About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, October 30, 2017

104. கூடுதல் வட்டி

கைலாசம் வீட்டுக்கு அவரது உறவினர் சம்பந்தம் வந்தபோது, கைலாசத்தின் அருகில் அமர்ந்து ஒரு இளைஞன் பேசிக் கொண்டிருந்தான்.

"யார் இவரு? நான் பார்த்ததில்லையே?" என்றார் சம்பந்தம்.

"எனக்குத் தெரிஞ்சவர்" என்றார் கைலாசம்.

உடனே அந்த இளைஞன், "சார்தான் எனக்கு வழிகாட்டி. அவர் எனக்கு செஞ்ச உதவியை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்" என்றான் சம்பந்தத்திடம்.

"அப்படியா? என்ன உதவி செஞ்சாரு?" என்றார் சம்பந்தம்.

"அதைப் பத்தி இப்ப என்ன? சுகுமார், இவரு என் சொந்தக்காரரு. நாம அப்பறம் பாக்கலாம்" என்று கூறி, அந்த இளைஞனை வழியனுப்பி வைத்தார் கைலாசம்.

சுகுமார் விடைபெற்றுப் போனதும், "யாருப்பா இந்தப் பையன்? அப்படி என்ன உதவி செஞ்ச அவனுக்கு?" என்று கேட்டார் சம்பந்தம்.

"அது ஒண்ணுமில்ல" என்று ஆரம்பித்தார் கைலாசம்.

சில வருடங்களுக்கு முன் கைலாசம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு நிதி நிறுவனத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்று வட்டிப்  பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். (நேரில் வர முடியாதவர்களுக்கும், வெளியூர்க்காரர்களுக்கும் தபால் மூலம் செக் அனுப்பும் முறை இருந்தது.)

இரண்டு மாதங்களுக்கு, சொன்ன தேதியில் வட்டித் தொகையைக் கொடுத்தார்கள். மூன்றாம் மாதத்திலிருந்து இன்னொரு நாள் வரச் சொல்வது, அன்று போனால், வேறொரு நாள் வரச் சொல்வது என்று இழுத்தடிக்க ஆரம்பித்தார்கள்.

ஒன்பது மாத முடிவில், ஆறு மாதங்களுக்குத்தான் வட்டி கொடுத்திருந்தார்கள். ஒரு மாத வட்டித்தொகையை வாங்க ஐந்தாறு முறை போக வேண்டியிருந்தது. கிடைக்கிற வட்டிப்பணத்தில் பெருந்தொகை போக்குவரத்துச் செலவுக்கே செலவழிந்து கொண்டிருந்தது.

ஒருமுறை வட்டித்தொகையை வாங்க அந்த அலுவலகத்துக்குப் போய்க் காத்திருந்தபோது, சுகுமாரைப் பார்த்தார் கைலாசம். அவன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவன் அங்கே பணம் டெபாசிட் செய்யத்தான் வந்திருக்கிறான் என்று ஊகித்த கைலாசம் அவனைத் தனியே வெளியில் அழைத்துப் போய்ப் பேசினார்.

"தம்பி, நான் இங்க அம்பதாயிரம் ரூபாய் பணம் போட்டுட்டுட்டு வட்டி வாங்கறத்துக்காக அலைஞ்சுக்கிக்கிட்டிருக்கேன். இங்கே பணம் போடாதீங்க. பாங்க்கில போடுங்க. அதான் பாதுகாப்பு. நான் பண்ணின தப்பை நீங்களும் பண்ணாதீங்க" என்றார் கைலாசம்.

"பாங்க்கை விட இங்க அஞ்சு சதவீதம் வட்டி அதிகம் கொடுக்கறாங்களே!" என்றான் சுகுமார்.

"அது மாதிரி நினைச்சுத்தான் நானும் இங்க பணத்தைப் போட்டுட்டுக் கஷ்டப்படறேன்" என்றார் கைலாசம்.

"பத்தாயிரம் ரூபாதான் சார் போடப் போறேன்? ரிஸ்க் எடுத்துத்தான் பாக்கறேனே!" என்றான் சுகுமார்.

"இப்படி நினச்சுப் பாருங்களேன். பத்தாயிரம் ரூபாய்க்கு அஞ்சு பர்சன்ட் வீ தம் பாத்தா வருஷத்துக்கு ஐநூறு ரூபா அதிகம் கிடைக்கும். ஐநூறு ரூபாய்க்காக பத்தாயிரம் ரூபாயைப் பணயம் வெக்கணுமா?" என்றார் கைலாசம்.

சுகுமார் யோசித்தான். ஆயினும் பணத்தை அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்யும் எண்ணத்தில் அவன் வலுவாக இருந்ததாகத் தோன்றியது.

"சரி. ஒண்ணு பண்ணுங்க. ஒரு மாசம் கழிச்சு வந்து போடுங்க. அதுக்குள்ளே யோசிக்கறதுக்கு உங்களுக்கும் கொஞ்சம் நேரம் கிடைக்கும்" என்றார் கைலாசம்.

"ஒரு மாசம் பணத்தை வீட்டிலே வச்சிருந்தா வட்டி நஷ்டம் ஆகுமே!" என்ற சுகுமார் "சரி சார். நீங்க சொல்றதுக்காக ஒரு வாரம் கழிச்சு வரேன்" என்று கிளம்பியவன், "உங்க ஃபோன் நம்பர் கொடுங்க" என்று கேட்டு வாங்கிக் கொண்டு போனான்.

"ப்புறம் என்ன ஆச்சு?" என்றார் சம்பந்தம் சுவாரசியமாக.

"அதுக்கப்பறம் ரெண்டு மூணு நாள்ள அந்த நிறுவனத்தை மூடிட்டாங்க. பணம் டெபாசிட் பண்ணினவங்களுக்கெல்லாம் பணம் போச்சு."

"உனக்கும் போச்சா? எங்கிட்ட சொல்லவேயில்லையே!"

"அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முட்டாள்தனமா நடந்துக்கிட்டதை எல்லார்கிட்டயும் சொல்லிப் பெருமை அடிச்சுக்க முடியுமா என்ன? இப்ப இந்த சுகுமாரைப் பத்தி நீ கேட்டதால இதைச் சொன்னேன்."

"பாத்தியா? சுகுமாரைப் பத்திப் பேச ஆரம்பிச்சு உன்கிட்ட வந்து நின்னுட்டோம்! அவனைப் பத்தி சொல்லு."

"கம்பெனி மூடினது தெரிஞ்சதும் எனக்கு ஃபோன் பண்ணி அவனோட அனுதாபத்தைத் தெரிவிச்சான். நான் சொன்னதுக்காக ஒரு வாரம் தள்ளிப் போட்டதால அவனோட பணம் போகாம தப்பிச்சதுல அவனுக்கு எங்கிட்ட ஒரு பெரிய நன்றி உணர்ச்சி ஏற்பட்டுடுச்சு. என் வீட்டுக்கு வந்தான். அப்புறம் அடிக்கடி வருவான். அதுக்கப்புறம் அவனுக்கு நான் எந்த யோசனையும் சொன்னதில்ல. ஆனா என்னை ஒரு வழிகாட்டின்னே சொல்லிக் கிட்டிருக்கான். ஏன்னா, அதுக்கப்புறம் எந்த முடிவு எடுத்தாலும் நல்லா யோசிச்சுத்தான் செய்யணும்ங்கிற பழக்கம் அவனுக்கு வந்துடுச்சாம்!"

"நீ அவனுக்குச் செஞ்ச உதவி சின்னதா இருந்தாலும் அதோட மதிப்பை அவன் புரிஞ்சுக்கிட்டதாலதான் உன்கிட்ட விசுவாசமா இருக்கான்" என்றார் சம்பந்தம்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

பொருள்:  
ஒருவர் செய்த உதவி மிகச் சிறியதாக இருந்தாலும், அந்த உதவியைப் பெற்றவர் அதன் பயனை உணர்ந்தவராக இருந்தால் அதை மிகப் பெரிதாகக் கருதிப் போற்றுவார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Higher Rate of Interest' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















"

Sunday, October 29, 2017

103. நகைக்கடன்

"இது மாதிரி நிறுவனங்கள்ளல்லாம் கடனே வாங்கக் கூடாது. எங்கிட்ட சொல்லியிருந்தா ஏதாவது பாங்க்கில வாங்கச் சொல்லி யோசனை சொல்லி இருப்பேன். இப்ப வந்து சொல்றீங்களே!" என்றான் மணி.

"ஏதோ அவசரத்துக்கு வாங்கிட்டேன். பாங்க்கில எல்லாம் அலைக்கழிப்பாங்கன்னு நெனச்சேன். இந்த கம்பெனி சமீபத்திலதான் எங்க வீட்டுக்குப் பக்கத்தில பிராஞ்ச் ஓபன் பண்ணியிருந்தாங்க. 

"சும்மா விசாரிக்கலாம்னுதான் உள்ள போனேன். எங்கிட்ட ரொம்ப இனிமையாப் பேசினாங்க. நகையை எடுத்துக்கிட்டு வாங்க, இப்பவே கேஷ் கொடுத்துடறோம்னு சொன்னாங்க. 

"அவங்க சொன்ன வட்டி கூட அதிகமாத் தெரியல. ஆனா ரெண்டு மாசம் வட்டி கட்டலைங்கறதுக்காக நகையை ஏலம் போடப் போறோம்னு நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க. வட்டி வேற அதிகமாப் போட்டிருக்காங்க. 

"போய்க் கேட்டதுக்கு என்னென்னவோ கணக்கு சொல்றாங்க. டைம் கொடுக்கவும் மாட்டாங்களாம். நாளைக்குள்ள பணம் கட்டலைன்னா நகையை ஏலம் போட்டுடுவோம்னு திட்டவட்டமாச் சொல்லிட்டாங்க" என்றான் சபாபதி.

"எவ்வளவு கட்டணும்?"

"கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூவா வருது."

"அவ்வளவு பணத்தை உடனே புரட்ட முடியாதே!"

"நிறைய பேர்கிட்டக் கேட்டுப் பாத்துட்டேன். எல்லாரும் கை விரிச்சுட்டாங்க."

"சரி. நான் முயற்சி பண்ணிப் பாக்கறேன். சாயந்திரம் ஃபோன் பண்றேன்."

சபாபதி மணிக்கு உறவு முறைதான் என்றாலும், எப்போதாவது கல்யாணங்களில் சந்தித்துக்கொள்வதைத் தவிர, இருவரும் நெருங்கிப் பழகியது கிடையாது.

அன்று மாலை சபாபதிக்கு ஃபோன் செய்து "சாரி சார். பணம் கிடைக்கல" என்று சொல்லி விட்டான் மணி.

டுத்த நாள் காலை பயந்து கொண்டே அந்த நிதி நிறுவனத்துக்குப் போனான் சபாபதி- கடைசியாக ஒருமுறை கெஞ்சிக் கேட்டுப் பார்க்கலாம் என்று.

"உங்க நகையெல்லாம் ஏலம் போடறத்துக்கு எடுத்து வச்சாச்சு சார். 12 மணிக்கு ஏலம். ரெண்டு மணிக்கு வந்தீங்கன்னா உங்க நகைகள் எவ்வளவுக்குப் போச்சு, உங்க கடன் வட்டியெல்லாம் போக உங்களுக்கு மீதிப் பணம் ஏதாவது கிடைக்குமான்னு சொல்றோம்" என்றார்கள். கடைசி நம்பிக்கையும் போய் விட்டது.

அவர்கள் சொன்னபடி மதியம் 2 மணிக்குப் போனான் .

"ஏன் சார்? நேத்திக்கே பணம் கட்டியிருக்கலாம் இல்ல? நகையை எல்லாம் ஏலம் போடறத்துக்காக எடுத்து வச்சப்பறம் 11 மணிக்கு வந்து பணம் கட்டச் சொல்லியிருக்கீங்களே! நல்ல வேளை. இன்னும் 10 நிமிஷம் லேட்டாயிருந்தாக் கூட ஏலத்துக்குப் போக வேண்டியதைத் தடுத்திருக்க முடியாது" என்றார் நிறுவன ஊழியர்.

"யார் சார் பணம் கட்டினாங்க?" என்றான் சபாபதி, நம்ப முடியாத வியப்புடன்.

"நீங்க அனுப்பின ஆளு இல்லியா அவரு? இருங்க. வவுச்சரைப் பாத்துச் சொல்றேன்" என்றவர் "கையெழுத்துல மணின்னு இருக்கு. உங்களுக்குத் தெரிஞ்சவர்தானே?" என்றார்.

"ஆமாம்." என்றான் சபாபதி. உணர்ச்சிப் பெருக்கில் அவனுக்குக் குரலே எழும்பவில்லை.

"கொஞ்சம் இருங்க. நகையை எடுத்துக்கிட்டு வரேன். வாங்கிட்டுப் போயிடுங்க" என்று உள்ளே எழுந்து போனார் ஊழியர்.

பாபதி மணிக்கு ஃபோன் செய்தான். "சார்! இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்ன சொல்றதுன்னே தெரியல" என்றான்.

"காலையிலிருந்து உங்களுக்கு ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்கேன், நீங்க எடுக்கவே இல்லையே?" என்றான் மணி.

"ஆமாம், தவறுதலா ஃபோனை சைலன்ட் மோட்ல போட்டுட்டேன் போலிருக்கு. இப்பதான் பாக்கறேன்" என்ற சபாபதி, "நேரத்துக்கு உதவி பண்ணியிருக்கீங்க சார். இதை நான் மறக்கவே மாட்டேன்" என்றான்.

"நேத்திக்கு நீங்க வந்துட்டுப் போனப்பறம் விஷயத்தை என் மனைவிகிட்ட சொன்னேன். அவதான் சொன்னா 'நம்பகிட்ட பணம் இல்லாட்டா என்ன? என்னோட நகைகளை பாங்க்கில வச்சுக் கடன் வாங்கி அவங்களுக்கு உதவி செய்யாலாமே'ன்னு. 

"பணம் கிடைச்சப்புறம் உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன். காலையில என் பாங்குக்குப் போய் நகைகளை வச்சுப் பணம் வாங்கிக்கிட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். நீங்க ஃபோனை எடுக்கவேயில்லை. 

"நேத்திக்கு நீங்க என் வீட்டுக்கு வந்திருந்தப்ப உங்களுக்கு வந்த நோட்டீஸை இங்கேயே விட்டுட்டுப் போயிட்டீங்க. அதை எடுத்துக்கிட்டுப் போய் உங்க பாங்க்கில பணம் கட்டிட்டு வந்துட்டேன். நகைகளை வாங்கிட்டீங்களா?" என்றான் மணி.

"சார்! என்னோட நகையை மீட்கறதுக்காக உங்க மனைவி அவங்க நகையைக் கொடுத்திருக்காங்க. அதை அடகு வச்சுப் பணம் வாங்கி, நீங்க என் கடனை அடைச்சிருக்கீங்க. நீங்க எனக்கு செஞ்சிருக்கிற உதவி ரொம்பப் பெரிசு. இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள உங்க கடனை வட்டியோடு அடைச்சுடறேன் சார்" என்றான் சபாபதி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

பொருள்:  
தனக்கு என்ன பயன் கிடைக்கும் என்று யோசிக்காமல் ஒருவர் செய்த உதவியை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலை விடப் பெரியதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Jewel Loan' the English version of this story
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















102. கல்லூரிக் கட்டணம்

"என்னடா இப்ப வந்து சொல்றே?" என்றார் ராமமூர்த்தி.

"காலேஜ் நோட்டீஸ் போர்டில போட்டிருக்காங்களாம். இன்னிக்குத்தான் ரவி பாத்துட்டு வந்து சொன்னான்" என்றான் மணி.

"நம்மகிட்ட அட்மிஷன் லெட்டர் கூடக் கிடையாது. அப்ளிகேஷன் ஃபார்ம்ல கரெஸ்பாண்டண்ட் கையெழுத்துப் போட்டதோட சரி. அதையும் ஆஃபீஸ்ல வாங்கி வச்சுக்கிட்டு, நாங்க சொல்ற அன்னிக்கு ஃபீஸ் கட்டிடுங்கன்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் அவங்ககிட்டேருந்து லெட்டர் கூட வரலை."

"அதெல்லாம் போட மாட்டாங்கப்பா. அப்ளிகேஷன் நம்பரைச் சொல்லி ஃபீஸ் கட்ட வேண்டியதுதான்."

"இப்ப என்ன செய்யறது? இன்னும் நாலு நாள் கழிச்சுத்தான் ரிஜிஸ்ட்ரேஷன். அன்னிக்குத்தான் மீதிப்பணம் கொடுக்கறதாச் சொல்லி இருக்கார் மாணிக்கம். இப்ப அவர்கிட்ட போய்ப் பணம் கேட்க முடியாதே!" என்று கவலைப்பட்டார் ராமமூர்த்தி.

"அப்பா! நீ கஷ்டப்பட்டு யார் யார் கிட்டயோ சிபாரிசு புடிச்சு, இந்த சீட்டை வாங்கி இருக்க. என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் உன்னோட மார்க்குக்கு இந்தக் காலேஜில எப்படிடா சீட் கிடைச்சதுன்னு கேக்கறாங்க. நாளைக்குப் பணம் கட்டலேன்னா என்னோட சீட்டை வேற யாருக்காவது கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க."

"காலம் கெட்டுப் போச்சு. இது 1970 ஆச்சே! இதுவே எங்க காலமா இருந்தா..."

"உங்க காலத்தில காலேஜில் படிக்கிற வாய்ப்பே உனக்குக் கிடைக்கலியே அப்பா!" என்றான் மணி.

"இப்ப மட்டும் என்ன? உன்னைக் காலேஜில் படிக்கிற அளவுக்கு நமக்கு வசதியா இருக்கு? பி.யூ.சி வரையிலும் எப்படியோ படிக்க வச்சுட்டேன். பி.எஸ்.சி படிக்க வைக்க, கொஞ்சம் நிலத்தை வித்துத்தானே உன் ஃபீஸுக்கே ஏற்பாடு பண்ணி இருக்கேன்? வர பணத்தை செலவழிக்காம வச்சுக்கிட்டு, மூணு வருஷத்துக்கு ஃபீஸ் கட்டணும்" என்றார் ராமமூர்த்தி.

"அது சரி. இப்ப ஃபீஸ் கட்ட, பணத்துக்கு என்ன பண்ணப் போறீங்க? மாணிக்கத்தையே கேக்கறீங்களா?" என்றாள் அவர் மனைவி பார்வதி.

"அவரை நமக்குப் பழக்கம் கிடையாது. நம்ம நிலத்தை வாங்கறவரு அவரு. அவர் கொடுத்த அட்வான்ஸை வாங்கிக் கடனை அடைக்கப் பயன்படுத்தியாச்சு. மீதிப்பணம் ரிஜிஸ்ட்ரேஷன்போதுதான்னு அக்ரிமென்ட்டிலே இருக்கு. இப்ப போய் அவர்கிட்ட எப்படிக் கேக்க முடியும்?"

"பையனை அழைச்சுக்கிட்டுப் போய், கேட்டுத்தான் பாருங்களேன்! நமக்கு வேற வழி என்ன இருக்கு?' என்றாள் பார்வதி.

"சரி. இப்பவே கிளம்பறேன். அவர் இல்லேன்னு சொன்னா அப்புறம் வேற வழி என்னன்னு பாக்கணும்."

ராமமூர்த்தியும், மணியும் மாணிக்கத்தின் வீட்டுக்குப் போனபோது, நல்லவேளையாக அவர் வீட்டில் இருந்தார்.

"வாங்க, வாங்க!" என்று வரவேற்றார் மாணிக்கம்.

"உங்ககிட்ட ஒரு உதவி கேக்கணும்,. நீங்க தப்பா நினைக்கக்கூடாது. இவன் என் பையன். திடீர்னு இவன் காலேஜ் அட்மிஷனுக்கு நாளைக்குள்ள பணம் கட்டணும்னு சொல்றாங்க..." என்று ஆரம்பித்தார் ராமமூர்த்தி.

"ஓ! ரிஜிஸ்ட்ரேஷன் அன்னிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை முன்னாடியே கொடுக்க முடியுமான்னு கேக்க வந்தீங்களா?" என்றார் மாணிக்கம்.

"மொத்தப் பணமும் வேண்டாம். ஒரு ஐநூறு ரூபா இருந்தா போதும், இப்போதைக்கு..."

"எங்கிட்ட கையில பணம் இல்லியே. எனக்கு வர வேண்டிய பணம் வர ரெண்டு நாள் ஆகும். யார்கிட்டயாவது கேட்டுப் பாக்கறேன். சாயந்திரம் வர முடியுமா?"

"வரோம் சார். எப்ப வரணும்னு சொல்லுங்க."

"ஆறு மணிக்கு மேல வாங்களேன். நீங்க வர வேண்டியதில்லை. உங்க பையனை அனுப்பிச்சாப் போதும்."

மாலை 7 மணிக்கு ராமமூர்த்தி மாணிக்கத்தின் வீட்டுக்குச் சென்றார்.

"வாங்க. நீங்களே வந்துட்டீங்களா? பையனை அனுப்பிச்சாப் போதும்னு சொன்னேனே. நீங்க ஏன் சிரமப்படறீங்க?"

"நான் எதிலேயாவது கையெழுத்துப் போட வேண்டியிருக்குமோன்னு நெனைச்சுத்தான்..."

"கையெழுத்தா? அதுதான் சப் ரிஜிஸ்திரார் ஆஃபீஸ்ல கையெழுத்துப் போடப் போறீங்களே! இந்தாங்க பணம். சப் ரிஜிஸ்திரார் ஆஃபீஸ்ல மீதிப் பணத்தைக் கொடுக்கும்போது இந்த ஐநூறு ரூபாயைக் கழிச்சுக்கறேன்."

"நீங்க செஞ்சது பெரிய உதவி. யார்கிட்ட கேக்கறதுன்னே தெரியாமத் தவிச்சுக்கிட்டிருந்தேன்."

"இதுல என்னங்க இருக்கு? நான் பெரிசா ஒண்ணும் பண்ணிடல! ரிஜிஸ்ட்ரேஷன்போது கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு சின்னப் பங்கை நாலு நாள் முன்னாடியே கொடுத்திருக்கேன், அவ்வளவுதானே?"

"உங்களுக்கு வேணும்னா இது சின்ன உதவியா இருக்கலாம். எங்களைப்  பொருத்த வரையிலே நீங்க சரியான நேரத்தில உதவி பண்ணி என் பையனோட படிப்பு தடைபடாம பண்ணியிருக்கீங்க. நானும் சரி, என் பையனும் சரி, இந்த உதவியை எப்பவுமே மறக்க மாட்டோம்" என்றார் ராமமூர்த்தி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பொருள்:  
உரிய காலத்தில் செய்யப்படும் உதவி சிறியதாக இருந்தாலும், அது இவ்வுலகை விடப்  பெரியதாகக் கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Admission Fees' the English version of this story
பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்














Friday, September 22, 2017

101. எங்கிருந்தோ வந்தார்!

அது ஒன்றும் அவ்வளவு பெரிய குடியிருப்பு இல்லை. நான்கு அடுக்குகளில் மொத்தம் 24 வீடுகள்தான். ஆயினும் சுந்தருக்கு அந்தக் குடியிருப்பில் நான்கைந்து பேரைத்தான் ஓரளவுக்காவது தெரியும். பலரின் முகம் கூடத் தெரியாது. அவன் அப்பாவுக்கு இன்னும் நான்கைந்து பேரைத் தெரிந்திருக்கலாம்.

மாடிப்படிகளிலும், லிஃப்டுகளிலும் சந்திக்கும் சில முகங்கள் பரிச்சயமானவையாகத் தோன்றும். சில சமயம் புன்முறுவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுவது உண்டு. பேசுவது என்பது மிக அரிது. குடியிருப்பில் அவ்வப்போது எழும் பிரச்னைகளைக் கூட விவாதிப்பதில்லை. அவற்றைக் குடியிருப்பு சங்கச் செயலரிடம் சொல்வதோடு சரி!

இந்த நிலையில், அந்தக் குடியிருப்பில் வசிக்கும், தான் அவ்வப்போது பார்த்திருக்கும் ஒரு பெரியவர் தன்னை வழியில் நிறுத்திப் பேசியது சுந்தருக்கு வியப்பாக இருந்தது.

"ஏம்ப்பா, நீ எஞ்சினீரிங் படிச்சுக்கிட்டிருந்தே போலிருக்கே?" என்றார் அவர்.

"ஆமாம் சார்!" என்றான் சுந்தர், 'இவருக்கு எப்படி இது தெரியும்?' என்ற கேள்வியை மனதில் எழுப்பியபடி.

"ராமலட்சுமி எஞ்சினீரிங் காலேஜிலதானே படிச்சுக்கிட்டிருந்தே?"

"உங்களுக்கு எப்படி சார்..?"

"நான் மெயின் ரோட் பக்கம் நடந்து போகும்போது, நீ அந்த காலேஜ் பஸ்ல ஏறிப் போனதை ரெண்டு மூணு தடவை பாத்திருக்கேன்" என்றவர், தொடர்ந்து "படிப்பு முடிஞ்சு போச்சா?" என்றார்.

"முடிஞ்சுடுச்சு சார்" என்றான் சுந்தர்.

"வேலைக்குப் போறியா?"

"இன்னும் இல்லை..." என்றான் சுந்தர் சற்று சங்கடத்துடன்.

"கேம்பஸ்ல வேலை கிடைக்கலையா?" என்றார் பெரியவர் விடாமல்.

"நான் படிச்சது மெக்கானிகல் எஞ்சினீரிங். கேம்பஸ்ல கிடைச்ச வேலையெல்லாம் சாஃப்ட்வேர்லதான். எனக்கு எஞ்சினீரிங் வேலைக்குப் போறதிலதான் விருப்பம்."

"நல்ல வேலை கிடைக்கும். கவலைப்படாதே!" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார் அவர்.

தைத் தன் பெற்றோர்களிடம் சொன்ன சுந்தர் "அப்பா! உனக்கு அவரைத் தெரியுமா?" என்றான்.

"பாத்திருக்கேன். மூணாவது மாடியில இருக்காரு. பேரு வெங்கடாசலம். ஆனா அவர்கிட்ட பேசினது இல்லை. அவர் எதுக்கு உன்னை விசாரிச்சார்? சும்மாவா?" என்றார் அவன் அப்பா.

"வம்புதான். வேற என்ன?" என்றாள் அவன் அம்மா. "உனக்கு சீக்கிரம் ஒரு வேலை கிடைச்சு, இவங்க மாதிரி ஆசாமிகள் மூஞ்சியில எல்லாம் கரியைப் பூசணும்!" என்று வாழ்த்தினாள்(!)

ரண்டு நாட்கள் கழித்து, அழைப்பு மணி அடித்தது. சுந்தர்தான் கதவைத் திறந்தான்.

வெங்கடாசலம் நின்று கொண்டிருந்தார்.

"அப்பா இல்லியே!" என்றான் சுந்தர்.

"இல்லியா? பரவாயில்லை. ஆனா நான் பேச வந்தது உன் விஷயமாத்தான். உள்ள வரலாமா?"

"வாங்க சார், உக்காருங்க!"

"ப்ரோடெக் இன்னோவேஷன்ஸ்'னு ஒரு கம்பெனி இருக்கே தெரியுமா?"

"தெரியுமே! ரொம்ப நல்ல கம்பெனி ஆச்சே அது?"

"அதுல வேலை கிடைச்சா போவியா?"

சுந்தர் திகைப்புடன் "எப்படி சார்? அங்கே வேலை கிடைக்கிறது சுலபம் இல்லியே!" என்றான்.

"என்னோட சொந்தக்காரப் பையன்தான் அங்கே ஜெனரல் மானேஜரா இருக்கான். பேரு கிருஷ்ணன். உன்னைப் பத்தி அவன்கிட்ட ஃபோன்ல பேசினேன். பையனை வரச் சொல்லுங்க பாக்கலாம்னான். 'பாக்கறதெல்லாம் இல்லை. பையன் நமக்குத் தெரிஞ்சவன். நீ வேலை கொடுக்கறதாச் சொன்னாதான் அவனை வரச் சொல்லுவேன்'னேன். சிரிச்சுக்கிட்டே 'நீங்க ஒரு ஆளை அனுப்பி வச்சா, அவருக்கு நான் வேலை கொடுக்காம இருப்பேனா?'ன்னான். அதனால உனக்கு வேலை நிச்சயம்!"

அவர் பேச்சைக் கேட்டபடி உள்ளிருந்து சுந்தரின் அம்மா வெளியில் வந்தாள்.

"சார்! நான் உங்ககிட்ட பேசினது கூட இல்லை. எனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்யறதா சொல்றீங்களே!" என்றான் சுந்தர், உணர்ச்சி மிகுந்தவனாக.

"நாம எல்லாரும் ஒரே இடத்தில இருக்கோம். ஒத்தருக்கு ஒத்தர் உதவி செய்யக் கூடாதா என்ன? முன்ன ஒரு தடவை கிருஷ்ணன் எங்கிட்ட, 'மாமா! எங்க கம்பெனியில தெரிஞ்சவங்க மூலமா வர ரெஃபரன்ஸை வச்சுத்தான் வேலைக்கு ஆள் எடுப்போம். உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல பையன்களா இருந்தா சொல்லுங்க'ன்னு சொல்லியிருந்தான். உன்னைப் பார்த்ததும் எனக்கு அது ஞாபகம் வந்தது. நாளைக்கு உன்னை வரச் சொல்லியிருக்கான். போய்ப் பார்த்து வேலையில சேர்ந்திடு" என்று எழுந்தார்.

"கொஞ்சம் காப்பி குடிச்சுட்டுப் போங்களேன்" என்றாள் அவன் அம்மா.

"இப்பத்தாம்மா வீட்டில குடிச்சேன். வயசான காலத்தில அதிகமா காப்பி குடிக்கக் கூடாது" என்றார் அவர் சிரித்தபடி.

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல சார்" என்று சுந்தர் தடுமாற்றத்துடன் சொல்லிக்கொண்டிருந்தபோதே, அவர் எழுந்து சென்று விட்டார்.

"எவ்வளவு நல்ல மனுஷன்! அக்கறையோடதான் உன்கிட்ட விசாரிச்சிருக்காரு. நான் அவசரப்பட்டு வம்புக்கு அலையறவர்னு சொல்லிட்டேனே" என்று வருந்தினாள் அவன் அம்மா.

"நாம அவருக்கு எந்த உதவியும் செஞ்சதில்லை. அவரை எத்தனையோ தடவை வழியில பாத்திருக்கேன். வயசில பெரியவர்ங்கறதுக்காக விஷ் பண்ணினது கூட இல்ல. ஆனா அவரா வலுவில வந்து இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்காரே! என்னால நம்பவே முடியல!" என்றான் சுந்தர்.


அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்:  
நம்மிடமிருந்து எந்த உதவியும் பெறாத ஒருவர் முன் வந்து நமக்கு ஒரு உதவி செய்தால், அவருக்கு இந்த உலகையும், வானுலகையும் கொடுத்தால் கூட, அது அந்த உதவிக்கு ஈடாகாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Gossipmonger?' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Thursday, September 14, 2017

100. துவர்ப்பு வாழை

நாகம்மையைப் பற்றித் தெரிந்தவர்கள் அவளிடம் அதிகம் பேச்சுக் கொடுக்க மாட்டார்கள். அவளுடன் வாக்குவாதம் செய்தால், அவள் வாயிலிருந்து வரும் சுடுசொற்களை யாராலும் தாங்க முடியாது.

நாகம்மையின் பேச்சைத் தாங்க முடியாமல் அவள் மாமியார் நிரந்தரமாகவே தன் இன்னொரு பிள்ளையிடம் போய் விட்டாள். 

அவள் சகோதரிகள் கூட அவளிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

அவள் தங்கை சிவகாமி ஒருமுறை அவளைப் பற்றித் தன் இன்னொரு சகோதரியிடம் "நம்ப அப்பா அம்மா அவளுக்கு நாகம்மைன்னு சரியாத்தான் பேரு வச்சிருக்காங்க. பாம்பு விஷத்தைக் கக்கற மாதிரிதானே பேசறா அவ!" என்று சொல்லியிருக்கிறாள்.

நல்லவேளை! இது நாகம்மையின் காதுகளுக்கு எட்டவில்லை. எட்டியிருந்தால் தன் தங்கை சொன்னது எவ்வளவு உண்மை என்று இன்னொரு முறை நிருபித்திருப்பாள்!

அவள் கணவன் சண்முகம் அவள் பேச்சைச் சகித்துக் கொண்டு, வேறு வழியின்றி அவளுடன் குடித்தனம் நடத்தி வந்தான்.

அவர்களுடைய 12 வயது மகள் சுமதி மட்டும்தான் தன் தாய்க்கு ஈடு கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பாள். 

"ஏம்மா இப்படி சண்டை போடற மாதிரி பேசிக்கிட்டிருக்கே?" என்று தன் அம்மாவைப் பலமுறை கடிந்து கொண்டிருக்கிறாள் சுமதி.

"உனக்கு என்னடி தெரியும்? எனக்கு புத்தி சொல்ல வந்துட்ட!" என்று பதிலடி கொடுப்பாள் நாகம்மை.

ன்று சுமதி பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தபோது நாகம்மை தன் கணவனைப் பிடி பிடி என்று பிடித்துக் கொண்டிருந்தாள்.

"ஏங்க, எத்தனை வருஷமா கடைக்குப் போயி காய், பழம் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கீங்க! இன்னும் பழமாப் பாத்து வாங்க உங்களுக்குத் தெரியலியே! எப்படித்தான் உங்க அம்மா உங்களை இப்படித் துப்பு இல்லாதவரா வளத்தாங்களோ தெரியல!"

"என்னம்மா விஷயம்?" என்றாள் சுமதி.

"இங்க பாரு, உங்கப்பா வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்திருக்கிற லட்சணத்தை! வாழைப்பழம் வாங்கிட்டு வரச் சொன்னா வாழைக்காய் வாங்கிக்கிட்டு வந்திருக்காரு. இதைச் சாப்பிட முடியாது. பொறியல்தான் பண்ண முடியும்"

"அப்ப, பொறியல் பண்ணிடு!" என்றாள் சுமதி.

"எரிச்சலைக் கிளப்பாதேடி. பாதிப்பழமா இருந்தா, பொறியலும் பண்ண முடியாது, பழமா சாப்பிடவும் முடியாது."

"அப்ப ரெண்டு நாள் வச்சிருந்து, பழுத்தப்பறம் சாப்பிடு!" என்றாள் சுமதி.

"ரெண்டு நாள் கழிச்சு சாப்பிடறதுக்கா இன்னிக்கு வாங்கிக்கிட்டு வரச் சொன்னேன்?"

"இல்லை நாகம்மை! போன தடவை வாங்கின பழமெல்லாம் சீக்கிரமே அழுகிப் போயிடுச்சுன்னு குத்தம் சொன்னே! அதுதான் கொஞ்சம் காவெட்டா வாங்கிக்கிட்டு வந்தேன்" என்றான் சண்முகம்.

"அதுக்காக இவ்வளவு காயாவா வாங்கறது? கடிக்கவே முடியலை அவ்வளவு காயா இருக்கு. வாயெல்லாம் துவர்க்குது" என்றாள் நாகம்மை.

"ஏம்மா, வாழைப்பழம் காயா இருந்தா துவர்ப்பா இருக்கும்னு சொல்றியே, அதுமாதிரிதானே, நீ சண்டை போடற மாதிரி பேசறது மத்தவங்களுக்கு வருத்தமா இருக்கும்?" என்றாள் சுமதி, தான் பள்ளியில் படித்த குறளை நினைவு கூர்ந்தவளாக.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   

குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

பொருள்:  
இனிமையான சொற்கள் இருக்கும்போது, அவற்றைப் பயன்படுத்தாமல், கடிய சொற்களைப் பயன்படுத்துவது பழத்தை விட்டு விட்டுக் காயைப் பறிப்பது போன்றதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Unripe Bananas' the English version of this story.
பொருட்பால்                                                                                                    காமத்துப்பால்






















Tuesday, September 5, 2017

99. ஜிராக்ஸ் கடை

காலையில் எழுந்ததுமே ராமநாதனை எரிச்சலூட்டும் சம்பவங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன.

தினமும் அவர் பேப்பர் படிக்கத் துவங்கும்போதே காப்பி வந்து விடும். ஆனால் இன்று அவர் பேப்பர் படித்து முடித்த பிறகும் காப்பி வரவில்லை.

"நான் எழுந்து இவ்வளவு நேரமாச்சு. இன்னும் ஒரு வாய்க் காப்பிக்கு வழியில்லை!" என்று கத்தினார் ராமநாதன், பேப்பரைத் தூக்கிப் போட்டபடியே.

"டிகாக்‌ஷன் இறங்கவே இல்லை. நான் என்ன செய்யறது?" என்றாள் அவர் மனைவி பொன்னம்மாள். சற்று நேரம் கழித்துக் காப்பியைக் கொண்டு வைத்தவள், "கோவமாப் பேசறதைக் கொஞ்சம் குறைச்சுக்கங்க!" என்றாள்.

"காப்பியை இவ்வளவு நேரம் கழிச்சுப் போட்டுட்டு எனக்கு உபதேசம் வேறயா?" என்று பாய்ந்தார் ராமநாதன்.

பொன்னம்மாள் ஒன்றும் பேசாமல் உள்ளே போய் விட்டாள். அவள் சொன்னதைக் கேட்டு விட்டு பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று அவருக்கு தாமதமாகத்தான் தோன்றியது.

அலுவலகத்திலும் பல எரிச்சலூட்டும் சம்பவங்கள். அவருக்குக் கீழே பணியாற்றியவர்களை வார்த்தைகளால் பொரிந்து தள்ளி விட்டார்.

"தப்பித் தவறி உள்ளே போயிடாதே. மனுஷன் கடிச்சுக் குதறிடுவாரு" என்று அவரது உதவியாளர் இன்னொருவரிடம் சொன்னது அவருக்குத் தெரியாது!

மாலை வீடு வந்த பிறகும் எரிச்சலுடன்தான் இருந்தார்.

"ஆஃபீஸ்ல இன்னிக்கு எல்லார் மேலயும் எரிஞ்சு விழுந்தீங்களா?" என்றாள் மனைவி.

"டென்ஷன் இருந்தா கோவம் வரத்தான் செய்யும். உனக்கு என்ன தெரியும்?"

"என்ன கோவமா இருந்தாலும் பேச்சிலே கடுமையைக் குறைச்சுக்கலாம் இல்லியா?"

"நீ எனக்கு புத்தி சொல்ற அளவுக்கு நான் இல்ல. போய் வேலையைப் பாரு."

சற்று நேரம் கழித்து "வெளியில போயிட்டு வரேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் ராமநாதன். ஜிராக்ஸ் எடுக்க அருகில் இருக்கும் கடைக்குத்தான் போனார். வேண்டுமென்றேதான் மனைவியிடம் சொல்லவில்லை. 

'எங்கே போறீங்க?' என்று அவள் கேட்க மாட்டாள். எங்கே போயிருக்கிறார், எப்போது வருவார் என்று தெரியாமல் கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருக்கட்டும்!

ஜிராக்ஸ் கடையை நடத்தி வந்த இளைஞன், தான் ஒருவனாகவே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். ஜிராக்ஸ், லாமினேஷன் போன்ற பணிகள் செய்வதைத் தவிர, பேனா போன்ற சில பொருட்களையும் விற்பனை செய்து வந்தான்.

பேனா, பென்சில், பேப்பர் என்று பல்வேறு பொருட்களை வாங்க வந்தவர்கள் சிலரும், ஒரு தாள் முதல், பல பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் வரை ஜிராக்ஸ் எடுக்க வந்திருந்தவர்கள் சிலரும் என்று ஐந்தாறு பேர் கடையில் நின்று கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் தன்னை முதலில் கவனிக்க வேண்டும் என்று அவசரப்படுத்திக் கொண்டிருக்க, அந்த இளைஞன் அனைவரையும் சமாளித்துக் கொண்டிருந்தான்.

"சார் இந்தாங்க. அஞ்சு பேனாதானே கேட்டீங்க? அம்பது ரூபா? சாரி சார். அஞ்சு ரூபா பேனா இல்லை. பத்து ரூபா  பேனாதான் இருக்கு...சார் இவ்வளவு பேஜ் எடுக்க டைம் ஆகும். கொடுத்துட்டுப் போங்க. எட்டு மணிக்கு வாங்க எடுத்து வைக்கிறேன்...ஏ-ஃபோர் ஷீட் தானே சார்?... இந்தாங்க. சார். ஒரு நிமிஷம். இதோ வந்துடறேன்."

"ஏம்ப்பா, எவ்வளவு நேரம் நிக்கறது? ஒரு பேஜ் ஜிராக்ஸ் எடுத்துட்டு என்னை அனுப்பக் கூடாது?" என்று கத்தினார் ராமநாதன்.

இளைஞன் சிரிப்புடன் அவர் பக்கம் திரும்பினான். 

"சாரி சார். அவங்கள்ளாம் உங்களுக்கு முன்னால வந்தவங்க" என்றவன், இன்னொருவரைப் பார்த்து, "சார்! பெரியவருக்கு ஒரு பேஜ் மட்டும் எடுத்துக் கொடுத்துட்டு வந்துடறேன்" என்று சொல்லி விட்டு, "சார் கொடுங்க" என்று அவரிடமிருந்து பேப்பரை வாங்கி ஜிராக்ஸ் எடுத்து அவரிடம் கொடுத்தான்.

அவர் பத்து ரூபாயை நீட்டினார்.

"சில்லறை இல்லையே சார்! பரவாயில்லை. அப்புறம் இந்தப் பக்கம் வரும்போது கொடுங்க" என்று சொல்லி விட்டு அடுத்தவரிடம் திரும்பினான்.

ராமநாதன் வீட்டுக்குத் திரும்பும்போது அந்த இளைஞனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார்.

'இவ்வளவு அழுத்தத்திலும் எப்படி அவன் சிரித்த முகத்துடன் இனிமையாகப் பேசுகிறான்? காலை முதல் மாலை வரை இப்படித்தான் இருப்பானோ? எப்படி அவனால் முடிகிறது?'

அவனுடைய அழுத்தமான சூழ்நிலையோடு ஒப்பிடும்போது அவரது டென்ஷன் எதுவுமே இல்லை என்று தோன்றியது. காலையில் காப்பி போடக் கொஞ்சம் நேரமாகி விட்டது என்பதற்காக மனைவியைக் கடிந்து கொண்டோமே என்று நினைத்துக் கொண்டார்.

'இனிமேல் மனைவி சொன்னது போல் பேச்சில் கடுமையைக் குறைத்துக் கொண்டு கொஞ்சம் பொறுமையாகப் பேசிப் பழக வேண்டும்'

வீட்டுக்குப் போனதும் "ஜிராக்ஸ் எடுக்கப் போயிருந்தேன்" என்றார் ராமநாதன் மனைவியிடம்.

"நீங்க எங்கே போனா எனக்கென்ன?" என்றாள் அவர் மனைவி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது.

பொருள்:  
இன்சொல் பேசினால் இனிய பயன்கள் கிடைக்கும் என்று உணர்ந்த எவரும் கடுஞ்சொற்களைப் பேச மாட்டார்கள்.

Read 'Xerox Centre' the English version of this story.
பொருட்பால்                                                                                                      காமத்துப்பால்


























Friday, September 1, 2017

98. சாந்தமூர்த்தியின் கோபம்!

உபன்யாசம் முடிந்ததும், நாராயணனைப் பலர் சூழ்ந்து கொண்டனர். இது வழக்கமாக நடப்பதுதான்.

"ரொம்ப நன்னா இருந்தது சுவாமி" என்று பாராட்டுபவர்களிடமிருந்து, புத்திசாலித்தனமான சந்தேகங்கள் கேட்பவர்கள் வரை தினமும் ஒரு பத்துப் பதினைந்து பேரின் பேச்சுக்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, தேவைப்பட்டால் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு மேடையை விட்டு அவர் இறங்கப் பதினைந்து நிமிடங்களாவது ஆகி விடும்.

அன்றும் அப்படித்தான். ஆனால் எல்லோரும் போன பிறகு, மேடை ஓரமாக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார்.

"சொல்லுங்கோ!" என்றார் நாராயணன்.

"உங்ககிட்ட கொஞ்ச நேரம் தனியாப் பேசணும். இப்ப பேசினா உங்களுக்கு நேரமாயிடும்னு நினைக்கிறேன். உங்களை எங்க வந்து பாக்கலாம்?" என்றார் அவர்.

"இப்பவே பேசலாமே. உங்களுக்குத் தனியாப் பேசணும்னா ரூமுக்குள்ள போய்ப் பேசலாம்" என்று அவரை மேடைக்குப் பின்னால் அழைத்துச் சென்றார் நாராயணன்.

உள்ளே போய் உட்கார்ந்ததும், "சாமிக்கு நல்ல ஞானம்!" என்று ஆரம்பித்தார் அவர்.

"என்னை சாமின்னெல்லாம் சொல்லாதீங்க. நான் ஒரு சாதாரண மனுஷன். வயத்துப் பொழப்புக்காக அரசாங்கத்தில வேலை செய்யறேன். சாயந்திர நேரத்தில நான் படிச்சும், கேட்டும் தெரிஞ்சுண்ட விஷயங்களைப் பகிர்ந்துக்கறேன். அவ்வளவுதான். நீங்க ஒரு பெரிய மனுஷர் மாதிரி இருக்கீங்க. ஆனா இவ்வளவு பணிவாப் பேசறீங்க. உங்களைத்தான் நான் ஸ்வாமின்னு கூப்பிடணும்!" என்றார் நாராயணன்.

"உங்களை மாதிரி எனக்குப் பணிவா, பதவிசாப் பேச வரலே சாமி. நான் ரொம்ப கோவக்காரன்."

"சுவாமிங்கற வார்த்தை வேண்டாம். என்னை நீங்க சார்னே கூப்பிடலாம். பொதுவா நாம அப்படித்தானே பேசிக்கிறோம்! நீங்க கோவக்காரர்னு சொன்னீங்க. உங்க பேர் என்னன்னு கேட்டா நீங்க கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"என் பேரு சாந்தமூர்த்தின்னு சொன்னா நீங்க சிரிக்க மாட்டீங்களே!" என்றார் சாந்தமூர்த்தி, சிரித்துக் கொண்டே.

"உங்களால கோபப்படவே முடியாதுன்னு நான் நினைக்கிறேன்!" என்றார் நாராயணன்.

"நான் ஒரு தொழிற்சாலையை நடத்திக்கிட்டிருக்கேன். எங்கிட்ட நூறு பேரு வேலை செய்யறாங்க. ஏதாவது தப்பு நடந்தா எனக்கு ரொம்பக் கோவம் வந்துடும். எங்கிட்ட வேலை செய்யறவங்களைக் கண்டபடி பேசிடுவேன். மானேஜர்லேருந்து கீழ்மட்டத் தொழிலாளி வரையிலும் எல்லார்கிட்டயும் கோபப்பட்டிருக்கேன். அதனால சில நல்ல ஆட்கள் என்னை விட்டுப் போயிட்டாங்க. சில சமயம் கஸ்டமர்கள்கிட்டக் கூடக் கடுமையாப் பேசி, சில வியாபார வாய்ப்புகளை இழந்திருக்கேன்."

"இவ்வளவு அமைதியாப் பேசறவர் ஒரு கோபக்காரர்னு என்னால நம்ப முடியல. சரி. இதுக்கு நான் என்ன செய்யணும்? நான் விதுர நீதி, தர்மோபதேசம் இது மாதிரி ஏதாவது சொன்னா நீங்க மாறிடுவீங்களா?"

"உடனே மாற முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா உங்க உபன்யாசத்தை அடிக்கடி கேட்டா காலப்போக்கில் மாற்றம் வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு."

"ரொம்ப சந்தோஷம். ஆனா நீங்க எங்கிட்ட வேற ஏதோ கேக்க வந்தீங்கன்னு நினைக்கிறேன்."

"ஆமாம். ஒரு சந்தேகம்தான். ஆனா இதை எல்லார் முன்னாலயும் கேக்க விரும்பல. நீங்க ஒரு பதில் சொல்ல, நான் மறுபடியும் கேள்வி கேக்க, நான் பொறுமையிழந்து உங்ககிட்டக் கோவமாப் பேசிடுவேனோன்னு பயந்துதான் உங்ககிட்டத் தனியாய் பேச நினைச்சேன்."

"இவ்வளவு முன் யோசனையோடு செயல்படற உங்களால உங்க கோபத்தைக் கண்டிப்பாக் கட்டுப்படுத்திக்க முடியும்."

"முன்யோசனையோட செயல்படறது என்னோட வியாபார அனுபவத்தினால் வந்தது. ஆனா எனக்கு எப்ப கோவம் வரும்னு எனக்கே தெரியாது. நான் சொல்றதை நீங்க மறுத்துப் பேசினா கூட, எனக்குக் கோவம் வரலாம். சரி. நான் கேக்க வந்த சந்தேகம் இதுதான். இன்னிக்கு உங்க உபன்யாசத்தில ஒரு விஷயம் சொன்னீங்க. மத்தவங்களைக் கடுமையாப் பேசினா அதனால நமக்குப் பல இழப்புகள் ஏற்படும். அதோட நாம செஞ்ச புண்ணியத்தினால நமக்கு கிடைக்கக் கூடிய மோட்சம் கூடக் கிடைக்காமப் போகும்னு சொன்னீங்க."

"ஆமாம். மத்தவங்க மனசைக் காயப்படுத்தற மாதிரி பேசறது மிகப் பெரிய பாவம். அது நாம பண்ற புண்ணியங்களோட பலன்களைக் கூட நமக்குக் கிடைக்காம பண்ணிடும். சாஸ்திரங்கள்ள அப்படித்தான் சொல்லியிருக்கு. அதில என்ன சந்தேகம் உங்களுக்கு?"

"இதோட லாஜிக் எனக்குப் புரியல. நான் ஒரு கஸ்டமர்கிட்ட அவர் மனம் புண்படும்படியாப் பேசிடறேன். அதனால அவர்கிட்டேயிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய வியாபாரம் எனக்கு கிடைக்காமப் போயிடுது. இது எனக்கு ஒரு இழப்பு. நான் கடுமையாப் பேசினதோட பலனை நான் அனுபவிச்சுட்டேன். அப்புறம் இது ஏன் என்னோட புண்ணியத்தை பாதிக்கணும்? ஒரு தப்புக்கு ரெண்டு தடவை தண்டனையா?"

நாராயணன் கொஞ்சம் யோசித்தார்.

 "உங்க ஃபேக்டரில எப்பவாவது ஸ்ட்ரைக் நடந்திருக்கா?"

"ஃபேக்டரின்னா ஸ்ட்ரைக் இல்லாம இருக்குமா? ஒரு தடவை நடந்திருக்கு."

"ஸ்ட்ரைக் பண்ணின நாட்களுக்கு நீங்க சம்பளம் கட் பண்ணிட்டீங்க இல்ல?"

"பின்னே? சம்பளத்தோட லீவுன்னு உண்டு! சம்பளத்தோட ஸ்ட்ரைக்னு உண்டா என்ன?"

"ஸ்ட்ரைக் பண்ணினவங்களுக்கு வேற ஏதாவது தண்டனை கொடுத்தீங்களா?"

"ரெண்டு பேரை வேலையை விட்டுத் தூக்கிட்டேன். மீதி பேருக்கெல்லாம் ஒரு வருஷம் இன்க்ரிமெண்ட் கட் பண்ணிட்டேன்."

"ஸ்ட்ரைக் பண்ணினத்துக்கு தண்டனையா அவங்க சம்பளத்தை இழந்தாங்க. சரி. ஏன் அவங்களுக்கு வேலை போகணும், இன்க்ரிமெண்ட் போகணும்?"

சாந்தமூர்த்தி யோசித்தார்.

"எல்லாச் செயல்களுக்கும் உடனடிப் பலன், நீண்ட காலப் பலன்னு ரெண்டு உண்டு. ஒரு விபத்தில் காயம் பட்டா, அந்தக் காயம் சில நாள் இருக்கும். அப்புறம் ஆறிடும். ஆனா, அந்த விபத்தினால நம்ம உடம்புக்கு வேற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அது நமக்கு ரொம்ப நாள் கழிச்சுத்தான் தெரியும். மத்தவங்களை சுடுசொற்களால காயப்படுத்தினா அவங்களோட அதிருப்தி, அதனால நமக்கு ஏற்படற பாதிப்புகள் இவை உடனடிப் பலன். நாம செய்யற புண்ணியத்தோட பலனை நாம இழக்கறது நீண்டகாலப் பலன். இப்ப லாஜிக் சரியா இருக்கா?" என்றார் நாராயணன்.

சாந்தமூர்த்தி சற்று நேரம் யோசித்து விட்டு, "சரி. இப்ப இதோட மறு பக்கத்தை எடுத்துப்போம். நாம மத்தவங்ககிட்ட இனிமையாப் பேசினா, அதனால நமக்கு உடனடிப் பலன் கிடைக்கறதோட நீண்ட காலப் பலனும் கிடைக்கும்னு சொல்லலாமா?"

"நிச்சயமா?"

"அது என்ன பலனா இருக்கும்?"

"இம்மையில அதாவது இந்த உலகத்தில நமக்கு இன்பம் கிடைக்கிறது   உடனடிப் பலன்.  மறுமையிலும் அதாவது மோட்ச உலகத்திலும் நமக்கு இன்பம் கிடைக்கிறது நீண்டகாலப் பலன்" என்றார் நாராயணன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்

பொருள்:  
சிறுமை இல்லாத இனிய சொல் இம்மையில் மட்டுமின்றி, மறுமையிலும் நமக்கு இன்பம் பயக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'sAnthamurthy's Temper'
 the English version of this story.

பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்