"பாத்துப் பாத்துக் கட்டின வீடு. இப்ப நம்ம கையை விட்டுப் போகப் போகுதே!" என்று புலம்பினான் பிரபாகர்.
"இப்ப புலம்பி என்ன பிரயோசனம்? 'பிசினஸ் எல்லாம் வேண்டாம், இருக்கற வேலையை விட்டுடாதீங்க, வர சம்பளம் போதும். நான் எப்படியோ குடும்பத்தை சமாளிச்சு நடத்திக்கறேன்'னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். கேட்டீங்களா?" என்றாள் அவன் மனைவி சாரதா.
"நல்லா நடத்தினியே குடும்பத்தை! நகைச் சீட்டு, புடவைச் சீட்டு, பாத்திரச் சீட்டுன்னு நீ செலவழிக்கற பணத்துக்கு என் சம்பளம் போதாதுன்னுதான் பிசினஸ் ஆரம்பிச்சேன். பாங்க்கில செக்யூரிட்டி கொடுத்தாதான் கடன் கொடுப்பேன்னு சொன்னதால, வீட்டை அடமானம் வைக்கும்படி ஆயிடுச்சு. அப்ப கூட நீ உன் நகைகளைக் கொடுத்து உதவி செஞ்சிருந்தா, வீட்டை அடமானம் வச்சிருக்க வேண்டி இருந்திருக்காது!"
"சும்மாக்கானும் சொல்லாதீங்க. உங்க அகலக்கால் வைக்கிற முயற்சிகளுக்கு என் நகைகள் எப்படிப் போதும்? நீங்க பார்ட்னரா சேத்துக்கிட்டீங்களே ஒரு நண்பர், அவர் ஒர்க்கிங் பார்ட்னர்னு சொல்லிக்கிட்டு, ரொம்ப சாமர்த்தியமா, ஒரு பைசா கூட முதலீடு செய்யாம, பிசினஸ்ல பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி, உங்களை நடு ரோட்டில நிறுத்திட்டு, தான் ஒரு சேதாரமும் இல்லாம தப்பிச்சுக்கிட்டாரு. உங்க ஏமாளித்தனத்துக்கு என்னைக் குத்தம் சொல்லாதீங்க!" என்றாள் சாரதா, ஆற்றாமையுடன்.
மனைவியின் பேச்சு பிரபாகருக்கு ஆத்திரமூட்டினாலும், அவள் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்து, பேசாமல் இருந்தான்.
நண்பனின் யோசனையை ஏற்றுத் தனக்குத் தெரியாத தொழிலில் இறங்கியது முட்டாள்தனம். ஒர்க்கிங் பார்ட்னர் என்று தன்னுடன் தொழிலில் இணைந்த நண்பன் ஒரு பைசா கூட முதலீடு செய்யாதபோது, தனக்கு இருந்த ஒரே சொத்தான வீட்டை அடமானம் வைத்தது இன்னும் பெரிய முட்டாள்தனம்.
தொழில் சரியாக வரவில்லை என்று தெரிந்ததும் சீக்கிரமே அதை மூடி விட்டு வெளியே வராமல், சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும் என்ற நண்பனின் பேச்சை நம்பித் தொடர்ந்து தொழிலை நடத்தி, இழப்பை இன்னும் அதிகரித்து, இப்போது வீட்டை விற்றுக் கடனை அடைத்து விட்டு வெளியே வந்தால் போதும் என்ற நிலைமை.
வீட்டை விற்றுக் கடனை அடைத்து, மீதமிருந்த சிறிதளவு பணத்தைச் சேமிப்பாக வைத்துக் கொண்டு, சுமாரான ஒரு வேலையைத் தேடிக் கொண்டு, ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினான் பிரபாகர்.
அழைப்பு மணி அடித்ததும், கதவைத் திறந்தான் பிரபாகர். அவன் வீட்டை விலைக்கு வாங்கியிருந்த மாசிலாமணிதான் வந்திருந்தார்.
"வாங்க, சார்!" என்று அவரை வரவேற்று அமர வைத்தான் பிரபாகர்.
"வீடு எப்படி இருக்கு?" என்றான் பிரபாகர்.
"வீடு நல்லாத்தான் இருக்கு. வீட்டை விக்கறப்ப, ஒரு பழைய சாய்வு நாற்காலியை விட்டுட்டுப் போனீங்க இல்ல?" என்றார் மாசிலாமணி.
"ஆமாம். அது என் அப்பா பயன்படுத்தியது. அது உங்ககிட்டயே இருக்கட்டும்னு சொன்னேனே!"
"தப்பா நினைச்சுக்காதீங்க. வீட்டை வித்தவங்க பொருள் எதையும் நாங்க வச்சுக்கக் கூடாதுன்னு என் மனைவி சென்ட்டிமென்ட்டலா நினைக்கறாங்க. அதானால, அதை உங்ககிட்டயே திருப்பிக் கொடுத்துடறேன். வண்டியில ஏத்தி அனுப்பி இருக்கேன், வந்துக்கிட்டு இருக்கு. உங்ககிட்ட நேரில சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன்."
பிரபாகர் மௌனமாக இருந்தான். அவன் அப்பா பயன்படுத்திய அந்தப் பெரிய மரச் சாய்வு நாற்காலியை எப்போதுமே அவன் மனைவிக்குப் பிடித்திதல்லை.
"உக்காந்தா ஆளை உள்ளே அழுத்திடுது. எழுந்திருக்கவே கஷ்டமா இருக்கு. யாராவது தூக்கி விடணும் போல இருக்கு! இதை வித்துடுங்க" என்று அவனிடம் பலமுறை அவள் சொல்லி இருக்கிறாள்.
பிரபாகர்தான் தன் தந்தையின் நினைவாக அது இருக்கட்டும் என்று எண்ணி அதை வைத்திருந்தான். ஆயினும், அதை யாரும் பயன்படுத்தியதில்லை. சாரதா சொன்னது போல், அதில் சாய்ந்து உட்கார்ந்து விட்டு எழுந்திருப்பதே ஒரு கடினமான உடற்பயிற்சிதான்!
வீட்டை விற்றபின் தான் செல்லப் போகும் சிறிய வாடகை வீட்டுக்கு அந்தச் சாய்வு நாற்காலியை எடுத்துச் சென்றால் அது இடத்தை அடைக்கும் என்பதால் அதை விற்க முயன்றான் பிரபாகர். ஆனால், பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் யாரும் அதை வாங்க ஆர்வம் காட்டவில்லை. எனவே, தன் வீட்டை வாங்கிய மாசிலாமணியிடம், அதை அவரே வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வந்தான் பிரபாகர். அதற்காக அவன் அவரிடம் விலை எதுவும் வாங்கவில்லை.
இப்போது அந்தச் சாய்வு நாற்காலி அவனுடைய சிறிய வாடகை வீட்டில் கணிசமான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு முன்னறையில் ஜம்மென்று அமரப் போகிறது!
பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு கையை விட்டுப் போய் விட்டது. வேண்டாமென்று விட்டு விட்டு வந்த பழைய சாய்வு நாற்காலி அவனிடமே திரும்பி வருகிறது!
'வேடிக்கைதான்!' என்று நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான் பிரபாகர்.
குறள் 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.