான் விஷயம், மத்த உயிர்கள் கிட்ட அன்பு காட்டி, நம்மால முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் உதவி செஞ்சுக்கிட்டிருந்தா, அதுதான் ஆன்மிகம், அதுதான் வாழ்க்கை. இதை நீ புரிஞ்சுக்கிட்டிருந்தா, முதல்ல உன் அப்பா அம்மாகிட்ட அன்பு காட்டி இருப்ப. அவங்களை விட்டுட்டு ஓடி வந்திருக்க மாட்டே. 

"உனக்குக் கல்யாணத்தில விருப்பம் இல்லேன்னா, இப்ப வேண்டாம்னு சொல்லிடு. ஆனா பிற உயிர்கள் கிட்ட நீ அன்பு காட்ட ஆரம்பிச்சா, கொஞ்ச நாள்ள உனக்குக் கல்யாணத்தில நாட்டம் வரும். 

"அப்படி வராட்டாலும் பரவாயில்ல. ஆனா, இது மாதிரி எத்தனை மடங்களுக்குப் போனாலும், மற்ற உயிர்கள்கிட்ட அன்பு காட்டறதுதான் வாழ்க்கைங்கற ஒரு விஷயம்தான் திரும்பத் திரும்ப வரும். 

"நான் உன்னைப் போகச் சொல்லிச் சொல்லல. நீ இங்கேயே இருக்கலாம். உனக்கு வீட்டுக்குப் போகணும்னு தோணிச்சுன்னா, போ. ஆனா எங்கிட்ட சொல்லிக்காம போயிடாதே!" என்றார் சுவாமிகள், சிரித்துக் கொண்டே.

"நான் போயிட்டு வரேன், சுவாமி" என்றான் சாமிநாதன்.   

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

பொருள்:  
நல்ல வழியில் ஆராய்ந்து, அருள் உடையவர்களாக விளங்க வேண்டும். அற வழிகள் பலவற்றை ஆராய்ந்தாலும், அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும் என்று உணரலாம்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்












241. செல்வந்தர்கள்!

செல்வராஜிடம் டிரைவராக இருப்பதில் முரளிக்கு ஒரு பிரச்னைதான். காரில் வரும்போதெல்லாம், செல்வராஜ் தன் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பான் - அவனுடன் காரில் வருபவர்களிடம், அல்லது காரில் அவன் மட்டும் வந்தால், யாரிடமாவது செல்ஃபோனில்!

சில சமயம் செல்வராஜ் காரில் மனைவியுடன் போகும்போது, அவளிடமும் தன் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பான். அவள் இதைப் பலமுறை கேட்டிருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பாள்.

செல்வராஜ் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசியதைக் கேட்டபோது, ஆரம்பத்தில் முரளிக்கு அவன் மேல் சற்று மதிப்பு ஏற்பட்டது - செல்வராஜ் சாதாரண நிலையில் இருந்து, சொந்த முயற்சியில் நல்ல நிலைக்கு வந்திருக்கிறான் என்பதை நினைத்து.

ஆனால், திரும்பத் திரும்ப அவன் தன் பெருமையைப் பலரிடமும் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டதும், முரளிக்குத் தன் முதலாளியிடம் சலிப்பும், வெறுப்பும் கூட ஏற்பட ஆரம்பித்தது. ஒருமுறை கார் ரேடியோவில் ஒலித்த ஒரு பாடலின் 

"முட்டாப் பசங்களையெல்லாம் தாண்டவக்கோனே,
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே!"

என்ற வரிகளைக் கேட்டபோது, இந்த வரிகள் தன் முதலாளிக்காகவே எழுதப்பட்டவையோ என்று அவனுக்குத் தோன்றியது. 

"அதான் சொன்னேனே! என்னை மாதிரி சொந்தமா உழைச்சு, புத்திசாலித்தனமாத் தொழில் செஞ்சு பணம் சம்பாதிச்சவனுக்குத்தான் பணத்தோட அருமை தெரியும்!...."

கார் கிரீச்சென்று பிரேக் போடப்பட்டு நின்றதும், செல்வராஜ் செல்ஃபோனில் பேசுவதை நிறுத்தி விட்டு, "என்னப்பா ஆச்சு?" என்றான், முரளியிடம்.

இதற்குள் காரின் பின் ஜன்னல் கண்ணாடியை யாரோ தட்ட, செல்வராஜ் கண்ணாடியை உயர்த்தினான்.

"சார்! இங்க ஒத்தருக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கு. அவசரமா ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போகணும். டாக்சி எதுவும் பக்கத்தில இல்ல. ஆம்புலன்ஸ் வர நேரம் ஆகும் போலருக்கு. உங்க கார்ல ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடியுமா?" என்றார் ஒருவர்.

"இதுக்குத்தான் காரை வழிமறிச்சு நிறுத்தினீங்களா? எனக்கு அவசரமாப் போகணும்" என்று எரிந்து விழுந்தபடியே ஜன்னலை மூடிய செல்வராஜ், முரளியிடம், "நீ ஏம்ப்பா காரை நிறுத்தின? போ!" என்றான்.

"இல்லை சார். ரொம்ப அடிபட்டிருக்கு போலருக்கு. நான் வேணும்னா முன் சீட்டில் உக்கார வச்சுக்கறேன்" என்றான் முரளி.

"ஏன், கார்ல முன் சீட் உனக்குச் சொந்தமா என்ன? போகச் சொன்னா போகாம, பேசிக்கிட்டிருக்க? கிளம்பு!" என்று கத்தினான் செல்வராஜ். 

முரளி பேசாமல் காரைக் கிளப்பினான். 

அவன் காரைக் கிளப்பிய சமயத்தில், அங்கே ஒரு ஆட்டோ வந்து நின்றதையும், ஆட்டோ டிரைவர் கீழே இறங்கி அடிபட்டவரை நோக்கி வேகமாகப் போனதையும் கண்ணாடி வழியே பார்த்தபோது, முரளிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அந்த ஆட்டோ டிரைவர் அவனுக்குத் தெரிந்தவன்தான்!

"காலையில, அடிபட்டவர் ஒத்தரை ஆட்டோவில் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போனியே, என்ன ஆச்சு?" என்றான் முரளி.

"நேரத்துக்கு ஆஸ்பத்திரியில கொண்டு சேத்ததால, பொழைச்சுட்டாரு. உனக்கு எப்படித் தெரியும்?" என்றான் சேகர்.

"நான் பாத்தேன்" என்ற முரளி, "ஆட்டோவில சவாரி இல்லியா? காலியாவா வந்துக்கிட்டிருந்தே?" என்றான்.

"இல்ல. வயசானவங்க ரெண்டு பேரு வந்துக்கிட்டிருந்தாங்க. அந்தப் பெரியவர்தான் என்னை வண்டியை நிறுத்தச் சொன்னாரு. அடிபட்டவரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போகச் சொல்லி எங்கிட்ட சொல்லிட்டு, அவரும் அவர் மனைவியும் அங்கேயே இறங்கிட்டாங்க."

"அவங்க வேற ஆட்டோ பிடிச்சுப் போனாங்களா?"

"வேற ஆட்டோ பிடிச்சுப் போய்க்கிறோம்னுதான் அவங்க எங்கிட்ட சொன்னாங்க. நான்தான் அவங்களை அங்கேயே பக்கத்தில உக்காந்திருக்கச் சொல்லிட்டு, அடிபட்டவரை ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டுட்டுத் திரும்ப வந்து அவங்களை அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொன்னேன். அது மாதிரியே திரும்ப வந்து, அவங்களைக் கொண்டு விட்டுட்டு, மறுபடி ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பாத்தேன். அடிபட்டவரு பொழைச்சுக்கிட்டாரு, அவர் சொந்தக்காரங்க வந்துட்டாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, அப்புறம்தான் மறுபடி சவாரிக்குப் போனேன்."  

"எத்தனை தடவை போயிட்டுப் போயிட்டு வந்திருக்க! எவ்வளவு நல்ல மனசுப்பா உனக்கு!" என்றான் முரளி.

"என்னைச் சொல்றியே, அந்த வயசானவங்க வழியில வெய்யில்ல இறங்கிக்கிட்டு, அடிபட்டவரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போகச் சொல்லி எங்கிட்ட சொன்னாங்களே, அவங்களுக்கு எவ்வளவு நல்ல மனசுன்னு பாரு. அதோட இல்ல. ஆஸ்பத்திரிக்குப் போயிட்டுத் திரும்ப வந்து அவங்களை அழைச்சுக்கிட்டுப் போனதுக்கு எக்ஸ்ட்ரா பணம் வேற கொடுக்கறேன்னாங்க! நான் வேண்டாம்னுட்டேன்" என்றான் சேகர்.  

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பொருள்:  
பொருட்செல்வம் இழிந்தவர்களிடம் கூட இருக்கும். ஆனால், செல்வங்களுக்குள் சிறந்தது அருட்செல்வம்தான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
















Monday, February 25, 2019

240. ஓய்வுக்குப் பின்...

"முப்பத்திரண்டு வருஷம் அரசாங்க உத்தியோகம் பாத்துட்டு ரிடயர் ஆயிட்ட. இனிமே என்ன செய்யப் போற?" என்றார் மணி, தன் நண்பர் பாண்டுவிடம்.

"தெரியல. வீட்டில உக்காந்து பொழுதைக் கழிக்க வேண்டியதுதான்" என்றார் பாண்டு.

"உன்னைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்" என்றார் மணி.

"என்ன கேள்விப்பட்ட? தப்பா எதுவும் இல்லியே!" 

"நீ தப்பு எதுவுமே செய்யலேன்னுதான் கேள்விப்பட்டேன்!"

"புரியலையே?"

"என்ன புரியல? நீ வேலை பாத்தது லஞ்சத்துக்குப் பெயர் போன ஒரு டிபார்ட்மென்ட். பணம் கொடுக்காம அங்கே எந்த வேலையும் நடக்காதுன்னு உலகத்தில எல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு இலாகாவில் வேலை செஞ்சுக்கிட்டு, ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காம. முப்பத்திரண்டு வருஷம் ஓட்டியிருக்கியே, அதைச் சொன்னேன்."

"நீ சொல்ற. ஆனா, அந்த ஆஃபீஸ்ல வேலை செஞ்சதால, நானும்  லஞ்சம் வாங்கியிருப்பேன்னுதானே வெளியில எல்லாரும் நினைப்பாங்க?" என்றார் பாண்டு, சற்று வருத்தத்துடன்.

"அப்படி இல்ல. நீ எப்படி எளிமையா வாழறேன்னு எல்லாரும் பாத்துக்கிட்டிருக்காங்க. உன் ஆஃபீஸ்ல எல்லாரும் உன்னைப் பத்தி, 'இவர் பணம் வாங்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கறது எங்களையும் இல்ல பாதிக்குது?'ன்னு பேசிக்கிறாங்க. அதோட, நீ நேர்மையா இருந்ததால, உன்னை எத்தனை தடவை டிரான்ஸ்ஃபர் பண்ணி, ஊர் ஊராப் போக வச்சு, உன்னை அலைக்கழிச்சிருக்காங்கன்னு எல்லாரும் பாத்திருக்காங்களே! அப்படி இருக்கறப்ப, நீ தப்பு பண்ணாதவன்னு எல்லாருக்கும் தெரியாதா?" என்றார் மணி.

"அப்படியா சொல்ற? அப்படி இருந்தா, எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!" என்றார் பாண்டு.

"ஏங்க, ரிடயர் ஆகி ஒரு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ளே, வேற வேலைக்குப் போறேன்னு கிளம்பிட்டீங்களே?" என்றாள் பாண்டுவின் மனைவி கிரிஜா.

"நான் வேலைக்குப் போகல. ஒரு தொண்டு நிறுவனத்தில் வாலன்ட்டியர்கள் வேணும்னு கேட்டிருந்தாங்க. அங்கே போய் தினம் கொஞ்ச நேரம் வேலை செஞ்சுட்டு வரலாம்னு பாக்கறேன். இது சம்பளத்துக்கு வேலை பாக்கறது இல்ல. அந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலமா என்னால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்குச் செய்யறது" என்றார் பாண்டு.

"ஏங்க, முப்பத்திரண்டு வருஷமா அரசாங்கத்தில் நேர்மையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்களைப் பத்தி எல்லாரும் நல்லபடியாப் பேசறதா உங்க நண்பர் மணி கூட சொன்னாரு. இது சேவை இல்லையா? இப்ப எதுக்கு ஓய்வா இருக்க வேண்டிய காலத்தில, மறுபடி சேவைன்னு கிளம்பறீங்க?" என்றாள்  கிரிஜா.

"அரசாங்க வேலையில என் கடமையைச் செஞ்சதுக்குப் பேரு சேவை இல்லை. வாங்கின சம்பளத்துக்கு, என் கடமையை ஒழுங்கா செஞ்சேன். நான் நேர்மையா இருக்கேன்னு எல்லாரும் சொல்றது, நான் தப்பு பண்ணாம இருந்தேங்கறதைத்தான். தப்பு பண்ணாம, கெட்ட பேர் வாங்காம வாழ்ந்தது நல்ல விஷயம்தான். அது நாம இயல்பா எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கறதுதான். அது பாதி வாழ்க்கைதான். மனுஷனாப் பிறந்ததுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சாதான், வாழ்க்கை நிறைவா இருக்கும். நான் தப்பு பண்ணலேன்னு மத்தவங்க சொல்றது சரி. ஆனா, நான் நல்லது பண்ணியிருக்கேன்னும் சொன்னாதான் எனக்குத் திருப்தியா இருக்கும்!" என்றார் பாண்டு.

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

பொருள்:  
தன் மீது பழி இல்லாமல் வாழ்பவர்தான் வாழ்பவராகக் கருதப்படுவார். புகழ் இல்லாமல் வாழ்பவர், வாழாதவராகத்தான் கருதப்படுவார்.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்




















Saturday, February 23, 2019

239. நல்லசிவம் விட்டுச் சென்ற சொத்து

"பேருதான் நல்லசிவம். ஒரு நல்ல காரியம் கூட செஞ்சதில்ல மனுஷன்!"

"செத்தவரைப் பத்தித் தப்பாப் பேச வேண்டாமே!"

"தப்பா எதுவும் சொல்லல. அவரைப் பத்தி சொல்றதுக்கு நல்லதா எதுவும் இல்லேன்னு சொன்னேன்!"

"ஏன் இல்ல? ஊர்ல பெரிய மனுஷன். அரசாங்க அதிகாரிங்க யாராவது இந்த ஊருக்கு வந்தா, முதல்ல அவர் வீட்டுக்குத்தான் போவாங்க. ஒரு தடவை கலெக்டர் கூட வந்திருக்காரே!"

"வந்திருக்காங்க. மனுஷன் அவங்க யார்கிட்டயாவது சொல்லி, ஊருக்கு ஏதாவது நல்லது செஞ்சிருக்காரா? தனக்கு வேணுங்கறதை மட்டும்தானே கேட்டு வாங்கியிருக்காரு?"

அப்பாவின் சடலத்துக்கருகே அமர்ந்திருந்த சேகரின் காதில், ஊர்க்காரர்கள் பேசிக் கொண்டது அரையும் குறையுமாக விழுந்தது. 

அப்பா சுயநலமானவர்தான் என்பது அவனுக்குத் தெரியும். ஆயினும், ஒருவர் இறந்த பிறகு, அவரைப் பற்றி சம்பிரதாயமாகச் சொல்லப்படக் கூடிய நல்ல வார்த்தைகளைக் கூடவா அப்பா சம்பாதிக்கவில்லை?

ல்லசிவத்தின் காரியங்கள் முடிந்த பிறகு, அவருடைய நிலங்களையும், வீட்டையும் விற்று விட முடிவு செய்து, ஒருவரிடம் அதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான் சேகர். எல்லாம் விற்று முடியும் வரை, ஊரிலேயே இருக்க முடிவு செய்தான்.

சில நாட்கள் கழித்து, நிலங்களையும், வீட்டையும் வாங்கிக் கொள்ள சிலர் முன்வந்தனர். ஆனால், அவர்கள் கேட்ட விலை மிகவும் குறைவாக இருந்ததாக சேகருக்குத் தோன்றியது.

"அவசரத்துக்கு விக்கறேன்னு நினைச்சு, அடிமாட்டு விலைக்குக் கேக்கறாங்க போலருக்கு. இவ்வளவு குறைஞ்ச விலைக்கு நான் விக்கறதா இல்ல. நான் மெதுவா வித்துக்கறேன்" என்றான் சேகர், விற்பனைக்கு ஏற்பாடு செய்தவரிடம்.

"சொல்றேன்னு தப்பா நினைக்காதே, தம்பி. உங்க நிலத்துக்குப் பக்கத்தில இருக்கற நிலத்தில ல்லாம் விளைச்சல் அதிகம். ஆனா, உங்க நிலத்தில விளைச்சல் கம்மி. அதான் விலை குறைவாப் போகுது" என்றார் அவர்.

"அது எப்படி, எங்க நிலத்தில மட்டும் விளைச்சல் கம்மியா இருக்கும்?"

"தம்பி! நிலத்துக்குப் பராமரிப்பு அவசியம். மண் வளத்தை நல்லா வச்சுக்கணும்னா, நல்லா உழணும், உரங்கள் போடணும். இன்னும் பல விஷயங்கள் இருக்கு. விவசாயிங்க இதையெல்லாம் பாத்துப் பாத்து செய்வாங்க. பெத்த குழந்தையைப் பாத்துக்கற மாதிரி, நிலத்தைப் பாத்துப்பாங்க. ஆனா, உன் அப்பா இதிலெல்லாம் அக்கறை காட்டினதில்ல. நான் கூட அவர்கிட்ட சொல்லி இருக்கேன். 'எல்லாம் விளைஞ்சது போதும். மண்ல போய்க் காசைக் கொட்ட முடியாது'ன்னு சொல்லிட்டாரு. அவரோட இந்த மனப்பான்மையாலதான், உங்க நிலம் வளம் குறைஞ்சு போய், இன்னிக்கு மதிப்பும் குறைஞ்சு போயிருக்கு" என்றார் அவர்.

"இந்த ஊர்ல எல்லாரும் என் அப்பா மேல குத்தம் கண்டு பிடிக்கறதிலேயே குறியா இருக்கீங்க. சரி, நிலம்தான் அப்படி. ஏன் வீட்டைக் கூடக் குறைச்ச விலைக்குக் கேக்கறாங்க?" என்றான் சேகர், சற்றுக் கோபத்துடன்.

"நீயே பாருப்பா,வீடு எப்படி இருக்குன்னு. உன் அப்பா நிலத்தைப் பராமரிக்கலேன்னு சொன்னா, உனக்குக் கோபம் வருதே. வீட்டை எப்படி வச்சிருக்காருன்னு பாரு. சுவரெல்லாம் காரை போயிருக்கு. தரையெல்லாம் உடைஞ்சிருக்கு. உத்தரம் எல்லாம் அங்கங்கே உடைஞ்சு விழற மாதிரி இருக்கு."

"வீடு மோசமா இருந்தா என்ன? பூமிக்கு மதிப்பு இருக்கு இல்ல?"

"தம்பி, இது கிராமம், டவுன் இல்ல. டவுன்ல எல்லாம் பழைய வீட்டை வாங்கறவங்கள்ள பல பேரு, அதை இடிச்சுட்டுப் புது வீடோ ஃபிளாட்டோ கட்டணும்னு நினைப்பாங்க. அதனால, அங்க நிலத்தோட மதிப்பைத்தான் முக்கியமாப் பாப்பாங்க. ஆனா, கிராமத்தில பழைய வீடு வாங்கறவங்க அந்த வீட்டில குடியிருக்கணும்னு நினைச்சுத்தான் வாங்குவாங்க. அதனால, இங்கே பூமி மதிப்போடு, வீட்டு மதிப்பையும் கணக்குப் போட்டுத்தான் விலை சொல்லுவாங்க. வீட்டில ரிப்பேர் வேலை நிறைய இருக்கும்னா, அதுக்குத் தகுந்தாப்பல விலை குறையத்தான் செய்யும். ஒண்ணு சொல்றேன். தப்பா நினைச்சுக்காதே. உங்கப்பா தன்னைப் பத்தி மட்டும்தான் கவலைப்பட்டார். மத்தவங்களைப் பத்தி, அண்டை அசலைப் பத்தி,  தான் இருக்கற வீட்டைப் பத்திக் கூட அக்கறை இல்லாம இருந்தாரு. அதனாலதான் இப்படி..."

அறத்துப்பால்
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

பொருள்:  
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவரைச் சுமந்த நிலம், நல்ல விளைச்சல் இல்லாத நிலமாகக் கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்












Thursday, February 14, 2019

238. குமாரின் தந்தை

"ரொம்ப வருஷம் கழிச்சு சொந்த ஊருக்குப்  போறது சந்தோஷமா இருக்கு" என்றான் குமார்.

"ஆமாம். உன்னைச் சந்திக்கலேன்னா, எனக்கு இந்த எண்ணமே வந்திருக்காது" என்றான் ரவி.

"சின்ன வயசில ஒரே தெருவில வளர்ந்து, ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சு, ஒண்ணா விளையாடி, கொட்டமடிச்சு ஜாலியா இருந்துட்டு, அப்புறம் கல்லூரிப் படிப்புக்கு வெவ்வேற இடத்துக்குப் போனதும், நமக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா தொடர்பு விட்டுப் போனதை நினைச்சா, ஆச்சரியமாவும் இருக்கு, வருத்தமாவும் இருக்கு."

"என்ன செய்யறது? நம்ம ரெண்டு பேர் அப்பாக்களும் ஒத்தர் பின்னால ஒத்தர்னு சீக்கிரமே காலமாயிட்டாங்க. நம்ம குடும்பங்களும் ஊர்ல எல்லாத்தையும் வித்துட்டு, வேற எங்கேயோ போய் செட்டில் ஆயிட்டாங்க. நாமும் வேலைன்னு எங்கெங்கேயோ போய்க்கிட்டிருந்தோம். நாம தற்செயலா மறுபடி சந்திச்சதே ஆச்சரியம்தான்னு நினைக்கிறேன்" என்றான் ரவி.

"நீ சொல்றது சரிதான்" என்ற குமார், தொடர்ந்து, "ஆமாம், ஊர்ல நம்மை யாருக்காவது அடையாளம் தெரியுமா?" என்ற கேள்வியை எழுப்பினான்.

"நம்மைத் தெரியாட்டா என்ன? நம்ம பெற்றோர்களை ஞாபகம் வச்சுக்கிட்டிருப்பாங்களே!" என்றான் ரவி, நம்பிக்கையுடன்,

"அதுவும், அந்தக் காலத்தில உங்கப்பா ஊரிலே பெரிய பணக்காரர். அவரை எப்படி மறப்பாங்க?" என்றான் குமார்.

ரவி பெருமையுடன் சிரித்தான்.

வி சொன்னது போல், ஊரில் அனைவரும் இருவருடைய குடும்பங்களை ஞாபகம் வைத்திருந்தார்கள். இவர்களுடன் பள்ளியில் படித்து, அந்த ஊரிலேயே வசித்து வந்த சிலரும் அங்கே இருந்தனர்.

ரவியையும், குமாரையும் தங்கள் வீட்டில் தங்கவும், உணவருந்தவும் பலரும் அழைத்தனர். ஒரு சிலரின் விருந்தோம்பலை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, மற்றவர்களிடம் அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

இரண்டு நாட்களில், இருவரும் ஊரில் பலரையும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் படித்த பள்ளி இருந்த இடத்தைப் பார்த்து விட்டு வந்தார்கள். அது இடிக்கப்பட்டு, அங்கு வேறு ஏதோ கட்டிடம் வந்திருந்தது. பள்ளி வேறொரு இடத்தில், பெரிய கட்டிடத்துக்கு இடம் மாறி இருந்தது.

ரவியின் வீட்டை வாங்கியவர், அதை வேறு விதமாக மாற்றிக் காட்டியிருந்தார். குமாரின் வீடு இடிக்கப்பட்டுக் காலி மனையாக இருந்தது.

கோவில்கள் மட்டும்தான், உள்ளே வௌவால்களும், கோபுரத்தில் புறாக்களும் என்று, அதே இருட்டு குகைகளாக இருந்தன. கோவில்களுக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த குறைந்த வாட் பல்புகளைக் கொண்ட மின் விளக்குகளைத் தவிர, அதிக மாறுதல்கள் இல்லை.

 கோவில்களுக்கு வந்து போகும் பக்தர்களின் எண்ணிக்கையைப் போல், அங்கே வசித்து வந்த வௌவால்கள், புறாக்கள் இவற்றின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதாகத் தோன்றியது.

ஆற்றில் புதிய பாலம். ஆனால், பாலத்துக்குக் கீழே நீரோட்டம் இல்லை.

இரண்டு நாட்கள் ஊரைச் சுற்றியதில், மகிழ்ச்சி, ஏக்கம், வருத்தம் எல்லாம் கலந்த உணர்வு இருவருக்கும் ஏற்பட்டது.

ரிலிருந்து இருவரும் பஸ்ஸில் பயணித்து, அருகில் இருந்த ரயில் நிலையத்துக்கு வந்தனர். ரயிலுக்குக் காத்திருந்தபோது, குமார் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால், ரவி ஏதோ சிந்தனையில் இருந்தான்.

"என்னடா, ஒரு மாதிரி இருக்கே?" என்றான் குமார்.

"ஊருக்குக் கிளம்பும்போது, நீ என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா? என் அப்பா பெரிய பணக்காரர்ங்கறதால, அவரை எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு சொன்னே."

"ஆமாம். அதுக்கென்ன? உன் அப்பாவைப் பத்தித்தான் எல்லாரும் பேசினாங்களே!"

"பேசினாங்க. ஒரு மரியாதைக்காகப் பேசினாங்க. ஊர்ல எல்லாரும் நம்மகிட்ட அன்பாதான் நடந்துக்கிட்டாங்க. ஆனா, நான் ஒண்ணு கவனிச்சேன். எல்லாரும் உன் மேல காட்டின அளவுக்கு உற்சாகத்தை எங்கிட்ட காட்டல" என்றான் ரவி.

"நீ கற்பனை பண்ணிக்கற. அப்படி எதுவும் இல்ல" என்றான் குமார்.

"இருந்தது. அதை நீயும் கவனிச்சிருப்ப. வெளியே சொல்லிக்காம இருக்க. என் அப்பாவைப் பத்தி அதிகமா யாரும் பேசல. ஆனா, உன் அப்பாவைப் பத்தி எல்லாரும் எவ்வளவு பெருமையாப் பேசினாங்க!"

"டேய், ரவி! உன் அப்பா பணக்காரர். அதனால ,அவர்கிட்ட நிறைய பேர் நெருங்கிப் பழகி இருக்க மாட்டாங்க. என் அப்பா சாதாரண மனுஷர். அதனால, அவர்கிட்ட எல்லாரும் அதிகமாப் பழகி இருப்பாங்க. அதான் விஷயம்" என்றான் குமார்.

"அது மட்டும் காரணம் இல்லடா. என் அப்பா பெரிய மனுஷன் என்கிற அந்தஸ்தோட இருந்தார். அவ்வளவுதான். ஆனா, உன் அப்பா ஊர்ல எல்லாருக்கும் உதவியா இருந்திருக்காரு. எல்லாரோட நல்லது கெட்டதுகளிலேயும் பங்கேத்துக்கிட்டு, எல்லாருக்கும் தன்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சுக்கிட்டு இருந்திருக்காரு. அதனால்தான், அவர் மேல எல்லாரும் இவ்வளவு நல்லெண்ணம் வச்சிருக்காங்க. நீ அவர் மகன் என்கிறதால, உன் மேலேயும் அந்த நல்லெண்ணத்தைத் தங்களை அறியாமலேயே வெளிப்படுத்தினாங்க. உன் அப்பா வாழ்ந்த வீடு இடிஞ்சு போயிடுச்சு. ஆனா, அவர் விட்டுட்டுப் போன நல்ல பேர் அப்படியே இருக்கு, பரம்பரை சொத்து மாதிரி. இப்ப அந்த நல்ல பேரோட பலன் உனக்கும் கிடைக்குது. நீ அதிர்ஷ்டம் பண்ணியிருக்கடா!" என்றான் ரவி.

குமாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 
அறத்துப்பால்
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

பொருள்:  
தமக்குப் பின் நிலைத்து நிற்கும் புகழை விட்டுச் செல்லாவிட்டால், அந்த வாழ்க்கையை உலகம் பழி என்று சொல்லும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்