
கனகலிங்கத்தின் வீட்டுக்கு அவர் நண்பர் ராமநாதன் வந்தபோது, வீட்டில் இன்னும் சோகக்களை மாறாமல் இருப்பதை கவனித்தார்.
"வாங்க அங்க்கிள்" என்றான் கனகலிங்கத்தின் மகன் வாசு, சுரத்தில்லாமல்.
"என்னப்பா பண்றது? போனவர் போயிட்டாரு. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்கப் போற? காரியம் எல்லாம் முடிஞ்சுடுச்சு இல்ல? இனிமே அடுத்த வேலையைப் பாரு!" என்றார் ராமநாதன்.
"பாக்க வேண்டியதுதான், அங்க்கிள். எங்கப்பா என்ன, நாங்க உக்காந்து சாப்பிடற மாதிரி ஏகப்பட்ட சொத்தையா விட்டுட்டுப் போயிருக்காரு? நாங்க எங்க வேலையைப் பாத்துதான் பொழப்பு நடத்தணும்!" என்றான் வாசு.
"என்னப்பா இப்படிச் சொல்ற? உங்கப்பா உங்களை நல்லாப் படிக்க வச்சாரு. நீங்கள்ளாம் நல்ல வேலையில இருக்கீங்க? உனக்கு ஏன் இந்தக் குறை?"
"அங்க்கிள்! அப்பா ரிடயர் ஆகிப் பத்து வருஷமாச்சு. ரிடயர் ஆனப்ப அவருக்கு நாப்பது லட்சம் ரூபா வந்ததுன்னு சொன்னாரு. அதில என் தங்கச்சி கல்யாணத்துக்குக் கொஞ்சம் செலவழிச்சாருப்பாரு. மீதி முப்பது லட்சம் ரூபா இருந்திருக்கணும். பாங்க்ல போட்டு வச்சிருந்தா, வட்டியோடு சேந்து அம்பது லட்சம் ரூபா ஆகியிருக்கும். அவருக்கு வந்த பென்ஷன் அவருக்கும் அம்மாவுக்கும் குடும்பச் செலவுக்குப் போதும். ஆனா இப்ப, பாங்க்ல பத்து லட்ச ரூபாதான் இருக்கு. மீதிப் பணம் எல்லாம் என்ன ஆச்சுன்னே தெரியல!"
'ஓ! அதுதான் உன் கவலைக்குக் காரணமா?' என்று மனதுக்குள் நினைத்த ராமநாதன், "ஏம்ப்பா, உனக்கு உன் அப்பாவைப் பத்தித் தெரியாதா? தர்ம காரியங்களுக்குக் கொடுக்கறது, கஷ்டப்படறவங்களுக்கு உதவறது இதெல்லாம் அவர் பழக்கமாச்சே!"
"அதுக்காக? இப்படியா மொத்தத்தையும் துடைச்சு வச்சுட்டுப் போறது? பிள்ளைங்களுக்கு ஏதாவது வச்சுட்டுப் போகணும்னு தோணலியே அவருக்கு!" என்றான் வாசு, கோபமாக.
"வாசு! அவரைப் பொருத்தவரை, உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செஞ்சுட்டாரு. அதனால, தன்கிட்ட இருந்த பணத்தில கொஞ்சத்தை, மத்தவங்களுக்கு உதவறதுக்காகப் பயன்படுத்தி இருப்பாரு."
"கொஞ்சமா? முப்பது, நாப்பது லட்ச ரூபா போயிருக்கே! யாருக்குக் கொடுத்தாரு, எதுக்குக் கொடுத்தாரு? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"
"எனக்குத் தெரியாது. தான் யாருக்கும் எதுவும் கொடுத்தேன்னு மத்தவங்ககிட்ட சொல்லிக்கற பழக்கம் உங்கப்பாவுக்குக் கிடையாது. ஆனா, இதில கொஞ்சம் கடனாவும் கொடுத்திருப்பார். கடன் வாங்கினவங்க கொஞ்ச நாள்ள அவங்க வாங்கின கடனை உங்கிட்ட திருப்பிக் கொடுத்துடுவாங்க."
"பெத்த பிள்ளைங்களுக்குக் கொடுக்காம, ஊருக்கெல்லாம் வாரிக் கொடுக்கறதில என்ன பிரயோசனம்?"
"பிரயோசனம் இருக்குன்னு நினைச்சு கனகலிங்கம் இப்படிச் செய்யல. மத்தவங்களுக்கு உதவறது அவரோட இயல்பு. அவர் இறந்து போனதும், எத்தனை பேர் அவரைப் பாக்க வந்தாங்கன்னு கவனிச்சியா? இப்பவும் நிறைய பேர் அவரைப் பத்திப் பெருமையாப் பேசிக்கிட்டிருக்காங்க."
"பெருமை சோறு போடாது, அங்க்கிள்!" என்றான் வாசு.
"வாசு, உங்களை அவர் நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திருக்காரு. ஏதோ, சோத்துக்குத் திண்டாடட வச்சுட்டுப் போயிட்ட மாதிரி பேசறியே!" என்று கோபமாகச் சொல்லி விட்டு, ராமநாதன் வெளியே வந்து விட்டார்.
காலிங் பெல் அடித்ததும் கதவைத் திறந்த சங்கரன், "சார்! நீங்களா? வாங்க!" என்றார், ராமநாதனைப் பார்த்து.
உள்ளே வந்து அமர்ந்ததும், ராமநாதன் சங்கரனிடம், "உங்க மனைவிக்கு எப்ப ஆபரேஷன்?" என்றார்.
"தெரியல சார். இன்னும் ஒரு மாசத்துல செய்யலாம்னு டாக்டர் சொல்லி இருக்கார். ஏன் கேக்கறீங்க?"
"ஆபரேஷனுக்கு, கனகலிங்கத்துக்கிட்ட பணம் கேட்டிருந்தீங்களா?"
"ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"அவருக்கு உடம்பு சரியில்லாதப்ப, 'சங்கரன் எங்கிட்ட அவர் மனைவி ஆபரேஷனுக்குப் பணம் கேட்டிருந்தார். ஒரு வேளை, நான் அதுக்குள்ளே போயிட்டேன்னா, இந்தப் பணத்தை அவர் மனைவி ஆபரேஷனுக்காகக் கொடுத்துடுங்க'ன்னு சொல்லி, எங்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாரு. இதை அவர் பையன்கிட்ட கொடுத்து அவனை விட்டே உங்ககிட்ட கொடுக்கச் சொல்லலாம்னுதான் அவன் வீட்டுக்குப் போனேன். ஆனா அவன் உங்களுக்குக் கொடுப்பான்னு எனக்குத் தோணலை. அதான் நானே உங்ககிட்ட கொடுக்கறேன். இந்தாங்க பணம். உங்களால இதை எப்ப திருப்பிக் கொடுக்க முடியுமோ அப்ப, இதை நீங்க கனகலிங்கத்தோட பையன்கிட்ட திருப்பிக் கொடுத்துடுங்க" என்றார் ராமநாதன்.
"சார்! செத்தும் கொடுத்தார் சீதக்காதின்னு கேள்விப்பட்டிருக்கேன். இறந்தப்பறம் கூட, கனகலிங்கம் எனக்கு உதவி செஞ்சிருக்காரே! எப்படிப்பட்ட மனுஷன் சார் அவரு!" என்றார் சங்கரன், உணர்ச்சி பொங்க.
அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 24
புகழ்
குறள் 231ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
பொருள்:
பிறருக்குக் கொடுத்து உதவுதல், அதன் மூலம் கிடைக்கும் புகழுடன் வாழ்தல் இது தவிர ஒருவருக்கு வாழ்க்கையில் ஈட்ட வேண்டிய பொருள் வேறு எதுவும் இல்லை.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ: