About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, February 14, 2019

238. குமாரின் தந்தை

"ரொம்ப வருஷம் கழிச்சு சொந்த ஊருக்குப்  போறது சந்தோஷமா இருக்கு" என்றான் குமார்.

"ஆமாம். உன்னைத் சந்திக்கலேன்னா எனக்கு இந்த எண்ணமே வந்திருக்காது" என்றான் ரவி.

"சின்ன வயசில ஒரே தெருவில வளர்ந்து, ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சு, ஒண்ணா விளையாடி, கொட்டமடிச்சு ஜாலியா இருந்துட்டு, அப்புறம் கல்லூரிப் படிப்புக்கு வெவ்வேற இடத்துக்குப் போனதும் நமக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா தொடர்பு விட்டுப் போனதை நினைச்சா ஆச்சரியமாவும் இருக்கு, வருத்தமாவும் இருக்கு."

"என்ன செய்யறது? நம்ம ரெண்டு பேர் அப்பாக்களும் ஒத்தர் பின்னால ஒத்தர்னு சீக்கிரமே காலமாயிட்டாங்க. நம்ம குடும்பங்களும் ஊர்ல எல்லாத்தையும் வித்துட்டு, வேற எங்கேயோ போய் செட்டில் ஆயிட்டாங்க. நாமும் வேலைன்னு எங்கெங்கேயோ போய்க்கிட்டிருந்தோம். நாம தற்செயலா மறுபடி சந்திச்சதே ஆச்சரியம்தான்னு நினைக்கிறேன்" என்றான் ரவி.

"நீ சொல்றது சரிதான்" என்ற குமார், தொடர்ந்து, "ஆமாம், ஊர்ல நம்மை யாருக்காவது அடையாளம் தெரியுமா?" என்ற கேள்வியை எழுப்பினான்.

"நம்மைத் தெரியாட்டா என்ன? நம்ம பெற்றோர்களை ஞாபகம் வச்சுக்கிட்டிருப்பாங்களே!" என்றான் ரவி நம்பிக்கையுடன்,

"அதுவும் அந்தக் காலத்தில உங்கப்பா ஊரிலே பெரிய பணக்காரர். அவரை எப்படி மறப்பாங்க?" என்றான் குமார்.

ரவி பெருமையுடன் சிரித்தான்.

வி சொன்னது போல், ஊரில் அனைவரும் இருவருடைய குடும்பங்களை ஞாபகம் வைத்திருந்தார்கள். இவர்களுடன் பள்ளியில் படித்து அந்த ஊரிலேயே வசித்து வந்த சிலரும் ஊரில் இருந்தனர்.

ரவியையும், குமாரையும் தங்கள் வீட்டில் தங்கவும், உணவருந்தவும் பலரும் அழைத்தனர். ஒரு சிலரின் விருந்தோம்பலை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, மற்றவர்களிடம் அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

இருவரும் இரண்டு நாட்களில் ஊரில் பலரையும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் படித்த பள்ளி இருந்த இடத்தைப் பார்த்து விட்டு வந்தார்கள். அது இடிக்கப்பட்டு அங்கு வேறு ஏதோ கட்டிடம் வந்திருந்தது. பள்ளி வேறொரு இடத்தில் பெரிய கட்டிடத்துக்கு இடம் மாறி இருந்தது.

ரவியின் வீட்டை வாங்கியவர் அதை வேறு விதமாக மாற்றிக் காட்டியிருந்தார். குமாரின் வீடு இடிக்கப்பட்டுக் காலி மனையாக இருந்தது.

கோவில்கள் மட்டும்தான் உள்ளே வௌவால்களும், கோபுரத்தில் புறாக்களும் என்று அதே போல் இருட்டு குகைகளாக இருந்தன. கோவில்களுக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த குறைந்த வாட் பல்புகளைக் கொண்ட மின் விளக்குகளைத் தவிர அதிக மாறுதல்கள் இல்லை.

 கோவில்களுக்கு வந்து போகும் பக்தர்களின் எண்ணிக்கையைப் போல் அங்கே வசித்து வந்த வௌவால்கள், புறாக்கள் இவற்றின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதாகத் தோன்றியது.

ஆற்றில் புதிய பாலம். ஆனால் பாலத்துக்குக் கீழே நீரோட்டம் இல்லை.

இரண்டு நாட்கள் ஊரைச் சுற்றியதில் மகிழ்ச்சி, ஏக்கம், வருத்தம் எல்லாம் கலந்த உணர்வு இருவருக்கும் ஏற்பட்டது.

ரிலிருந்து பஸ்ஸில் கிளம்பி இருவரும் அருகில் இருந்த ரயில் நிலையத்துக்கு வந்தனர். ரயிலுக்குக் காத்திருந்தபோது, குமார் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் ரவி ஏதோ சிந்தனையில் இருந்தான்.

"என்னடா, ஒரு மாதிரி இருக்கே?" என்றான் குமார்.

"போகும்போது நீ என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா? என் அப்பா பெரிய பணக்காரர்ங்கறதால அவரை எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு சொன்னே."

"ஆமாம். அதுக்கென்ன? உன் அப்பாவைப் பத்தித்தான் எல்லாரும் பேசினாங்களே!"

"பேசினாங்க. ஒரு மரியாதைக்காகப் பேசினாங்க. ஊர்ல எல்லாரும் நம்மகிட்ட அன்பாதான் நடந்துக்கிட்டாங்க. ஆனா நான் ஒண்ணு கவனிச்சேன். எல்லாரும் உன் மேல காட்டின அளவுக்கு உற்சாகத்தை எங்கிட்ட காட்டல" என்றான் ரவி.

"நீ கற்பனை பண்ணிக்கற. அப்படி எதுவும் இல்ல" என்றான் குமார்.

"இல்ல, இருந்தது. அதை நீயும் கவனிச்சிருப்ப. வெளியே சொல்லிக்காம இருக்க. என் அப்பாவைப் பத்தி அதிகமா யாரும் பேசல. ஆனா உன் அப்பாவைப் பத்தி எல்லாரும் எவ்வளவு பெருமையாப் பேசினாங்க!"

"டேய் ரவி! உன் அப்பா பணக்காரர். அதனால அவர்கிட்ட நிறைய பேரு நெருங்கிப் பழகி இருக்க மாட்டாங்க. என் அப்பா சாதாரண மனுஷர். அதனால அவர்கிட்ட எல்லாரும் அதிகமாப் பழகி இருப்பாங்க. அதான் விஷயம்" என்றான் குமார்.

"அது மட்டும் காரணம் இல்லடா. என் அப்பா பெரிய மனுஷன் என்கிற அந்தஸ்தோட இருந்தார். அவ்வளவுதான். ஆனா உன் அப்பா ஊர்ல எல்லாருக்கும் உதவியா இருந்திருக்காரு. எல்லாரோட நல்லது கெட்டதுகளிலேயும் பங்கேத்துக்கிட்டு, எல்லாருக்கும் தன்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சுக்கிட்டு இருந்திருக்காரு. அதனால்தான் அவர் மேல எல்லாரும் இவ்வளவு நல்லெண்ணம் வச்சிருக்காங்க. நீ அவர் மகன் என்கிறதால உன் மேலயும் அந்த நல்லெண்ணத்தைத் தங்களை அறியாமலேயே வெளிப்படுத்தினாங்க. உன் அப்பா வாழ்ந்த வீடு இடிஞ்சு போயிடுச்சு. ஆனா அவர் விட்டுட்டுப் போன நல்ல பேரு அப்படியே இருக்கு, பரம்பரை சொத்து மாதிரி. இப்ப அந்த நல்ல பேரோட பலன் உனக்கும் கிடைக்குது. நீ அதிர்ஷ்டம் பண்ணியிருக்கடா!" என்றான் ரவி.

குமாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 
அறத்துப்பால்
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

பொருள்:  
தமக்குப் பின் நிலைத்து நிற்கும் புகழை விட்டுச் செல்லாவிட்டால், அந்த வாழ்க்கையை உலகம் பழி என்று சொல்லும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

No comments:

Post a Comment