About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, November 17, 2016

68. மாதவனின் எதிர்காலம்

"நான் பள்ளிக்கூடத்துல படிச்சப்ப நான்தான் வகுப்பிலேயே முதல் மாணவனா இருந்தேன். ஆனா நம்ப பையன் ஒரு மக்கா இருக்கானே!" என்றான் சங்கரன்.

"ஏங்க, நம்ப பையன் எண்பது மார்க்குக்கு மேலே வாங்கறான். அவனைப் போய் மக்குங்கறீங்களே!" என்றாள் அவன் மனைவி சாந்தா.

"தொண்ணூற்றெட்டு மார்க்கு, நூறு மார்க்கெல்லாம் சாதாரணமாயிட்ட இந்தக் காலத்தில, எண்பது மார்க்குக்கெல்லாம் என்ன மதிப்பு இருக்கு?"

"டியூஷன் வச்சுப் பாக்கலாமா?"

டியூஷன் வைத்தார்கள். பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. டியூஷன் ஆசிரியரிடம் கேட்டபோது "பையன் கொஞ்சம் டல்தான் சார்!" என்றார் அவர். பள்ளி ஆசிரியர்களும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார்கள்.

'சரி. அவ்வளவுதான். அவன் விதிப்படி நடக்கட்டும்' என்று சங்கரன் விட்டு விட்டான்.

சங்கரன் பொறியியல் படிப்புப் படித்து விட்டு, தானே ஒரு தொழிற்சாலையை உருவாக்கி நடத்திக் கொண்டிருந்தான். தனக்குப் பிறகு தன் பையன் அதை நடத்த வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு இருந்தது.

எனவே மாதவனின் பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவனைப் பொறியியல் படிப்பில் சேர்த்தான். மாதவன் வாங்கிய எண்பது சதவீத மதிப்பெண்களுக்கு, அவனுக்கு சுமாரான ஒரு கல்லூரியில்தான் இடம் கிடைத்தது, அதுவும் நன்கொடை கொடுத்து!

பையன் எப்படியோ பொறியியல் பட்டதாரி ஆகி, ஒரு நல்ல தொழில் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்து விட்டால், அங்கே ஓரளவுக்கு அனுபவம் பெற்ற பிறகு தன்னுடைய நிறுவனத்தை நிர்வகிக்கும் திறமை பெற்று விடுவான் என்பது சங்கரனின் நம்பிக்கை.

முதல் இரண்டு ஆண்டுகளில் மாதவன் சுமாரான மதிப்பெண்கள்தான் வாங்கி வந்தான். ஆனால் மூன்றாம் ஆண்டில் பொறியியல் பாடங்களைக் கற்கத் தொடங்கியபின் அவனுக்குப் படிப்பில் அதிக ஆர்வம் வந்து விட்டதாகத் தோன்றியது. குறிப்பாக புராஜக்ட் ஒர்க், செமினார் போன்றவற்றில் அவனுக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது. தன் தந்தையின் தொழிற்சாலைக்கு நான்கைந்து முறை சென்று அதன் நடைமுறைகளை கவனித்து அறிந்து கொண்டான்.

மாதவன் இறுதி ஆண்டுக்கு வந்தபோது அவன் செய்ய வேண்டிய புராஜக்ட் ஒர்க்குக்குத் தன் தந்தையின் தொழில் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ள நினைத்தான் மாதவன். இதைப்பற்றி அவன் தன் தந்தையிடம் பேசியபோது, "உன் புராஜக்டுக்கு எடுத்துக் கொள்ளப் போகும் விஷயம் என்ன?" என்று கேட்டான் சங்கரன்.

"சில தொழில் நுட்ப மாறுதல்களைச் செய்து, செயல்பாடுகளை எளிமையாக்கி, உற்பத்தித் திறனை அதிகமாக்குவது பற்றித்தான்" என்றான் மாதவன்.

"நான் வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என் தொழிற்சாலையை உருவாக்கியிருக்கிறேன். இப்போது வெளிநாட்டு நிறுவனத்துடனான என்னுடைய ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஆனாலும் அதே தொழில்நுட்பத்தை நான் தொடர்ந்து பயன்படுத்தலாம். இதில் பெரிய மாறுதல்கள் எதையும் உன்னால் செய்ய முடியாது."

"நீங்களே சொன்னபடி, இது பழைய தொழில்நுட்பம். அதனாலதான் வெளிநாட்டு நிறுவனம் இதே தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்த உங்களை அனுமதித்திருக்கிறது. அவர்கள் வேறு தொழில்நுட்பத்துக்கு மாறியிருப்பார்கள்!"

"அதைப் பற்றி நமக்கென்ன? இந்தத் தொழில்நுட்பம் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு என்னால் நிற்க முடிகிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்?"

"இதற்கு மேலும் செய்யலாம் அப்பா. எனக்குச் சில யோசனைகளை இருக்கின்றன. அவற்றைச் செயல் படுத்தினால், அதிக முதலீடு செய்யாமல் நம் தொழிற்சாலையை இன்னும் நவீனமாக்கலாம். இதனால் உற்பத்தித்திறன் அதிகரித்து, தயாரிப்புச் செலவு குறையும்."

"உன் புராஜக்டுக்காக என்ன மாறுதல்களை வேண்டுமானாலும் உன் ரிப்போர்ட்டில் சிபாரிசு செய். ஆனால் அதையெல்லாம் நடைமுறைப் படுத்த முடியும் என்று எதிர்பார்க்காதே!" என்றான் சங்கரன்.

தன் புராஜக்டுக்காக மாதவன் தன் சகமாணவர்களுடன் பல நாட்கள் தொழிற்சாலைக்கு வந்து, தொழில் நடைமுறைகளை கவனித்து ஆராய்ந்தான். தொழிற்சாலையில் பணிபுரிந்த உயர் அதிகாரிகளிடமும், தொழிலாளர்களிடமும் பல நுணுக்கங்களைக் கேட்டறிந்தான். ஆனால் சங்கரன் இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

மாதவனின் புராஜக்ட் தயாரானதும், அதைக் கல்லூரியில் சமர்ப்பித்தான். அப்போதும் சங்கரன் அதைப் படித்துப் பார்க்கவில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு, மாதவனின் புராஜக்ட் பல்கலைக்கழக அளவில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்ததும் சங்கரனுக்கு வியப்பு ஏற்பட்டது.

மாதவனிடம் புராஜக்ட் ரிப்போர்ட் நகலை வாங்கிப் படித்துப் பார்த்தான். அதில் தெரிவிக்கப்பட்டிருந்த யோசனைகள் சங்கரனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அவை நடைமுறைக்கு ஏற்றதாகவும், லாபகரமானதாகவும்தான் தோன்றின.

மாதவனின் புராஜக்ட் ரிப்போர்ட்டை ஒரு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்திடம் கொடுத்து ஆராயச் சொன்னான். அவர்கள் அதற்குச் சில மாதங்கள் ஆகும் என்று சொன்னார்கள்.

இதற்கிடையில், மாதவனுக்கு காம்பஸ் இன்டர்வியூவில் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய படிப்பு முடிந்ததும், வெளியூரிலிருந்த அந்த நிறுவனத்துக்கு அவன் வேலைக்குச் சென்று விட்டான்.

சங்கரன் அணுகியிருந்த தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் அவன் தொழிற்சாலைக்குப் பொறியியல் வல்லுநர்களை அனுப்பி, மாதவனின் புராஜக்ட் ரிப்போர்ட் பற்றி ஆய்வு செய்து தனது கருத்தைத் தெரிவிக்க ஆறு மாதங்கள் ஆகி விட்டன.

மாதவனின் புராஜக்டை நிச்சயம் அமல் படுத்தலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்த அந்த நிறுவனம், அதை எப்படிச் செயல் படுத்தலாம் என்று சில ஆலோசனைகளையும் கூறியிருந்தது. சில லட்சங்களும், பல மாதங்களும் செலவழிந்திருந்தாலும், நம்பிக்கையுடன் செயல்பட, அந்த ரிப்போர்ட் சங்கரனுக்கு உதவியாக இருந்தது.

சங்கரன் ஒரு முடிவுக்கு வந்தான். மாதவனிடம் தொலைபேசியில் பேசினான். "டேய் மாதவா! ஒன்னோட புராஜக்ட் பிரமாதமா இருக்குன்னு நம்ப கன்சல்டன்ட் சொல்லிட்டாங்க. அதை நான் உடனே செயல்படுத்தலாம்னு இருக்கேன்"

"ரொம்ப சந்தோஷம் அப்பா. எனக்கு முதலிலிருந்தே நம்பிக்கை இருந்தது" என்றான் மாதவன் மகிழ்ச்சியுடன்.

"கரெக்ட். ஆனா ஒரு பெரிய மாறுதலைப் பண்றதுக்கு முன்னால நிபுணர்கள்கிட்ட ஆலோசனை கேக்கறது அவசியம் இல்லையா? சரி. இப்ப நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். நீ தயாரிச்ச பிராஜக்டை நீயே செயல் படுத்தணும்னு நினைக்கிறேன். நீ வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துடு."

"இல்லைப்பா. இங்கே கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். நீங்க முன்னால சொன்னபடி நான் ஒரு பெரிய கம்பெனில நாலைஞ்சு வருஷமாவது வேலை செஞ்சுட்டு அதுக்கப்பறம் நம்ப கம்பெனிக்கு வந்தா என்னோட அனுபவம் நமக்கு உதவியா  இருக்கும்.

"நான் அப்பப்ப லீவுல அங்கே வரும்போது, ஃபேக்டரிக்கு வந்து எல்லாம் எப்படி இருக்குன்னு பாத்துட்டுப் போறேன். எப்ப எனக்கு ஓரளவுக்காவது அனுபவம் கெடைச்சிருக்குன்னு எனக்குத் தோணுதோ, அப்ப வந்து நம்ப கம்பெனியில சேந்துக்கறேன்!" என்றான் மாதவன்.

தொலைபேசியை வைத்து விட்டு, சங்கரன் சற்று நேரம் யோசனையில் இருந்தான்.

"என்ன யோசிக்கிறீங்க?" என்றாள் மனைவி.

"நான் சொந்தமாத் தொழில் ஆரம்பிச்சு வெற்றிகரமா நடத்திக்கிட்டு வரதால என்னை ஒரு புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா நம்ப புள்ள என்னை விட ரொம்ப புத்திசாலியா இருக்கான்!" என்றான் சங்கரன்.

"முன்னேயெல்லாம் அவனை மக்குன்னு சொல்லுவீ ங்களே?" என்று குத்திக் காட்டினாள் மனைவி.

"அவன் மக்கு இல்லை. நான்தான் மக்கு" என்றான் சங்கரன், பெருமிதத்துடன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பொருள்:
தாம் பெற்ற பிள்ளைகள் தங்களை விட அறிவுள்ளவர்களாக இருப்பது இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இனிமை பயக்கக் கூடியது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Son's Ideas' the English version of this story. 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Saturday, June 25, 2016

67. அம்மா கணக்கு!

சுந்தர் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, ஏகாம்பரத்திடம் அவர் மனைவி சொன்னாள். "என்னங்க, பத்தாவது வரைக்கும் நம்ம பையனை கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்க வச்சுட்டீங்க, பைசா செலவு பண்ணாம! லெவன்த்துக்காவது அவனை வேறே நல்ல ஸ்கூல்ல சேக்கப் பாருங்க."

"அதுக்கு நமக்கு வசதியில்லையே! அதோட கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்கற பையங்களை பெரிய ஸ்கூல்லல்லாம் சேத்துக்கவும் மாட்டாங்க."

"அப்ப நம்ப பையன் எஞ்சினீரிங் படிக்க முடியாதா?"

"பாக்கலாம். அவன் தலையெழுத்துப்படி நடக்கும்."

"அவன் தலையெழுத்துப்படி  நடக்கணும்னா, அப்பா அம்மான்னு நாம எதுக்கு இருக்கோம்?" என்றாள் வள்ளியம்மை கோபத்துடன்.

"என்னை மாதிரி ஏழை அப்பாவுக்குப் பொறந்ததும் அவன் தலையெழுத்துதான்!"

பதினொன்றாம் வகுப்புக்குப் போனதும், சுந்தர் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தினான். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் வாங்கினான்.

"பாரு, பையன் நல்லாப் படிக்கறான். ப்ளஸ் டூ-ல நிறைய மார்க் வாங்குவான்" என்றார் ஏகாம்பரம்.

"இதெல்லாம் போதாதுங்க. மாத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரில 198ஆவது வாங்கினாதான், ஃபீஸ் குறைவா இருக்கற இஞ்சினீரிங் காலேஜில் இடம் கிடைக்கும்" என்றாள் வள்ளியம்மை.

"பரவாயில்லையே. என்னை விட உனக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கே!" என்றார் ஏகாம்பரம்.

"உங்களை விடன்னு சொல்லாதீங்க. உங்களுக்குத்தான் நம்ப பையனோட எதிர்காலத்தைப் பத்தி அக்கறையே இல்லையே!" என்றாள் வள்ளியம்மை, எரிச்சலுடன்.

ஒருநாள், "என்னங்க, நம்ப பையனை கவனிச்சீங்களா? சாயந்திரம் ஸ்கூல்லேருந்து வந்ததும் எங்கேயோ போயிடறான். ராத்திரி லேட்டாத்தான் வரான். கேட்டா, ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து படிக்கறேங்கறான். எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. நீங்க கொஞ்சம் கேளுங்க" என்றாள்  வள்ளியம்மை.

"பொய்யா சொல்லப் போறான்?"

"எனக்கென்னவோ ஃப்ரண்ட்ஸோட எங்கேயாவது சுத்திட்டு வரானோன்னு சந்தேகமா இருக்கு."

"நாம சொன்னா  கேக்கவா போறான்? தனக்கு எது நல்லதுன்னு அவனுக்கே தெரியணும்."

"நீங்க இப்படித்தான் அக்கறை இல்லாம பேசுவீங்க. எல்லாம் என் தலையெழுத்து!" என்றாள் வள்ளியம்மை.

காலம் ஓடியது. ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்து ரிசல்ட் வந்ததும் வள்ளியம்மைக்கு இன்ப அதிர்ச்சி. சுந்தர் 200, 198, 198 என்று மதிப்பெண்கள் வாங்கி இருந்தான்.

"எப்படிடா இவ்வளவு மார்க் வாங்கினே?" என்றாள் வள்ளியம்மை, நம்ப முடியாத ஆச்சரியத்துடன்.

"அதுதான் டியூஷன் போனேனே!" என்றான் சுந்தர்.

"டியூஷனா?" என்று வள்ளியம்மை அப்பாவையும் பிள்ளையையும் மாறி  மாறிப் பார்த்தாள்.

"என்னோட ஆஃபிஸ்ல சங்கரன்னு ஒத்தர் இருக்காரு. அவரு நெறையப்  படிச்சவர். புத்திசாலி. சுந்தருக்கு டியூஷன் எடுக்க முடியுமான்னு  அவர்கிட்ட கேட்டேன். முதல்ல அவர் தனக்கு அனுபவம் இல்லேன்னு சொன்னாரு.

"எனக்குத் தெரிஞ்ச இன்னொரு நண்பரோட பையன் போன வருஷம்தான் ப்ளஸ் டூ முடிச்சான். அவன் டியூஷன் போய்த்தான் படிச்சான். அவன் தான் படிச்ச புஸ்தகம் நோட்ஸ் எல்லாம் வச்சிருந்தான். அதையெல்லாம் வாங்கிக்கிட்டுப் போய் சங்கரன் கிட்ட கொடுத்தேன்.

"அவரும் இண்டர்நெட்ல எல்லாம் பாத்துப் பல விஷயங்களை சேகரிச்சுக்கிட்டு டியூஷன் எடுக்க ஒத்துக்கிட்டாரு. சுந்தரோட படிக்கிற சில பையன்களோட அப்பாக்கள்கிட்ட பேசி அவங்களையும் சங்கரன்கிட்ட டியூஷனுக்கு சேர்த்து விட்டேன்.

"டியூஷன் ஃ பீஸ்னு எங்களால முடிஞ்சதைக் கொடுக்கறேன்னு சொன்னேன். மொதல்ல அவரு ஒத்துக்கலே. பணம் டுத்துப் படிச்சாத்தான் பையன்களுக்குப் படிக்கணும்கற வேகம் இருக்கும்னு சொல்லி அவரைச் சம்மதிக்க வெச்சேன்.

"பணம் வாங்கினாத்தானே அவருக்கும் பொறுப்பு இருக்கும்? ஆனா அதை
அவர்கிட்ட சொல்லலே! பத்து பையங்க சேர்ந்தததால அவருக்கும் வருமானம். நமக்கும் குறைந்த ஃபீஸ்ல டியூஷன் கிடைச்சது. நல்ல மார்க் வாங்கி உன்கிட்ட காட்டற வரையிலும் இதைப் பத்தி உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நான் சுந்தர்கிட்ட சொல்லியிருந்தேன்.

"அவனும் ஃபிரண்ட்ஸோட படிக்கறேன்னு உன்கிட்ட சொல்லிட்டு டியூஷன் போயிட்டு வந்தான்! கொஞ்சம் பேர்தான் படிச்சதினால சங்கரன் ஒவ்வொரு பையன்கிட்டேயும் அக்கறை காட்டி நல்லா சொல்லிக் கொடுத்தாரு. எல்லாருமே நல்ல மார்க் வாங்கி இருக்காங்க.

"இவங்க ஸ்கூல்ல இதுவரைக்கும் இத்தனை பேரு இவ்வளவு நல்ல மார்க் வாங்கினதே இல்லை. இவங்க வாங்கின மார்க்கைப் பாத்துட்டு, இப்ப சங்கரன்கிட்ட டியூஷன் படிக்க நிறைய பேரு வந்திருக்காங்க. அதனால, அவரு வேலையை விட்டுட்டு டியூஷன் சென்ட்டர் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்காரு!" என்றார் ஏகாம்பரம்.

வள்ளி வாயடைத்து நின்றாள்.

ஏகாம்பரம், சுந்தரைப் பார்த்து, "நீ நல்ல மார்க் வாங்கி இருக்கறதால, ஃபீஸ் குறைச்சலா உள்ள நல்ல காலேஜில் உனக்கு இடம் கிடைச்சுடும். உன் படிப்பு முடியும் வரை உனக்கு ஃபீஸ் கட்டிப் படிக்க வைக்கறது என் பொறுப்பு. நல்லாப்  படிச்சு, நல்ல மார்க் வாங்கி நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில முன்னுக்கு வர வேண்டியது உன்னோட சாமர்த்தியம்!" என்றார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்.

பொருள்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யக் கூடிய உதவி, அவனைக் கற்றவர் அவையில் முதன்மையான இடம் பெற வழி செய்து கொடுப்பதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'A Mother's Concern' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Monday, June 6, 2016

66. காட்சிகள் மாறும் நாடகம்

 
 யாழ் 

 காட்சி: 1                                                                 காலம்: 2005   
ரமணி இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் சேகர்.

"இன்னும் ஆஃபீஸிலிருந்தே வரலியே!" என்றாள் ரமணியின் தாய்.

"நாளைக்கு நாரத கான சபாவில கச்சேரி இருக்கு. அதுதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். அவன் ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணினேன். ஃபோன் எங்கேஜ்டாவே இருந்தது."

"என்ன கச்சேரி- புல்லாங்குழலா, வீணையா?" என்றாள் ரமணியின் தாய்.

"ஃப்ளூட்தான். சிக்கில் சிஸ்டர்ஸ். அது எப்படி கரெக்டா கேக்கறிங்க? நாங்க பாட்டுக் கச்சேரிக்குப் போறதில்லையா என்ன?"

"போவீங்க. ஆனா அதிகமா போறது ஃப்ளூட்டுக்கும், வீணைக்கும்தானே?"

"ஆமாம் ஆன்ட்டி. என்னதான் சொல்லுங்க, குழலுக்கும், வீணைக்கும் இருக்கிற இனிமையே தனிதான்"

"சரி. ரமணி வந்ததும் சொல்றேன். காப்பி சாப்பிடறயா?"

"வேண்டாம் ஆன்ட்டி."

"ஓ! நீங்கள்ளாம் செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயித்துக்கு உணவு கொடுப்பீங்க இல்லே?"

"என்ன ஆன்ட்டி திருக்குறள் எல்லாம் சொல்லி அமர்க்களப்படுத்தறீங்க!"

காட்சி: 2                                                                                                        காலம்: 2015

"ரமணி இல்லையா?" என்றான் சேகர்.

"இன்னும் ஆஃபீஸிலிருந்தே வரலியே!" என்றாள் ரஞ்சனி.

"செல்லை ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போலருக்கு."

"டிரைவ் பண்ணிக்கிட்டிருப்பார்."

"நாளைக்கு ஆர்க்கே கன்வென்ஷன் சென்ட்டர்ல சேஷகோபாலன் வீணை இருக்கு. ரமணி வரானான்னு கேக்கணும்."

"சேஷகோபாலன் வாய்ப்பாட்டுத்தானே பாடுவார்? வீணை கூட வாசிப்பாரா என்ன?"

"எந்த அளவுக்கு அற்புதமாப் பாடுவாரோ, அந்த அளவுக்குப் பிரமாதமா வீணையும் வாசிப்பார். ரமணிக்கு அவர் வீணைன்னா ரொம்பப் பிடிக்கும்."

"அவர் இப்ப வந்துடுவாரு. அவர்கிட்டயே கேட்டுக்கங்களேன். காப்பி சாப்பிடறீங்களா?"

"வேண்டாம். முன்னெல்லாம், காப்பி வேண்டாம்னு சொன்னா, செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயித்துக்கு உணவு கொடுப்பீங்களான்னு ரமணியோட அம்மா கிண்டல் பண்ணுவாங்க. ம்ம். அவங்கதான் இப்ப இல்லியே! ஆமாம் ரஞ்சனின்னு கர்நாடக ராகத்தோட பேரை உங்களுக்கு வச்சிருக்காங்க. உங்களுக்கு சங்கீதத்தில இண்ட்ரஸ்ட் இல்லையா?"

"ஏன் இல்லாம? எங்கிட்ட எவ்வளவு மியூஸிக் சிடி, காஸட் எல்லாம் இருக்குன்னு காட்டட்டுமா? எல்லாமே எம் எஸ் வியோட மியூஸிக்தான். என்னைப்  பொருத்த வரையில கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன் மியூஸிக், ஹிந்துஸ்தானி மியூஸிக், தமிழ் இசை, வேத காலத்து இசை எல்லாமே எம் எஸ் வி மியூஸிக்ல இருக்கு. என் பேரைப் பத்தி சொன்னீங்களே! ரஞ்சனிங்கற்து 'அபூர்வ ராகங்கள்' ஹீரோயினோட பேரு. அதைத்தான் என் அப்பா அம்மா எனக்கு வச்சிருக்காங்க! இதோ அவரே வந்துட்டாரே!"

"வாடா சேகர்! ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?" என்றான் ரமணி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லே! நாளைக்கு சேஷகோபாலனோட வீணைக் கச்சேரி இருக்கு. வரியா?"

"சேஷகோபாலன் வீணை ரொம்ப அற்புதமா இருக்குமே! ஆனா என்னால வர முடியாதே!"

"ஏன்?"

"நான் அங்கே வந்தா, அதை விட முக்கியமான கச்சேரியை மிஸ் பண்ணிடுவேனே!"

"அது என்னடா கச்சேரி?" என்று சேகர் கேட்கும்போதே, அப்போதுதான் தூங்கி எழுந்திருந்த அவர்களின் ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள் ரஞ்சனி.

ரமணியைப் பார்த்ததும் "ப்பா, ப்பா" என்று சொல்லிக் கொண்டே அவனிடம் தாவியது குழந்தை.

"இந்தக் குழந்தையின் மழலைக் கச்சேரிதான்!" என்று குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான் ரமணி.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்.

பொருள்:
தங்கள் குழந்தைகளின் மழலைப் பேச்சைக் கேட்காதவர்கள்தான் குழல், யாழ் போன்ற இசைக்கருவிகளை இனிமையானவை என்று கூறுவர்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Scenes Change' th
e English version of this story.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















Saturday, May 21, 2016

65. புவனா - ஒரு கேள்விக்குறி!

புவனா சமையல் செய்து கொண்டிருந்தபோது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அடுப்பை அணைத்து விட்டு வேகமாக ஓடினாள். குழந்தையின் சிறுநீரால் தூளி நனைந்து, கீழே நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

"அடாடா! டயபர் போட மறந்து விட்டேனே!" என்று சொன்னபடியே குழந்தையைத் தூக்கினாள் . துண்டால் குழந்தையின் உடலைத் துடைத்து விட்டுக் கீழே கிடத்தினாள்!

குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்து விட்டுக் கையை உயர்த்தியது. புவனா தன் முகத்தைக் குழந்தைக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றாள்.

குழந்தையின் பிஞ்சுக் கரம் அவள் மீது பட்டதும் அவளுக்குப் புளகாங்கிதம் ஏற்பட்டது. இரண்டு மூன்று முறை அவளைத் தொட்ட பிறகு திடீரென்று பெரிதாகச் சிரித்தபடியே குழந்தை அவள் கன்னத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தது.

கரை கடந்த மகிழ்ச்சியில் புவனா குழந்தையை வாரி அணைத்தபடி, "என் செல்லமே!" என்று முகத்தோடு முகம் வைத்து உச்சி முகர்ந்தாள்.

குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தபடியே 'பே பே பே...' என்று ஏதோ பேசியது. "என்னம்மா கண்ணு  சொல்றே? எனக்கு ஒண்ணுமே புரியல்லியே!" என்ற புவனா குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

பெரும்பாலும் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டும், சில சமயம் கீழே விட்டு விட்டும் சமையலை முடித்தாள். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே சாப்பிட்டு விட்டுப் பிற வேலைகளையும் செய்து முடித்தாள். பிறகு நீண்ட நேரம் குழந்தையுடன் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தாள்.

குழந்தைக்குப் பால் கொடுத்து அதை மறுபடியும் தூங்க வைத்தபோது மாலை ஆறு மணி ஆகி விட்டது. ஏழு மணிக்கு அவள் கணவன்  ராமகிருஷ்ணன் அலுவலகத்திலிருந்து வந்தான்.

"குழந்தை எங்கே?" என்றான்.

"தூளியில் துங்குகிறது" என்றாள் புவனா. 

ராமகிருஷ்ணன், தூளிக்குள் தலையை விட்டு, அமைதியாகத் தூங்கும் அந்தப் பிஞ்சு முகத்தைப்  பார்த்து ரசித்தபின், உடை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான்.

சற்று நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. புவனா கதவைத் திறந்தாள்.

செல்வி!

"குழந்தை என்ன செய்கிறது ஆன்ட்டி?" என்றாள் செல்வி.

"தூங்குகிறது" என்றாள் புவனா.

"நான் போய் உடை மாற்றிக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு ஏதாவது செய்து விட்டு, இன்னும் அரைமணியில் வந்து குழந்தையை எடுத்துப் போகிறேன். அதற்குள் அது விழித்துக் கொண்டு அழுதால் வந்து எடுத்துக் கொண்டு போகிறேன்" என்றாள் செல்வி.

"மெதுவாகவே வா! குழந்தை விழித்துக் கொள்ள இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்" என்றாள் புவனா.

"ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி! நீங்கள் இல்லாவிட்டால் என்ன செய்திருப்போம் என்றே தெரியவில்லை!"

"நான் வீட்டில் தனியாகத்தானே இருக்கிறேன்! குழந்தையைப் பார்த்துக் கொள்வதால் எனக்கும் இனிமையாகப் பொழுது போகிறது" என்றாள் புவனா.

செல்வி பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன், "அவள் ஏன் உன்னை ஆன்ட்டி என்று கூப்பிடுகிறாள்? அக்கா என்று கூப்பிடலாமே! உனக்கும் எனக்கும் அவ்வளவு வயது ஆகி விடவில்லையே!" என்றான்.

"இல்லை. நமக்கு இன்னும் வயதாகி விடவில்லை. நமக்கும் ஒரு குழந்தை பிறக்கும். இப்போது செல்வியின் குழந்தையைக் கொஞ்சுவதைப் போல நம் குழந்தையையும் நான் கொஞ்சுவேன்!' என்று நினைத்துக் கொண்டாள் புவனா.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

பொருள்:
தம் குழந்தைகளின் உடலைத் தீண்டுவது உடலுக்கு இன்பமளிக்கும். குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்பது காதுக்கு இன்பமளிக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Bhuvana and the Baby' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Friday, May 20, 2016

64. அமுதினும் இனியது!

"நாமும் கோவில் கோவிலாப் போய்க்கிட்டிருக்கோம். கடவுள் இன்னும் நமக்குக் கருணை காட்டலியே!" என்றாள் சுகன்யா.

"கோவிலுக்குள்ள நுழையும்போதே இப்படி அலுத்துக்கிட்டா எப்படி நம்மால அமைதியாக் கடவுள்கிட்ட வேண்டிக்க முடியும்?" என்றான் அவள் கணவன் பலராமன்.

"நான் ஏன் இப்படி அலுத்துக்கறேன்னு கடவுளுக்குத் தெரியாதா? அமைதியா வேண்டிக்கறதை விட, இப்படி மனசு வருத்தப்பட்டு அங்கலாய்க்கும்போதாவது நம்ம வருத்தம் எவ்வளவு ஆழமானதுன்னு கடவுளுக்குப் புரியட்டுமே!"

"சரி வா. சன்னதி கிட்ட வந்துட்டோம். கூட்டம் அதிகமா இல்லை. உள்ள போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்."

கடவுளிடம் இருவருமே மனம் உருகி வேண்டிக் கொண்டார்கள்.

வெளியே வந்து பிரகாரத்தைச் சுற்றும்போது, பலராமன் பிரசாதங்கள் விற்கும் இடத்தை நோக்கிப் போனான்.

"ஒவ்வொரு கோவில்லேயும் தவறாம பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டுடறீங்க. உங்களுக்கு பலராமன் என்பதற்கு பதிலா, சாப்பாட்டு ராமன்னு பேர் வச்சிருக்கலாம்!"

"நான் மட்டுமா சாப்பிடறேன்? உனக்கும்தானே வாங்கிக் கொடுக்கறேன்? நான் தனியாக் கோவிலுக்குப் போனாக் கூட உனக்குப் பிரசாதம் வாங்கிக்கிட்டு வந்து கொடுப்பேனே! இந்தக் கோவில்ல அதிரசம் ரொம்ப நல்லா இருக்கும். அதுதான்."

"எந்தக் கோவில்ல எந்தப் பிரசாதம் விசேஷம்கறது உங்களுக்கு அத்துப்படியாச்சே! நீங்க கோவிலுக்கு வரதே பிரசாதம் வாங்கிச் சாப்பிடத்தானோன்னு தோணுது!"

அவள் பேச்சைப் பொருட்படுத்தாமல் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்த பலராமன் கோவில் பிரகாரத்தை ஒட்டி இருந்த குளக்கரைக்கு வந்தான். மனைவிக்கு ஒரு அதிரசத்தைக் கொடுத்து விட்டு இன்னொன்றை விண்டு வாயில் போட்டுக் கொள்ளப் போனவன் அப்படியே நின்று விட்டான்.

குளக்கரையில் ஒரு இளம் தம்பதி ஒரு இட்லிப் பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெண்ணின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கீழே தாவி மண்ணில் கை வைத்துத் தவழ்ந்து போய், தந்தையின் கையிலிருந்த ஒரு இட்லியைத் தன் கையால் அழுத்திப் பிசைந்து, அதைக் கூழாக்கியது.

குழந்தையின் கையிலிருந்த மண் படிந்த அந்தக் கூழை, குழந்தையின் தந்தை ஆவலுடன் எடுத்து வாயில் போட்டுச் சுவைத்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பலராமன்.

'என்னங்க, உங்களுக்குப் பிடிச்ச அதிரசத்தைக் கூடச் சாப்பிடாமல் அந்தக் குழந்தையையே பாத்துக்கிட்டிருக்கீங்க?"

"அந்தக் குழந்தையோட அப்பா இடத்தில நான் இருந்தா, இந்த அதிரசத்தை விட அந்தக் குழந்தையோட அழுக்குக் கை பட்ட அந்த இட்லிக்கூழ்தான் எனக்கு அதிக ருசியா இருந்திருக்கும்!" என்றான் பலராமன் ஏக்கத்துடன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.

பொருள்:
தன் குழந்தையின் சிறு கையால் அளாவப்பட்ட கூழ்தான் ஒருவருக்கு அமிர்தத்தை விட இனிப்பதாக இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Balaraman's Obsession' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Thursday, May 19, 2016

63. இரண்டு பிள்ளைகள்

நல்லசிவம் தன் நண்பர் தனராஜைப் பார்க்கப் போனபோது, அவர் வெளியில் போயிருப்பதாக அவர் மனைவி சொன்னாள். சற்று நேரம் காத்திருந்தபின் தனராஜ் வந்தார். நல்லசிவத்தைப் பார்த்ததும், அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே சென்று கதவைச் சாத்தியதும், தனராஜால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. துண்டில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மினார்.

நல்லசிவம் பதறிப் போய், "என்ன தனராஜ் இது, குழந்தை மாதிரி? என்ன ஆச்சு?"என்றார்.

"எல்லாம் இந்த செந்தில் விஷயம்தான். மொதல்ல ஏகப்பட்ட பணம் செலவழிச்சுப் படிக்க வச்சேன். அப்புறம் படிப்பு சரியா வரலைன்னு பிசினஸ் பண்ணப் போறேன்னான். அதுக்கும் முதலீடு, மாதாந்தர செலவுன்னு நெறையப் பணம் கொடுத்தேன். இப்ப தொழில் நஷ்டமாயிடுச்சு, வேற தொழில் செய்யப் போறேன்னு மறுபடி பணம் கேக்கறான்.

"வேண்டாம், நம்ம ஊருக்கு வந்துடு, கொஞ்ச நாள் நிலத்தைப் பாத்துக்கிட்டுரு, அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கறான். அண்ணன் துபாய்க்குப் போய் நெறையச் சம்பாதிக்கச்சே, நானும் ஏதாவது செஞ்சு பணம் சம்பாதிக்க வேண்டாமான்னு கேக்கறான்.

"ஏற்கனவே பாதி நிலத்தை வித்தாச்சு. மீதி நிலத்தையும் வித்து மொத்தப் பணத்தையும் அவனுக்குக் கொடுத்துட்டு நானும் என் சம்சாரமும் சாப்பாட்டுக்கே யார்கிட்டயாவது கையேந்தற நிலைமை வந்துடும் போலருக்கே!"

மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் தனராஜ்.

"ஏன் இப்படியெல்லாம் நெனைக்கிறீங்க? செந்திலுக்கு புது பிசினஸ் நல்லா அமையலாம் இல்லே? அதோட, மூத்தவன் பாலுதான் துபாயில வசதியா இருக்கானே, அவன் உங்களைப் பாத்துக்க மாட்டானா?" என்று சமாதானப்படுத்த முயன்றார் நல்லசிவம்.

"நீங்க வேற நல்லசிவம்! துபாயில தனியா இருந்தா சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவானேன்னு அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன். இப்ப அவன் குடும்பத்தோட அங்க சந்தோஷமா இருக்கான். செலவுக்குன்னு எங்களுக்கு ஒரு பைசா கூட அனுப்பறதில்ல. கேட்டா, வர வருமானம் எங்களுக்கே சரியா இருக்கு, ஒரு ரூபா கூட சேமிக்க முடியறதில்லன்னு மூக்கால அழறான். இவன் படிப்புக்கு நான் எவ்வளவு செலவழிச்சிருப்பேன்! எனக்கு வாய்ச்ச ரெண்டு புள்ளைங்களும் இப்படியா இருக்கணும்?"

"சரி. நான் கிளம்பறேன்" என்று நல்லசிவம் எழுந்தார்.

"இருங்க. எதுக்கு வந்தீங்க? உடனே கிளம்பறீங்க! என் கஷ்டத்தைச் சொல்லி அழுது, நீங்க வந்த விஷயத்தைப் பத்திக் கேக்காமயே இருந்துட்டேனே!"

"ஒண்ணும் இல்லை. ராத்திரி கிளம்பி சென்னைக்குப் போறேன். அதுதான் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்!"

"ஓ! ரகுவோட கொஞ்ச நாள் இருந்துட்டு வரப் போறீங்களா? ரெண்டு மூணு வாரத்தில வந்துடுவீங்கல்ல?"

"ம்..." என்றார் நல்லசிவம்.

சென்னையில் இருக்கும் அவர் மூத்த மகன் ரகுவும், பெங்களூருவில் இருக்கும் அவர் இளைய மகன் ரவியும், அவரையும் அவர் மனைவியையும் தங்களுடனேயே வந்து நிரந்தரமாக இருக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்ததையும், ஒவ்வொருவர் வீட்டிலும் மூன்று மாதம் இருந்து விட்டு, கிராமத்து வீட்டை நிரந்தரமாகக் காலி செய்து விட்டு மகன்களுடனேயே இருப்பது பற்றி அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்திருப்பதையும், தனராஜ் அப்போது இருந்த மனநிலையில் அவரிடம் சொல்ல நல்லசிவம் விரும்பவில்லை.

சென்னைக்குப் போய் ஓரிரு தினங்கள் கழித்துத் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார் நல்லசிவம்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்.

பொருள்:
நமது பிள்ளைகளே நமது சொத்துக்கள். அவரவருக்குக் கிடைக்கும் சொத்து எத்தகையது என்பது அவரவர் வினைப்பயனை ஒட்டி அமையும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Dhanraj's Woes' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Thursday, May 12, 2016

62. மரத்தடி 'சாமியார்'

"போன ஜன்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ தெரியலே, புடிச்சு ஆட்டுது" என்று அலுத்துக் கொண்டார் புண்ணியகோடி.

"புண்ணியகோடின்னு பேரு வச்சுக்கிட்டு நீங்களே இப்படிப் பேசினா, நாங்கள்ளாம் என்ன செய்யறது?" என்றார் நண்பர்களால் செல்லமாகப் 'பாவி' என்று அழைக்கப்பட்ட பா.விஸ்வநாதன்!

"பேரில என்ன இருக்கு? விடாத இருமலோடு ஒத்தன் ஆஸ்பத்திரிக்குப் போனான். டாக்டர் மருந்துச் சீட்டு எழுதறதுக்கு, 'உன் பேரு என்ன?'ன்னு கேட்டாரு. 'ஆரோக்கியராஜ்'னு சொன்னான் அவன். ஆரோக்கியத்தில ராஜாவாம்! அது மாதிரிதான். என் பேரு வெற்றிவேல். எனக்கு எல்லாத்திலயும் வெற்றியா கெடச்சுக்கிட்டிருக்கு? இப்ப கூட மூணு சீட்டில முன்னூறு ரூபா தோத்துட்டுத்தான் வரேன்!" என்றார் வெற்றிவேல்!

"அது இருக்கட்டும். இந்தப் பூர்வ ஜன்ம பலன் என்கிறதெல்லாம் உண்மையா? போன ஜன்மத்தில பண்ணின பாவத்துக்கான பலனை இந்த ஜன்மத்தில அனுபவிக்கணுமா?" என்று கேட்டார் புண்ணியகோடி.

"இந்த ஜன்மத்தில மட்டும் இல்ல. அடுத்த பல ஜன்மங்கள்ளேயும் அனுபவிக்க வேண்டி இருக்கும்" என்றார் விஸ்வநாதன்.

"அது ஏன் அப்படி?" என்றார் வெற்றிவேல்.

"ஏன்னா, நம்ம பண்ற பாவம் அவ்வளவு! அதற்கான பலன் அத்தனையையும் ஒரே ஜன்மத்தில அனுபவிக்கணும்னா நம்மால தாங்க முடியாதுன்னுதான் கடவுள் அதைப் பிரிச்சு ரெண்டு மூணு ஜன்மங்கள்ள அனுபவிக்கற மாதிரி பண்ணியிருக்காரு" என்று விளக்கினார் விஸ்வநாதன்.

"அப்ப, இந்த ஜன்மத்தில பண்ற பாவமெல்லாம் என்ன ஆகும்?" என்று வினவினார் புண்ணியகோடி.

"அதான் பிரச்னையே! பழைய பாவ மூட்டை கொஞ்சம் குறையறதுக்குள்ள, நாம புதுசா பண்ற பாவங்கள்ளாம் சேர்ந்து இன்னும் மூட்டை பெரிசாகிக்கிட்டே போகும்!"

"அப்போ பாவ மூட்டை குறையவே குறையாதா? மறுபடி மறுபடி ஜன்மம் எடுத்துக் கஷ்டப்பட்டுக்கிட்டேதான் இருக்கணுமா?"

"ஒரு வழி இருக்கு!" என்று ஒரு குரல் கேட்டது. 

மூவரும் திரும்பிப் பார்த்தனர். பக்கத்தில் இருந்த மரத்தடியில் ஒருவர் அழுக்கு வேட்டியுடன் மண் தரையில் படுத்திருந்தார்.

'யார் இவர்? சாமியாரா, யோகியா, இல்லை சித்தரா?' என்று மூவரும் யோசித்துக் கொண்டிருந்தபோதே, அவர் இவர்களைத் திரும்பிப் பார்க்காமலே பேசினார்: 

"உங்கள் பிள்ளைகள் எந்தப் பழிக்கும் ஆளாகாமல் பண்புள்ளவர்களாக இருந்தால் ஏழு பிறவிக்கும் உங்களை எந்தத் தீமையும் அண்டாது."

"எப்படிச் சொல்றீங்க சாமி?" என்றார் வெற்றிவேல்.

"நான் சொல்லலே. திருவள்ளுவர் சொல்கிறார்" என்று சொல்லி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் தூக்கத்தைத் தொடர்ந்தார் 'சாமியார்.'

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் பெறின்.

பொருள்: 
பழிச்சொல் எதற்கும் ஆளாகாமல் பண்புடன் வாழும் புதல்வர்களைப் பெற்றவர்களை முன்வினைப் பயனால் அவர்களுக்கு ஏற்படும் ஏழு பிறவிகளிலும் எந்தத் தீமையும் அண்டாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

Read 'The Roadside Saint' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்