About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, February 25, 2019

240. ஓய்வுக்குப் பின்...

"முப்பத்திரண்டு வருஷம் அரசாங்க உத்தியோகம் பாத்துட்டு ரிடயர் ஆயிட்ட. இனிமே என்ன செய்யப் போற?" என்றார் மணி, தன் நண்பர் பாண்டுவிடம்.

"தெரியல. வீட்டில உக்காந்து பொழுதைக் கழிக்க வேண்டியதுதான்" என்றார் பாண்டு.

"உன்னைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்" என்றார் மணி.

"என்ன கேள்விப்பட்ட? தப்பா எதுவும் இல்லியே!" 

"நீ தப்பு எதுவுமே செய்யலேன்னுதான் கேள்விப்பட்டேன்!"

"புரியலையே?"

"என்ன புரியல? நீ வேலை பாத்தது லஞ்சத்துக்குப் பெயர் போன ஒரு டிபார்ட்மென்ட். பணம் கொடுக்காம அங்கே எந்த வேலையும் நடக்காதுன்னு உலகத்தில எல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு இலாகாவில் வேலை செஞ்சுக்கிட்டு, ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காம முப்பத்திரண்டு வருஷம் ஓட்டியிருக்கியே, அதைச் சொன்னேன்."

"நீ சொல்ற. ஆனா அந்த ஆஃபீஸ்ல வேலை செஞ்சதால நானும்  லஞ்சம் வாங்கியிருப்பேன்னுதானே வெளியில எல்லாரும் நினைப்பாங்க?" என்றார் பாண்டு சற்று வருத்தத்துடன்.

"அப்படி இல்ல. நீ எப்படி எளிமையா வாழறேன்னு எல்லாரும் பாத்துக்கிட்டிருக்காங்க. உன் ஆபீஸ்ல எல்லாரும் உன்னைப் பத்தி 'இவரு பணம் வாங்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கறது எங்களையும் இல்ல பாதிக்குது?'ன்னு பேசிக்கிறாங்க. அதோட நீ நேர்மையா இருந்ததால உன்னை எத்தனை தடவை டிரான்ஸ்ஃபர் பண்ணி ஊர் ஊராப் போக வச்சு உன்னை அலைக்கழிச்சிருக்காங்கன்னு எல்லாரும் பாத்திருக்காங்களே! அப்படி இருக்கறப்ப நீ தப்பு பண்ணாதவன்னு எல்லாருக்கும் தெரியாதா?" என்றார் மணி.

"அப்படியா சொல்ற? அப்படி இருந்தா எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!" என்றார் பாண்டு.

"ஏங்க, ரிடயர் ஆகி ஒரு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ளே வேற வேலைக்குப் போறேன்னு கிளம்பிட்டீங்களே?" என்றாள் பாண்டுவின் மனைவி கிரிஜா.

"நான் வேலைக்குப் போகல. ஒரு தொண்டு நிறுவனத்தில் வாலன்ட்டியர்கள் வேணும்னு கேட்டிருந்தாங்க. அங்கே போய் தினம் கொஞ்ச நேரம் வேலை செஞ்சுட்டு வரலாம்னு பாக்கறேன். இது சம்பளத்துக்கு வேலை பாக்கறது இல்ல. அந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலமா என்னால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்குச் செய்யறது" என்றார் பாண்டு.

"ஏங்க, முப்பத்திரண்டு வருஷமா அரசாங்கத்தில் நேர்மையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்களைப் பத்தி எல்லாரும் நல்லபடியாப் பேசறதா உங்க நண்பர் மணி கூட சொன்னாரு. இது சேவை இல்லையா? இப்ப எதுக்கு ஓய்வா இருக்க வேண்டிய காலத்தில மறுபடி சேவைன்னு கிளம்பறீங்க?" என்றாள்  கிரிஜா.

"அரசாங்க வேலையில என் கடமையைச் செஞ்சதுக்குப் பேரு சேவை இல்லை. வாங்கின சம்பளத்துக்கு என் கடமையை ஒழுங்கா செஞ்சேன். நான் நேர்மையா இருக்கேன்னு எல்லாரும் சொல்றது நான் தப்பு பண்ணாம இருந்தேங்கறதைத்தான். தப்பு பண்ணாம, கெட்ட பேர் வாங்காம வாழ்ந்தது நல்ல விஷயம்தான். அது நாம இயல்பா எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கறதுதான். அது பாதி வாழ்க்கைதான். மனுஷனாப் பிறந்ததுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சாதான் வாழ்க்கை நிறைவா இருக்கும். நான் தப்பு பண்ணலேன்னு மத்தவங்க சொல்றது சரி. ஆனா நான் நல்லது பண்ணியிருக்கேன்னும் சொன்னாதான் எனக்குத் திருப்தியா இருக்கும்!" என்றார் பாண்டு.

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

பொருள்:  
தன் மீது பழி இல்லாமல் வாழ்பவர்தான் வாழ்பவராகக் கருதப்படுவார். புகழ் இல்லாமல் வாழ்பவர் வாழாதவராகத்தான் கருதப்படுவார்.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்




















No comments:

Post a Comment