ரமணி இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் சேகர்.
"இன்னும் ஆஃபீஸிலிருந்தே வரலியே!" என்றாள் ரமணியின் தாய்.
"நாளைக்கு நாரத கான சபாவில கச்சேரி இருக்கு. அதுதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். அவன் ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணினேன். ஃபோன் எங்கேஜ்டாவே இருந்தது."
"என்ன கச்சேரி- புல்லாங்குழலா, வீணையா?" என்றாள் ரமணியின் தாய்.
"ஃப்ளூட்தான். சிக்கில் சிஸ்டர்ஸ். அது எப்படி கரெக்டா கேக்கறிங்க? நாங்க பாட்டுக் கச்சேரிக்குப் போறதில்லையா என்ன?"
"போவீங்க. ஆனா அதிகமா போறது ஃப்ளூட்டுக்கும், வீணைக்கும்தானே?"
"ஆமாம் ஆன்ட்டி. என்னதான் சொல்லுங்க, குழலுக்கும், வீணைக்கும் இருக்கிற இனிமையே தனிதான்"
"சரி. ரமணி வந்ததும் சொல்றேன். காப்பி சாப்பிடறயா?"
"வேண்டாம் ஆன்ட்டி."
"ஓ! நீங்கள்ளாம் செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயித்துக்கு உணவு கொடுப்பீங்க இல்லே?"
"என்ன ஆன்ட்டி திருக்குறள் எல்லாம் சொல்லி அமர்க்களப்படுத்தறீங்க!"
காட்சி: 2 காலம்: 2015
"ரமணி இல்லையா?" என்றான் சேகர்.
"இன்னும் ஆஃபீஸிலிருந்தே வரலியே!" என்றாள் ரஞ்சனி.
"செல்லை ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போலருக்கு."
"டிரைவ் பண்ணிக்கிட்டிருப்பார்."
"நாளைக்கு ஆர்க்கே கன்வென்ஷன் சென்ட்டர்ல சேஷகோபாலன் வீணை இருக்கு. ரமணி வரானான்னு கேக்கணும்."
"சேஷகோபாலன் வாய்ப்பாட்டுத்தானே பாடுவார்? வீணை கூட வாசிப்பாரா என்ன?"
"எந்த அளவுக்கு அற்புதமாப் பாடுவாரோ, அந்த அளவுக்குப் பிரமாதமா வீணையும் வாசிப்பார். ரமணிக்கு அவர் வீணைன்னா ரொம்பப் பிடிக்கும்."
"அவர் இப்ப வந்துடுவாரு. அவர்கிட்டயே கேட்டுக்கங்களேன். காப்பி சாப்பிடறீங்களா?"
"வேண்டாம். முன்னெல்லாம், காப்பி வேண்டாம்னு சொன்னா, செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயித்துக்கு உணவு கொடுப்பீங்களான்னு ரமணியோட அம்மா கிண்டல் பண்ணுவாங்க. ம்ம். அவங்கதான் இப்ப இல்லியே! ஆமாம் ரஞ்சனின்னு கர்நாடக ராகத்தோட பேரை உங்களுக்கு வச்சிருக்காங்க. உங்களுக்கு சங்கீதத்தில இண்ட்ரஸ்ட் இல்லையா?"
"ஏன் இல்லாம? எங்கிட்ட எவ்வளவு மியூஸிக் சிடி, காஸட் எல்லாம் இருக்குன்னு காட்டட்டுமா? எல்லாமே எம் எஸ் வியோட மியூஸிக்தான். என்னைப் பொருத்த வரையில கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன் மியூஸிக், ஹிந்துஸ்தானி மியூஸிக், தமிழ் இசை, வேத காலத்து இசை எல்லாமே எம் எஸ் வி மியூஸிக்ல இருக்கு. என் பேரைப் பத்தி சொன்னீங்களே! ரஞ்சனிங்கற்து 'அபூர்வ ராகங்கள்' ஹீரோயினோட பேரு. அதைத்தான் என் அப்பா அம்மா எனக்கு வச்சிருக்காங்க! இதோ அவரே வந்துட்டாரே!"
"வாடா சேகர்! ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?" என்றான் ரமணி.
"அதெல்லாம் ஒண்ணும் இல்லே! நாளைக்கு சேஷகோபாலனோட வீணைக் கச்சேரி இருக்கு. வரியா?"
"சேஷகோபாலன் வீணை ரொம்ப அற்புதமா இருக்குமே! ஆனா என்னால வர முடியாதே!"
"ஏன்?"
"நான் அங்கே வந்தா, அதை விட முக்கியமான கச்சேரியை மிஸ் பண்ணிடுவேனே!"
"அது என்னடா கச்சேரி?" என்று சேகர் கேட்கும்போதே, அப்போதுதான் தூங்கி எழுந்திருந்த அவர்களின் ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள் ரஞ்சனி.
ரமணியைப் பார்த்ததும் "ப்பா, ப்பா" என்று சொல்லிக் கொண்டே அவனிடம் தாவியது குழந்தை.
"இந்தக் குழந்தையின் மழலைக் கச்சேரிதான்!" என்று குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான் ரமணி.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 66குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
பொருள்:
தங்கள் குழந்தைகளின் மழலைப் பேச்சைக் கேட்காதவர்கள்தான் குழல், யாழ் போன்ற இசைக்கருவிகளை இனிமையானவை என்று கூறுவர்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment