About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, August 4, 2017

82. பால் பாயசம்

"ஏங்க, ஒரு நிமிஷம் உள்ள வந்துட்டுப் போறீங்களா?"

முன்னறையில் அமர்ந்து நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த சிவராமன் உள்ளிருந்து மனைவி அழைத்ததும், "ஒரு நிமிஷம்" என்று நண்பரிடம் சொல்லி விட்டு, "என்ன?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனான்.

மனைவி வாயில் ஆள்காட்டி விரலை வைத்து, 'பேச வேண்டாம்' என்று சமிக்ஞை செய்தபடியே, சமையல் மேடை மீது வைக்கப்பட்டிருந்த காப்பி தம்ளரைச் சுட்டிக் காட்டினாள்.

தான் காப்பியை உறிஞ்சும் சத்தம் கூட முன்னறையில் அமர்ந்திருக்கும் நண்பருக்குக் கேட்டு விடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் காப்பியை அருந்தி விட்டு வாயைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து நண்பருடன் பேச்சைத் தொடர்ந்தான் சிவராமன்.

நண்பர் போனதும், "இனிமேல் காப்பி குடிக்கற நேரத்தில யாராவது வந்தா அவங்களை அனுப்பற வழியைப் பாருங்க. உங்களைத் தனியா உள்ளே கூப்பிட்டு, உங்களுக்கு மட்டும் காப்பி கொடுக்கறது எனக்குக் கஷ்டமா இருக்கு!" என்றாள் மனைவி.

"அவருக்கும் கொஞ்சம் காப்பி கொடுத்திருக்கலாமே?" என்றான் சிவராமன்.

"காலையில போடற டிகாக்‌ஷன்ல இருக்கிற மிச்சம் சாயந்திரம் நம்ப ரெண்டு பேருக்கும் காப்பி போடறதுக்கே போறும் போறாததா இருக்கு. இதில வீட்டுக்கு வரவங்களுக்கெல்லாம் வேற எப்படி காப்பி கொடுக்க முடியும்?" என்றாள் மனைவி.

ன்னொரு நாள், சிவராமன் அவனுடைய இன்னொரு நண்பர் நடராஜன் வீட்டுக்குப் போயிருந்தான். சிவராமனிடம் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று குரலை உயர்த்தி,"தங்கம்! சிவராமனுக்குக் கொஞ்சம் பால் பாயசம் கொண்டு வாயேன்!" என்றார்.

"வேண்டாம் நடராஜன்!" என்று மறுத்த சிவராமன், "இன்னிக்கு என்ன விசேஷம்?" என்றான்.

"தங்கம் அடிக்கடி ஏதாவது பூஜை பண்ணுவா! பூஜைன்னா பிரசாதம் இல்லாமயா? பாயசம், சுண்டல், சக்கரைப் பொங்கல்னு ஏதாவது பண்ணுவா. குறிப்பா அவ பண்ற பால் பாயசம் ரொம்ப அற்புதமா இருக்கும். சாப்பிட்டுப் பாத்தப்பறம் நீங்களே சொல்லுவீங்க!" என்றார்.

அவர் மனைவி ஒரு தம்ளரில் பால் பாயசம் கொண்டு வைத்தாள். சிவராமன் சங்கடத்துடன், "உங்களுக்கு ஏன் சிரமம்?" என்றான்.

"சும்மா சாப்பிடுங்க. உங்க நண்பர் சொன்ன மாதிரி நல்லா இருக்கா, இல்லை, அவர் சும்மா என்னைப் புகழறரான்னு சொல்லுங்க."

சிவராமன் பாயசத்தை அருந்தினான். உண்மையாகவே அற்புதமாகத்தான் இருந்தது.

"ரொம்ப அற்புதம். நடராஜன் கொஞ்சம் குறைச்சுத்தான் சொல்லியிருக்காரு!" என்றான்.

சற்று நேரம் கழித்து சிவராமன் விடைபெற்றான். தெருவில் இறங்கிச் சில அடிகள் நடந்ததும்தான் கையில் வைத்திருந்த சாவிக்கொத்தை நடராஜன் வீட்டிலேயே விட்டு விட்டு வந்ததை உணர்ந்தான். கையிலேயே வைத்திருந்த சாவிக்கொத்தைப் பாயசம் அருந்தும்போது கீழே வைத்தவன் மறுபடியும் அதை எடுத்துக்கொள்ள மறந்து விட்டான்.

வாசற்கதவு திறந்துதான் இருந்தது. ஆனால் முன்னறையில் யாரும் இல்லை. அழைப்பு மணியை அழுத்தலாமா என்று யோசித்தபோது உள்ளிருந்து பேச்சுக்குரல் கேட்டது. நடராஜன் குரலும் அவர் மனைவியின் குரலும்தான்.

"பால் பாயசம் கொஞ்சம்தான் இருந்ததோ? நான் முன்னாடியே சாப்பிட்டுட்டேன். உனக்குக் கொஞ்சம்தான் மீதி இருந்திருக்கும். யோசிக்காமல் அதை சிவராமனுக்குக் கொடுக்கச் சொல்லிட்டேனோ?" என்றார் நடராஜன்

"அப்படி இல்லை. நீங்க அவருக்குக் கொடுக்கச் சொன்னது சரிதான். நீங்க சொல்லாட்டாலும் நானே கொடுத்திருப்பேன். இருந்த பாயசத்தை அவருக்குக்  கொஞ்சம் கொடுத்துட்டு, மீதியை நான் சாப்பிட்டேன். வீட்டுக்கு வந்தவங்களுக்குக் கொடுத்துட்டுச் சாப்பிட்டா, அது ஒரு தனித் திருப்திதான்" என்றாள் தங்கம்.

தன் மனைவி இந்த உரையாடலைக் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான் சிவராமன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
            அதிகாரம் 9             
  விருந்தோம்பல்  
குறள் 82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

பொருள்:
இறப்பற்ற நிலையைக் கொடுக்கக்கூடிய அமிர்தமாகவே இருந்தாலும், விருந்தினரை வெளியே அமர வைத்து விட்டுத் தான் மட்டும் அதை அருந்துவது விரும்பத்தகாத செயல்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
























7 comments:

  1. விரும்பத் தகாத அல்ல, வேண்டவே வேண்டாத செயல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. 'வேண்டாத' என்ற திருவள்ளுவரின் வார்த்தைக்கு, பரிலமேலழகர் முதல் சாலமன் பாப்பையா வரியிலான எல்லா உரையாசிரியர்களும் 'விரும்பத்தகாத' என்றே பொருள் கூறியிருக்கிறார்கள்.

      Delete
    2. இது உங்கள் கதையிலிருந்து தோன்றிய விளக்கம் ஐயா, நன்றி.

      Delete
    3. மீண்டும் என் நன்றி.

      Delete
  2. இதைத்தானே அவ்வை, தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை அதியமானுக்குக் கொடுத்தாள். ஆனால் அப்போது அதியமான் அவள் அருகில் இல்லை.

    முன்பெல்லாம், பொது இடங்களில் யாரும் சாப்பிடும் வழக்கம் இல்லாதிருந்தது (உணவகங்கள் தவிர). அதை ஒரு ஒழுக்கமாகவே பெரும்பாலானோர் வைத்திருந்தனர். இப்போ எல்லாமே தன்னலமாக ஆகிவிட்டது.

    ReplyDelete
  3. தாங்கள் கூறுவது உண்மைதான்.

    ReplyDelete