About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, August 1, 2017

79. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்?

ரகுவுக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்வதற்குள் அவன் அம்மா சரளாவுக்குப் போதும் போதும் என்று ஆகி விட்டது.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறை சொன்னான் - மூக்கு நீளம், குட்டை, பருமன், பல் பெரிதாக இருக்கிறது, வாய் கோணலாக இருக்கிறது என்று.

"ஏண்டா எத்தனையோ பேர் உடம்பில ஊனம் இருக்கிற பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கறாங்க. நீ இப்படி மாட்டைப் பல்லை புடிச்சுப் பாக்கற மாதிரி பெண்களைப் பாக்கறியே!" என்று அலுத்துக் கொண்டாள் சரளா.

"நான் என்ன சாமுத்திரிகா லட்சணமா பாக்கறேன்? உடல் உறுப்புகள் எல்லாம் ஒழுங்கா இருக்கணும்னு பாக்கறேன். அது தப்பா?" என்றான் ரகு.

ஒரு வழியாக அவனுக்கு வனிதாவைப் பிடித்து விட்டது. ரகுவால் அவள் தோற்றத்தில் எந்தக் குறையையும் காண முடியவில்லை.

திருமணம் ஆகிச் சில நாட்கள் கழித்து ரகு தனியே இருக்கையில் அவன் அம்மா சரளா அவனிடம் வந்தாள். "ரகு, வனிதா தனக்கு வேணும்கறதைத்தான் பாத்துக்கறா. எங்களைப் பத்திக் கவலைப்படறதே இல்லை" என்று ஆரம்பித்தாள்.

"சும்மா ஏதாவது குறை சொல்லாதே" என்றான் ரகு.

"சும்மா சொல்லலைடா. எங்களுக்கு அவ சாப்பாடு கூடப் போடறதில்லை. சாப்பிட்டீங்களான்னு கேக்கறதும் இல்லை. அவ சாப்பிட்டுட்டுப் போனப்பறம் மீதி என்ன இருக்கோ அதைத்தான் நாங்க சாப்பிட வேண்டி இருக்கு. சிலநாள் சாம்பார் இருக்காது, சில நாள் ரசம் இருக்காது, சிலநாள் காய்கறி இருக்காது. சிலநாள் சாதம் கூடக் கொஞ்சம்தான் மீதியிருக்கும்..."

சரளாவுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. "ராஜா மாதிரி இருந்தவரு  ஒங்கப்பா. இப்ப அவரு ஒரு பிச்சைக்காரர் மாதிரி மிச்சம் மீதியைச் சாப்பிட்டுட்டுப் போறாரு. ஏன், எல்லோரும் தாராளமா சாப்பிடற மாதிரி கொஞ்சம் அதிகமா செய்யக்கூடாதா? நமக்கு என்ன வசதியா இல்லை?"

"இதை நீ அவகிட்டயே கேட்டிருக்கலாமே!"

"கேட்டேன். வயசானவங்க கொஞ்சமாத்தான் சாப்பிடணுமாம். அதுதான் அவங்க உடம்புக்கு நல்லதாம். அதோட சாப்பாட்டுக்கு அதிகம் பணம் செலவு பண்ணக் கூடாதுன்னு எங்களுக்கு உபதேசம் பண்றா!"

"சரி. நான் அவகிட்ட பேசறேன்" என்றான் ரகு.

அவனுக்கே இதுபோன்ற பிரச்னைகள் இருந்தன. வீட்டில் அவனுக்கும் சரியாகச் சாப்பாடு கிடைப்பதில்லை. கேட்டால் 'நாக்கைக் கொஞ்சம் அடக்கிக்கங்க," "உங்களுக்குத் தொந்தி போடக்கூடாதுன்னுதான் இப்படிப் பண்றேன்!" என்பது போன்ற அலட்சியமான பதில்கள் வரும்.

இருப்பினும் அம்மாவின் வேதனையைப் பொறுக்காமல், வனிதாவிடம் பேசினான். "வயசான காலத்தில் அப்பா அம்மாவுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போடக் கூடாதா?" என்றான்.

"இப்ப என்ன அவங்க பட்டினியா கெடக்கறாங்க? ஒங்க குடும்பத்தில எல்லோருக்குமே நாக்கு நீளம், வயிறு பெரிசு. நான் செஞ்சு வைக்கறது பத்தலைன்னா ஒங்கம்மாவைத் தனியா ஏதாவது பண்ணிக்கச் சொல்லுங்க. அவங்க ஒடம்பு தெம்பாத்தானே இருக்காங்க?" என்றாள்.

ரகுவுக்கு ஏன் அவளிடம் கேட்டோம் என்று ஆகி விட்டது.

சில சமயம் அவள் தனக்கு மட்டும் ஏதாவது தனியாகச் சமைத்துத் தான் மட்டும் சாப்பிடுவதையும் அவன் கவனித்திருக்கிறான். ஏன் இப்படிச் செய்கிறாள்? சுயநலமாக இருந்து விட்டுப் போகட்டும். இப்படியா வீட்டில் இருப்பவர்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருப்பாள்?

சில மாதங்களில் அவன் பெற்றோர்கள் தங்கள் கிராமத்து வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதனிடமாவது பாசமாக இருப்பாளா என்ற பயம் ரகுவுக்கு வந்து விட்டது.

ருநாள் "என்னங்க, நாள் தள்ளிப் போயிருக்கு. நான் டாக்டர்கிட்ட போயிட்டு வரேன்" என்றாள் வனிதா.

ரகுவுக்கு மகிழ்ச்சியில் புல்லரித்தது. "இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சாதாரணமா சொல்றயே! நானும் வரேன் டாக்டர்கிட்ட" என்றான்.

"நீங்க ஆஃபீசுக்குப் போங்க. நான் மட்டும் டாக்டர்கிட்ட போயிட்டு வரேன்" என்றாள் அவள்.

"டாக்டரைப் பாத்துட்டு ஃபோன் பண்ணு!" என்றான் அவன்.

ஆனால் அவன் ஆஃபீஸிலிருந்து திரும்பும் வரை அவளிடமிருந்து ஃபோன் வரவில்லை.

மாலை அவன் வீட்டுக்குப் போனபோது வனிதா கட்டிலில் சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? டாக்டர் என்ன சொன்னார்?" என்றான் ரகு.

"கலைச்சுட்டேன்!" என்றாள் அவள்.

"என்னது" என்றான் ரகு அதிர்ச்சியுடன். "ஏன்?"

"எனக்குப் பிடிக்கல" என்றாள் அவள் சுருக்கமாக.

"ஒனக்குப் பிடிக்கலேன்னா? எங்கிட்ட கேக்க வேண்டாமா?"

"குழந்தை பெத்துக்கப் போறது நானா, நீங்களா?"

"எவ்வளவோ பேரு குழந்தை பொறக்காதான்னு ஏங்கறாங்க. நீ இப்படிச் செஞ்சுட்டியே!"

"எனக்கு குழந்தைகளைப் பெத்துக்கிட்டு அதுங்களோட போராடறதெல்லாம் ஒத்து வராது. சுதந்திரமா ஹாயா இருக்கணும்."

"அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட?"

"ம்? சுதந்திரமா ஹாயா இருக்கணும்னுதான்! நாம ஒரு குழந்தையைப் பெத்துக் கொடுக்காததால நாட்டுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை" என்றாள் வனிதா அலட்சியமாக.

ரகு பரிதாபத்துடன் அவளைப் பார்த்தான். அவள் தோற்றம் அவன் கன்னத்தில் அறைவது போல் இருந்தது. நீண்ட அழகான கண்கள், செதுக்கி வைத்ததைப்  போன்ற மூக்கு, அழகான பல்வரிசை, ஒல்லியான உடல்வாகு, இன்னும்...

இந்த அழகைத்தானே தேடிப்போனோம் என்று நினைத்தான் ரகு.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

பொருள்:
மனதில் அன்பு என்ற உறுப்பு இல்லாதவருக்கு மற்ற உறுப்புகள் எல்லாம் இருந்து என்ன பயன்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















2 comments:

  1. குறளுக்கு விளக்கக் கதை நல்லா இருக்கு. ஆனா ரொம்ப ரியலிஸ்டிக்காக இல்லை. ஆனாலும், அழகும் அறிவும் சேராது என்பதுபோல், இயல்பா அழகானவராகவும் அன்பானவராகவும் இருப்பது ரொம்ப ரொம்ப அபூர்வம். அழகு நிச்சயம் அழியும். அன்பு அழியாது. தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. எல்லாக் கதைகளுக்கும் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருவதற்கு நன்றி. தொடர்ந்து இனி வரும் கதைகள் பற்றியும் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete