About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, May 21, 2016

65. புவனா - ஒரு கேள்விக்குறி!

புவனா சமையல் செய்து கொண்டிருந்தபோது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அடுப்பை அணைத்து விட்டு வேகமாக ஓடினாள். குழந்தையின் சிறுநீரால் தூளி நனைந்து, கீழே நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

"அடாடா! டயபர் போட மறந்து விட்டேனே!" என்று சொன்னபடியே குழந்தையைத் தூக்கினாள் . துண்டால் குழந்தையின் உடலைத் துடைத்து விட்டுக் கீழே கிடத்தினாள்!

குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்து விட்டுக் கையை உயர்த்தியது. புவனா தன் முகத்தைக் குழந்தைக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றாள்.

குழந்தையின் பிஞ்சுக் கரம் அவள் மீது பட்டதும் அவளுக்குப் புளகாங்கிதம் ஏற்பட்டது. இரண்டு மூன்று முறை அவளைத் தொட்ட பிறகு திடீரென்று பெரிதாகச் சிரித்தபடியே குழந்தை அவள் கன்னத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தது.

கரை கடந்த மகிழ்ச்சியில் புவனா குழந்தையை வாரி அணைத்தபடி, "என் செல்லமே!" என்று முகத்தோடு முகம் வைத்து உச்சி முகர்ந்தாள்.

குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தபடியே 'பே பே பே...' என்று ஏதோ பேசியது. "என்னம்மா கண்ணு  சொல்றே? எனக்கு ஒண்ணுமே புரியல்லியே!" என்ற புவனா குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

பெரும்பாலும் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டும், சில சமயம் கீழே விட்டு விட்டும் சமையலை முடித்தாள். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே சாப்பிட்டு விட்டுப் பிற வேலைகளையும் செய்து முடித்தாள். பிறகு நீண்ட நேரம் குழந்தையுடன் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தாள்.

குழந்தைக்குப் பால் கொடுத்து அதை மறுபடியும் தூங்க வைத்தபோது மாலை ஆறு மணி ஆகி விட்டது. ஏழு மணிக்கு அவள் கணவன்  ராமகிருஷ்ணன் அலுவலகத்திலிருந்து வந்தான்.

"குழந்தை எங்கே?" என்றான்.

"தூளியில் துங்குகிறது" என்றாள் புவனா. 

ராமகிருஷ்ணன், தூளிக்குள் தலையை விட்டு, அமைதியாகத் தூங்கும் அந்தப் பிஞ்சு முகத்தைப்  பார்த்து ரசித்தபின், உடை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான்.

சற்று நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. புவனா கதவைத் திறந்தாள்.

செல்வி!

"குழந்தை என்ன செய்கிறது ஆன்ட்டி?" என்றாள் செல்வி.

"தூங்குகிறது" என்றாள் புவனா.

"நான் போய் உடை மாற்றிக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு ஏதாவது செய்து விட்டு, இன்னும் அரைமணியில் வந்து குழந்தையை எடுத்துப் போகிறேன். அதற்குள் அது விழித்துக் கொண்டு அழுதால் வந்து எடுத்துக் கொண்டு போகிறேன்" என்றாள் செல்வி.

"மெதுவாகவே வா! குழந்தை விழித்துக் கொள்ள இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்" என்றாள் புவனா.

"ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி! நீங்கள் இல்லாவிட்டால் என்ன செய்திருப்போம் என்றே தெரியவில்லை!"

"நான் வீட்டில் தனியாகத்தானே இருக்கிறேன்! குழந்தையைப் பார்த்துக் கொள்வதால் எனக்கும் இனிமையாகப் பொழுது போகிறது" என்றாள் புவனா.

செல்வி பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன், "அவள் ஏன் உன்னை ஆன்ட்டி என்று கூப்பிடுகிறாள்? அக்கா என்று கூப்பிடலாமே! உனக்கும் எனக்கும் அவ்வளவு வயது ஆகி விடவில்லையே!" என்றான்.

"இல்லை. நமக்கு இன்னும் வயதாகி விடவில்லை. நமக்கும் ஒரு குழந்தை பிறக்கும். இப்போது செல்வியின் குழந்தையைக் கொஞ்சுவதைப் போல நம் குழந்தையையும் நான் கொஞ்சுவேன்!' என்று நினைத்துக் கொண்டாள் புவனா.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

பொருள்:
தம் குழந்தைகளின் உடலைத் தீண்டுவது உடலுக்கு இன்பமளிக்கும். குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்பது காதுக்கு இன்பமளிக்கும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














No comments:

Post a Comment