About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, August 3, 2017

81. எதிர்பாராத விருந்தாளி

காட்டில் தாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு வந்த முனிவர்களை உபசரித்து, உணவளித்து, அவர்கள் விடைபெற்றுச் சென்றதும், பாண்டவர்கள் உணவருந்த அமர்ந்தனர்.

"திரௌபதி! இன்று என்ன சமையல்?" என்றான் பீமன், சிரித்துக் கொண்டே.

"அட்சயபாத்திரம் நமக்கு இன்று என்ன வழங்குகிறதோ அதைத்தானே நாம் உண்ண முடியும்?" என்றான் யுதிஷ்டிரன்.

அட்சய பாத்திரத்திலிருந்து திரௌபதி அனைவருக்கும் உணவு பரிமாறினாள்.

"சூரிய பகவான் நமக்கு இந்த அட்சய பாத்திரத்தை வழங்காமல் இருந்திருந்தால் நம்மால் இந்த வனவாசத்தைச் சமாளித்திருக்க முடியுமா?" என்றான் நகுலன்.

"நாம் வனவாசத்தைச் சமாளிப்பதில் ஒரு சிரமும் இருந்திருக்காது. ஆனால் நாளும் நம்மைக் காண முனிவர்களும் மற்றவர்களும் வருகிறார்களே, அவர்களுக்கு நம்மால் விருந்தளிக்க முடியாமல் போயிருக்கும்" என்றான் அர்ஜுனன்.

"அள்ள அள்ளக் குறையாத இந்த அட்சய பாத்திரத்தை யுதிஷ்டிரரின் வேண்டுகோளை ஏற்று சூரியன் நமக்கு வழங்கியிருக்கிருக்கிறார். இதற்காக சூரியனிடம் பிரார்த்தனை செய்யும்படி நமக்கு யோசனை சொன்ன தௌம்யருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்" என்றாள் திரௌபதி.

"ஆனால் அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்து விட்டால் அதற்குப் பிறகு அடுத்த நாள்தான் அதிலிருந்து உணவு வரும் என்பதுதான் சிக்கல். இதனால்தானே நாம் எல்லோரும் சாப்பிட்ட பிறகு திரௌபதி பாத்திரத்தைக் கழுவி வைத்த பின் தன் சீடர்களுடன் வந்த துர்வாசருக்கு உணவளிக்க முடியாமல் அவருடைய சாபத்துக்கு ஆளாக இருந்தோம்!" என்றான் பீமன்.

"கண்ணனின் கருணையினால் அன்று நாம் தப்பித்தோம்" என்றான் அர்ஜுனன்.

"சகதேவா, நீ ஏன் எதுவுமே சொல்லவில்லை?" என்றான் யுதிஷ்டிரன்.

"அண்ணா! நாம் கானகத்தில் இருந்தாலும் நாம் 'கிருஹஸ்தாஸ்ரமம்' என்று சொல்லப்படும் இல்லற தர்மத்தைத்தானே கடைப்பிடிக்கிறோம்?" என்றான் சகதேவன்.

"ஆமாம்" என்றான் யுதிஷ்டிரன்.

"இல்லறத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கடமை என்ன?"

"விருந்தினர்களை உபசரிப்பது" என்றான் யுதிஷ்டிரன்.

"அதை நாம் செய்து கொண்டிருக்கிறோமா?"

"இதென்ன கேள்வி சகதேவா? நாள்தோறும் பல முனிவர்களும் இந்தக் காட்டில் வசிக்கும் மக்களும் நம்மைப் பார்க்க வருவதையும், நாம் அவர்களுக்கு விருந்தளிப்பதையும் நீ பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்?" என்றான் அர்ஜுனன், சற்றே கோபத்துடன்.

"பொறு அர்ஜுனா? சகதேவன் என்ன சொல்ல வருகிறான் என்பது எனக்குப் புரிகிறது. அதை அவன் வாயாலேயே சொல்லட்டும்!" என்றான் யுதிஷ்டிரன்.

"உங்கள் மனதில் இருப்பதை என் வாயிலிருந்து வரவழைக்க விரும்புகிறீர்கள்! சொல்கிறேன். நாம் விருந்தினரை உபசரிப்பது உண்மைதான். ஆனால் அட்சய பாத்திரத்தை வைத்துக் கொண்டுதான் அனைவருக்கும் உணவளிக்கிறோம்? இதில் நமது முயற்சி, நமது பங்கு என்ன இருக்கிறது?"

"அட்சய பாத்திரத்தைத் தூக்கிப் போட்டு விட வேண்டும் என்கிறாயா?" என்றான் பீமன்.

ஆனால் யுதிஷ்டிரன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.

"எல்லோரும் சீக்கிரம் சாப்பிட்டு முடியுங்கள். நானும் சாப்பிட்டு விட்டுப் பாத்திரத்தைக் கழுவி வைக்க வேண்டும்" என்றாள் திரௌபதி.

"பாத்திரத்தைக் கழுவி வைத்த பிறகு அன்று துர்வாசர் வந்தது போல், இன்று வேறொருவர் வந்தால் நாம் என்ன செய்யப் போகிறோம்?" என்றான் சகதேவன்.

"அப்படி ஒருவர் வந்து, அட்சய பாத்திரத்தின் உதவி இல்லாமலே நாம் அவருக்கு உணவு படைத்தால் அதுதான் உண்மையான விருந்தோம்பல் என்று தம்பி சகாதேவன் சொல்ல வருகிறான்" என்றான் யுதிஷ்டிரன், புன்னகையுடன்.

மற்ற மூன்று சகோதரர்களும் வியப்புடன் சகதேவனைப் பார்த்தனர்.

சகதேவன் சுட்டிக் காட்டிய நிலை ஒருநாள் வந்தது. விருந்தினர்களுக்கு உணவளித்துப் பாண்டவர்கள் உண்ட பின் தானும் உண்டு விட்டு திரௌபதி பாத்திரத்தைக் கழுவி வைத்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களைத் தேடி ஒரு முனிவர் வந்தார்.

"நீண்ட தொலைவிலிருந்து வருகிறேன்" என்று அவர் கூறியதிலிருந்தும்  அவருடைய வாடிய முகத்திலிருந்தும், அவருடைய உடல் சோர்விலிருந்தும் அவர் உணவருந்தி வெகு நேரம் (அல்லது பல நாட்கள் கூட) ஆகியிருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

"இப்போது என்ன செய்யப் போகிறோம்? கிருஷ்ணன் தானே வருவானா அல்லது அர்ஜுனனோ, திரௌபதியோ அவனை தியானம் செய்து வரவழைக்கப் போகிறார்களா?" என்றான் பீமன், விளையாட்டாக.

"அன்று துர்வாசர் வந்தபோது அட்சய பாத்திரத்தின் அடியில் ஒரு கீரைத்துண்டு ஒட்டிக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் அதை உண்டதும் துர்வாசருக்கும் அவர் சீடர்களுக்கும் வயிறு நிரம்பி விட்டது. அதற்குப் பிறகு பாத்திரத்தை மிகவும் கவனமாகக் கழுவுகிறேன். அதனால் இப்போது கிருஷ்ணன் வந்தால் கூடப் பாத்திரத்திலிருந்து எடுத்து உண்ண ஒரு துகள் கூட இருக்காது!" என்றாள் திரௌபதி.

"ஒவ்வொரு முறையும் கிருஷ்ணன் வந்து உதவுவான் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. இந்த முறை அண்ணன் பீமனே நமக்கு உதவலாம்" என்றான் சகதேவன்.

"ஆமாம். பீமா! உன்னால்தான் விரைந்து செயல்பட முடியும். இந்தக் காட்டில் விரைந்து தேடி முனிவர் உண்ணச் சில பழங்களையும் காய்களையும் பறித்து வா. நாங்கள் முனிவரை உபசரித்து, அவரது கால்களைக் கழுவி, அவரை வணங்கி நலம் விசாரிப்பதற்குள் நீ திரும்பி வர வேண்டும்" என்றான் யுதிஷ்டிரன்.

"விருந்தினருக்குக் காய்கனிகளை மட்டும் உணவாக அளிப்பது பொருத்தமாக இருக்குமா? அவற்றை அவரே மரங்களிலிருந்து பறித்துக் கொண்டிருப்பாரே!" என்றான் அர்ஜுனன்.

"நம் வீட்டுக்கு வரும் விருந்தினர் எவரும் தன்னால் உணவைத் தேடிக் கொள்ள முடியவில்லை என்பதற்காக வரவில்லை. நம்மிடம் உள்ள அன்பு காரணமாக வருகிறார்கள். நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொடுத்து உபசரிப்பதுதான் விருந்தோம்பல். ஒரு ஏழையின் வீட்டுக்கு ஒரு செல்வந்தன்  வந்தால் அந்த ஏழை தன் வீட்டில் என்ன உணவு இருக்கிறதோ அதைத்தானே அந்த செல்வந்தனுக்குக் கொடுக்க முடியும்?

"ராமபிரான் சபரியின் குடிலுக்கு வந்தபோது, சபரி அவருக்குப் பழங்களையும், புலாலையும்தான் கொடுத்தாள். அதுவும் அவை நன்றாக இருக்கின்றனவா என்று சுவைத்துப் பார்த்து விட்டுக் கொடுத்தாள். அந்த எச்சில் பட்ட உணவை ராமபிரான் மனமுவந்து ஏற்கவில்லையா?" என்றான் யுதிஷ்டிரன்.

"ஆனால் முனிவர் நாம் கொடுக்கும் பழங்களினால் திருப்தி அடையாமல் நம்மைக் கோபித்துக் கொண்டால்?" என்றாள் திரௌபதி.

"நல்லவேளை இந்த முனிவர் துர்வாசர் இல்லை!" என்றான் சகதேவன் சிரித்தபடி.

பீமன் கொண்டு வந்த காய்கனிகளை நறுக்கி இலையில் வைத்து முனிவருக்குப் பரிமாறினார்கள். முனிவர் எதுவுமே சொல்லாமல் அவற்றை உண்டார்.

உண்டு முடித்ததும் அவர்களிடம் விடைபெற்றார்.

யுதிஷ்டிரன் பணிவுடன் "முனிவர்பிரானே! இந்த நேரத்தில் எங்களால் உங்களுக்குச் சமைத்த உணவை அளிக்க முடியவில்லை, அதனால்தான் காய்கனிகளைப் பரிமாறினோம்.எங்களை மன்னிக்க வேண்டும்" என்றான்.

"யுதிஷ்டிரா! நான் இப்போது சமைத்த உணவை உண்பதில்லை என்ற ஒரு விரதத்தை மேற்கொண்டிருக்கிறேன். பச்சைக் காய்களையும், பழங்களையும்தான் உண்கிறேன். எங்கே நீங்கள் சமைத்த உணவைப்  படைத்து விடுவீர்களா என்று பயந்தேன்.

"ஒரு விருந்தினர் தனக்கு இந்த உணவைத்தான் அளிக்க வேண்டும் என்று விருந்தளிப்பவரிடம் கேட்கக் கூடாது. அதனால்தான் எனக்குக் காய்கனிகளையே கொடுங்கள் என்று நான் முன்பே உங்களிடம் சொல்லவில்லை.

"ஒருவேளை நீங்கள் எனக்குச் சமைத்த உணவை அளித்திருந்தால் அதன் மீது நீர் தெளித்து ஏற்றுக் கொண்டு விட்டு அதை வெளியே உள்ள மிருகங்களுக்கோ பறவைகளுக்கோ அளித்திருப்பேன். என் பசி அடங்காவிட்டாலும் எனக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும் என்றாலும் உங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும்.

"இறைவன் அருளால், நான் உண்ணக் கூடிய உணவையே எனக்கு அளித்து என் மனத்தையும் வயிற்றையும் ஒருங்கே நிறையச் செய்ததுடன் உங்களுக்கும் மனத்திருப்தி ஏற்படும் வகையில் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லா நலன்களும் விளையட்டும்!" என்று வாழ்த்தி விடைபெற்றார் முனிவர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
           அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்:
மனைவியுடன் கூடி இல்லறம்  நடத்துவதன் நோக்கம் விருந்தினர்களைப் போற்றி அவர்களுக்கு நன்மை செய்வதே ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

Read 'The Unexpected Guest' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















Wednesday, August 2, 2017

80. ஆனந்தின் சந்தேகம்!

ஆனந்த் மானேஜருக்கு ஃபோன் செய்தான்.

"சார் வேலையெல்லாம் முடிஞ்சு போச்சு!"

"வேலையெல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நீயே எப்படித் தீர்மானிக்க முடியும்?"

"சார்! நீங்க சொன்ன வேலையெல்லாம் முடிச்சுட்டேன்னு சொல்ல வந்தேன்."

"அப்படிச் சொல்லு. நீ இனிமே ஆஃபீசுக்கு வந்தா லேட்டாயிடும். அங்கேயே இன்னொரு வேலை இருக்கு..."

"சார். மணி ஆறு ஆயிடுச்சு."

"மணி ஆறுதானே ஆகுது? நீ தினமும் ஆஃபீசிலேருந்து ஏழரை மணிக்கு மேலதானே வீட்டுக்குக் கிளம்புவே? அங்க ஒரு கலெக்‌ஷன்  இருக்கு. ஆறுமுகசாமி இன்னிக்கு செக் தரேன்னு சொல்லியிருக்காரு. அதை வாங்கிக்கிட்டு அப்பிடியே வீட்டுக்குப் போயிடு."

"சார் அது இங்கேயிருந்து ரொம்ப தூரம் சார்!"

"நடந்தா போகப் போற? பஸ்ஸிலதானே போகப் போற?"

"அதில்ல சார். எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லே. டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போகணும். அதனால இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்னு  காலையிலேயே உங்ககிட்ட சொல்லியிருந்தேன்!"

"ஆமாம். வேலையை முடிச்சுட்டுப் போன்னு சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்!"

"சார்! டாக்டர் எட்டு மணி வரையிலும்தான் சார் இருப்பாரு. நான் இப்பவே கிளம்பினாத்தான் எங்கம்மாவை அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்ட முடியும்."

"உங்கம்மாவுக்கு என்ன ஜுரம்தானே? இதெல்லாம் ஒரு உடம்பா?"

"சார்! அவங்க வயசானவங்க. மூணு நாளா ஜுரம் குறையவே இல்லை."

"ஏம்ப்பா? உங்கம்மா ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லையே? ஒரு ஆட்டோவைப் புடிச்சுக்கிட்டு அவங்களால போயிட்டு வர முடியாது? வேணும்னா அக்கம்பக்கத்தில் யாரையாவது துணைக்குக் கூப்பிட்டா, வந்துட்டுப் போறாங்க!"

"சரி சார்."

அம்மாவுக்கு ஃபோன் செய்து பக்கத்து வீட்டு அம்மாளை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் போகும்படி சொன்னான் ஆனந்த். 

'நல்லவேளை! மொபைல் ஃபோன் என்ற ஒன்று இருக்கிறது. அது இல்லாவிட்டால் இந்த மானேஜர் போன்ற அரக்க ஜென்மங்களின் இரக்கமற்ற செயல்களைச் சமாளிப்பது இயலாத காரியமாக இருந்திருக்கும்!'

வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது மணி ஒன்பது ஆகி விட்டது. அம்மா இன்னும் வரவில்லை. டாக்டரின் நேரம் எட்டு வரைதான் என்றாலும் எட்டு மணி வரை வரும் நோயாளிகளுக்கு டோக்கன் கொடுத்து பத்து மணிக்கு மேல் ஆனாலும் எல்லோரையும் பார்த்து விட்டுத்தான் போவார். அவர் பணத்துக்காக இதைச் செய்கிறார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் வாங்குவது மிகக் குறைந்த கட்டணம்தான்.

அவன் மானேஜரைப் போன்றவர்கள் இருக்கும் உலகத்தில்தான் இந்த டாக்டர் போன்றவர்களும் இருக்கிறார்கள்!

பக்கத்து வீட்டில் சாவி வாங்கப் போனபோது பக்கத்து வீட்டுக்காரர் தொலைக்காட்சியில் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

"சார்! உங்களுக்கும் ஆன்ட்டிக்கும் என்னால் நிறையத் தொந்தரவு" என்றான் ஆனந்த் வருத்தத்துடன்.

"என்னப்பா இது? இது மாதிரி சின்ன உதவி கூடச் செய்யலேன்னா எப்படி? கவலைப்படாதே. நம்ம டாக்டர் மருந்து கொடுத்தா உங்கம்மாவுக்கு ஜுரம் சட்டுனு குறைஞ்சுடும்."

தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர் 'ஆத்மா' என்று அடிக்கடி சொல்வதை ஆனந்த் கவனித்தான்.

"ஏன் சார் ஆத்மான்னு ஒண்ணு இருக்கா?"

"அதில என்ன சந்தேகம்? நம்ம உடம்புக்குள்ள அடுக்கடுக்காய்ப் பல விஷயங்கள் இருக்கு. தோல், அப்புறம் சதை, அப்புறம் எலும்புகள், நரம்புகள், ரத்தக்குழாய்கள்னு. அதுபோல இதயம் நுரையீரல்னு பல உறுப்புகள். எல்லாத்துக்கும் உள்ளே ஆத்மான்னு ஒரு சக்தி இருக்கு."

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம் சார். எனக்கென்ன தெரியும்? ஆனா சில பேருக்கு தோல், எலும்பு இதையெல்லாம் தாண்டி இதயம்னு ஒண்ணு  இருக்கான்னே சந்தேகமா இருக்கு!"

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் அவர் அவனைப் பார்த்தார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
            அதிகாரம் 8             
அன்புடைமை 
குறள் 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள்:
அன்புவழி நடப்பதே உயிர் உள்ள உடலின் இயல்பு. அன்பு இல்லாதவரின் உடல் எலும்பாலும் தோலாலும் போர்த்தப்பட்ட (உயிரற்ற) வெற்றுடம்புதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Anand's Doubt'
 the English version of this story.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Tuesday, August 1, 2017

79. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்?

ரகுவுக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்வதற்குள் அவன் அம்மா சரளாவுக்குப் போதும் போதும் என்று ஆகி விட்டது.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறை சொன்னான் - மூக்கு நீளம், குட்டை, பருமன், பல் பெரிதாக இருக்கிறது, வாய் கோணலாக இருக்கிறது என்று.

"ஏண்டா எத்தனையோ பேர் உடம்பில ஊனம் இருக்கிற பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கறாங்க. நீ இப்படி மாட்டைப் பல்லை புடிச்சுப் பாக்கற மாதிரி பெண்களைப் பாக்கறியே!" என்று அலுத்துக் கொண்டாள் சரளா.

"நான் என்ன சாமுத்திரிகா லட்சணமா பாக்கறேன்? உடல் உறுப்புகள் எல்லாம் ஒழுங்கா இருக்கணும்னு பாக்கறேன். அது தப்பா?" என்றான் ரகு.

ஒரு வழியாக அவனுக்கு வனிதாவைப் பிடித்து விட்டது. ரகுவால் அவள் தோற்றத்தில் எந்தக் குறையையும் காண முடியவில்லை.

திருமணம் ஆகிச் சில நாட்கள் கழித்து ரகு தனியே இருக்கையில் அவன் அம்மா சரளா அவனிடம் வந்தாள். 

"ரகு, வனிதா தனக்கு வேணும்கறதைத்தான் பாத்துக்கறா. எங்களைப் பத்திக் கவலைப்படறதே இல்லை" என்று ஆரம்பித்தாள்.

"சும்மா ஏதாவது குறை சொல்லாதே!" என்றான் ரகு.

"சும்மா சொல்லலைடா. எங்களுக்கு அவ சாப்பாடு கூடப் போடறதில்லை. சாப்பிட்டீங்களான்னு கேக்கறதும் இல்லை. அவ சாப்பிட்டுட்டுப் போனப்பறம் மீதி என்ன இருக்கோ அதைத்தான் நாங்க சாப்பிட வேண்டி இருக்கு. சிலநாள் சாம்பார் இருக்காது, சில நாள் ரசம் இருக்காது, சிலநாள் காய்கறி இருக்காது. சிலநாள் சாதம் கூடக் கொஞ்சம்தான் மீதியிருக்கும்..."

சரளாவுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. 

"ராஜா மாதிரி இருந்தவரு  உங்கப்பா. இப்ப அவரு ஒரு பிச்சைக்காரர் மாதிரி மிச்சம் மீதியைச் சாப்பிட்டுட்டுப் போறாரு. ஏன், எல்லோரும் தாராளமா சாப்பிடற மாதிரி கொஞ்சம் அதிகமா செய்யக் கூடாதா? நமக்கு என்ன வசதியா இல்லை?"

"இதை நீ அவகிட்டயே கேட்டிருக்கலாமே!"

"கேட்டேன். வயசானவங்க கொஞ்சமாத்தான் சாப்பிடணுமாம். அதுதான் அவங்க உடம்புக்கு நல்லதாம். அதோட சாப்பாட்டுக்கு அதிகம் பணம் செலவு பண்ணக் கூடாதுன்னு எங்களுக்கு உபதேசம் பண்றா!"

"சரி. நான் அவகிட்ட பேசறேன்" என்றான் ரகு.

அவனுக்கே இதுபோன்ற பிரச்னைகள் இருந்தன. வீட்டில் அவனுக்கும் சரியாகச் சாப்பாடு கிடைப்பதில்லை. கேட்டால், "நாக்கைக் கொஞ்சம் அடக்கிக்கங்க," "உங்களுக்குத் தொந்தி போடக்கூடாதுன்னுதான் இப்படிப் பண்றேன்!" என்பது போன்ற அலட்சியமான பதில்கள் வரும்.

இருப்பினும் அம்மாவின் வேதனையைப் பொறுக்காமல், வனிதாவிடம் பேசினான். "வயசான காலத்தில் அப்பா அம்மாவுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போடக் கூடாதா?" என்றான்.

"இப்ப என்ன அவங்க பட்டினியா கெடக்கறாங்க? உங்க குடும்பத்தில எல்லோருக்குமே நாக்கு நீளம், வயிறு பெரிசு. நான் செஞ்சு வைக்கறது பத்தலைன்னா உங்கம்மாவைத் தனியா ஏதாவது பண்ணிக்கச் சொல்லுங்க. அவங்க உடம்பு தெம்பாத்தானே இருக்காங்க?" என்றாள்.

ரகுவுக்கு ஏன் அவளிடம் கேட்டோம் என்று ஆகி விட்டது.

சில சமயம் அவள் தனக்கு மட்டும் ஏதாவது தனியாகச் சமைத்துத் தான் மட்டும் சாப்பிடுவதையும் அவன் கவனித்திருக்கிறான். ஏன் இப்படிச் செய்கிறாள்? சுயநலமாக இருந்து விட்டுப் போகட்டும். இப்படியா வீட்டில் இருப்பவர்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருப்பாள்?

சில மாதங்களில் அவன் பெற்றோர்கள் தங்கள் கிராமத்து வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதனிடமாவது பாசமாக இருப்பாளா என்ற பயம் ரகுவுக்கு வந்து விட்டது.

ஒருநாள் "என்னங்க, நாள் தள்ளிப் போயிருக்கு. நான் டாக்டர்கிட்ட போயிட்டு வரேன்" என்றாள் வனிதா.

ரகுவுக்கு மகிழ்ச்சியில் புல்லரித்தது. "இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சாதாரணமா சொல்றயே! நானும் வரேன் டாக்டர்கிட்ட" என்றான்.

"நீங்க ஆஃபீசுக்குப் போங்க. நான் மட்டும் டாக்டர்கிட்ட போயிட்டு வரேன்" என்றாள் அவள்.

"டாக்டரைப் பாத்துட்டு ஃபோன் பண்ணு!" என்றான் அவன்.

ஆனால் அவன் அலுவலகத்திலிருந்து திரும்பும் வரை அவளிடமிருந்து ஃபோன் வரவில்லை.

மாலை அவன் வீட்டுக்குப் போனபோது வனிதா கட்டிலில் சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? டாக்டர் என்ன சொன்னார்?" என்றான் ரகு.

"கலைச்சுட்டேன்!" என்றாள் அவள்.

"என்னது!" என்றான் ரகு அதிர்ச்சியுடன். "ஏன்?"

"எனக்குப் பிடிக்கல" என்றாள் அவள் சுருக்கமாக.

"உனக்குப் பிடிக்கலேன்னா? எங்கிட்ட கேக்க வேண்டாமா?"

"குழந்தை பெத்துக்கப் போறது நானா, நீங்களா?"

"எவ்வளவோ பேரு குழந்தை பொறக்காதான்னு ஏங்கறாங்க. நீ இப்படிச் செஞ்சுட்டியே!"

"எனக்கு குழந்தைகளைப் பெத்துக்கிட்டு அதுங்களோட போராடறதெல்லாம் ஒத்து வராது. சுதந்திரமா ஹாயா இருக்கணும்."

"அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட?"

"ம்? சுதந்திரமா ஹாயா இருக்கணும்னுதான்! நாம ஒரு குழந்தையைப் பெத்துக் கொடுக்காததால நாட்டுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை" என்றாள் வனிதா அலட்சியமாக.

ரகு பரிதாபத்துடன் அவளைப் பார்த்தான். அவள் தோற்றம் அவன் கன்னத்தில் அறைவது போல் இருந்தது. நீண்ட அழகான கண்கள், செதுக்கி வைத்ததைப்  போன்ற மூக்கு, அழகான பல்வரிசை, ஒல்லியான உடல்வாகு, இன்னும்...

'இந்த அழகைத்தானே தேடிப் போனோம்?' என்று நினைத்தான் ரகு.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

பொருள்:
மனதில் அன்பு என்ற உறுப்பு இல்லாதவருக்கு மற்ற உறுப்புகள் எல்லாம் இருந்து என்ன பயன்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'In Search of Beauty' the English version of this story.  
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Monday, July 31, 2017

78. சேதுவின் கோபம்

சேது ஒரு தனிமரம் - பெண்டாட்டி, பிள்ளைகள் எல்லோரும் இருந்தும்! பணம், வசதிகள், உறவுகள் எல்லாம் இருந்தும்!

வனஜா அவனைக் கல்யாணம் செய்து கொண்டபோது, தான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் என்று நினைத்தாள். வசதியான இடம், பெற்றோருக்கு ஒரே பிள்ளை. வேறு என்ன வேண்டும் என்று நினைத்தாள்.

திருமணம் ஆகிப் புகுந்த வீட்டுக்கு வந்ததுமே மாமியார் அவளிடம் தனியே கிசுகிசுத்தாள். "இங்க பாரும்மா. சேது கொஞ்சம் கோவக்காரன். நீதான் அனுசரிச்சு நடந்துக்கணும்."

இது பொதுவாகச் சொல்லப்படுவது என்றுதான் வனஜா முதலில் நினைத்தாள். அப்படியே கோபக்காரராக இருந்தால்தான் என்ன? தன்னால் சமாளிக்க முடியாதா?

முடியவில்லை.

மாமியார் சொன்னபடி 'கொஞ்சம்' கோபக்காரனாக இருந்திருந்தால் சமாளித்திருப்பாள். நிறையக் கோபம் இருந்திருந்தாலும் கஷ்டப்பட்டாவது சமாளித்திருப்பாள். கோபத்தைத் தவிர வேறு உணர்ச்சிகளே இல்லாதவனை எப்படிச் சமாளிப்பாள்?

"என்ன அத்தை, இவரு இப்படி இருக்காரு? எதுக்குக் கோவப்படறாருன்னு தெரியாம எல்லாத்துக்கும் கோவப்பட்டா நான் என்னதான் செய்யறது?"

"என்கிட்டயும் இப்படித்தான் எரிஞ்சு விழுவான். என்ன எதிர்பாக்கறான்னே புரியாது. முன்னெல்லாம் அவன் அப்பாகிட்ட கொஞ்சம் பயப்படுவான். இப்ப அவரையும் தூக்கி எறிஞ்சு பேச ஆரம்பிச்சுட்டான். அவரு அவன்கிட்ட பேசறதையே விட்டுட்டாரு."

'இப்படிப்பட்ட மனிதனுக்கு ஏன் கல்யாணம் செய்து வைத்தீர்கள்?' என்று கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டாள் வனஜா.

வாழ்க்கை எப்படியோ ஓடி மூன்று குழந்தைகள் பிறந்து விட்டனர். இரண்டு பையன்கள், கடைசியாக ஒரு பெண்.

குழந்தைகள் பிறந்த பின்பாவது சேது மாறுவான் என்று நினைத்தாள் வனஜா. ஆனால் குழந்தைகளிடமும் அதே சிடுசிடுப்புத்தான். குழந்தைகளாக இருந்தபோதே அவர்களைத் தூக்கிக் கொஞ்சி விளையாடியதில்லை சேது. அவர்கள் ஏதோ பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்பது போல் கண்டும் காணாமல் இருப்பான்.

குழந்தைகள் வளர்ந்ததும் தந்தையின் கோபத்தை உணர்ந்து அவன் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு மனிதன் என்று விரைவிலேயே புரிந்து கொண்டார்கள். இதனாலேயே குழந்தைகள் மூவருக்கும் அம்மாவின் மீது அளவு கடந்த பாசம் ஏற்பட்டு  விட்டது.

கால ஓட்டத்தில் சேதுவின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். சேதுவுக்குச் சிறிதும் வருத்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. "வயசானா, போகத்தான் வேணும்! உனக்கும் எனக்கும் கூட இதே கதிதானே?" என்று வனஜாவிடம் தத்துவ ஞானி போல் பேசினான்.

குழந்தைகள் வேகமாக வளர்ந்து வந்தனர்.

பெரியவன் படித்து முடித்ததும் அவனுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது. வனஜா அவனிடம், "நாங்க மூணு பேரும் உன்னோடயே வந்துடறோம். உன் தம்பியும், தங்கையும் அங்கே வந்து படிக்கட்டும்!" என்றாள்.

"அப்பா?" என்றான் மகன்.

"அவரு இங்கையே இருக்கட்டும். அவர்கிட்டேயிருந்து விடுதலை கிடைக்கணும்னுதானே நாம நாலு பேரும் தனியாப்  போயிடலாம்னு சொல்றேன்!"

"ஹை ஜாலி!" என்றாள் கடைக்குட்டியான அவள் பெண்.

சேதுவிடம் வனஜா தன் முடிவைச் சொன்னபோது, "எதுக்கு?" என்றான்.

"எங்களால உங்க கோவத்தையும், அதட்டல் மிரட்டலையும் தாங்கிக்கிட்டு இருக்க முடியல!"

"அப்புறம் எனக்கு யாரு வடிச்சுக் கொட்டுவா?"

"செல்லியிடம் சொல்லிட்டுப் போறேன். அவ சமைச்சுப் போடுவா. ஆனா எங்கிட்ட நடந்துக்கற மாதிரி அவகிட்டயும் சிடுசிடுத்தீங்கன்னா அவ போயிடுவா. சம்பளம் எவ்வளவுன்னு நீங்களே பேசிக்கங்க."

வனஜாவும் குழந்தைகளும் போய் மூன்று வருடங்கள் ஆகி விட்டன. வனஜா மாதம் ஒருமுறை கடிதம் போடத்  தவறுவதில்லை.

சேது கடிதங்களைப் படித்து விட்டுக் கிழித்துப் போட்டு விடுவான். ஒருமுறை கூட பதில் போட்டதில்லை.

சின்னவனும் படித்து வேலைக்குப் போய் விட்டானாம். பெண்ணுக்கும் படிப்பு முடியப் போகிறதாம். அதற்குள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறாளாம்.

சேது எரிச்சலுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். தெருவில் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பந்து சேதுவின் வீட்டுக்குள் போய் விழுந்தது.

ஒரு சிறுவன் ஒடி வந்து "தாத்தா! பந்து வீட்டுக்குள்ள விழுந்துடுச்சு. போய் எடுத்துக்கலாமா?" என்றான்.

"அதெல்லாம் முடியாது. போங்கடா!" என்று எரிந்து விழுந்தான் சேது. "பந்தை ரோட்டில வெளையாடணும். என் வீட்டுக்குள்ள ஏன் தூக்கிப் போட்டீங்க?"

சிறுவர்கள் சற்று நேரம் கெஞ்சி விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார்.

ஒரு சிறுவன் தெருவில் இருந்த ஒரு சிறிய கூழாங்கல்லை எடுத்து சேது மேல் வீசினான்.

வலித்தது.


அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள்:
மனத்தில் அன்பு இல்லாதவனுடைய வாழ்க்கை பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போல் பயனற்றதாகும். (இந்தக் குறளின் பொருள் சற்று நெருடலானது. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தால் நல்லதுதானே என்று தோன்றும். இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருட்கள்  (எனக்கு) சற்றுக்  குழப்பமாகவே இருக்கின்றன.  பாலைவனத்தில் அந்த மரம் வளர்ந்து பலனளிக்க முடியாது. அதுபோல்தான் மனதில் அன்பில்லாதவரின் வாழ்க்கையும் பயனற்றதாகி விடும் என்று நான் பொருள் கொள்கிறேன். திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கும் உதாரணம் சற்றே விசித்திரமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது!)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Sethu's Temperament' the English version of this story.   
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Saturday, July 29, 2017

77. மங்கள விலாஸ் ஓட்டல்

வாழ்க்கையில் சில சம்பவங்களை மறக்க முடிவதில்லை. பல வருடங்கள் ஆனாலும் வீடியோ பதிவு போல் மனத்துக்குள் பதிந்து விடும் நிகழ்வுகள் உண்டு.

நான் ஒரு அரசு ஊழியன் என்ற முறையில் கிராம, நகர, பஞ்சாயத்து அமைப்புகளைத் தணிக்கை செய்யப் பல ஊர்களுக்குப் போயிருக்கிறேன். அவற்றில் சில ஊர்களுக்குச் சென்ற நினைவுகள்தான் நீண்ட நாள் நினைவில் நிற்கின்றன.

அப்படி ஒரு சம்பவம் ஒரு சிறிய ஊரில் நடந்தது. அந்த ஊரில் எனக்கு மூன்று நாட்கள் வேலை இருந்தது. அந்த ஊர் நகரப் பஞ்சாயத்தின் (பேரூராட்சி என்று சொல்ல வேண்டும். ஆனால் என் போன்ற சிலருக்கு கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்து என்றே சொல்லிப் பழகி விட்டது!) கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும்.

அது சிறிய ஊர். அந்த ஊரில் தங்கும் விடுதி எதுவும் இல்லை. அந்த நாட்களில், பெரிய நகரங்களிலேயே ஓரிரு விடுதிகள்தான் இருக்கும். அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் என்னைத் தன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொன்னார். நான் அதை மறுத்து விட்டு, பஞ்சாயத்து அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டேன்.

பகலில் தணிக்கை, இரவில் அங்கேயே மர பெஞ்ச்சில் படுக்கை. சாப்பாட்டுக்கு மட்டும் வெளியே போக வேண்டும். அந்த ஊரில் ஓடிய ஆற்றில் குளியல். அதிர்ஷ்டவசமாக அப்போது ஆற்றில் தண்ணீர் இருந்தது.

அந்த ஊரில் நாயன்மார்களால் பாடப்பட்ட ஒரு கோயில் இருந்தது. ஆயினும் அது ஒரு பிரபலமான கோயில் இல்லை. அவ்வப்போது கோயிலுக்குப்  பல ஊர்களிலிருந்தும் யாத்திரிகர்கள் வருவார்கள்.

சில சமயம் டூரிஸ்ட் பஸ்கள் வரும். அதனால்தானோ என்னவோ அந்த ஊரில் ஒரு சுமாரான ஓட்டல் இருந்தது. மங்கள விலாஸ் என்று பெயர். சிறிய ஓட்டலாக இருந்தாலும், சுத்தமாக இருக்கும். சாப்பாடு, டிஃபன் ஓரளவுக்கு நன்றாகவும் இருக்கும்.

மூன்று நாட்களும், மூன்று வேளையும் எனக்கு அங்கேதான் சாப்பாடு. பஞ்சாயத்துத் தலைவர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவர் வீட்டுக்குச் சாப்பிடச் செல்ல நான் மறுத்து விட்டேன்.

பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரே ஒரு ஊழியர்தான் உண்டு. அவர் பெயர் ராமலிங்கம். நான் தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகளை அவர்தான் எனக்குக் காட்டுவார். ஓட்டலுக்கு என்னுடன் வருவார். நான் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.

பஞ்சாயத்துத் தலைவர், ராமலிங்கத்திடம் பணம் கொடுத்து என் சாப்பாட்டுச் செலவைப் பார்த்துக் கொள்ளும்படி அவரிடம் சொல்லியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரை என் சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்க நான் அனுமதிப்பதில்லை. அதனால் அவருக்கு என் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டது. (அவருடைய முந்தைய அனுபவங்கள் வேறு மாதிரி இருந்திருக்கலாம்!)

அந்த ஓட்டலில் கல்லாவில் ஒரு முதியவர் அமர்ந்திருப்பார். அவருடைய மகன் ஆட்களை வேலை வாங்கிக் கொண்டிருப்பான். அவனுக்கு முப்பது வயது இருக்கலாம். குட்டையாக, பருமனாக, திரைப்படங்களில் வரும் வில்லனின் அடியாள் போல் இருப்பான். ஓட்டல் ஊழியர்களிடம் அவன் கடுமையாகப் பேசுவதை முதல் நாளே கவனித்தேன். சாப்பிட வருபவர்களிடம் மட்டும் சிரித்துக் கொண்டே குழைந்து குழைந்து பேசுவான்.

மூன்றாம் நாள் மதியம் நான் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு உள்ளே பார்த்தேன். ஒரு கிளீனர் பையன் - அவனுக்குப் பன்னிரண்டு வயதுதான் இருக்கும் - 'வேணாம் முதலாளி' என்று கதறிக் கொண்டிருக்க, முதலாளியின் மகன் அந்த கிளீனர் பையன் வைத்திருந்த துடைப்பத்தையே வாங்கி அவனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். ஏழெட்டு அடிகள் அடித்து விட்டுத் துடைப்பத்தைக் கீழே போட்டதும், கிளீனர் பையன் அழுது கொண்டே துடைப்பத்தை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.

கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளி நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 'அடிக்காதே' என்றோ, 'அடித்தது போதும்' என்றோ ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் - அவர்களில் பலர் அந்த ஊர்க்காரர்கள் - எதுவும் சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"என்ன சார் இது அக்கிரமம்?" என்றேன், என் பக்கத்தில் இருந்த ராமலிங்கத்திடம்.

"இது அடிக்கடி நடக்கறதுதான் சார். அந்தப் பையன் பாவம் ஒரு அநாதை. இவன்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படறான்" என்றார் அவர்.

அன்று மாலை என் வேலை முடிந்து விட்டது. அன்று இரவே நான் அந்த ஊரிலிருந்து கிளம்பி விட்டேன்.

எத்தனையோ வருடங்கள் ஆகியும். அந்தச் சிறுவனின் பரிதாபமான ஓலமும், முதலாளியின் மகனின் இரக்கமற்ற செயலும் என் கண் முன் அடிக்கடி வந்து போய் எனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் கழித்து மீண்டும் அந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. வேலை விஷயமாக இல்லை. நான் வேலையிலிருந்து ஒய்வு பெற்றுச் சில வருடங்கள் ஆகி விட்டன. அந்த ஊரில் இருந்த கோயில் பற்றி ஒரு பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைப் படித்து விட்டு, என் மனைவி அங்கே செல்ல விரும்பினாள்.

முன்பு அலுவலக வேலையாக அந்த ஊருக்குப் போனபோது அந்தக் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்படவில்லை. ஆனால் இப்போது போக வேண்டும் என்று தோன்றியது.

என் உள்மனதில் 'அந்த மங்கள விலாஸ் ஓட்டல் இன்னும் இருக்குமா, அந்தச் சிறுவன் இப்போது எப்படி இருப்பான், முதலாளி இன்னும் உயிரோடு இருப்பாரோ (வாய்ப்பில்லை!), முதலாளியின் மகன் - சிறுவனைப் போட்டு அடித்த அந்த முரடன்- எப்படி இருப்பான்' என்றெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்திருக்கலாம்!

இத்தனை வருடங்களில் ஊர் அதிகம் மாறி விடவில்லை. கோயிலுக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை மட்டும் சற்று அதிகமாகி இருப்பதாகத் தோன்றியது.

கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்ததும், மங்கள விலாஸ் ஓட்டல் பற்றி யாரிடமாவது விசாரிக்கலாமா என்று யோசித்தேன்.

ராமலிங்கத்தின்  நினைவு வந்தது. அவர் இந்த ஊர்க்காரர்தானே? என்னுடன் மூன்று நாட்கள் உடன் இருந்த அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்காமல், அற்பத்தனமான ஆர்வத்தால் மங்கள விலாஸ் ஒட்டலையும், அங்கிருந்த மனிதர்களையும் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததை எண்ணிச் சற்று அவமானமாக உணர்ந்தேன். அர்த்தமில்லாத ஆர்வங்கள் நம்மை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன!

அவரைப் பற்றி விசாரித்தபோது, அவர் வீடு அருகில்தான் இருப்பதாகச் சொன்னார்கள். தேடிக் கொண்டு போனேன். என் மனைவிக்கு இதில் சற்றும் விருப்பமில்லை. "அவர் என்ன உங்களுக்கு நண்பரா? சாமி தரிசனம் முடிஞ்சு போச்சு. பஸ்ஸைப்  பிடிச்சு ஊருக்குப் போகிற வழியைப் பார்க்காமல்..." என்று தன் அதிருப்தியைத் தெரிவித்தாள்.

வீட்டில் ஒரு முதியவர் இருந்தார். அவரிடம் ராமலிங்கத்தைப் பற்றி விசாரித்ததும், "சார் நீங்களா? வாங்க!" என்று உற்சாகமாக வரவேற்றார். அட! இவர்தான் ராமலிங்கமா! அடையாளமே தெரியவில்லையே!

"எனக்கு உங்களை அடையாளம் தெரியலியே! உங்களுக்கு என்னை எப்படி ஞாபகம் இருக்கு?" என்றேன்.

"நான் பார்த்த இருபது, முப்பது ஆடிட்டர்களில் நாங்கள் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதைக் கூட ஏத்துக்காத ஒரே ஆள் நீங்கதான். என்னை ஞாபகம் வச்சுக்கிட்டு என் வீட்டைத் தேடி வந்திருக்கீங்களே!" என்றார் ராமலிங்கம், நெகிழ்ச்சியுடன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசி விட்டு, "ஆமாம் மங்கள விலாஸ் ஓட்டல் எப்படி இருக்கு?" என்றேன்.

"அதை மூடிட்டாங்களே!" என்றார் சுருக்கமாக.

"அங்கே ஒரு சின்னப் பையன் இருந்தானே, அந்த முதலாளி மகன் கூட அவனைத் துடைப்பக் கட்டையால அடிச்சானே..."

"அவனா? கொஞ்ச நாள்ள அந்தப் பையன் எங்கியோ ஓடிட்டான். அப்புறம் அவங்களுக்குச் சரியான ஆள் கிடைக்கலே! பெரியவர் போய்ச் சேர்ந்துட்டாரு. சண்முகத்தால - அதான் கட்டையா குட்டையா இருப்பானே, பெரியவரோட பையன்-  ஓட்டலை நடத்த முடியல. புதுசா இன்னொரு ஓட்டல் வேற வந்துடுச்சு. நஷ்டத்தைத் தாங்க முடியாம ஓட்டலை மூடிட்டான்."

"அப்புறம்?"

'இந்தக் கதையெல்லாம் உங்களுக்கு எதற்கு?' என்ற பாவனையுடன் என் மனைவி என்னை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். "பஸ் போயிடப் போகுது!" என்றாள் சூசகமாக.

"பஸ் நிறைய இருக்கு, கவலைப்படாதீங்க!" என்றார் ராமலிங்கம், என் மனைவியின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல்!

"அப்புறம் சண்முகம் ரொம்பக் கஷ்டப்பட்டான். கூலி வேலை செஞ்சுதான் பொழப்பை நடத்த வேண்டியிருந்தது. முதலாளியா இருந்து ஆளுங்களை அதட்டி மிரட்டிக்கிட்டிருந்தவன் முதலாளிங்க கிட்டப் பணிஞ்சு நடக்க வேண்டிய நிலைமை! அவனுக்கு ரெண்டு பசங்க. அவங்க பெரியவங்களானதும் ஓட்டல் இருந்த இடத்தை வித்துட்டு அந்தப் பணத்தில் தொழில் செய்யப் போறோம்னு சொன்னாங்க.

"சண்முகமும் நிலத்தை வித்து அவங்களுக்குப் பணத்தைக் கொடுத்தான். பணத்தை வாங்கிக்கிட்டுப் போனவங்கதான்! பெத்தவங்க எப்படி இருக்காங்கன்னு கூடக் கவலைப்படல. சண்முகத்தோட பொண்டாட்டியும் போய்ச் சேந்துட்டா. இப்ப வேலை செய்ய உடம்புல தெம்பு இல்லாம, வீடு வாசல் இல்லாம, கோயில் வாசல்ல உக்காந்துக்கிட்டுப் பிச்சை எடுத்துக்கிட்டு, அங்கியே படுத்துத் தூங்கிக்கிட்டிருக்கான்."

"அடப்பாவமே!" என்றேன் நான்.

ராமலிங்கத்திடம் விடைபெற்றுக் கிளம்பினோம். வெளியே வந்ததும் "அந்த சண்முகம் கோயில்ல இருக்கானான்னு பாக்கறதுக்காக மறுபடியும் கோயிலுக்குப் போகணும்னு கெளம்பாதீங்க. என்னால நடக்க முடியாது. பஸ்ஸுக்கும் நேரமாயிடுச்சு!" என்றாள் என் மனைவி.

முரடனாக, அதிகாரம் செய்து கொண்டு இருந்தவனாக நான் பார்த்த சண்முகத்தை, 'ஐயா சாமி!' என்று கெஞ்சும் பிச்சைக்காரனாகப் பார்க்க எனக்கும் விருப்பமில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்.

பொருள்:
எலும்பு இல்லாத புழு போன்ற உயிரினங்களை வெய்யில் வாட்டுவது போல், அன்பு இல்லாதவர்களை அறம் வாட்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Mangala Vilas Hotel' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


























Sunday, June 25, 2017

76. நம்ப முடியவில்லை!

குணசேகரன் அந்த அலுவலகத்தில் சேர்ந்து 20 வருடங்கள் ஆகி விட்டன. இதுவரை அவர் மீது யாரும் ஒரு சிறு குறை கூடக் கூறியதில்லை. ஒருபுறம் மேலதிகாரிகளிடம் அவருக்கு நல்ல பெயர் - பொறுப்புள்ளவர், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், நேர்மையானவர் என்று. மறுபுறம் அவருடனும், அவருக்குக்  கீழேயும் பணிபுரிபவர்களிடம் அன்புடனும், கனிவுடனும், பொறுமையாகவும் நடந்து கொள்பவர் என்றும் பெயர் உண்டு.

அதனால்தான் குணசேகரனைப் பற்றி நிறுவனத்தின் தணிக்கையாளர் சொன்ன விஷயத்தை நிர்வாக இயக்குனர் நம்பிராஜனால் நம்ப முடியவில்லை.

"அப்படி இருக்க வாய்ப்பே இல்லை, சார். குணசேகரன் மிக நேர்மையானவர். அவர் எப்படி கணக்குகளில் மோசடி செய்து பணம் கையாடியிருக்க முடியும்?" என்றார் நம்பிராஜன்.

"எங்கள் அனுபவத்தில் இதுபோல் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறோம், சார். அகப்பட்டுக் கொள்ளும் வரை எல்லோருமே நல்லவர்கள்தான்!" என்றார் தணிக்கையாளர்.

"நீங்கள் சொல்வது அனுமானத்திலா, அல்லது ஆதாரத்துடனா? ஏனெனில் இது போன்ற சில குற்றச்சாட்டுக்கள் அனுமானத்தின் பேரில் சொல்லப்படுவதை நாம் பார்த்திருக்கிறோமே!"

"நான் சொல்வது சந்தேகத்தின் அடிப்படையில்தான். இது ஒரு திறமையான மோசடி என்று நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், சுமார் 2 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். உங்கள் நிறுவனம்  ஆண்டுக்குப் பல லட்சங்கள் லாபம் ஈட்டுவதால், உங்களுக்கு இந்த இழப்பு புலப்படவில்லை."

"குணசேகரன் எளிமையான வாழ்க்கை நடத்துபவர். அவருக்குப் பணத்தாசை ஏற்பட்ட வாய்ப்பு இல்லை."

"பணத்தாசை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எல்லோருக்கும் பணத்தேவைகள் உண்டு. தேவை ஏற்படும்போது எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே ஏற்படும். நியாயமான வழிகளில் பணம் அதிகம் சம்பாதிக்க முடியாதவர்கள் வழி தவறிப் போவது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான். சரி, குணசேகரனின் குடும்பம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற செலவுகளுக்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டிருக்கலாம்."

"அவருக்கு ஒரே பையன்தான். அவன் நல்ல மதிப்பெண்கள் வாங்கி ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் மெரிட் சீட் கிடைத்துப் படித்துக் கொண்டிருக்கிறான். அதனால் கல்லூரிக் கட்டணம் கூடக் குறைவுதான்."

"நீங்கள் அவரைக் கண்காணிப்பது நல்லது. கண்காணித்து வந்தால், அடுத்த முறை மோசடி செய்யும்போது மாட்டிக் கொள்வார்."

தணிக்கையாளர் சென்றதும் நம்பிராஜன் சற்று நேரம் யோசனை செய்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, குணசேகரனை நம்பிராஜன் தன் அறைக்கு அழைத்தார். உட்கார வைத்து, அலுவலக வேலை சம்பந்தமாக ஓரிரு கேள்விகள் கேட்ட பிறகு, திடீரென்று, "ஆமாம், உங்கள் பையன் எப்படிப் படிக்கிறான்?" என்றார்.

"நன்றாகப் படிக்கிறான் சார்" என்றார் குணசேகரன். அவர் குரலில் ஒரு நடுக்கம் இருப்பதாக நம்பிராஜனுக்குத் தோன்றியது.

"எந்தக் கல்லூரி?"

குணசேகரன் கல்லூரியின் பெயரைச் சொன்னார்.

"அந்தக் கல்லூரியில் கட்டணம் அதிகம், நன்கொடை என்று வேறு ஒரு பெரிய தொகை வாங்குகிறார்கள் என்று சொல்கிறார்களே!"

"என் பையன் மெரிட் சீட்டில்தானே படிக்கிறான்?" என்றார் குணசேகரன். அவர் குரல் எழும்பாமல் பேசுவது தெளிவாகத் தெரிந்தது.

"ப்ளஸ் டூவில் உங்கள் பையன் மார்க் எவ்வளவு?"

குணசேகரனுக்கு முகம் வியர்த்தது. "...சரியாக நினைவில்லை. நல்ல மார்க்தான்..."

"சாரி குணசேகரன்! உங்களை நான் நம்பினேன். நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள்."

"இல்லை சார். நல்ல மார்க்தான்..."

"உங்கள் மகன் மார்க்கைப் பற்றி நான் சொல்லவில்லை. என்னை ஏமாற்றிப் பணமோசடி செய்து வருகிறீர்களே, அதைச் சொன்னேன்."

"சார், என்ன சொல்கிறீர்கள்? நான் அப்படி எதுவும்..."

"நிறுத்துங்கள். உங்கள் மோசடியை நம் ஆடிட்டர் கண்டுபிடித்து விட்டார். நான் போலீசில் புகார் செய்தால் நீங்கள் சிறைக்குப் போக வேண்டி இருக்கும். உங்களை நல்லவர் என்று நினைத்தேன். என்னை ஏன் ஏமாற்றினீர்கள்?"

சட்டென்று குணசேகரன் குலுங்கக் குலுங்க அழுதார். "எல்லாம் போச்சு. என் மகனுக்கு நல்லது செய்வதாக நினைத்து என் வாழ்க்கையை நானே பாழாக்கிக் கொண்டு விட்டேன்."

"சொல்லுங்கள்! நல்லவராக இருந்த நீங்கள் ஏன் வழி மாறிப் போனீர்கள்?"

"என் பையன் நல்ல மார்க் வாங்கவில்லை. ஆனால் அவனை நல்ல படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் என் சக்திக்கு மீறி அவனை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்து விட்டேன். அவனுக்கு மெரிட் சீட் கிடைத்திருப்பதாக ஆஃபீசில் சொல்லிக் கொண்டிருந்தேன். இல்லாவிட்டால் என்னால் எப்படி இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்க முடியும் என்று சந்தேகம் வருமே! ஆனால் வெளியில் மற்றவர்களிடம் நீங்கள்தான் பணம் கொடுத்து உதவுவதாகச் சொல்லியிருக்கிறேன். என் மனைவியும் மகனும் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்."

"அதுதானே உண்மை!"

"சார்?"

"மேலே சொல்லுங்கள்."

அந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னுடைய நகைச்சுவையை நினைத்து நம்பிராஜனுக்குச் சிரிப்பு வந்தது.

"ஆரம்பத்தில் கடன் வாங்கினேன். பிறகு கடன்காரர்கள் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல்..." மேலே சொல்ல முடியாமல் குணசேகரன் நிறுத்தினார்.

தன் நிலைமையை உணர்ந்தவராக மறுபடியும் அழ ஆரம்பித்தார். "என் வாழ்க்கையுடன் சேர்ந்து என் மகனின் எதிர்காலமும் அழியப் போகிறது."

நம்பிராஜன் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக குணசேகரனிடம் கூறினார்:

"குணசேகரன்! நீங்கள் வழி தவறியதற்குக் காரணம் பணத்தாசை இல்லை. உங்கள் மகன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு. ஆனாலும் நீங்கள் செய்தது குற்றம்தான். உங்களை போலீசில் ஒப்படைக்க நான் விரும்பவில்லை.

"மீண்டும் நீங்கள் இந்தக் குற்றத்தைச் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இப்படி ஒரு தப்பைச் செய்த உங்களை நான் வேலையில் தொடர அனுமதிக்க முடியாது. உடல்நிலை சரியில்லை என்று சொல்லி
வி ஆர் எஸ் வாங்கிக் கொள்ளுங்கள்.

"இன்னும் இரண்டு வருடங்களில் உங்கள் மகனின் படிப்பு முடிந்து விடும். அதுவரை அவன் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும், உங்கள் குடும்பம் நடப்பதற்கும் தேவையான அளவு பணம் உங்களுக்குக் கிடைக்கும்படி நான் பார்த்துக் கொள்கிறேன்.

"நீங்கள் போகலாம் - உங்கள் சீட்டுக்கு இல்லை. வீட்டுக்கு. உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் நான்தான் உங்களை மருத்துவரிடம் அனுப்பியதாகவும், அங்கிருந்து நீங்கள் வீட்டுக்குச் சென்று விட்டதாகவும், மருத்துவர் ஆலோசனைப்படி நீங்கள் இனி வேலைக்கு வராமல் வி ஆர் எஸ் வாங்கிக் கொண்டு வீட்டில் இருக்கப் போவதாகவும் நான் அலுவலகத்தில் சொல்லி விடுகிறேன். நீங்களும் உங்கள் வீட்டிலும், உங்கள் அலுவலக நண்பர்களிடமும் அப்படியே சொல்லி விடுங்கள்.

"இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு பெரிய தொகைக்கான செக் உங்கள் வீட்டுக்கு வரும். வி ஆர் எஸ் மூலம் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்குமோ அதை விட அதிகமாகவே கிடைக்கும். இத்தனை வருடங்கள் இந்த நிறுவனத்துக்காக உழைத்ததற்கு என் நன்றி."

"சார்! நான் உங்களுக்குச் செய்தது துரோகம். ஆனால் நீங்கள் இவ்வளவு பெருந்தன்மையாக...என் பையன் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பித்ததும், நான் எடுத்த பணத்தை உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். அதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்?"

இருக்கையிலிருந்து தடுமாறியபடி எழுந்து கைகூப்பி விடைபெற்றார் குணசேகரன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 
மறத்திற்கும் அஃதே துணை.

பொருள்:
அறியாதவர்கள் அறம்தான் அன்பைச் சார்ந்திருக்கும் என்று கூறுவர். ஆனால் மறத்துக்கும் (அறத்துக்கு மாறான செயல்களுக்கும்) அன்பே காரணமாக அமையக் கூடும்.)

(குறிப்பு: மறத்தை வீழ்த்தவும் அன்பு துணை நிற்கும் என்றே பெரும்பாலும் இக்குறளுக்குப் பொருள் கூறப்பட்டு வந்திருக்கிறது. 'மறத்துக்கும் அஃதே துணை' என்ற வரிக்கு 'மறத்தை எதிர்க்க உதவும் என்று பொருள் கொள்வது சரியாக எனக்குப் படவில்லை. ஆயினும், என்னை அறியாமலேயே, இந்தக் கதை இரண்டு பொருட்களுக்குமே பொருந்துமாறு அமைந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது!)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Unbelievable' the English version of this story.   
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















Saturday, April 22, 2017

75. தம்பியிடம் கற்ற பாடம்!

"என்னங்க, ரொம்ப நாள் கழிச்சு உங்க தம்பி தன் குடும்பத்தோட வராரு. ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு வீட்டில இருங்களேன்" என்றாள் ரேவதி.

"என்ன பொறுப்பு இல்லாம பேசற? நான் எப்படி லீவு போட முடியும்?" என்றான் குரு.

"லீவு போடாட்டாலும் பரவாயில்லை. இப்படி எரிஞ்சு விழாமலாவது இருங்க!" என்று முணுமுணுத்தாள் ரேவதி.

"என்ன முணுமுணுக்கற?"

"ஒண்ணுமில்ல. சீக்கிரமா ஆஃபீசுக்குக் கிளம்புங்க. லேட்டாயிடப் போகுது!"

"ஆமாம். இன்னிக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. எல்லாரும் எனக்காகக் காத்துக்கிட்டிருப்பாங்க."

இரவு குரு வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் ஒரே உற்சாகம். குருவின் மகள் தீபா, மகன் கார்த்திக் இருவரும் தங்கள் சித்தப்பா குடும்பத்துடன் மிக நெருக்கமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

குருவைப் பார்த்ததும் இருவரும் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டார்கள்.

தம்பி மனைவி கலாவையும், அவர்கள் மகன்கள் விச்சு, நரேஷ் ஆகிய இருவரையும், விசாரித்து விட்டு, குரு தன் தம்பியிடம் சற்று நேரம் உரையாடினான்.

"இத்தனை நேரம் எல்லாரும் பெரிசா சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க. உங்க தலையைக் கண்டதும் நம்ப குழந்தைங்க ரெண்டு பேரும் அடங்கிட்டாங்க!" என்றாள் ரேவதி குருவிடம் தனிமையில்.

"நான் என்ன செஞ்சேன்?" என்றான் குரு கோபமாக.

"எதுக்கெடுத்தாலும் இப்படி வள்ளுன்னு விழறீங்களே, அது போதாதா? என்னிக்காவது குழந்தைங்ககிட்டயாவது, எங்கிட்டயாவது அன்பாகப் பேசி இருக்கீங்களா? உங்க தம்பி அவரு மனைவிகிட்டயும் பிள்ளைங்ககிட்டயும் எவ்வளவு அன்பா இருக்காரு!"

"என்ன பேசறே நீ? நான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு வசதி செஞ்சு கொடுத்திருக்கேன்? என் தம்பிக்கு வருமானம் கம்மி. என்னை மாதிரி அவன் பெண்டு பிள்ளைகளுக்கு செய்ய முடியுமா?"

"நீங்க பணத்தைப்பத்திப் பேசறீங்க! வசதி செஞ்சு குடுத்திருக்கீங்க. இல்லேங்கல. ஆனா எங்ககிட்ட அன்பா நடந்துக்க உங்களுக்கு நேரமும் இல்ல, அப்படி ஒரு சிந்தனையும் இல்ல. உங்களைக் கண்டாலே நம்ப குழந்தைங்க பயப்படறாங்க. உங்க தம்பி புள்ளைங்க அவங்க அப்பாகிட்ட எவ்வளவு நெருக்கமா இருக்காங்கன்னு பாருங்க."

"நம்ப வீட்டுக்கு வந்திருக்கறதினால என் தம்பி தன் பையன்களைக் கோவிச்சுக்காம இருப்பான். அவன் வீட்டில இருக்கும்போது என்னை மாதிரிதான் இருப்பான்."

"நிச்சயமா இல்ல. அப்படி இருந்திருந்தா உங்க தம்பி குழந்தைகளுக்கு அவர்கிட்ட பயம் இருக்காதா? நீங்க வேணும்னா நாளைக்கு கவனிச்சுப் பாருங்க."

குரு பதில் பேசாமல் மௌனமாக இருந்தான்.

அடுத்த நாள் குரு அலுவலகத்துக்குப் போகாமல் வீட்டில் இருந்தான். தம்பி குழந்தைகள் அவர்கள் அப்பாவிடம் பேசுவதை கவனித்தான். 'தீபாவோ, கார்த்திக்கோ என்னிடம் இவ்வளவு சுதந்திரமாகப் பேசுவார்களா? ரேவதி சொல்வது சரிதானோ?'

தற்செயலாக சமையற்கட்டுப் பக்கம் போனபோது தீபா அவள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது குருவின் காதில் விழுந்தது. "ஏம்மா, விச்சுகிட்டயும், நரேஷ்கிட்டயும் சித்தப்பா எப்படி ஜாலியா சிரிச்சுப் பேசிக்கிட்டு இருக்காரு! ஏன் அப்பா மட்டும் எங்ககிட்ட எரிஞ்சு விழுந்துகிட்டே  இருக்காரு?"

குருவுக்கு, தன் தலையில் யாரோ ஓங்கி அடித்த மாதிரி இருந்தது.

வசதியான வாழ்க்கையைப் பெற்றிருக்கும் தன் குடும்பத்தை விட, வசதிக் குறைவான தன் தம்பியின் குடும்பம்தான் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்வதாகத் தோன்றியது. இதற்குக் காரணம் தன் தம்பி தன் குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வதுதானோ?

குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வதைப் பற்றித் தன் தம்பியிடம் தான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான் குரு.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்:
உலகில் இன்புற்று வாழ்பவர்கள் அடையும் சிறப்பு அவர்கள் அன்புள்ளம் கொண்டு விளங்குவதன் பலனாக அவர்கள் பெறுவதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Brother's Family' the English version of this story.   
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்