About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, February 25, 2019

240. ஓய்வுக்குப் பின்...

"முப்பத்திரண்டு வருஷம் அரசாங்க உத்தியோகம் பாத்துட்டு ரிடயர் ஆயிட்ட. இனிமே என்ன செய்யப் போற?" என்றார் மணி, தன் நண்பர் பாண்டுவிடம்.

"தெரியல. வீட்டில உக்காந்து பொழுதைக் கழிக்க வேண்டியதுதான்" என்றார் பாண்டு.

"உன்னைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்" என்றார் மணி.

"என்ன கேள்விப்பட்ட? தப்பா எதுவும் இல்லியே!" 

"நீ தப்பு எதுவுமே செய்யலேன்னுதான் கேள்விப்பட்டேன்!"

"புரியலையே?"

"என்ன புரியல? நீ வேலை பாத்தது லஞ்சத்துக்குப் பெயர் போன ஒரு டிபார்ட்மென்ட். பணம் கொடுக்காம அங்கே எந்த வேலையும் நடக்காதுன்னு உலகத்தில எல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு இலாகாவில் வேலை செஞ்சுக்கிட்டு, ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காம. முப்பத்திரண்டு வருஷம் ஓட்டியிருக்கியே, அதைச் சொன்னேன்."

"நீ சொல்ற. ஆனா, அந்த ஆஃபீஸ்ல வேலை செஞ்சதால, நானும்  லஞ்சம் வாங்கியிருப்பேன்னுதானே வெளியில எல்லாரும் நினைப்பாங்க?" என்றார் பாண்டு, சற்று வருத்தத்துடன்.

"அப்படி இல்ல. நீ எப்படி எளிமையா வாழறேன்னு எல்லாரும் பாத்துக்கிட்டிருக்காங்க. உன் ஆஃபீஸ்ல எல்லாரும் உன்னைப் பத்தி, 'இவர் பணம் வாங்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கறது எங்களையும் இல்ல பாதிக்குது?'ன்னு பேசிக்கிறாங்க. அதோட, நீ நேர்மையா இருந்ததால, உன்னை எத்தனை தடவை டிரான்ஸ்ஃபர் பண்ணி, ஊர் ஊராப் போக வச்சு, உன்னை அலைக்கழிச்சிருக்காங்கன்னு எல்லாரும் பாத்திருக்காங்களே! அப்படி இருக்கறப்ப, நீ தப்பு பண்ணாதவன்னு எல்லாருக்கும் தெரியாதா?" என்றார் மணி.

"அப்படியா சொல்ற? அப்படி இருந்தா, எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!" என்றார் பாண்டு.

"ஏங்க, ரிடயர் ஆகி ஒரு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ளே, வேற வேலைக்குப் போறேன்னு கிளம்பிட்டீங்களே?" என்றாள் பாண்டுவின் மனைவி கிரிஜா.

"நான் வேலைக்குப் போகல. ஒரு தொண்டு நிறுவனத்தில் வாலன்ட்டியர்கள் வேணும்னு கேட்டிருந்தாங்க. அங்கே போய் தினம் கொஞ்ச நேரம் வேலை செஞ்சுட்டு வரலாம்னு பாக்கறேன். இது சம்பளத்துக்கு வேலை பாக்கறது இல்ல. அந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலமா என்னால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்குச் செய்யறது" என்றார் பாண்டு.

"ஏங்க, முப்பத்திரண்டு வருஷமா அரசாங்கத்தில் நேர்மையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்களைப் பத்தி எல்லாரும் நல்லபடியாப் பேசறதா உங்க நண்பர் மணி கூட சொன்னாரு. இது சேவை இல்லையா? இப்ப எதுக்கு ஓய்வா இருக்க வேண்டிய காலத்தில, மறுபடி சேவைன்னு கிளம்பறீங்க?" என்றாள்  கிரிஜா.

"அரசாங்க வேலையில என் கடமையைச் செஞ்சதுக்குப் பேரு சேவை இல்லை. வாங்கின சம்பளத்துக்கு, என் கடமையை ஒழுங்கா செஞ்சேன். நான் நேர்மையா இருக்கேன்னு எல்லாரும் சொல்றது, நான் தப்பு பண்ணாம இருந்தேங்கறதைத்தான். தப்பு பண்ணாம, கெட்ட பேர் வாங்காம வாழ்ந்தது நல்ல விஷயம்தான். அது நாம இயல்பா எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கறதுதான். அது பாதி வாழ்க்கைதான். மனுஷனாப் பிறந்ததுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சாதான், வாழ்க்கை நிறைவா இருக்கும். நான் தப்பு பண்ணலேன்னு மத்தவங்க சொல்றது சரி. ஆனா, நான் நல்லது பண்ணியிருக்கேன்னும் சொன்னாதான் எனக்குத் திருப்தியா இருக்கும்!" என்றார் பாண்டு.

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

பொருள்:  
தன் மீது பழி இல்லாமல் வாழ்பவர்தான் வாழ்பவராகக் கருதப்படுவார். புகழ் இல்லாமல் வாழ்பவர், வாழாதவராகத்தான் கருதப்படுவார்.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்




















Saturday, February 23, 2019

239. நல்லசிவம் விட்டுச் சென்ற சொத்து

"பேருதான் நல்லசிவம். ஒரு நல்ல காரியம் கூட செஞ்சதில்ல மனுஷன்!"

"செத்தவரைப் பத்தித் தப்பாப் பேச வேண்டாமே!"

"தப்பா எதுவும் சொல்லல. அவரைப் பத்தி சொல்றதுக்கு நல்லதா எதுவும் இல்லேன்னு சொன்னேன்!"

"ஏன் இல்ல? ஊர்ல பெரிய மனுஷன். அரசாங்க அதிகாரிங்க யாராவது இந்த ஊருக்கு வந்தா, முதல்ல அவர் வீட்டுக்குத்தான் போவாங்க. ஒரு தடவை கலெக்டர் கூட வந்திருக்காரே!"

"வந்திருக்காங்க. மனுஷன் அவங்க யார்கிட்டயாவது சொல்லி, ஊருக்கு ஏதாவது நல்லது செஞ்சிருக்காரா? தனக்கு வேணுங்கறதை மட்டும்தானே கேட்டு வாங்கியிருக்காரு?"

அப்பாவின் சடலத்துக்கருகே அமர்ந்திருந்த சேகரின் காதில், ஊர்க்காரர்கள் பேசிக் கொண்டது அரையும் குறையுமாக விழுந்தது. 

அப்பா சுயநலமானவர்தான் என்பது அவனுக்குத் தெரியும். ஆயினும், ஒருவர் இறந்த பிறகு, அவரைப் பற்றி சம்பிரதாயமாகச் சொல்லப்படக் கூடிய நல்ல வார்த்தைகளைக் கூடவா அப்பா சம்பாதிக்கவில்லை?

ல்லசிவத்தின் காரியங்கள் முடிந்த பிறகு, அவருடைய நிலங்களையும், வீட்டையும் விற்று விட முடிவு செய்து, ஒருவரிடம் அதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான் சேகர். எல்லாம் விற்று முடியும் வரை, ஊரிலேயே இருக்க முடிவு செய்தான்.

சில நாட்கள் கழித்து, நிலங்களையும், வீட்டையும் வாங்கிக் கொள்ள சிலர் முன்வந்தனர். ஆனால், அவர்கள் கேட்ட விலை மிகவும் குறைவாக இருந்ததாக சேகருக்குத் தோன்றியது.

"அவசரத்துக்கு விக்கறேன்னு நினைச்சு, அடிமாட்டு விலைக்குக் கேக்கறாங்க போலருக்கு. இவ்வளவு குறைஞ்ச விலைக்கு நான் விக்கறதா இல்ல. நான் மெதுவா வித்துக்கறேன்" என்றான் சேகர், விற்பனைக்கு ஏற்பாடு செய்தவரிடம்.

"சொல்றேன்னு தப்பா நினைக்காதே, தம்பி. உங்க நிலத்துக்குப் பக்கத்தில இருக்கற நிலத்தில ல்லாம் விளைச்சல் அதிகம். ஆனா, உங்க நிலத்தில விளைச்சல் கம்மி. அதான் விலை குறைவாப் போகுது" என்றார் அவர்.

"அது எப்படி, எங்க நிலத்தில மட்டும் விளைச்சல் கம்மியா இருக்கும்?"

"தம்பி! நிலத்துக்குப் பராமரிப்பு அவசியம். மண் வளத்தை நல்லா வச்சுக்கணும்னா, நல்லா உழணும், உரங்கள் போடணும். இன்னும் பல விஷயங்கள் இருக்கு. விவசாயிங்க இதையெல்லாம் பாத்துப் பாத்து செய்வாங்க. பெத்த குழந்தையைப் பாத்துக்கற மாதிரி, நிலத்தைப் பாத்துப்பாங்க. ஆனா, உன் அப்பா இதிலெல்லாம் அக்கறை காட்டினதில்ல. நான் கூட அவர்கிட்ட சொல்லி இருக்கேன். 'எல்லாம் விளைஞ்சது போதும். மண்ல போய்க் காசைக் கொட்ட முடியாது'ன்னு சொல்லிட்டாரு. அவரோட இந்த மனப்பான்மையாலதான், உங்க நிலம் வளம் குறைஞ்சு போய், இன்னிக்கு மதிப்பும் குறைஞ்சு போயிருக்கு" என்றார் அவர்.

"இந்த ஊர்ல எல்லாரும் என் அப்பா மேல குத்தம் கண்டு பிடிக்கறதிலேயே குறியா இருக்கீங்க. சரி, நிலம்தான் அப்படி. ஏன் வீட்டைக் கூடக் குறைச்ச விலைக்குக் கேக்கறாங்க?" என்றான் சேகர், சற்றுக் கோபத்துடன்.

"நீயே பாருப்பா,வீடு எப்படி இருக்குன்னு. உன் அப்பா நிலத்தைப் பராமரிக்கலேன்னு சொன்னா, உனக்குக் கோபம் வருதே. வீட்டை எப்படி வச்சிருக்காருன்னு பாரு. சுவரெல்லாம் காரை போயிருக்கு. தரையெல்லாம் உடைஞ்சிருக்கு. உத்தரம் எல்லாம் அங்கங்கே உடைஞ்சு விழற மாதிரி இருக்கு."

"வீடு மோசமா இருந்தா என்ன? பூமிக்கு மதிப்பு இருக்கு இல்ல?"

"தம்பி, இது கிராமம், டவுன் இல்ல. டவுன்ல எல்லாம் பழைய வீட்டை வாங்கறவங்கள்ள பல பேரு, அதை இடிச்சுட்டுப் புது வீடோ ஃபிளாட்டோ கட்டணும்னு நினைப்பாங்க. அதனால, அங்க நிலத்தோட மதிப்பைத்தான் முக்கியமாப் பாப்பாங்க. ஆனா, கிராமத்தில பழைய வீடு வாங்கறவங்க அந்த வீட்டில குடியிருக்கணும்னு நினைச்சுத்தான் வாங்குவாங்க. அதனால, இங்கே பூமி மதிப்போடு, வீட்டு மதிப்பையும் கணக்குப் போட்டுத்தான் விலை சொல்லுவாங்க. வீட்டில ரிப்பேர் வேலை நிறைய இருக்கும்னா, அதுக்குத் தகுந்தாப்பல விலை குறையத்தான் செய்யும். ஒண்ணு சொல்றேன். தப்பா நினைச்சுக்காதே. உங்கப்பா தன்னைப் பத்தி மட்டும்தான் கவலைப்பட்டார். மத்தவங்களைப் பத்தி, அண்டை அசலைப் பத்தி,  தான் இருக்கற வீட்டைப் பத்திக் கூட அக்கறை இல்லாம இருந்தாரு. அதனாலதான் இப்படி..."

அறத்துப்பால்
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

பொருள்:  
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவரைச் சுமந்த நிலம், நல்ல விளைச்சல் இல்லாத நிலமாகக் கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்












Thursday, February 14, 2019

238. குமாரின் தந்தை

"ரொம்ப வருஷம் கழிச்சு சொந்த ஊருக்குப்  போறது சந்தோஷமா இருக்கு" என்றான் குமார்.

"ஆமாம். உன்னைச் சந்திக்கலேன்னா, எனக்கு இந்த எண்ணமே வந்திருக்காது" என்றான் ரவி.

"சின்ன வயசில ஒரே தெருவில வளர்ந்து, ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சு, ஒண்ணா விளையாடி, கொட்டமடிச்சு ஜாலியா இருந்துட்டு, அப்புறம் கல்லூரிப் படிப்புக்கு வெவ்வேற இடத்துக்குப் போனதும், நமக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா தொடர்பு விட்டுப் போனதை நினைச்சா, ஆச்சரியமாவும் இருக்கு, வருத்தமாவும் இருக்கு."

"என்ன செய்யறது? நம்ம ரெண்டு பேர் அப்பாக்களும் ஒத்தர் பின்னால ஒத்தர்னு சீக்கிரமே காலமாயிட்டாங்க. நம்ம குடும்பங்களும் ஊர்ல எல்லாத்தையும் வித்துட்டு, வேற எங்கேயோ போய் செட்டில் ஆயிட்டாங்க. நாமும் வேலைன்னு எங்கெங்கேயோ போய்க்கிட்டிருந்தோம். நாம தற்செயலா மறுபடி சந்திச்சதே ஆச்சரியம்தான்னு நினைக்கிறேன்" என்றான் ரவி.

"நீ சொல்றது சரிதான்" என்ற குமார், தொடர்ந்து, "ஆமாம், ஊர்ல நம்மை யாருக்காவது அடையாளம் தெரியுமா?" என்ற கேள்வியை எழுப்பினான்.

"நம்மைத் தெரியாட்டா என்ன? நம்ம பெற்றோர்களை ஞாபகம் வச்சுக்கிட்டிருப்பாங்களே!" என்றான் ரவி, நம்பிக்கையுடன்,

"அதுவும், அந்தக் காலத்தில உங்கப்பா ஊரிலே பெரிய பணக்காரர். அவரை எப்படி மறப்பாங்க?" என்றான் குமார்.

ரவி பெருமையுடன் சிரித்தான்.

வி சொன்னது போல், ஊரில் அனைவரும் இருவருடைய குடும்பங்களை ஞாபகம் வைத்திருந்தார்கள். இவர்களுடன் பள்ளியில் படித்து, அந்த ஊரிலேயே வசித்து வந்த சிலரும் அங்கே இருந்தனர்.

ரவியையும், குமாரையும் தங்கள் வீட்டில் தங்கவும், உணவருந்தவும் பலரும் அழைத்தனர். ஒரு சிலரின் விருந்தோம்பலை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, மற்றவர்களிடம் அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

இரண்டு நாட்களில், இருவரும் ஊரில் பலரையும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் படித்த பள்ளி இருந்த இடத்தைப் பார்த்து விட்டு வந்தார்கள். அது இடிக்கப்பட்டு, அங்கு வேறு ஏதோ கட்டிடம் வந்திருந்தது. பள்ளி வேறொரு இடத்தில், பெரிய கட்டிடத்துக்கு இடம் மாறி இருந்தது.

ரவியின் வீட்டை வாங்கியவர், அதை வேறு விதமாக மாற்றிக் காட்டியிருந்தார். குமாரின் வீடு இடிக்கப்பட்டுக் காலி மனையாக இருந்தது.

கோவில்கள் மட்டும்தான், உள்ளே வௌவால்களும், கோபுரத்தில் புறாக்களும் என்று, அதே இருட்டு குகைகளாக இருந்தன. கோவில்களுக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த குறைந்த வாட் பல்புகளைக் கொண்ட மின் விளக்குகளைத் தவிர, அதிக மாறுதல்கள் இல்லை.

 கோவில்களுக்கு வந்து போகும் பக்தர்களின் எண்ணிக்கையைப் போல், அங்கே வசித்து வந்த வௌவால்கள், புறாக்கள் இவற்றின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதாகத் தோன்றியது.

ஆற்றில் புதிய பாலம். ஆனால், பாலத்துக்குக் கீழே நீரோட்டம் இல்லை.

இரண்டு நாட்கள் ஊரைச் சுற்றியதில், மகிழ்ச்சி, ஏக்கம், வருத்தம் எல்லாம் கலந்த உணர்வு இருவருக்கும் ஏற்பட்டது.

ரிலிருந்து இருவரும் பஸ்ஸில் பயணித்து, அருகில் இருந்த ரயில் நிலையத்துக்கு வந்தனர். ரயிலுக்குக் காத்திருந்தபோது, குமார் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால், ரவி ஏதோ சிந்தனையில் இருந்தான்.

"என்னடா, ஒரு மாதிரி இருக்கே?" என்றான் குமார்.

"ஊருக்குக் கிளம்பும்போது, நீ என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா? என் அப்பா பெரிய பணக்காரர்ங்கறதால, அவரை எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு சொன்னே."

"ஆமாம். அதுக்கென்ன? உன் அப்பாவைப் பத்தித்தான் எல்லாரும் பேசினாங்களே!"

"பேசினாங்க. ஒரு மரியாதைக்காகப் பேசினாங்க. ஊர்ல எல்லாரும் நம்மகிட்ட அன்பாதான் நடந்துக்கிட்டாங்க. ஆனா, நான் ஒண்ணு கவனிச்சேன். எல்லாரும் உன் மேல காட்டின அளவுக்கு உற்சாகத்தை எங்கிட்ட காட்டல" என்றான் ரவி.

"நீ கற்பனை பண்ணிக்கற. அப்படி எதுவும் இல்ல" என்றான் குமார்.

"இருந்தது. அதை நீயும் கவனிச்சிருப்ப. வெளியே சொல்லிக்காம இருக்க. என் அப்பாவைப் பத்தி அதிகமா யாரும் பேசல. ஆனா, உன் அப்பாவைப் பத்தி எல்லாரும் எவ்வளவு பெருமையாப் பேசினாங்க!"

"டேய், ரவி! உன் அப்பா பணக்காரர். அதனால ,அவர்கிட்ட நிறைய பேர் நெருங்கிப் பழகி இருக்க மாட்டாங்க. என் அப்பா சாதாரண மனுஷர். அதனால, அவர்கிட்ட எல்லாரும் அதிகமாப் பழகி இருப்பாங்க. அதான் விஷயம்" என்றான் குமார்.

"அது மட்டும் காரணம் இல்லடா. என் அப்பா பெரிய மனுஷன் என்கிற அந்தஸ்தோட இருந்தார். அவ்வளவுதான். ஆனா, உன் அப்பா ஊர்ல எல்லாருக்கும் உதவியா இருந்திருக்காரு. எல்லாரோட நல்லது கெட்டதுகளிலேயும் பங்கேத்துக்கிட்டு, எல்லாருக்கும் தன்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சுக்கிட்டு இருந்திருக்காரு. அதனால்தான், அவர் மேல எல்லாரும் இவ்வளவு நல்லெண்ணம் வச்சிருக்காங்க. நீ அவர் மகன் என்கிறதால, உன் மேலேயும் அந்த நல்லெண்ணத்தைத் தங்களை அறியாமலேயே வெளிப்படுத்தினாங்க. உன் அப்பா வாழ்ந்த வீடு இடிஞ்சு போயிடுச்சு. ஆனா, அவர் விட்டுட்டுப் போன நல்ல பேர் அப்படியே இருக்கு, பரம்பரை சொத்து மாதிரி. இப்ப அந்த நல்ல பேரோட பலன் உனக்கும் கிடைக்குது. நீ அதிர்ஷ்டம் பண்ணியிருக்கடா!" என்றான் ரவி.

குமாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 
அறத்துப்பால்
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

பொருள்:  
தமக்குப் பின் நிலைத்து நிற்கும் புகழை விட்டுச் செல்லாவிட்டால், அந்த வாழ்க்கையை உலகம் பழி என்று சொல்லும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

Tuesday, January 29, 2019

237. நானும் விஞ்ஞானிதான்!

"காயப்படுத்திட்டு, அவமானமும் படுத்தற மாதிரின்னு இங்கிலீஷில சொல்லுவாங்க, அது மாதிரி இருக்கு. என்னைப் புறக்கணிச்சுட்டு, என்னோட ஜுனியருக்கு அவார்ட் கொடுப்பாங்களாம். அவனுக்கு நடத்தற பாராட்டு விழாவிலே, நானே அவனைப் பாராட்டிப் பேசணுமாம்!" என்று தன் மனைவி சுகந்தியிடம் பொருமினான் ராமநாதன்.

"உங்க டைரக்டர்கிட்டயே போய்க் கேளுங்க!" என்றாள் சுகந்தி.

"கேக்கத்தான் போறேன்!"

"என்ன மிஸ்டர் ராமநாதன் இது? நம்ம இன்ஸ்டிட்யூட்ல ஒருத்தருக்கு பத்மஸ்ரீ கிடைச்சதுக்கு, நீங்க பெருமைப்படணும். அதை விட்டுட்டு, குறை சொல்றீங்களே!" என்றார் டைரக்டர் கமல்நாத்.

"பெருமைப்படலாம் சார்! அவனை விட அனுபவத்திலயும், ரேங்க்கிலயும் நான் சீனியர். என்னை ஓவர்லுக் பண்ணிட்டு, அவனுக்கு பத்மஸ்ரீக்கு நீங்க சிபாரிசு பண்ணியிருக்கீங்க. இது அநியாயம் இல்லையா?"

"நீங்க சீனியர்தான். ஆனா, இது குமரேசனோட ஆராய்ச்சிக்காக அவருக்குக் கிடைச்ச அங்கீகாரம். அவர் செஞ்ச ஆராய்ச்சி ஒரு பிரேக் த்ரூ ரிஸர்ச். இன்டர்நேஷனல் ஜர்னல்ல எல்லாம் அதைப் பத்திப் பேசறாங்க. அதனாலதான், அவருக்கு அங்கீகாரம் கொடுக்கணும்னு நான் அரசாங்கத்துக்கு சிபாரிசு பண்ணினேன். அரசாங்கமும் அவரோட பங்களிப்போட மதிப்பை உணர்ந்து, அவருக்கு பத்மஸ்ரீ கொடுக்க முடிவு செஞ்சிருக்காங்க. இதில, சீனியாரிட்டி எங்கேந்து வந்தது?"

"சார்! இங்கே எல்லா சைன்ட்டிஸ்ட்களும் வேலை செய்யறாங்க. என்னவோ, குமரேசன் மட்டும்தான் பெரிசா செஞ்சுட்ட மாதிரி பேசறீங்க."

"நீங்க சொன்னாலும், சொல்லாட்டாலும் உண்மை அதுதான். இந்த இன்ஸ்டிட்யூட்ல ஆராய்ச்சி செய்ய, அரசாங்கம் நிறைய வசதி செஞ்சு கொடுத்திருக்கு. ஆனா, குமரேசன் மாதிரி ஒரு சில பேர்தான் அதை முழுமையாப் பயன்படுத்திக்கறாங்க."

"அப்ப, நான் ஒண்ணுமே செய்யலேன்னு சொல்றீங்களா?"

"ராமநாதன்! உலகத்தில எவ்வளவோ பேரு ஆராய்ச்சி பண்றாங்க - அரசாங்கத்தில, தனியார் நிறுவனங்கள்ள, சில பேரு தனி நபர்களாகக் கூட. எந்த ஒரு வசதியும் இல்லாம, ஒரு சின்ன ஆராய்ச்சிக் கூடத்தில, தங்களோட சொந்தக் காசைச் செலவழிச்சு, பெரிய வருமான வாய்ப்புகளையெல்லாம் விட்டுட்டு, ராப்பகலா ஆராய்ச்சி பண்றவங்க இருக்காங்க. ஆனா, இங்கே அரசாங்கம் நமக்கெல்லாம் நிறைய சம்பளம் கொடுத்து, குடியிருக்க வீடு கொடுத்து, ஆராய்ச்சி செய்யத் தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுத்திருக்கு. இன்னும் ஏதாவது கருவிகளோ, வேற வசதிகளோ வேணும்னு கேட்டாக் கூட, உடனே சாங்ஷன் ஆகிடும். ஆனா, இதையெல்லாம் சரியாப் பயன்படுத்திக்கிட்டு சிறப்பா ஆராய்ச்சி செய்யறவங்க எத்தனை பேரு? குமரேசனோட சீனியர்களெல்லாம் அஞ்சு மணிக்கு வீட்டுக்குப் போயிடுவாங்க. ஆனா, குமரேசன் நேரம் பாக்காம உழைச்சு, பெரிய அளவில கான்ட்ரிப்யூட் பண்ணி இருக்காரு. அவரைப் பாராட்டிப் பேசறது உங்களுக்குப் பெருமைதான்னு நான் நினைக்கிறேன்" என்றார் கமல்நாத்.

ராமநாதனுக்கு, தான் ஏன் இது பற்றி டைரக்டரிடம் கேட்டோம் என்று ஆகி விட்டது! 

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

பொருள்:  
புகழ் பட வாழ முடியாதவர்கள், தங்களை நொந்து கொள்ளாமல், தங்களை இகழ்பவர்களைக் குறை சொல்வது ஏன்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்













Sunday, January 27, 2019

236. முன்னணிப் பாடகர்

திரைப்பட இயக்குனர் சுந்தர் ஸ்ரீதர், கதாசிரியர் குருசாமியுடன் ராமசுப்ரமணியத்தின் வீட்டுக்குப் போனபோது, ஒரு வேலையாள் அவர்களை வரவேற்று, முன்னறையில் உட்கார வைத்தான்.

"சார்கிட்ட நாங்க வரதா ஃபோன் பண்ணிச் சொல்லி இருந்தோம்" என்றார் சுந்தர் ஸ்ரீதர்.  

"ஐயா சாதகம் பண்ணிக்கிட்டிருக்காங்க. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவாங்க" என்றான் வேலையாள், சுருக்கமாக.

"சாதகமா?" என்ற கேள்வி முகத்தில்  குருசாமியைப் பார்த்த சுந்தர், ஸ்ரீதரிடம், "ரிகர்சல்!" என்றார் குருசாமி ரகசியமாக.

"ஓ!" என்று தலையாட்டிய சுந்தர் ஸ்ரீதர், வேலையாளிடம், "சாருக்கு இன்னிக்குக் கச்சேரி ஏதாவது இருக்கா என்ன?"லஎன்றார்.

"இல்லீங்க. இப்பதானே டிசம்பர் சீசன் முடிஞ்சிருக்கு! அதனால, ஒரு மாசத்துக்கு கொஞ்சம் ஓய்வாத்தான் இருப்பாரு" என்றான் வேலையாள்.

"அப்ப எதுக்கு ரிகர்சல்?" என்று சுந்தர் ஸ்ரீதர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, உள்ளிருந்து ராமசுப்ரமணியம் வந்து விட்டார்.

பரஸ்பரம் நலம் விசாரித்த பின், "சொல்லுங்க! என்ன விஷயம்?" என்றார் ராமசுப்ரமணியம்.

"சார்! சங்கராபரணம்னு ஒரு படம் வந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்."

"பாத்திருக்கேன். சொல்லுங்க."

"கர்நாடக சங்கீதத்தை அடிப்படையா வச்சு அது மாதிரி ஒரு படம் அப்புறம் வந்ததில்லை. இப்ப இவர் ஒரு அருமையான கதை வச்சிருக்காரு. அதை வச்சு, சங்கராபரணத்துக்கு இணையா இன்னொரு படம் பண்ணலாம்னு இருக்கோம்."

"நல்ல விஷயம். பண்ணுங்க."

"ஒரு அஞ்சு நிமிஷம் நீங்க இந்தக் கதையைக் கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்."

"நான் கதையைக் கேட்டு என்ன ஆகப் போகுது? சரி, நீங்க விருப்பப்படறீங்க சொல்லுங்க" என்றார் ராமசுப்ரமணியம்.

"சொல்லுங்க" என்று சுந்தர் ஸ்ரீதர் குருசாமியிடம் சொன்னதும், குருசாமி கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடம் என்று சுந்தர் ஸ்ரீதர் சொன்னாலும், குருசாமிக்குக் கதையைச் சொல்லி முடிக்க அரைமணி நேரம் ஆயிற்று.

"கதை நல்லாத்தான் இருக்கு. ஆனா, எங்கிட்ட எதுக்கு இதைச் சொல்றீங்கன்னுதான் தெரியல!" என்றார் ராமசுப்ரமணியம்.

"சார்! இது ஒரு கர்நாடக சங்கீத வித்வானைப் பத்தின படம். இதில நீங்கதான் சங்கீத வித்வானா நடிக்கணும்னு கேட்டுக்கத்தான் வந்திருக்கோம்" என்றார் சுந்தர் ஸ்ரீதர்.

ராமசுப்ரமணியம் பெரிதாகச் சிரித்தார்.

"ஏன் சார் சிரிக்கிறீங்க?"

"சொல்றேன். அதுக்கு முன்னால, என்னை ஏன் இந்த ரோலுக்குத் தேர்ந்தெடுத்தீங்கன்னு சொல்ல முடியுமா?"

"நீங்க ஒரு முன்னணி சங்கீத வித்வான். உங்களைப் பத்தித் தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. நீங்க நடிச்சா, படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்."

"ஆனா, எனக்கு நடிக்கத் தெரியாதே!"

"சார்! அதெல்லாம் தேவையில்லை. நீங்க சும்மா வந்து நின்னு, உங்களுக்குத் தெரிஞ்ச அளவில வசனத்தைப் பேசிட்டுப் போனா போதும். உங்களை எல்லோரும் சங்கீத வித்வானாத்தான் பாப்பாங்களே தவிர, உங்க நடிப்பைப் பத்தி யாரும் கண்டுக்க மாட்டாங்க" என்றார் சுந்தர் ஸ்ரீதர்.

"அதான் விஷயம்!" என்றார் ராமசுப்ரமணியம். "நான் சங்கீதம் கத்துக்கிட்டுப் பாட ஆரம்பிக்கவே எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா? நான் மட்டும் இல்ல, இன்னிக்கு நல்லா பாடறவங்கன்னு பேர் வாங்கி இருக்கிறவங்க எல்லாருமேதான். தினம் காலையில 4 மணிக்கு எழுந்து, ரெண்டு மணி நேரம் சாதகம் பண்ணுவேன். இது மாதிரி பல வருஷங்கள் பண்ணினப்பறம்தான், எனக்குப் பாடவே வந்தது.

"பாட ஆரம்பிச்சப்பறமும், தினம் சாதகம் பண்ணி, புதுசா புதுசாப் பல விஷயங்களைப் படிச்சும் கேட்டும் தெரிஞ்சுக்கிட்டு, நல்லாப் பாடறவங்க பல பேரோட கச்சேரிகளைத் திரும்பத் திரும்பக் கேட்டு, இரும்பை உலையில் காய்ச்சி அடிக்கற மாதிரி என்னைப் பண்படுத்திக்கிட்டு, இன்னிக்கு ஒரு முன்னணிப் பாடகன்னு நீங்க நினைக்கிற அளவுக்கு வளந்திருக்கேன்.

"இப்பவும், தினமும் சாதகம் பண்றதையோ, புதுசா எதையாவது கத்துக்கறதையோ நிறுத்தல. கச்சேரி இருந்தாலும் இல்லாட்டாலும், தினமும் காலையில சாதகம் பண்ணாம இருக்க மாட்டேன். ஒரு துறையில முன்னேறணும்னா, இவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு. உங்களுக்கும் இது தெரியும். ஏன்னா, நீங்களும் பெரிய டைரக்டரா, கதாசாரியரா வர எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்பீங்க. அப்படி இருக்கச்சே, ஒண்ணுமே தெரியாம, நான் ஒரு நடிகனா ஆகணும்னு சொல்றீங்களே, அது எப்படி?"

"இல்ல சார்! இது வந்து..."

"மன்னிச்சிடுங்க. ஒரு துறையில இறங்கினா, அதில சிறப்பா வர அளவுக்கு நம்மளைத் தயார்படுத்திக்கணும். சும்மா ஒப்புக்கு நடிக்கறதில எனக்கு விருப்பமில்லை. நீங்க ஒரு நல்ல நடிகரைப் போட்டுப் படம் எடுக்கறதுதான் நல்லதுங்கறது என்னோட கருத்து" என்றார் ராமசுப்ரமணியம்.

சுந்தர் ஸ்ரீதரும், குருசாமியும் மௌனமாகக் கை கூப்பி விடை பெற்றனர்.

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

பொருள்:  
ஒரு துறையில் தாம் இருப்பதைக் காட்டிக் கொள்ள விரும்பினால், புகழ் பெற்றவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில், தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
























Sunday, January 20, 2019

235. சிறைவாசத்துக்குப் பின்...

எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்ட கல்லூரிப் பேராசிரியருக்கு இந்த கதியா என்று அனைவரும் திகைக்கும் வகையில், கஸ்தூரிரங்கனுக்கு சில அனுபவங்கள் ஏற்பட்டன.

பொருளாதாரப் பேராசிரியரான கஸ்தூரிரங்கன், வெளியூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த மாணவர்கள் கருத்தரங்குக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரிரங்கன், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை விமரிசித்துப் பேசினார். 

அரசின் பொருளாதாரக் கொள்கைகள் வறுமையில் உள்ளவர்களை இன்னும் கீழே தள்ளும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், இதனால் ஏழை மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் அவர் பேசினார். 

அவருடைய பேச்சை வீடியோ எடுத்த சில மாணவர்கள், அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

கஸ்தூரிரங்கன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ரயிலில் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவர் ரயிலில் வந்து இறங்கியதும், வீட்டுக்குச் செல்லும் முன்பே, ரயில் நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யும்போது, போலீசார் அவரிடம் காரணம் எதுவும் கூறவில்லை. ஆனால் மறுநாள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் தேச ஒற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். 

ஜாமீனில் வெளி வர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் போடப்பட்டு, அவர் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

கஸ்தூரிரங்கன் கைதுக்கு எதிராகப் பொது மக்களிடையேயும், ஊடகங்களிலும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. ஆனால், அரசாங்கம் இவற்றுக்குச் செவி சாய்க்கவில்லை. 

சில ஊடகங்கள் கஸ்தூரிரங்கன் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி, அவர் பல்வேறு தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக அவதூறுச் செய்திகள் வெளியிட்டன.

14 நாட்கள் முடிந்ததும், கஸ்தூரிரங்கனின் காவல் இன்னும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அவர் குடும்பத்தினரும்,சில சமூக ஆர்வலர்களும் அவரது கைதுக்கு எதிராக வழக்குகள் தொடுத்தனர். 

வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடந்து வந்தன. அரசின் தரப்பில், இந்த வழக்குகளை முறியடிக்கப் பல நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

இதற்கிடையே, அவர் காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கஸ்தூரிரங்கனின் உடல்நிலை, சிறைவாசத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. 

அவரைச் சிறையில் சென்று பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஸ்தூரிரங்கன் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. 

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்தது.

கஸ்தூரிரங்கன் விடுதலையாகிச் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரை வரவேற்க அந்த ஊரே திரண்டு வந்திருந்தது. 

ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு வரக் கூடிய கூட்டத்தை விட அதிகமான கூட்டம் சிறை வாசலில் கூடியிருந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

கஸ்தூரிரங்கன் மூன்று மாத சிறைவாசத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, நடக்கக் கூட இயலாத அளவுக்கு பலவீனமாக இருந்தார். 

அவரைப் பார்த்ததுமே, அங்கு கூடியிருந்தவர்கள் அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். கஸ்தூரிரங்கன் அனைவரையும் கைகூப்பி வணங்கி விட்டுக் காரில் ஏறித் தன் வீட்டுக்குச் சென்றார். 

கஸ்தூரிரங்கன் தேசத்துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, அவர் வேலை பார்த்து வந்த கல்லூரி அவரைப் பதவி நீக்கம் செய்திருந்தது. இதற்குப் பொதுமக்களிடமிருந்து பெரும் கண்டனம் எழுந்தது. 

கஸ்தூரிரங்கனுக்கு வேலை கொடுப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்த கல்லூரிகள், நிறுவனங்களிலிருந்து வெளிப்படையான அறிவிப்புகள் வந்தன. வெளிநாடுகளிலிருந்து கூட சில வாய்ப்புகள் வந்தன. 

உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக கஸ்தூரிரங்கன் வீட்டிலேயே ஓய்வாக இருந்தார். பொதுமக்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட அரசாங்கம், அவரது விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், சந்தடியின்றி வழக்கைக் கைகழுவியது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஊரின் சில முக்கிய மனிதர்கள் கஸ்தூரிரங்கனை அவர் வீட்டில் வந்து  பார்த்தனர். 

அவர் உடல்நலம் பற்றி விசாரித்தபின், அவர்களைத் தலைமையேற்று அழைத்து வந்தவர், "வரப்போற நாடாளுமன்றத் தேர்தல்ல, நம்ப தொகுதியில நீங்க நிக்கணும்னு எல்லோரும் விரும்பறாங்க. நீங்க நிக்கறதா இருந்தா, தங்களோட கட்சி சார்பா யாரையும் நிறுத்தாம, உங்களை ஆதரிக்கறதா எல்லா எதிர்க்கட்சிகளும் அறிவிச்சிருக்காங்க" என்றார்.  

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

பொருள்:  
தமக்கு நேரும் கெடுதல்களையும் தங்கள் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகச் செய்வதும், மரணம் கூடத் தங்கள் புகழை மேம்படுத்தச் செய்வதும் அறிவாற்றலில் சிறந்தவர்களைத் தவிர மற்றவர்க்கு அரிதான செயல்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்














Thursday, January 17, 2019

234. இந்திரன் அளித்த விருந்து

அந்த ஊர் எல்லையில் ஓடும் ஆறு அதன் திடீர் வெள்ளப் பெருக்குக்குப் பெயர் போனது.

கடந்த காலங்களில், பின்னிரவில் ஊர் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து, நிறைய பொருட்சேதத்தையும், உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த ஆறு அந்த ஊரிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு சிறிய மலையிலிருந்து உற்பத்தி ஆகிறது. மலையில் சிறிதளவு மழை பெய்தால் கூட, அத்தனை நீரும் ஆற்றில் வழிந்து ஓடி விடும். 

இதனால் அந்தப் பகுதிக்கு தண்ணீர் அதிகம் கிடைத்து வந்த நன்மை இருந்தாலும், திடீரென்று ஏற்படும் வெள்ளப் பெருக்கின் பிரச்னையும் இருந்தது.

அந்த ஊரில் மட்டும் ஆற்றின் கரை சற்றுத் தாழ்வாக இருந்ததால், இந்தப் பிரச்னை. 

அதனால், ஆற்றின் கரையில் நீண்ட மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. அதற்குப் பிறகு, திடீர் வெள்ளம் வந்த சமயங்களில், வெள்ளம் ஊருக்குள் வந்து விடாமல் மதில் சுவர் காத்து வந்தது. 

டு மேய்க்கும் பொன்னன் அன்று மாலை ஆடுகளை அவற்றின் வீடுகளுக்கு ஓட்டிச் செல்லுமுன், ஒரு ஆட்டைக் காணோம் என்பதை கவனித்தான். 

மற்ற ஆடுகளை அவற்றின் சொந்தக்காரர்கள் வீடுகளில் விட்டு விட்டு, காணாமல் போன ஆட்டைத் தேடிக் கண்டு பிடித்து, அதன் சொந்தக்காரர் வீட்டில் கொண்டு விடுவதற்குள், பொழுது சாய்ந்து இருள் கவ்வத் தொடங்கி விட்டது 

அப்போதுதான் காணாமல் போன ஆட்டைத் தேடும் பதட்டத்தில், தன் அலக்கை எங்கோ தவற விட்டு விட்டதைப் பொன்னன் கவனித்தான். 

ஒரு முனையில் ஒரு சிறிய அரிவாள் கட்டப்பட்டிருந்த அந்த நீண்ட மூங்கில் கம்பை மரங்களிலிருந்து இலைகளை அறுத்து ஆடுகளுக்குப் போட அவன் பயன்படுத்துவான். 

அலக்கை ஆற்றங்கரை ஓரத்தில்தான் எங்கேயோ விட்டிருக்க வேண்டும் என்று நினைத்து, அங்கே போய்த் தேடினான் பொன்னன். இருட்டில் தேடுவது சற்றுக் கடினமாக இருந்தாலும், சிறிது நேரத் தேடலுக்குப் பின், அவன் அதைக் கண்டெடுத்து விட்டான். 

அங்கிருந்து திரும்ப யத்தனித்தபோதுதான், அந்தச் சத்தத்தை அவன் கவனித்தான். டப் டப் என்று நீர் சொட்டும் சத்தம். 

திரும்பிப் பார்த்தான். இருட்டில் எதுவும் தெரியவில்லை. சத்தத்தை வைத்து நீர் சொட்டும் இடத்துக்கு வந்தான் பொன்னன். அவன் மீது ஒரு சொட்டு விழுந்தது. அண்ணாந்து மேலே பார்த்தான். ஆற்று நீர் உள்ளே வந்து விடக் கூடாது என்பதற்காகப் போடப்பட்டிருந்த தடுப்புச் சுவரிலிருந்துதான் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

நீர் கசிந்து வந்த இடத்தின் உயரத்தைப் பார்த்தபோது, ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

நீர் சொட்டும் வேகம் திடீரென்று அதிகரித்து விட்டதாகத் தோன்றியது. பிரமையாக இருக்குமோ என்று நினைத்தான். இல்லை, பிரமை இல்லை. கொஞ்சம் வேகமாகத்தான் சொட்டுகிறது. அப்படியானால், ஓட்டை சற்றுப் பெரிதாகி இருக்கலாம்.

என்ன செய்வது என்று யோசித்தான் பொன்னன். ஊருக்குள் போய் யாரிடமாவது சொல்லி ஆட்களை அழைத்து வரலாம். ஆனால் அதற்குள் நீர்க்கசிவு அதிகமாகி சுவர் உடைந்து விட்டால்?

தானே ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்து, சிறிது மண்ணை எடுத்துக் கசியும் இடத்தில் வைக்க முயன்றான் அவன். அந்த இடம் அவனுக்கு எட்டவில்லை.

அருகில் ஒரு பூவரச மரம் இருந்தது. அதன் மீது ஏறி, ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு, கையை நீட்டி நீர் கசிந்த இடத்தில் மண்ணை அப்பினான். 

சட்டென்று நீர்க்கசிவு நின்று விட்டது!

பொன்னனுக்கு நிம்மதியாக இருந்தது. நல்ல வேளை! கசிவு கொஞ்சம் நின்றிருக்கிறது. மறுபடி கசிவு அதிகமாவதற்குள், ஊருக்குள் போய் யாரையாவது அழைத்து வரலாம் என்று நினைத்துக் கீழே இறங்கினான்.

ஆனால் அவன் கீழே இறங்கியதுமே, மீண்டும் நீர் கசிய ஆரம்பித்து விட்டது. 

சற்று நேரம் யோசித்த பிறகு, அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

ஊருக்குப் போய் யாரையும் அழைத்து வருவதற்குள், நீர்க்கசிவு அதிகமாகி, சுவர் விரிசல் கண்டு, தண்ணீர் ஊருக்குள் வந்து விடலாம். 

நிறைய மண்ணை எடுத்துப் போய், மரத்தின் மீது அமர்ந்தபடி கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை அப்பி, கசிவைக் குறைக்க வேண்டியதுதான். இடையில் யாராவது இந்தப் பக்கம் வந்தால் தகவல் சொல்லி அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டான் அவன்.

பொன்னன் ஒரு அநாதை. ஒரு இடிந்த வீட்டின் வாசல் திண்ணையில்தான் அவன் குடியிருப்பு.  

அவன் ஆடு மேய்க்கும் வீடுகளில், முறை வைத்துக்கொண்டு அவனுக்குக் காலையில பழைய சோறு, கையில் கட்டுச்சோறு, இரவு சாப்பாடு என்று போட்டு விடுவார்கள். 

இரவு அவன் சாப்பிட வராததை அந்த வீட்டுக்காரர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சினிமாவுக்கோ, அல்லது வேறு எங்கேயோ போயிருப்பான் என்று நினைத்துக் கொள்வார்கள். அதனால், யாரும் அவனைத் தேடி வரப் போவதில்லை.

தன் மேல்துண்டில் நிறைய மண்ணை எடுத்து மூட்டையாகக் கட்டிக் கொண்டு மரக்கிளையில் போய் உட்கார்ந்தான் பொன்னன். 

சிறிது மண்ணை அப்பியதும் கசிவு நின்றது. ஒரு சில நிமிடங்களில் மீண்டும் கசிய ஆரம்பித்தது. மீண்டும் மண்ணை அப்பினான். இதுபோல் சிலமுறை செய்ததும், மண் தீர்ந்து விட்டது.

மீண்டும் கீழே இறங்கி, துண்டில் மண்ணை நிரப்பிக் கட்டி எடுத்து வந்தான் பொன்னன். எவ்வளவு நேரம் ஆயிற்று என்று தெரியவில்லை.ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம் என்று தோன்றியது. 

இது போல், ஐந்தாறு முறை கீழே இறங்கிப் போய் மண் எடுத்து வந்து விட்டான். மணி என்ன இருக்கும் என்று தெரியவில்லை. சாப்பிடாததாலும், தொடர்ந்து மரத்தில் ஏறி இறங்கி, மண்ணை எடுத்து வந்து அப்பிக் கொண்டிருந்ததாலும் உடல் சோர்வடைந்திருந்தது. 

மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது உடலில் வலி ஏற்படுத்தியதுடன், கிளை உடைந்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. தூக்கம் வேறு கண்ணைச் சுழற்றியது.

திகாலையில், ஊர்க்காரர் ஒருவர் அங்கே வந்து பார்த்தபோது, பொன்னன் மயங்கிய நிலையில் கீழே கிடந்ததையும், தடுப்புச் சுவரிலிருந்து சிறிய அளவில் நீர் ஒழுகிப் பொன்னன் மீது பட்டுக் கொண்டே கீழே கோடு போல் ஓடிக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.

அவர் உடனே ஓடிப் போய், ஊரிலிருந்து ஆட்களை அழைத்து வந்தார். சூழ்நிலையைப் பார்த்ததும், நடந்ததை அனைவரும் புரிந்து கொண்டனர். 

"ராத்திரி பூரா ஒத்தை ஆளா தானே கசிவை நிறுத்தப் பாத்திருக்கான். கீழேயிருந்து மண்ணை எடுத்துக்கிட்டுப் போய், மரக்கிளையில உக்காந்துக்கிட்டு ஓட்டையை அடைக்கப் பாத்திருக்கான். கடைசியில, களைப்பில் மயங்கி விழுந்துட்டான். ஊருக்குள்ள வந்து யாரையாவது கூப்பிட்டுக்கிட்டுப் போறதுக்குள்ளே சுவர் உடைஞ்சுடுமோன்னு நினைச்சுத் தனி ஆளாப் போராடி இருக்கான். இவனுக்கு நம்ம ஊர்ல கோவில் கட்டணும்யா!" என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

இதற்குள் பொன்னனின் நாடியைப் பார்த்த நாட்டு வைத்தியர் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினார்.

"இன்றைக்கு நம் சிறப்பு விருந்துக்கு நாம் அழைத்திருந்தவர்களில் ஒரு சிலர் மட்டும்தானே வந்திருக்கிறார்கள்? மற்றவர்கள் எங்கே?" என்றான் இந்திரன்.

"மண்ணுலகிலிருந்து இன்று ஒரு புதிய பையன் வந்திருக்கிறானாம். அவனைப் பார்க்க எல்லோரும் போய் விட்டார்கள்."

"பையனா? அல்ப ஆயுசா? அது சரி. அவனைப் பார்க்க ஏன் எல்லோரும் போயிருக்கிறார்கள்?"

"அவன் வெள்ளத்திலிருந்து தன் ஊரைக் காப்பாற்றத் தன் உயிரையே பணயமாக வைத்துச் செயல்பட்டிருக்கிறானாம்."

"இந்திரலோகத்து விருந்தை விடவா அது முக்கியம்?" என்றான் இந்திரன், திகைப்புடன். 

"அப்படி நினைத்துத்தானே எல்லோரும் அங்கே போயிருக்கிறார்கள்?"

"அப்படியானால் ஒன்று செய்யுங்கள். அந்தப் பையனை நம் விருந்துக்கு அழைத்து வாருங்கள். அவனே இன்று நமது முக்கிய விருந்தினராக இருக்கட்டும்" என்றான் இந்திரன்.   

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

பொருள்:  
இவ்வுலகம் இருக்கும் வரை நீடித்து நிற்கக் கூடிய புகழை அளிக்கும் செயல்களைச் செய்பவர்களைத்தான் வானுலகம் போற்றுமே தவிர, அங்குள்ள தேவர்களைப் போற்றாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்