About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, August 7, 2017

84. விடுமுறை அனுபவம்

கோடை விடுமுறைக்கு எங்காவது போக வேண்டும் என்று அவளுடைய மகன், மகள் இருவரும் வற்புறுத்தியதால் சென்னைக்குப் போகத் தீர்மானித்தாள் செல்வி.

அவளுடைய இரண்டு அண்ணன்களும் சென்னையில்தான் இருந்தனர். சிறு வயதிலிருந்தே இருவருக்கும் அவள் செல்லக் குழந்தை. அவர்கள் தந்தை வேறு சிறு வயதிலேயே இறந்து விட்டதால், அண்ணன்களுக்கு அவள் மீது பாசம் இன்னும் அதிகம் ஆகி விட்டது.

அண்ணன்கள் இருவரும் படித்து முடித்ததும் சென்னைக்கு வேலைக்குப் போய் விட்டனர். செல்விக்குத் திருமணம் செய்து வைத்து விட்டு அவர்களும் திருமணம் செய்து கொண்டு, ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்குத் தந்தையாகவும் ஆகி விட்டனர்.

மூன்று பேருக்கும் குடும்பம் என்று ஏற்பட்டு விட்ட பிறகு, அவர்கள் தாயும் மறைந்து விட்ட பிறகு, பழைய நெருக்கம் குறைந்து விட்டதுதான். ஆயினும் அண்ணன்கள் இருவரும் அடிக்கடி அவளுடன் தொலைபேசியில் பேசி அவள் நலம் பற்றி விசாரித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தொலைபேசியில் அண்ணன்கள் பேசும்போது, அண்ணிகளும் அவ்வப்போது அவளிடம் பேசுவார்கள். குடும்பத்தோடு தங்கள் வீட்டில் வந்து தங்கி விட்டுப் போகும்படி அவளிடம் அடிக்கடி சொல்வார்கள்.

இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

இரண்டு அண்ணன்களில் குமார் அதிக வசதி படைத்தவன். அதனால் அவன் வீட்டுக்கு முதலில் போனாள்.

அண்ணன் அண்ணி இருவருமே வேலைக்குப் போவதால் சமையலுக்கும், சிறுவன் வருணைப் பார்த்துக் கொள்வதற்கும் கோமதி என்ற பெண்ணை முழு நேரம் வீட்டில் வேலைக்கு வைத்திருந்தார்கள்.

செல்வியும், குழந்தைகளும் வந்ததும் '"எப்படி  இருக்கே?' என்று அண்ணனும் அண்ணியும் கேட்டதோடு சரி. "'உனக்கு எது வேணும்னாலும் கோமதி கிட்ட கேட்டுக்க" என்று சொல்லி விட்டு அண்ணி தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டாள்.

கோமதி அவர்களை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டாள்.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் அண்ணனும் அண்ணியும் தன்னிடமும் குழந்தைகளுடனும் பேசுவார்கள் என்று செல்வி நினைத்தாள்.

ஆனால் இருவருமே மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் செல்வியைப் பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டுத் தங்கள் அறைக்குள் போய் விட்டார்கள். சாப்பிட மட்டும் வெளியே வந்தனர். அப்போதும் செல்வியையும் குழந்தைகளையும் 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்கவில்லை. கோமதி அவர்களுக்குச் சாப்பாடு போட்டிருப்பாள் என்ற நம்பிக்கை போலும்!

இரவில் அவர்கள் படுக்கை அறையைக் கூட கோமதிதான் காட்டினாள். கட்டில், மெத்தை ஏ சி என்று படுக்கை அறை வசதியாகவே இருந்தது. ஏ சி ரிமோட்டை எப்படி இயக்க வேண்டும் என்பதை கோமதி அவளுக்குச் செய்து காட்டினாள்.

தூங்கப் போகுமுன் அவள் குழந்தைகள் இருவரும் "அம்மா! இங்க ரொம்ப போர் அடிக்குது. வருண் கூட எப்பவும் அவன் ரூம்லயே இருக்கான். எங்களோட விளையாடறதில்ல" என்றனர்.

மறுநாள் காலையிலேயே, தான் சுரேஷ் அண்ணன் வீட்டுக்குப் போவதாக செல்வி குமாரிடம் கூறினாள்.

"ஏன் குழந்தைகளுக்கு போர் அடிக்குதாமா?" என்றான் குமார். "சுரேஷ் வீட்டிலேயும் இப்படித்தான் இருக்கும்!"

"ரெண்டு மூணு நாள் இருப்பேன்னு பார்த்தேன்" என்றாள் அண்ணி.

ஆனால் அதற்கு மேல் இருவரும் எதுவும் சொல்லவில்லை.

சுரேஷுக்கு ஃபோன் செய்ததும், அவன் மாலை அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரமே கிளம்பி வந்து அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னான்.

மாலையில் சுரேஷுடன் அவன் வீட்டுக்குச் சென்றபோது சுரேஷின் மனைவி ப்ரியாவும், குழந்தை  தீப்தியும் வீட்டில் இருந்தனர்.

"என்ன அண்ணி ஆஃபீஸ் போகலையா?" என்றாள் செல்வி.

"நீ வரப்ப வீட்ல இருக்கணும்னுதான் பர்மிஷன் போட்டுட்டு வந்துட்டேன்" என்றாள் ப்ரியா.

இரண்டு வாரங்கள் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை. எல்லா நாளும் ஒரே சிரிப்பும் கலகலப்பும்தான். இந்த இரண்டு வாரத்தில் சுரேஷ், ப்ரியா இருவருமே நாலைந்து நாட்கள் பர்மிஷன் போட்டு விட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்தனர். தினமும் அலுவலகத்திலிருந்து ஒருமுறையாவது ஃபோன் செய்து ப்ரியா செல்வியிடம் பேசுவாள்.

வழக்கமாகப் பள்ளி விட்டு வந்ததும் மாலை ப்ரியா வீட்டுக்கு வரும்வரை பக்கத்து வீட்டில் இருந்து வந்த தீப்தி, இந்த இரண்டு வாரங்களும் செல்வி இருந்ததால் தன் வீட்டிலேயே இருந்தாள். அதில் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. "நீங்க இங்கியே இருந்துடுங்களேன் அத்தை. எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கும்" என்றாள்.

இடையில் வந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுரேஷும் ப்ரியாவும் அவர்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.

செல்வி ஊர் திரும்பும் நாள் வந்தது.

"குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை ரெண்டு மாசம் இருக்கு, அதில ஒரு மாசமாவது இங்க தங்கும்படி நீ வந்திருக்கலாம்" என்றாள் ப்ரியா. "இனிமே எல்லா லீவுக்கும் இங்க வரணும், என்ன?" என்றாள் குழந்தைகளிடம்.

"அடுத்த லீவுக்கு நீங்கதான் எங்க ஊருக்கு வரணும்" என்றாள் செல்வி.

"கண்டிப்பா!" என்றாள்  ப்ரியா.

"ப்ரியாவோட சொந்தக்காரங்க ரெண்டு மூணு பேர் அப்பப்ப இங்க வந்துட்டுப் போவாங்க. எனக்குச் சொந்தம்னு சொல்லிக்க நீயும் குமாரும்தான். உள்ளூர்லயே இருந்தாலும் குமாரும் நானும் பாத்துக்கிட்டு மாசக்கணக்கா ஆச்சு. நம்ப சொந்தக்காரங்க யாரும் வரதில்லைன்னு ப்ரியாவுக்கு ஒரு குறை. இப்ப அந்தக் குறை தீர்ந்திருக்கும்!" என்றான் சுரேஷ் ப்ரியாவைப் பார்த்தபடி.

"அடிக்கடி வந்துட்டுப் போனாதான் குறை இல்லாம இருக்கும்!" என்றாள் ப்ரியா.

"இங்க பாரு செல்வி. குமார் மாதிரி நாங்க அவ்வளவு வசதியானவங்க இல்ல. ஆனா யாராவது வந்து போய்க்கிட்டு இருந்தாத்தான் எங்களுக்கு சந்தோஷமா இருக்கும். அதிக நாள் தங்கினா எங்களுக்குக் கஷ்டமா இருக்கும்னு நீ யோசிக்க வேணாம். உங்க அண்ணி சொன்ன மாதிரி எல்லா லீவுக்கும் நீங்க எல்லாரும் இங்க வந்து நிறைய நாள் இருந்துட்டுப் போங்க. அடுத்த தடவை வரும்போது உன் வீட்டுக்காரரையும் கூட்டிகிட்டு வரணும்."

குமார் சொன்னதை ப்ரியா சிரித்துக்கொண்டே தலையாட்டி ஆமோதித்தபோது 'மகாலக்ஷ்மி மாதிரி இந்த அண்ணி இருக்கும்போது அண்ணனுக்கு என்ன குறை இருக்க முடியும்?' என்று நினைத்தாள் செல்வி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்:
தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியுடன் உபசரித்து வருபவன் வீட்டில் மனமகிழ்ச்சியுடன் திருமகள் குடியிருப்பாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

































3 comments:

  1. அதனால்தானே விருந்தினர்கள் கடவுளுக்குச் சமம் என்று கூறுவர். 'பணமும் வசதியும்' மட்டும் வாழ்வில்லையே.

    நல்லா வந்திருக்கு.

    ReplyDelete
  2. விருந்தோம்பல் தமிழர் பண்பாடு ஆச்சே!

    ReplyDelete