About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, August 7, 2017

84. விடுமுறை அனுபவம்

கோடை விடுமுறைக்கு எங்காவது போக வேண்டும் என்று அவளுடைய மகன், மகள் இருவரும் வற்புறுத்தியதால் சென்னைக்குப் போகத் தீர்மானித்தாள் செல்வி.

அவளுடைய இரண்டு அண்ணன்களும் சென்னையில்தான் இருந்தனர். சிறு வயதிலிருந்தே இருவருக்கும் அவள் செல்லக் குழந்தை. அவர்கள் தந்தை வேறு சிறு வயதிலேயே இறந்து விட்டதால், அண்ணன்களுக்கு அவள் மீது பாசம் இன்னும் அதிகம் ஆகி விட்டது.

அண்ணன்கள் இருவரும் படித்து முடித்ததும் சென்னைக்கு வேலைக்குப் போய் விட்டனர். செல்விக்குத் திருமணம் செய்து வைத்து விட்டு அவர்களும் திருமணம் செய்து கொண்டு, ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்குத் தந்தையாகவும் ஆகி விட்டனர்.

மூன்று பேருக்கும் குடும்பம் என்று ஏற்பட்டு விட்ட பிறகு, அவர்கள் தாயும் மறைந்து விட்ட பிறகு, பழைய நெருக்கம் குறைந்து விட்டதுதான். ஆயினும் அண்ணன்கள் இருவரும் அடிக்கடி அவளுடன் தொலைபேசியில் பேசி அவள் நலம் பற்றி விசாரித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தொலைபேசியில் அண்ணன்கள் பேசும்போது, அண்ணிகளும் அவ்வப்போது அவளிடம் பேசுவார்கள். குடும்பத்தோடு தங்கள் வீட்டில் வந்து தங்கி விட்டுப் போகும்படி அவளிடம் அடிக்கடி சொல்வார்கள்.

இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

இரண்டு அண்ணன்களில் குமார் அதிக வசதி படைத்தவன். அதனால் அவன் வீட்டுக்கு முதலில் போனாள் செல்வி.

அண்ணன் அண்ணி இருவருமே வேலை பார்த்து வந்ததால், சமையலுக்கும், சிறுவன் வருணைப் பார்த்துக் கொள்வதற்கும் கோமதி என்ற பெண்ணை முழு நேரம் வீட்டில் வேலைக்கு வைத்திருந்தார்கள்.

செல்வியும், குழந்தைகளும் வந்ததும், அண்ணனும் அண்ணியும் "எப்படி  இருக்கே?" என்று கேட்டதோடு சரி. "'உனக்கு எது வேணும்னாலும் கோமதி கிட்ட கேட்டுக்க!" என்று சொல்லி விட்டு, அண்ணி தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டாள்.

கோமதி அவர்களை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டாள்.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் அண்ணனும் அண்ணியும் தன்னிடமும் குழந்தைகளுடனும் பேசுவார்கள் என்று செல்வி நினைத்தாள்.

ஆனால் இருவருமே மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் செல்வியைப் பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டுத் தங்கள் அறைக்குள் போய் விட்டார்கள். சாப்பிட மட்டும் வெளியே வந்தனர். அப்போதும் செல்வியையும் குழந்தைகளையும் 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்கவில்லை. கோமதி அவர்களுக்குச் சாப்பாடு போட்டிருப்பாள் என்ற நம்பிக்கை போலும்!

இரவில் அவர்கள் படுக்கை அறையைக் கூட கோமதிதான் காட்டினாள். கட்டில், மெத்தை ஏ சி என்று படுக்கை அறை வசதியாகவே இருந்தது. ஏ சி ரிமோட்டை எப்படி இயக்க வேண்டும் என்பதை கோமதி அவளுக்குச் செய்து காட்டினாள்.

தூங்கப் போகுமுன் அவள் குழந்தைகள் இருவரும் "அம்மா! இங்க ரொம்ப போர் அடிக்குது. வருண் கூட எப்பவும் அவன் ரூம்லயே இருக்கான். எங்களோட விளையாடறதில்ல" என்றனர்.

மறுநாள் காலையிலேயே, தான் சுரேஷ் அண்ணன் வீட்டுக்குப் போவதாக செல்வி குமாரிடம் கூறினாள்.

"ஏன், குழந்தைகளுக்கு போர் அடிக்குதாமா?" என்றான் குமார். "சுரேஷ் வீட்டிலேயும் இப்படித்தான் இருக்கும்!"

"ரெண்டு மூணு நாள் இருப்பேன்னு பார்த்தேன்" என்றாள் அண்ணி.

ஆனால் அதற்கு மேல் இருவரும் எதுவும் சொல்லவில்லை.

செல்வி சுரேஷுக்கு ஃபோன் செய்தாள். அவன் மாலை அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரமே கிளம்பி வந்து அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னான்.

மாலையில் செல்வியும், குழந்தைகளும் சுரேஷுடன் அவன் வீட்டுக்குச் சென்றபோது சுரேஷின் மனைவி ப்ரியாவும், குழந்தை  தீப்தியும் வீட்டில் இருந்தனர்.

"என்ன அண்ணி, ஆஃபீஸ் போகலையா?" என்றாள் செல்வி.

"நீ வரப்ப வீட்ல இருக்கணும்னுதான் பர்மிஷன் போட்டுட்டு வந்துட்டேன்" என்றாள் ப்ரியா.

ரண்டு வாரங்கள் எப்படி ஓடின என்றே தெரியவில்லை. எல்லா நாளும் ஒரே சிரிப்பும் கலகலப்பும்தான். இந்த இரண்டு வாரத்தில் சுரேஷ், ப்ரியா இருவருமே நாலைந்து நாட்கள் பர்மிஷன் போட்டு விட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்தனர். தினமும் அலுவலகத்திலிருந்து ஒருமுறையாவது ஃபோன் செய்து ப்ரியா செல்வியிடம் பேசுவாள்.

வழக்கமாகப் பள்ளி விட்டு வந்ததும் மாலை ப்ரியா வீட்டுக்கு வரும்வரை பக்கத்து வீட்டில் இருந்து வந்த தீப்தி, இந்த இரண்டு வாரங்களும் செல்வி இருந்ததால் தன் வீட்டிலேயே இருந்தாள். அதில் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. "நீங்க இங்கியே இருந்துடுங்களேன் அத்தை. எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கும்" என்றாள்.

இடையில் வந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுரேஷும் ப்ரியாவும் அவர்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.

செல்வி ஊர் திரும்பும் நாள் வந்தது.

"குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை ரெண்டு மாசம் இருக்கு, அதில ஒரு மாசமாவது இங்கே தங்கும்படி நீ வந்திருக்கலாம்!" என்றாள் ப்ரியா. "இனிமே எல்லா லீவுக்கும் இங்க வரணும், என்ன?" என்றாள் குழந்தைகளிடம்.

"அடுத்த லீவுக்கு நீங்கதான் எங்க ஊருக்கு வரணும்!" என்றாள் செல்வி.

"கண்டிப்பா!" என்றாள் ப்ரியா.

"ப்ரியாவோட சொந்தக்காரங்க ரெண்டு மூணு பேர் அப்பப்ப இங்க வந்துட்டுப் போவாங்க. எனக்குச் சொந்தம்னு சொல்லிக்க நீயும் குமாரும்தான். உள்ளூர்லயே இருந்தாலும் குமாரும் நானும் பாத்துக்கிட்டு மாசக்கணக்கா ஆச்சு. நம்ப சொந்தக்காரங்க யாரும் வரதில்லைன்னு ப்ரியாவுக்கு ஒரு குறை. இப்ப அந்தக் குறை தீர்ந்திருக்கும்!" என்றான் சுரேஷ், ப்ரியாவைப் பார்த்தபடி.

"அடிக்கடி வந்துட்டுப் போனாதான் குறை இல்லாம இருக்கும்!" என்றாள் ப்ரியா.

"இங்க பாரு செல்வி. குமார் மாதிரி நாங்க அவ்வளவு வசதியானவங்க இல்ல. ஆனா யாராவது வந்து போய்க்கிட்டு இருந்தாத்தான் எங்களுக்கு சந்தோஷமா இருக்கும். அதிக நாள் தங்கினா எங்களுக்குக் கஷ்டமா இருக்கும்னு நீ யோசிக்க வேணாம். உங்க அண்ணி சொன்ன மாதிரி எல்லா லீவுக்கும் நீங்க எல்லாரும் இங்க வந்து நிறைய நாள் இருந்துட்டுப் போங்க. அடுத்த தடவை வரும்போது உன் வீட்டுக்காரரையும் கூட்டிக்கிட்டு வரணும்."

குமார் சொன்னதை ப்ரியா சிரித்துக் கொண்டே தலையாட்டி ஆமோதித்தபோது 'மகாலக்ஷ்மி மாதிரி இந்த அண்ணி இருக்கும்போது அண்ணனுக்கு என்ன குறை இருக்க முடியும்?' என்று நினைத்தாள் செல்வி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்:
தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியுடன் உபசரித்து வருபவன் வீட்டில் மனமகிழ்ச்சியுடன் திருமகள் குடியிருப்பாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Vacation Experience' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

































Saturday, August 5, 2017

83. தினமும் ஒரு விருந்தினர்

நான் ஒருமுறை ஈரோட்டுக்குச் சென்றபோது, என் நண்பனின் அலுவலகத்தில்தான் முத்துசாமியைச் சந்தித்தேன்.

என் நண்பன் ஒரு வங்கியில் மேலாளராக இருந்தான். வங்கியில் அவன் அறையில் அமர்ந்து அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவனைப் பார்க்க வந்த முத்துசாமியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அந்த வங்கியின் வாடிக்கையாளரான அவர் சிறிய அளவில் ஜவுளித் தொழில் செய்து வருவதாக அறிந்து கொண்டேன்.

நான் சென்னையில் பணி புரிவதையும், அலுவலக வேலையாக ஈரோட்டுக்கு வந்திருப்பதையும், அங்கே ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதையும் அவரிடம் சொன்னான் என் நண்பன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசியபின் முத்துசாமி என்னிடம் "சார், நீங்கள் இன்று மதியம் என் வீட்டுக்குச் சாப்பிட வாருங்களேன்" என்றார்.

சில நிமிடங்களுக்கு முன்பே அறிமுகமான என்னை அவர் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. அவர் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்குச் செல்லவும் தயக்கமாக இருந்தது.

"இல்லை சார். இன்னொரு சமயம் பார்க்கலாம்" என்றேன்.

"போயிட்டு வாடா. அவரைப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும்" என்றான் நண்பன்.

"சார், உங்க மனைவிதான் ஊர்ல இல்லியே, நீங்களும் வாங்க" என்று என் நண்பனையும் அழைத்தார் முத்துசாமி.

"இல்லை சார். எனக்கு ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. என் நண்பன் மிஸ்டர் தண்டச்சோறு வருவான்" என்று என்னை மாட்டி விட்டான் நண்பன்.

"இல்லை சார்" என்று நான் மறுக்க முயன்றேன்.

"டேய்! மிஸ்டர் முத்துசாமி பல வருஷங்களாக ஒரு பழக்கம் வச்சிருக்காரு. தினமும் யாராவது ஒத்தரை அழைத்துச் சாப்பாடு போடணும்கறதுதான் அது. என்னிக்காவது ஒருநாள் விருந்தினர் யாரும் கிடைக்காட்டா, தானும் சாப்பிடக் கூடாது என்பது அவரோட கொள்கை. ஆனா இதுவரை அப்படி நேரவில்லை. என்ன சார், சரிதானே?" என்றான் நண்பன்.

முத்துசாமி 'ஆமாம்' என்பது போல் தலையசைத்தார்.

"நல்ல கொள்கைதான். எத்தனையோ ஏழைகள் இருக்காங்க. அவங்க யாருக்காவது சாப்பாடு போடலாமே! என்னை மாதிரி ஆளுங்களுக்கு எதுக்குச் சாப்பாடு போடணும்?" என்றேன் நான்.

"சார்! நான் செய்யறது அன்னதானம் இல்லை. அதுக்கு எனக்கு வசதியும் இல்லை. நான் செய்யறதெல்லாம் நான் சாப்பிடற எளிய உணவை தினமும் யாராவது ஒத்தரோட பகிர்ந்துக்கறதுதான்."

"இருக்கட்டுமே சார்! யாருக்குத் தேவையோ அவங்களுக்குச் சாப்பாடு போடலாமே? அதை விட்டுட்டு..."

"டேய் முட்டாள்! அவர் செய்யறது  அன்னதானம் இல்லை, அதிதிக்கு உணவு படைக்கிறது" என்றான் நண்பன்.

"சார்! நான் அதிகம் படிச்சவன் இல்லை. நாம சாப்பிடற சாப்பாட்டை தினமும்  யாராவது ஒத்தரோட பகிர்ந்துக்கணும்னு ஒரு வழக்கம் வச்சுக்கிட்டிருக்கேன். நீங்க சொல்ற மாதிரி ஒரு ஏழைக்குச் சாப்பாடு போடறது நல்லதுதான். ஆனா எத்தனையோ ஏழைகள்ள தினமும் ஒத்தரை நான் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?

"ஏழைகளுக்குச் சாப்பாடு போடறதுன்னா நிறைய பேருக்குப் போடணும். ஒரு தனி மனுஷனால அதுவும் என்னை மாதிரி அதிக வசதி இல்லாதவனால இதைச் செய்ய முடியாது. ஒரு ஏழைக்கு நான் சாப்பாடு போட்டா அது நான் அவனுக்குச் செய்யற உதவி. ஆனா உங்களை மாதிரி ஒருத்தர் என் வீட்டுக்கு விருந்தாளியா வந்து சாப்பிட்டீங்கன்னா அது நீங்க எனக்குச் செய்யற உதவி" என்றார் முத்துசாமி.

"அது எப்படி?" என்றேன்.

"நீங்க ஒரு நல்ல ஓட்டல்ல போய் உங்களுக்கு விருப்பமானத்தைச் சாப்பிடலாம். ஆனா நீங்க அதை விட்டுட்டு என் வீட்டுக்கு வந்து நான் சாப்பிடற எளிய உணவைப் பகிர்ந்துக்கிட்டீங்கன்னா அது எனக்குச் செய்யற உதவிதானே!" என்றார்.

அதற்குப் பிறகு அவர் வீட்டுக்குச் சென்று உணவருந்தினேன். அவர் சொன்னபடி உணவு எளிமையாகத்தான் இருந்தது. தினமும் சாதாரணமாக அவர்கள் வீட்டுக்குச் சமைக்கும் உணவை யாராவது ஒருவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே அவர் கொள்கை?

"தினமும் யாராவது ஒருவரைத் தேடி அழைச்சிக்கிட்டு வரது உங்களுக்கு சிரமமாக இல்லையா?" என்றேன்.

"அது கஷ்டமான வேலைதான். ஆனால் இதுவரை தினமும் எனக்கு யாராவது கிடைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. இன்னிக்கு பாங்க்குக்குப் போனபோது அங்கே உங்களைச் சந்திப்பேன்னு எதிர்பார்த்திருப்பேனா?" என்றார் முத்துசாமி.

"எங்களுக்கெல்லாம் எப்பவாவது விருந்தாளிகள் வந்து ரெண்டு மூணு நாள் தங்கினாலே முழி பிதுங்கி விடுகிறதே, நீங்கள் எப்படி தினமும் ஒரு விருந்தாளியைச் சமாளிக்கிறீர்கள்?" என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. ஆனால் நான் அதைக் கேட்கவில்லை!

தற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் நண்பனைச் சென்னையில் சந்தித்தபோது முத்துசாமியைப் பற்றி விசாரித்தேன்.

"அவர் இன்னும் தன்னோட யாகத்தைத் தொடர்ந்து பண்ணிக்கிட்டிருக்காரா?" என்றேன், பாதி விளையாட்டாகவும், பாதி சீரியஸாகவும்.

"அவர் செய்யறதை யாகம்னுதான் சொல்லணும். போன வருஷம் ஒரு பொருளாதாரப் பிரச்னையால ஜவுளித் தொழில் செய்யறவங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுச்சு. உனக்குத் தெரிஞ்சிருக்குமே! முத்துசாமி மாதிரியான சிறிய வியாபாரிகளுக்கு பலமான அடி. நிறைய பேரு வியாபாரத்தையே நிறுத்திட்டு வேலை ஏதாவது கிடைக்குமான்னு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க."

"முத்துசாமி?"

"அவரு மாதிரி ஒண்ணு ரெண்டு பேருதான் இந்த அடியிலிருந்து மீண்டு எழுந்து வந்தாங்க. நடுவில சில காலம் ரொம்பக் கஷ்டப்பட்டாரு. அப்பவும் தினமும் யாருக்காவது சாப்பாடு போடணும்கிற தன்னோட கொள்கையை அவர் விடல."

"எப்படி சமாளிச்சாரு?"

"நான் கேட்டதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'சார் எங்க வீட்டில நாலு பேரு இருக்கோம். இந்தக் கஷ்டத்திலேயும் நாங்க நாலு பேரும் ஒரு நாள் கூட சாப்பிடாம இருந்தது இல்லை. நாலு பேருக்கு பதிலா அஞ்சு பேரு இருந்தாலும் அப்படியேதானே இருந்திருப்போம்? அஞ்சாவது நபரா விருந்தாளி இருக்காரு, அவ்வளவுதானே?' அப்படின்னாரு. அதிர்ஷ்டவசமா நிலைமை முன்னேறி இப்ப மறுபடி கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வந்துக்கிட்டிருக்காரு."

"இன்னொருத்தருக்குச் சாப்பாடு போட்டுட்டுத்தான் தான் சாப்பிடணும்கிற உறுதி இருக்கிறவரைக்கும் எந்தப் பிரச்னையும் அவரை பாதிக்காதுன்னு நினைக்கிறேன்."

ஒரு நல்லெண்ணத்தில் நான் இப்படிச் சொன்னாலும் அப்படித்தான் நடக்கும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாக நிலைபெற்றிருந்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று.

பொருள்:
விருந்தினரை நாள்தோறும் உபசரித்து வருபவன் வாழ்க்கையில் துன்பம் வந்து அதனால் அவன் வாழ்வு சிதைந்து விடும் நிலை ஏற்படாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'A Guest A Day' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Friday, August 4, 2017

82. பால் பாயசம்

"ஏங்க, ஒரு நிமிஷம் உள்ள வந்துட்டுப் போறீங்களா?"

முன்னறையில் அமர்ந்து நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த சிவராமன் உள்ளிருந்து மனைவி அழைத்ததும், "ஒரு நிமிஷம்" என்று நண்பரிடம் சொல்லி விட்டு, "என்ன?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே போனான்.

மனைவி வாயில் ஆள்காட்டி விரலை வைத்து, 'பேச வேண்டாம்' என்று சமிக்ஞை செய்தபடியே, சமையல் மேடை மீது வைக்கப்பட்டிருந்த காப்பி தம்ளரைச் சுட்டிக் காட்டினாள்.

தான் காப்பியை உறிஞ்சும் சத்தம் கூட முன்னறையில் அமர்ந்திருக்கும் நண்பருக்குக் கேட்டு விடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் காப்பியை அருந்தி விட்டு வாயைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து நண்பருடன் பேச்சைத் தொடர்ந்தான் சிவராமன்.

நண்பர் போனதும், "இனிமேல் காப்பி குடிக்கற நேரத்தில யாராவது வந்தா அவங்களை அனுப்பற வழியைப் பாருங்க. உங்களைத் தனியா உள்ளே கூப்பிட்டு, உங்களுக்கு மட்டும் காப்பி கொடுக்கறது எனக்குக் கஷ்டமா இருக்கு!" என்றாள் மனைவி.

"அவருக்கும் கொஞ்சம் காப்பி கொடுத்திருக்கலாமே?" என்றான் சிவராமன்.

"காலையில போடற டிகாக்‌ஷன்ல இருக்கிற மிச்சம் சாயந்திரம் நம்ப ரெண்டு பேருக்கும் காப்பி போடறதுக்கே போறும் போறாததா இருக்கு. இதில வீட்டுக்கு வரவங்களுக்கெல்லாம் வேற எப்படி காப்பி கொடுக்க முடியும்?" என்றாள் மனைவி.

ன்னொரு நாள், சிவராமன் அவனுடைய இன்னொரு நண்பர் நடராஜன் வீட்டுக்குப் போயிருந்தான். சிவராமனிடம் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று குரலை உயர்த்தி, "தங்கம்! சிவராமனுக்குக் கொஞ்சம் பால் பாயசம் கொண்டு வாயேன்!" என்றார்.

"வேண்டாம் நடராஜன்!" என்று மறுத்த சிவராமன், "இன்னிக்கு என்ன விசேஷம்?" என்றான்.

"தங்கம் அடிக்கடி ஏதாவது பூஜை பண்ணுவா! பூஜைன்னா பிரசாதம் இல்லாமயா? பாயசம், சுண்டல், சக்கரைப் பொங்கல்னு ஏதாவது பண்ணுவா. குறிப்பா அவ பண்ற பால் பாயசம் ரொம்ப அற்புதமா இருக்கும். சாப்பிட்டுப் பாத்தப்பறம் நீங்களே சொல்லுவீங்க!" என்றார்.

அவர் மனைவி ஒரு தம்ளரில் பால் பாயசம் கொண்டு வைத்தாள். சிவராமன் சங்கடத்துடன், "உங்களுக்கு ஏன் சிரமம்?" என்றான்.

"சும்மா சாப்பிடுங்க. உங்க நண்பர் சொன்ன மாதிரி நல்லா இருக்கா, இல்லை, அவர் சும்மா என்னைப் புகழறரான்னு சொல்லுங்க."

சிவராமன் பாயசத்தை அருந்தினான். உண்மையாகவே அற்புதமாகத்தான் இருந்தது.

"ரொம்ப அற்புதம். நடராஜன் கொஞ்சம் குறைச்சுத்தான் சொல்லியிருக்காரு!" என்றான்.

சற்று நேரம் கழித்து சிவராமன் விடைபெற்றான். தெருவில் இறங்கிச் சில அடிகள் நடந்ததும்தான் கையில் வைத்திருந்த சாவிக்கொத்தை நடராஜன் வீட்டிலேயே விட்டு விட்டு வந்ததை உணர்ந்தான். கையிலேயே வைத்திருந்த சாவிக்கொத்தைப் பாயசம் அருந்தும்போது கீழே வைத்தவன் மறுபடியும் அதை எடுத்துக்கொள்ள மறந்து விட்டான்.

வாசற்கதவு திறந்துதான் இருந்தது. ஆனால் முன்னறையில் யாரும் இல்லை. அழைப்பு மணியை அழுத்தலாமா என்று யோசித்தபோது உள்ளிருந்து பேச்சுக்குரல் கேட்டது. நடராஜன் குரலும் அவர் மனைவியின் குரலும்தான்.

"பால் பாயசம் கொஞ்சம்தான் இருந்ததோ? நான் முன்னாடியே சாப்பிட்டுட்டேன். உனக்குக் கொஞ்சம்தான் மீதி இருந்திருக்கும். யோசிக்காமல் அதை சிவராமனுக்குக் கொடுக்கச் சொல்லிட்டேனோ?" என்றார் நடராஜன்

"அப்படி இல்லை. நீங்க அவருக்குக் கொடுக்கச் சொன்னது சரிதான். நீங்க சொல்லாட்டாலும் நானே கொடுத்திருப்பேன். இருந்த பாயசத்தை அவருக்குக்  கொஞ்சம் கொடுத்துட்டு, மீதியை நான் சாப்பிட்டேன். வீட்டுக்கு வந்தவங்களுக்குக் கொடுத்துட்டுச் சாப்பிட்டா, அது ஒரு தனித் திருப்திதான்!" என்றாள் தங்கம்.

தன் மனைவி இந்த உரையாடலைக் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான் சிவராமன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
            அதிகாரம் 9             
  விருந்தோம்பல்  
குறள் 82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

பொருள்:
இறப்பற்ற நிலையைக் கொடுக்கக் கூடிய அமிர்தமாகவே இருந்தாலும், விருந்தினரை வெளியே அமர வைத்து விட்டுத் தான் மட்டும் அதை அருந்துவது விரும்பத்தகாத செயல்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Milk Pudding' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
























Thursday, August 3, 2017

81. எதிர்பாராத விருந்தாளி

காட்டில் தாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு வந்த முனிவர்களை உபசரித்து, உணவளித்து, அவர்கள் விடைபெற்றுச் சென்றதும், பாண்டவர்கள் உணவருந்த அமர்ந்தனர்.

"திரௌபதி! இன்று என்ன சமையல்?" என்றான் பீமன், சிரித்துக் கொண்டே.

"அட்சயபாத்திரம் நமக்கு இன்று என்ன வழங்குகிறதோ அதைத்தானே நாம் உண்ண முடியும்?" என்றான் யுதிஷ்டிரன்.

அட்சய பாத்திரத்திலிருந்து திரௌபதி அனைவருக்கும் உணவு பரிமாறினாள்.

"சூரிய பகவான் நமக்கு இந்த அட்சய பாத்திரத்தை வழங்காமல் இருந்திருந்தால் நம்மால் இந்த வனவாசத்தைச் சமாளித்திருக்க முடியுமா?" என்றான் நகுலன்.

"நாம் வனவாசத்தைச் சமாளிப்பதில் ஒரு சிரமும் இருந்திருக்காது. ஆனால் நாளும் நம்மைக் காண முனிவர்களும் மற்றவர்களும் வருகிறார்களே, அவர்களுக்கு நம்மால் விருந்தளிக்க முடியாமல் போயிருக்கும்" என்றான் அர்ஜுனன்.

"அள்ள அள்ளக் குறையாத இந்த அட்சய பாத்திரத்தை யுதிஷ்டிரரின் வேண்டுகோளை ஏற்று சூரியன் நமக்கு வழங்கியிருக்கிருக்கிறார். இதற்காக சூரியனிடம் பிரார்த்தனை செய்யும்படி நமக்கு யோசனை சொன்ன தௌம்யருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்" என்றாள் திரௌபதி.

"ஆனால் அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்து விட்டால் அதற்குப் பிறகு அடுத்த நாள்தான் அதிலிருந்து உணவு வரும் என்பதுதான் சிக்கல். இதனால்தானே நாம் எல்லோரும் சாப்பிட்ட பிறகு திரௌபதி பாத்திரத்தைக் கழுவி வைத்த பின் தன் சீடர்களுடன் வந்த துர்வாசருக்கு உணவளிக்க முடியாமல் அவருடைய சாபத்துக்கு ஆளாக இருந்தோம்!" என்றான் பீமன்.

"கண்ணனின் கருணையினால் அன்று நாம் தப்பித்தோம்" என்றான் அர்ஜுனன்.

"சகதேவா, நீ ஏன் எதுவுமே சொல்லவில்லை?" என்றான் யுதிஷ்டிரன்.

"அண்ணா! நாம் கானகத்தில் இருந்தாலும் நாம் 'கிருஹஸ்தாஸ்ரமம்' என்று சொல்லப்படும் இல்லற தர்மத்தைத்தானே கடைப்பிடிக்கிறோம்?" என்றான் சகதேவன்.

"ஆமாம்" என்றான் யுதிஷ்டிரன்.

"இல்லறத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கடமை என்ன?"

"விருந்தினர்களை உபசரிப்பது" என்றான் யுதிஷ்டிரன்.

"அதை நாம் செய்து கொண்டிருக்கிறோமா?"

"இதென்ன கேள்வி சகதேவா? நாள்தோறும் பல முனிவர்களும் இந்தக் காட்டில் வசிக்கும் மக்களும் நம்மைப் பார்க்க வருவதையும், நாம் அவர்களுக்கு விருந்தளிப்பதையும் நீ பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்?" என்றான் அர்ஜுனன், சற்றே கோபத்துடன்.

"பொறு அர்ஜுனா? சகதேவன் என்ன சொல்ல வருகிறான் என்பது எனக்குப் புரிகிறது. அதை அவன் வாயாலேயே சொல்லட்டும்!" என்றான் யுதிஷ்டிரன்.

"உங்கள் மனதில் இருப்பதை என் வாயிலிருந்து வரவழைக்க விரும்புகிறீர்கள்! சொல்கிறேன். நாம் விருந்தினரை உபசரிப்பது உண்மைதான். ஆனால் அட்சய பாத்திரத்தை வைத்துக் கொண்டுதான் அனைவருக்கும் உணவளிக்கிறோம்? இதில் நமது முயற்சி, நமது பங்கு என்ன இருக்கிறது?"

"அட்சய பாத்திரத்தைத் தூக்கிப் போட்டு விட வேண்டும் என்கிறாயா?" என்றான் பீமன்.

ஆனால் யுதிஷ்டிரன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.

"எல்லோரும் சீக்கிரம் சாப்பிட்டு முடியுங்கள். நானும் சாப்பிட்டு விட்டுப் பாத்திரத்தைக் கழுவி வைக்க வேண்டும்" என்றாள் திரௌபதி.

"பாத்திரத்தைக் கழுவி வைத்த பிறகு அன்று துர்வாசர் வந்தது போல், இன்று வேறொருவர் வந்தால் நாம் என்ன செய்யப் போகிறோம்?" என்றான் சகதேவன்.

"அப்படி ஒருவர் வந்து, அட்சய பாத்திரத்தின் உதவி இல்லாமலே நாம் அவருக்கு உணவு படைத்தால் அதுதான் உண்மையான விருந்தோம்பல் என்று தம்பி சகாதேவன் சொல்ல வருகிறான்" என்றான் யுதிஷ்டிரன், புன்னகையுடன்.

மற்ற மூன்று சகோதரர்களும் வியப்புடன் சகதேவனைப் பார்த்தனர்.

கதேவன் சுட்டிக் காட்டிய நிலை ஒருநாள் வந்தது. விருந்தினர்களுக்கு உணவளித்துப் பாண்டவர்கள் உண்ட பின் தானும் உண்டு விட்டு திரௌபதி பாத்திரத்தைக் கழுவி வைத்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களைத் தேடி ஒரு முனிவர் வந்தார்.

"நீண்ட தொலைவிலிருந்து வருகிறேன்" என்று அவர் கூறியதிலிருந்தும்  அவருடைய வாடிய முகத்திலிருந்தும், அவருடைய உடல் சோர்விலிருந்தும் அவர் உணவருந்தி வெகு நேரம் (அல்லது பல நாட்கள் கூட) ஆகியிருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

"இப்போது என்ன செய்யப் போகிறோம்? கிருஷ்ணன் தானே வருவானா அல்லது அர்ஜுனனோ, திரௌபதியோ அவனை தியானம் செய்து வரவழைக்கப் போகிறார்களா?" என்றான் பீமன், விளையாட்டாக.

"அன்று துர்வாசர் வந்தபோது அட்சய பாத்திரத்தின் அடியில் ஒரு கீரைத்துண்டு ஒட்டிக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் அதை உண்டதும் துர்வாசருக்கும் அவர் சீடர்களுக்கும் வயிறு நிரம்பி விட்டது. அதற்குப் பிறகு பாத்திரத்தை மிகவும் கவனமாகக் கழுவுகிறேன். அதனால் இப்போது கிருஷ்ணன் வந்தால் கூடப் பாத்திரத்திலிருந்து எடுத்து உண்ண ஒரு துகள் கூட இருக்காது!" என்றாள் திரௌபதி.

"ஒவ்வொரு முறையும் கிருஷ்ணன் வந்து உதவுவான் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. இந்த முறை அண்ணன் பீமனே நமக்கு உதவலாம்" என்றான் சகதேவன்.

"ஆமாம். பீமா! உன்னால்தான் விரைந்து செயல்பட முடியும். இந்தக் காட்டில் விரைந்து தேடி முனிவர் உண்ணச் சில பழங்களையும் காய்களையும் பறித்து வா. நாங்கள் முனிவரை உபசரித்து, அவரது கால்களைக் கழுவி, அவரை வணங்கி நலம் விசாரிப்பதற்குள் நீ திரும்பி வர வேண்டும்" என்றான் யுதிஷ்டிரன்.

"விருந்தினருக்குக் காய்கனிகளை மட்டும் உணவாக அளிப்பது பொருத்தமாக இருக்குமா? அவற்றை அவரே மரங்களிலிருந்து பறித்துக் கொண்டிருப்பாரே!" என்றான் அர்ஜுனன்.

"நம் வீட்டுக்கு வரும் விருந்தினர் எவரும் தன்னால் உணவைத் தேடிக் கொள்ள முடியவில்லை என்பதற்காக வரவில்லை. நம்மிடம் உள்ள அன்பு காரணமாக வருகிறார்கள். நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொடுத்து உபசரிப்பதுதான் விருந்தோம்பல். ஒரு ஏழையின் வீட்டுக்கு ஒரு செல்வந்தன்  வந்தால் அந்த ஏழை தன் வீட்டில் என்ன உணவு இருக்கிறதோ அதைத்தானே அந்த செல்வந்தனுக்குக் கொடுக்க முடியும்?

"ராமபிரான் சபரியின் குடிலுக்கு வந்தபோது, சபரி அவருக்குப் பழங்களையும், புலாலையும்தான் கொடுத்தாள். அதுவும் அவை நன்றாக இருக்கின்றனவா என்று சுவைத்துப் பார்த்து விட்டுக் கொடுத்தாள். அந்த எச்சில் பட்ட உணவை ராமபிரான் மனமுவந்து ஏற்கவில்லையா?" என்றான் யுதிஷ்டிரன்.

"ஆனால் முனிவர் நாம் கொடுக்கும் பழங்களினால் திருப்தி அடையாமல் நம்மைக் கோபித்துக் கொண்டால்?" என்றாள் திரௌபதி.

"நல்லவேளை இந்த முனிவர் துர்வாசர் இல்லை!" என்றான் சகதேவன் சிரித்தபடி.

பீமன் கொண்டு வந்த காய்கனிகளை நறுக்கி இலையில் வைத்து முனிவருக்குப் பரிமாறினார்கள். முனிவர் எதுவுமே சொல்லாமல் அவற்றை உண்டார்.

உண்டு முடித்ததும் அவர்களிடம் விடைபெற்றார்.

யுதிஷ்டிரன் பணிவுடன் "முனிவர்பிரானே! இந்த நேரத்தில் எங்களால் உங்களுக்குச் சமைத்த உணவை அளிக்க முடியவில்லை, அதனால்தான் காய்கனிகளைப் பரிமாறினோம்.எங்களை மன்னிக்க வேண்டும்" என்றான்.

"யுதிஷ்டிரா! நான் இப்போது சமைத்த உணவை உண்பதில்லை என்ற ஒரு விரதத்தை மேற்கொண்டிருக்கிறேன். பச்சைக் காய்களையும், பழங்களையும்தான் உண்கிறேன். எங்கே நீங்கள் சமைத்த உணவைப்  படைத்து விடுவீர்களா என்று பயந்தேன்.

"ஒரு விருந்தினர் தனக்கு இந்த உணவைத்தான் அளிக்க வேண்டும் என்று விருந்தளிப்பவரிடம் கேட்கக் கூடாது. அதனால்தான் எனக்குக் காய்கனிகளையே கொடுங்கள் என்று நான் முன்பே உங்களிடம் சொல்லவில்லை.

"ஒருவேளை நீங்கள் எனக்குச் சமைத்த உணவை அளித்திருந்தால் அதன் மீது நீர் தெளித்து ஏற்றுக் கொண்டு விட்டு அதை வெளியே உள்ள மிருகங்களுக்கோ பறவைகளுக்கோ அளித்திருப்பேன். என் பசி அடங்காவிட்டாலும் எனக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும் என்றாலும் உங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும்.

"இறைவன் அருளால், நான் உண்ணக் கூடிய உணவையே எனக்கு அளித்து என் மனத்தையும் வயிற்றையும் ஒருங்கே நிறையச் செய்ததுடன் உங்களுக்கும் மனத்திருப்தி ஏற்படும் வகையில் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லா நலன்களும் விளையட்டும்!" என்று வாழ்த்தி விடைபெற்றார் முனிவர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
           அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்:
மனைவியுடன் கூடி இல்லறம்  நடத்துவதன் நோக்கம் விருந்தினர்களைப் போற்றி அவர்களுக்கு நன்மை செய்வதே ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

Read 'The Unexpected Guest' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















Wednesday, August 2, 2017

80. ஆனந்தின் சந்தேகம்!

ஆனந்த் மானேஜருக்கு ஃபோன் செய்தான்.

"சார் வேலையெல்லாம் முடிஞ்சு போச்சு!"

"வேலையெல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நீயே எப்படித் தீர்மானிக்க முடியும்?"

"சார்! நீங்க சொன்ன வேலையெல்லாம் முடிச்சுட்டேன்னு சொல்ல வந்தேன்."

"அப்படிச் சொல்லு. நீ இனிமே ஆஃபீசுக்கு வந்தா லேட்டாயிடும். அங்கேயே இன்னொரு வேலை இருக்கு..."

"சார். மணி ஆறு ஆயிடுச்சு."

"மணி ஆறுதானே ஆகுது? நீ தினமும் ஆஃபீசிலேருந்து ஏழரை மணிக்கு மேலதானே வீட்டுக்குக் கிளம்புவே? அங்க ஒரு கலெக்‌ஷன்  இருக்கு. ஆறுமுகசாமி இன்னிக்கு செக் தரேன்னு சொல்லியிருக்காரு. அதை வாங்கிக்கிட்டு அப்பிடியே வீட்டுக்குப் போயிடு."

"சார் அது இங்கேயிருந்து ரொம்ப தூரம் சார்!"

"நடந்தா போகப் போற? பஸ்ஸிலதானே போகப் போற?"

"அதில்ல சார். எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லே. டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போகணும். அதனால இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்னு  காலையிலேயே உங்ககிட்ட சொல்லியிருந்தேன்!"

"ஆமாம். வேலையை முடிச்சுட்டுப் போன்னு சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்!"

"சார்! டாக்டர் எட்டு மணி வரையிலும்தான் சார் இருப்பாரு. நான் இப்பவே கிளம்பினாத்தான் எங்கம்மாவை அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்ட முடியும்."

"உங்கம்மாவுக்கு என்ன ஜுரம்தானே? இதெல்லாம் ஒரு உடம்பா?"

"சார்! அவங்க வயசானவங்க. மூணு நாளா ஜுரம் குறையவே இல்லை."

"ஏம்ப்பா? உங்கம்மா ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லையே? ஒரு ஆட்டோவைப் புடிச்சுக்கிட்டு அவங்களால போயிட்டு வர முடியாது? வேணும்னா அக்கம்பக்கத்தில் யாரையாவது துணைக்குக் கூப்பிட்டா, வந்துட்டுப் போறாங்க!"

"சரி சார்."

அம்மாவுக்கு ஃபோன் செய்து பக்கத்து வீட்டு அம்மாளை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் போகும்படி சொன்னான் ஆனந்த். 

'நல்லவேளை! மொபைல் ஃபோன் என்ற ஒன்று இருக்கிறது. அது இல்லாவிட்டால் இந்த மானேஜர் போன்ற அரக்க ஜென்மங்களின் இரக்கமற்ற செயல்களைச் சமாளிப்பது இயலாத காரியமாக இருந்திருக்கும்!'

வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது மணி ஒன்பது ஆகி விட்டது. அம்மா இன்னும் வரவில்லை. டாக்டரின் நேரம் எட்டு வரைதான் என்றாலும் எட்டு மணி வரை வரும் நோயாளிகளுக்கு டோக்கன் கொடுத்து பத்து மணிக்கு மேல் ஆனாலும் எல்லோரையும் பார்த்து விட்டுத்தான் போவார். அவர் பணத்துக்காக இதைச் செய்கிறார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் வாங்குவது மிகக் குறைந்த கட்டணம்தான்.

அவன் மானேஜரைப் போன்றவர்கள் இருக்கும் உலகத்தில்தான் இந்த டாக்டர் போன்றவர்களும் இருக்கிறார்கள்!

பக்கத்து வீட்டில் சாவி வாங்கப் போனபோது பக்கத்து வீட்டுக்காரர் தொலைக்காட்சியில் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

"சார்! உங்களுக்கும் ஆன்ட்டிக்கும் என்னால் நிறையத் தொந்தரவு" என்றான் ஆனந்த் வருத்தத்துடன்.

"என்னப்பா இது? இது மாதிரி சின்ன உதவி கூடச் செய்யலேன்னா எப்படி? கவலைப்படாதே. நம்ம டாக்டர் மருந்து கொடுத்தா உங்கம்மாவுக்கு ஜுரம் சட்டுனு குறைஞ்சுடும்."

தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர் 'ஆத்மா' என்று அடிக்கடி சொல்வதை ஆனந்த் கவனித்தான்.

"ஏன் சார் ஆத்மான்னு ஒண்ணு இருக்கா?"

"அதில என்ன சந்தேகம்? நம்ம உடம்புக்குள்ள அடுக்கடுக்காய்ப் பல விஷயங்கள் இருக்கு. தோல், அப்புறம் சதை, அப்புறம் எலும்புகள், நரம்புகள், ரத்தக்குழாய்கள்னு. அதுபோல இதயம் நுரையீரல்னு பல உறுப்புகள். எல்லாத்துக்கும் உள்ளே ஆத்மான்னு ஒரு சக்தி இருக்கு."

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம் சார். எனக்கென்ன தெரியும்? ஆனா சில பேருக்கு தோல், எலும்பு இதையெல்லாம் தாண்டி இதயம்னு ஒண்ணு  இருக்கான்னே சந்தேகமா இருக்கு!"

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் அவர் அவனைப் பார்த்தார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
            அதிகாரம் 8             
அன்புடைமை 
குறள் 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள்:
அன்புவழி நடப்பதே உயிர் உள்ள உடலின் இயல்பு. அன்பு இல்லாதவரின் உடல் எலும்பாலும் தோலாலும் போர்த்தப்பட்ட (உயிரற்ற) வெற்றுடம்புதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Anand's Doubt'
 the English version of this story.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Tuesday, August 1, 2017

79. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்?

ரகுவுக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்வதற்குள் அவன் அம்மா சரளாவுக்குப் போதும் போதும் என்று ஆகி விட்டது.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறை சொன்னான் - மூக்கு நீளம், குட்டை, பருமன், பல் பெரிதாக இருக்கிறது, வாய் கோணலாக இருக்கிறது என்று.

"ஏண்டா எத்தனையோ பேர் உடம்பில ஊனம் இருக்கிற பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கறாங்க. நீ இப்படி மாட்டைப் பல்லை புடிச்சுப் பாக்கற மாதிரி பெண்களைப் பாக்கறியே!" என்று அலுத்துக் கொண்டாள் சரளா.

"நான் என்ன சாமுத்திரிகா லட்சணமா பாக்கறேன்? உடல் உறுப்புகள் எல்லாம் ஒழுங்கா இருக்கணும்னு பாக்கறேன். அது தப்பா?" என்றான் ரகு.

ஒரு வழியாக அவனுக்கு வனிதாவைப் பிடித்து விட்டது. ரகுவால் அவள் தோற்றத்தில் எந்தக் குறையையும் காண முடியவில்லை.

திருமணம் ஆகிச் சில நாட்கள் கழித்து ரகு தனியே இருக்கையில் அவன் அம்மா சரளா அவனிடம் வந்தாள். 

"ரகு, வனிதா தனக்கு வேணும்கறதைத்தான் பாத்துக்கறா. எங்களைப் பத்திக் கவலைப்படறதே இல்லை" என்று ஆரம்பித்தாள்.

"சும்மா ஏதாவது குறை சொல்லாதே!" என்றான் ரகு.

"சும்மா சொல்லலைடா. எங்களுக்கு அவ சாப்பாடு கூடப் போடறதில்லை. சாப்பிட்டீங்களான்னு கேக்கறதும் இல்லை. அவ சாப்பிட்டுட்டுப் போனப்பறம் மீதி என்ன இருக்கோ அதைத்தான் நாங்க சாப்பிட வேண்டி இருக்கு. சிலநாள் சாம்பார் இருக்காது, சில நாள் ரசம் இருக்காது, சிலநாள் காய்கறி இருக்காது. சிலநாள் சாதம் கூடக் கொஞ்சம்தான் மீதியிருக்கும்..."

சரளாவுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. 

"ராஜா மாதிரி இருந்தவரு  உங்கப்பா. இப்ப அவரு ஒரு பிச்சைக்காரர் மாதிரி மிச்சம் மீதியைச் சாப்பிட்டுட்டுப் போறாரு. ஏன், எல்லோரும் தாராளமா சாப்பிடற மாதிரி கொஞ்சம் அதிகமா செய்யக் கூடாதா? நமக்கு என்ன வசதியா இல்லை?"

"இதை நீ அவகிட்டயே கேட்டிருக்கலாமே!"

"கேட்டேன். வயசானவங்க கொஞ்சமாத்தான் சாப்பிடணுமாம். அதுதான் அவங்க உடம்புக்கு நல்லதாம். அதோட சாப்பாட்டுக்கு அதிகம் பணம் செலவு பண்ணக் கூடாதுன்னு எங்களுக்கு உபதேசம் பண்றா!"

"சரி. நான் அவகிட்ட பேசறேன்" என்றான் ரகு.

அவனுக்கே இதுபோன்ற பிரச்னைகள் இருந்தன. வீட்டில் அவனுக்கும் சரியாகச் சாப்பாடு கிடைப்பதில்லை. கேட்டால், "நாக்கைக் கொஞ்சம் அடக்கிக்கங்க," "உங்களுக்குத் தொந்தி போடக்கூடாதுன்னுதான் இப்படிப் பண்றேன்!" என்பது போன்ற அலட்சியமான பதில்கள் வரும்.

இருப்பினும் அம்மாவின் வேதனையைப் பொறுக்காமல், வனிதாவிடம் பேசினான். "வயசான காலத்தில் அப்பா அம்மாவுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போடக் கூடாதா?" என்றான்.

"இப்ப என்ன அவங்க பட்டினியா கெடக்கறாங்க? உங்க குடும்பத்தில எல்லோருக்குமே நாக்கு நீளம், வயிறு பெரிசு. நான் செஞ்சு வைக்கறது பத்தலைன்னா உங்கம்மாவைத் தனியா ஏதாவது பண்ணிக்கச் சொல்லுங்க. அவங்க உடம்பு தெம்பாத்தானே இருக்காங்க?" என்றாள்.

ரகுவுக்கு ஏன் அவளிடம் கேட்டோம் என்று ஆகி விட்டது.

சில சமயம் அவள் தனக்கு மட்டும் ஏதாவது தனியாகச் சமைத்துத் தான் மட்டும் சாப்பிடுவதையும் அவன் கவனித்திருக்கிறான். ஏன் இப்படிச் செய்கிறாள்? சுயநலமாக இருந்து விட்டுப் போகட்டும். இப்படியா வீட்டில் இருப்பவர்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருப்பாள்?

சில மாதங்களில் அவன் பெற்றோர்கள் தங்கள் கிராமத்து வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதனிடமாவது பாசமாக இருப்பாளா என்ற பயம் ரகுவுக்கு வந்து விட்டது.

ருநாள் "என்னங்க, நாள் தள்ளிப் போயிருக்கு. நான் டாக்டர்கிட்ட போயிட்டு வரேன்" என்றாள் வனிதா.

ரகுவுக்கு மகிழ்ச்சியில் புல்லரித்தது. "இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சாதாரணமா சொல்றயே! நானும் வரேன் டாக்டர்கிட்ட" என்றான்.

"நீங்க ஆஃபீசுக்குப் போங்க. நான் மட்டும் டாக்டர்கிட்ட போயிட்டு வரேன்" என்றாள் அவள்.

"டாக்டரைப் பாத்துட்டு ஃபோன் பண்ணு!" என்றான் அவன்.

ஆனால் அவன் அலுவலகத்திலிருந்து திரும்பும் வரை அவளிடமிருந்து ஃபோன் வரவில்லை.

மாலை அவன் வீட்டுக்குப் போனபோது வனிதா கட்டிலில் சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? டாக்டர் என்ன சொன்னார்?" என்றான் ரகு.

"கலைச்சுட்டேன்!" என்றாள் அவள்.

"என்னது!" என்றான் ரகு அதிர்ச்சியுடன். "ஏன்?"

"எனக்குப் பிடிக்கல" என்றாள் அவள் சுருக்கமாக.

"உனக்குப் பிடிக்கலேன்னா? எங்கிட்ட கேக்க வேண்டாமா?"

"குழந்தை பெத்துக்கப் போறது நானா, நீங்களா?"

"எவ்வளவோ பேரு குழந்தை பொறக்காதான்னு ஏங்கறாங்க. நீ இப்படிச் செஞ்சுட்டியே!"

"எனக்கு குழந்தைகளைப் பெத்துக்கிட்டு அதுங்களோட போராடறதெல்லாம் ஒத்து வராது. சுதந்திரமா ஹாயா இருக்கணும்."

"அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட?"

"ம்? சுதந்திரமா ஹாயா இருக்கணும்னுதான்! நாம ஒரு குழந்தையைப் பெத்துக் கொடுக்காததால நாட்டுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை" என்றாள் வனிதா அலட்சியமாக.

ரகு பரிதாபத்துடன் அவளைப் பார்த்தான். அவள் தோற்றம் அவன் கன்னத்தில் அறைவது போல் இருந்தது. நீண்ட அழகான கண்கள், செதுக்கி வைத்ததைப்  போன்ற மூக்கு, அழகான பல்வரிசை, ஒல்லியான உடல்வாகு, இன்னும்...

'இந்த அழகைத்தானே தேடிப் போனோம்?' என்று நினைத்தான் ரகு.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

பொருள்:
மனதில் அன்பு என்ற உறுப்பு இல்லாதவருக்கு மற்ற உறுப்புகள் எல்லாம் இருந்து என்ன பயன்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'In Search of Beauty' the English version of this story.  
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Monday, July 31, 2017

78. சேதுவின் கோபம்

சேது ஒரு தனிமரம் - பெண்டாட்டி, பிள்ளைகள் எல்லோரும் இருந்தும்! பணம், வசதிகள், உறவுகள் எல்லாம் இருந்தும்!

வனஜா அவனைக் கல்யாணம் செய்து கொண்டபோது, தான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் என்று நினைத்தாள். வசதியான இடம், பெற்றோருக்கு ஒரே பிள்ளை. வேறு என்ன வேண்டும் என்று நினைத்தாள்.

திருமணம் ஆகிப் புகுந்த வீட்டுக்கு வந்ததுமே மாமியார் அவளிடம் தனியே கிசுகிசுத்தாள். "இங்க பாரும்மா. சேது கொஞ்சம் கோவக்காரன். நீதான் அனுசரிச்சு நடந்துக்கணும்."

இது பொதுவாகச் சொல்லப்படுவது என்றுதான் வனஜா முதலில் நினைத்தாள். அப்படியே கோபக்காரராக இருந்தால்தான் என்ன? தன்னால் சமாளிக்க முடியாதா?

முடியவில்லை.

மாமியார் சொன்னபடி 'கொஞ்சம்' கோபக்காரனாக இருந்திருந்தால் சமாளித்திருப்பாள். நிறையக் கோபம் இருந்திருந்தாலும் கஷ்டப்பட்டாவது சமாளித்திருப்பாள். கோபத்தைத் தவிர வேறு உணர்ச்சிகளே இல்லாதவனை எப்படிச் சமாளிப்பாள்?

"என்ன அத்தை, இவரு இப்படி இருக்காரு? எதுக்குக் கோவப்படறாருன்னு தெரியாம எல்லாத்துக்கும் கோவப்பட்டா நான் என்னதான் செய்யறது?"

"என்கிட்டயும் இப்படித்தான் எரிஞ்சு விழுவான். என்ன எதிர்பாக்கறான்னே புரியாது. முன்னெல்லாம் அவன் அப்பாகிட்ட கொஞ்சம் பயப்படுவான். இப்ப அவரையும் தூக்கி எறிஞ்சு பேச ஆரம்பிச்சுட்டான். அவரு அவன்கிட்ட பேசறதையே விட்டுட்டாரு."

'இப்படிப்பட்ட மனிதனுக்கு ஏன் கல்யாணம் செய்து வைத்தீர்கள்?' என்று கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டாள் வனஜா.

வாழ்க்கை எப்படியோ ஓடி மூன்று குழந்தைகள் பிறந்து விட்டனர். இரண்டு பையன்கள், கடைசியாக ஒரு பெண்.

குழந்தைகள் பிறந்த பின்பாவது சேது மாறுவான் என்று நினைத்தாள் வனஜா. ஆனால் குழந்தைகளிடமும் அதே சிடுசிடுப்புத்தான். குழந்தைகளாக இருந்தபோதே அவர்களைத் தூக்கிக் கொஞ்சி விளையாடியதில்லை சேது. அவர்கள் ஏதோ பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்பது போல் கண்டும் காணாமல் இருப்பான்.

குழந்தைகள் வளர்ந்ததும் தந்தையின் கோபத்தை உணர்ந்து அவன் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு மனிதன் என்று விரைவிலேயே புரிந்து கொண்டார்கள். இதனாலேயே குழந்தைகள் மூவருக்கும் அம்மாவின் மீது அளவு கடந்த பாசம் ஏற்பட்டு  விட்டது.

கால ஓட்டத்தில் சேதுவின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். சேதுவுக்குச் சிறிதும் வருத்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. "வயசானா, போகத்தான் வேணும்! உனக்கும் எனக்கும் கூட இதே கதிதானே?" என்று வனஜாவிடம் தத்துவ ஞானி போல் பேசினான்.

குழந்தைகள் வேகமாக வளர்ந்து வந்தனர்.

பெரியவன் படித்து முடித்ததும் அவனுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது. வனஜா அவனிடம், "நாங்க மூணு பேரும் உன்னோடயே வந்துடறோம். உன் தம்பியும், தங்கையும் அங்கே வந்து படிக்கட்டும்!" என்றாள்.

"அப்பா?" என்றான் மகன்.

"அவரு இங்கையே இருக்கட்டும். அவர்கிட்டேயிருந்து விடுதலை கிடைக்கணும்னுதானே நாம நாலு பேரும் தனியாப்  போயிடலாம்னு சொல்றேன்!"

"ஹை ஜாலி!" என்றாள் கடைக்குட்டியான அவள் பெண்.

சேதுவிடம் வனஜா தன் முடிவைச் சொன்னபோது, "எதுக்கு?" என்றான்.

"எங்களால உங்க கோவத்தையும், அதட்டல் மிரட்டலையும் தாங்கிக்கிட்டு இருக்க முடியல!"

"அப்புறம் எனக்கு யாரு வடிச்சுக் கொட்டுவா?"

"செல்லியிடம் சொல்லிட்டுப் போறேன். அவ சமைச்சுப் போடுவா. ஆனா எங்கிட்ட நடந்துக்கற மாதிரி அவகிட்டயும் சிடுசிடுத்தீங்கன்னா அவ போயிடுவா. சம்பளம் எவ்வளவுன்னு நீங்களே பேசிக்கங்க."

னஜாவும் குழந்தைகளும் போய் மூன்று வருடங்கள் ஆகி விட்டன. வனஜா மாதம் ஒருமுறை கடிதம் போடத்  தவறுவதில்லை.

சேது கடிதங்களைப் படித்து விட்டுக் கிழித்துப் போட்டு விடுவான். ஒருமுறை கூட பதில் போட்டதில்லை.

சின்னவனும் படித்து வேலைக்குப் போய் விட்டானாம். பெண்ணுக்கும் படிப்பு முடியப் போகிறதாம். அதற்குள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறாளாம்.

சேது எரிச்சலுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். தெருவில் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பந்து சேதுவின் வீட்டுக்குள் போய் விழுந்தது.

ஒரு சிறுவன் ஒடி வந்து "தாத்தா! பந்து வீட்டுக்குள்ள விழுந்துடுச்சு. போய் எடுத்துக்கலாமா?" என்றான்.

"அதெல்லாம் முடியாது. போங்கடா!" என்று எரிந்து விழுந்தான் சேது. "பந்தை ரோட்டில வெளையாடணும். என் வீட்டுக்குள்ள ஏன் தூக்கிப் போட்டீங்க?"

சிறுவர்கள் சற்று நேரம் கெஞ்சி விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார்.

ஒரு சிறுவன் தெருவில் இருந்த ஒரு சிறிய கூழாங்கல்லை எடுத்து சேது மேல் வீசினான்.

வலித்தது.


அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள்:
மனத்தில் அன்பு இல்லாதவனுடைய வாழ்க்கை பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போல் பயனற்றதாகும். (இந்தக் குறளின் பொருள் சற்று நெருடலானது. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தால் நல்லதுதானே என்று தோன்றும். இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருட்கள்  (எனக்கு) சற்றுக்  குழப்பமாகவே இருக்கின்றன.  பாலைவனத்தில் அந்த மரம் வளர்ந்து பலனளிக்க முடியாது. அதுபோல்தான் மனதில் அன்பில்லாதவரின் வாழ்க்கையும் பயனற்றதாகி விடும் என்று நான் பொருள் கொள்கிறேன். திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கும் உதாரணம் சற்றே விசித்திரமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது!)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Sethu's Temperament' the English version of this story.   
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்