About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, February 23, 2019

239. நல்லசிவம் விட்டுச் சென்ற சொத்து

"பேருதான் நல்லசிவம். ஒரு நல்ல காரியம் கூட செஞ்சதில்ல மனுஷன்!"

"செத்தவரைப் பத்தித் தப்பாப் பேச வேண்டாமே!"

"தப்பா எதுவும் சொல்லல. அவரைப் பத்தி சொல்றதுக்கு நல்லதா எதுவும் இல்லேன்னு சொன்னேன்!"

"ஏன் இல்ல? ஊர்ல பெரிய மனுஷன். அரசாங்க அதிகாரிங்க யாராவது இந்த ஊருக்கு வந்தா முதல்ல அவர் வீட்டுக்குத்தான் போவாங்க. ஒரு தடவை கலெக்டர் கூட வந்திருக்காரே!"

"வந்திருக்காங்க. மனுஷன் அவங்க யார்கிட்டயாவது சொல்லி ஊருக்கு ஏதாவது நல்லது செஞ்சிருக்காரா? தனக்கு வேணுங்கறதை மட்டும்தானே கேட்டு வாங்கியிருக்காரு?"

அப்பாவின் சடலத்துக்கருகே அமர்ந்திருந்த சேகரின் காதில் ஊர்க்காரர்கள் பேசிக் கொண்டது அரையும் குறையுமாக விழுந்தது. 

அப்பா சுயநலமானவர்தான் என்பது அவனுக்கும் தெரியும். ஆயினும் ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி சம்பிரதாயமாகச் சொல்லப்படக் கூடிய நல்ல வார்த்தைகளைக் கூடவா அப்பா சம்பாதிக்கவில்லை?

ல்லசிவத்தின் காரியங்கள் முடிந்த பிறகு அப்பாவின் நிலங்களையும், வீட்டையும் விற்று விட முடிவு செய்து, ஒருவரிடம் அதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான் சேகர். எல்லாம் விற்று முடியும் வரை ஊரிலேயே இருக்க முடிவு செய்தான்.

சில நாட்கள் கழித்து நிலங்களையும், வீட்டையும் வாங்கிக் கொள்ள சிலர் முன்வந்தனர். ஆனால் அவர்கள் கேட்ட விலை குறைவாக இருந்ததாக சேகருக்குத் தோன்றியது.

"அவசரத்துக்கு விக்கறேன்னு நினைச்சு அடிமாட்டு விலைக்குக் கேக்கறாங்க போலருக்கு. இவ்வளவு குறைஞ்ச விலைக்கு நான் விக்கறதா இல்ல. நான் மெதுவா வித்துக்கறேன்" என்றான் சேகர் விற்பனைக்கு ஏற்பாடு செய்தவரிடம்.

"சொல்றேன்னு தப்பா நினைக்காதே தம்பி. உங்க நிலத்துக்குப் பக்கத்தில இருக்கற நிலத்திலெல்லாம் விளைச்சல் அதிகம். ஆனா உங்க நிலத்தில விளைச்சல் கம்மி. அதான் விலை குறைவாப் போகுது" என்றார் அவர்.

"அது எப்படி எங்க நிலத்தில மட்டும் விளைச்சல் கம்மியா இருக்கும்?"

"தம்பி. நிலத்துக்குப் பராமரிப்பு அவசியம். மண் வளத்தை நல்லா வச்சுக்கணும்னா நல்லா உழணும். உரங்கள் போடணும். இன்னும் பல விஷயங்கள் இருக்கு. விவசாயிங்க இதையெல்லாம் பாத்துப் பாத்து செய்வாங்க. பெத்த குழந்தையைப் பாத்துக்கற மாதிரி நிலத்தைப் பாத்துப்பாங்க. ஆனா உன் அப்பா இதிலெல்லாம் அக்கறை காட்டினதில்ல. நான் கூட அவர்கிட்ட சொல்லி இருக்கேன். 'எல்லாம் விளைஞ்சது போதும். மண்ல போய்க் காசைக் கொட்ட முடியாது'ன்னு சொல்லிட்டாரு. அவரோட இந்த மனப்பான்மையாலதான் உங்க நிலம் வளம் குறைஞ்சு போய் இன்னிக்கு மதிப்பும் குறைஞ்சு போயிருக்கு" என்றார் அவர்.

"இந்த ஊர்ல எல்லாரும் என் அப்பா மேல குத்தம் கண்டு பிடிக்கறதிலேயே குறியா இருக்கீங்க. சரி. நிலம்தான் அப்படி. ஏன் வீட்டைக் கூடக் குறைச்ச விலைக்குக் கேக்கறாங்க?" என்றான் சேகர் சற்றுக் கோபத்துடன்.

"நீயே பாருப்பா வீடு எப்படி இருக்குன்னு. உன் அப்பா நிலத்தைப் பராமரிக்கலேன்னு சொன்னா, உனக்குக் கோபம் வருதே. வீட்டை எப்படி வச்சிருக்காருன்னு பாரு. சுவரெல்லாம் காரை போயிருக்கு. தரையெல்லாம் உடைஞ்சிருக்கு. உத்தரம் எல்லாம் அங்கங்கே உடைஞ்சு விழற மாதிரி இருக்கு."

"வீடு மோசமா இருந்தா என்ன? பூமிக்கு மதிப்பு இருக்கு இல்ல?"

"தம்பி, இது கிராமம், டவுன் இல்ல. டவுன்ல எல்லாம் பழைய வீட்டை வாங்கறவங்கள்ள பல பேரு அதை இடிச்சுட்டுப் புது வீடோ ஃபிளாட்டோ கட்டணும்னு நினைப்பாங்க. அதனால அங்க நிலத்தோட மதிப்பைத்தான் முக்கியமாப் பாப்பாங்க. ஆனா கிராமத்தில பழைய வீடு வாங்கறவங்க அந்த வீட்டில குடியிருக்கணும்னு நினைச்சுத்தான் வாங்குவாங்க. அதனால இங்கே பூமி மதிப்போடு, வீட்டு மதிப்பையும் கணக்குப் போட்டுத்தான் விலை சொல்லுவாங்க. வீட்டில ரிப்பேர் வேலை நிறைய இருக்கும்னா அதுக்குத் தகுந்தாப்பல விலை குறையத்தான் செய்யும். ஒண்ணு சொல்றேன். தப்பா நினைச்சுக்காதே. உங்கப்பா தன்னைப் பத்தி மட்டும்தான் கவலைப்பட்டார். மத்தவங்களைப் பத்தி, அண்டை அசலைப் பத்தி,  தான் இருக்கற வீட்டைப் பத்திக் கூட அக்கறை இல்லாம இருந்தாரு. அதனாலதான் இப்படி..."

அறத்துப்பால்
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

பொருள்:  
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவரைச் சுமந்த நிலம் நல்ல விளைச்சல் இல்லாத நிலமாகக் கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்












No comments:

Post a Comment