About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, February 24, 2016

55. மழை வருமா?

"ஏண்டி, உங்க வீட்டில சாமிக்கு விளக்கேத்தற பழக்கம் எல்லாம் இல்லையா?" என்றாள் பத்மா.

"இருக்கு அத்தை" என்றாள் பிரியா.

'பின்னே ஏன் ஏத்தலே?"

"குளிக்காம விளக்கு ஏத்த வேண்டாம்னுதான்!"

"குளிக்காமயா சமையல் பண்றே?"

"இது அவருக்கு மட்டும் அத்தை. உங்களுக்குக் குளிச்சுட்டு அப்புறமா செய்யறேன்."

"ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியாவா சமைப்பே? கேஸ், சாமான்கள் எல்லாம் அதிகமா செலவாகாது? உனக்கும்தானே கஷ்டம்?"

அறிந்தோ அறியாமலோ தன் நலத்தில் அக்கறை காட்டிப் பேசி விட்ட தன் மாமியாருக்கு மனதளவில் நன்றி தெரிவித்தாள் பிரியா.

"என்ன செய்யறது அத்தை? அவரு இன்னிக்கு சீக்கிரமா கிளம்பணுமாம். அதனாலதான் அவருக்கு சாப்பாடு செஞ்சு குடுத்தனுப்பலாம்னுட்டு முதல்ல அவருக்கு மட்டும் கொஞ்சமா செய்யறேன்."

"அவன் இப்படித்தான் சில சமயம் சீக்கிரம் கிளம்புவான். அப்பெல்லாம் வெளியிலே சாப்பிட்டுக்கறேன்னு சொல்லுவான். அதனால நான் எதுவும் செய்ய மாட்டேன்."

"இப்பவும் அப்படித்தான் சொன்னார் அத்தை. நான்தான் வெளியில சாப்பிட்டு அவரு உடம்பைக் கெடுத்துக்கக் கூடாதுன்னு அவரை வற்புறுத்தி சாப்பாடு கொடுத்து அனுப்பறதாச் சொன்னேன்."

'என் பிள்ளை மேல் எனக்கு இல்லாத அக்கறை இவள் புருஷன்  மீது இவளுக்கு இருக்கிறதாக்கும்!' என்ற இயல்பான 'மாமியார் சிந்தனை' பத்மாவின் மனதில் எழுந்தாலும், தன் மகனின் உடல்நலத்தில் மருமகள் காட்டும் அக்கறையை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆயினும் மாமியாரின் பந்தாவை விட்டுக் கொடுக்க விரும்பாமல், "எந்த சந்தர்ப்பத்திலும் சாமிக் குத்தம் வர விடக் கூடாது. நம்ப குடும்பத்தில சாமி கும்பிடறது ரொம்ப முக்கியம். குளிச்சுட்டு சாமிக்கு விளக்கேத்திக் கும்பிட்டப்பறம்தான் சமையல், சாப்பாடு எல்லாம். சாமிக்கு அப்புறம்தான் மனுஷங்க. அது அரசனா இருந்தாலும் சரி, புருஷனா இருந்தாலும் சரி" என்று ஒரு சொற்பொழிவு ஆற்றி விட்டுச் சென்றாள்.

'அரசனை கவனிக்க ஆயிரம் சேவகர்கள் இருப்பார்கள். என் புருஷனை நான்தானே கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள் பிரியா.

கணவன் கிளம்பிச் சென்ற பிறகு பிரியா குளித்து விட்டு வந்தபோது, அவள் மாமியார் வற்றல் பிழிவதற்காகக் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

"என்ன அத்தை, வற்றல் பிழியப் போறோமா இன்னிக்கு?"

"ஆமாம். சீக்கிரம் வா. இப்பவே பிழிஞ்சு காய வச்சாத்தான் நல்லா காயும்."

"இன்னிக்கு மழை வரும் போல இருக்கே?"

"சித்திரையில ஏதுடி மழை? அதுதான் வெய்யில் காயுதே? வெய்யில் கொஞ்சம் மந்தமா இருக்கறதனால மழை வரும்னு சொல்றியா? கண்டிப்பா வராது. கொஞ்ச நேரத்தில வெய்யில் கொளுத்த ஆரம்பிச்சுடும் பாரு!"

அவர்கள் இருவரும் மொட்டை மாடிக்குப் போய் வற்றல் பிழிய ஆரம்பித்த பத்து நிமிடங்களில் 'சட சட'வென்ற பெரும் தூற்றலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

பொருள்:
கணவனையே தெய்வமாக நினைத்து வழிபடும் பெண் 'பெய்' என்று சொன்னால் மழை பெய்யும்.

(குறிப்பு: இந்தக் குறளின் பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் 'கணவனை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் பெண் ‘மழை பெய்யும்’ என்று சொன்னால் அவள் வாக்கு பலிக்கும் என்ற உட்பொருளின் அடிப்படையில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Will it Rain Today?' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












Thursday, February 4, 2016

54. மாதவியும் கண்ணகிதான்!

புதிதாக வேலையில் சேர்ந்த மாதவிக்கு அவளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வேலையை விட்டுப் போக இருந்த லக்ஷ்மி வேலைகளை விளக்கினாள். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு லக்ஷ்மி விலகும் நாள் வந்தது.

மாதவியிடமிருந்து விடைபெறுமுன் லக்ஷ்மி தயங்கியபடியே சொன்னாள். "மாதவி! இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டாம்னுதான் நெனச்சேன். ஆனா இந்த நாலு நாள் பழக்கத்திலேயே எங்கிட்ட இவ்வளவு அன்பா நடந்துக்கிட்ட உங்ககிட்ட சொல்லாம இருக்க மனசில்லை."

"சொல்லுங்க!" என்றாள் மாதவி.

"நம்ப மானேஜர் பெண்கள்கிட்ட வழியறவரு. அவருகிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கிட்டாதான் இங்கே வேலை செய்ய முடியும்!"

"அனுசரணையான்னா?"

"அவரு கொஞ்சம் அசடு வழியப் பேசுவாரு. 'உன்னோட டிரஸ் நல்லா இருக்கு'ம்பாரு. இன்னொரு நாளைக்கு, 'உன் கலருக்கு இந்த டிரஸ் பொருத்தமா இல்லை'ம்பாரு. ஏதாவது அசட்டு ஜோக் சொல்லுவாரு....சில சமயம் தொட்டுப் பேசுவாரு."

"தொட்டுப் பேசுவாரா?"

"தற்செயலாத் தொடற மாதிரி தொடுவாரு."

"இதையெல்லாம் நீங்க சகிச்சுக்கிட்டீங்களா?"

"வேற வழி? நான் மட்டுமா? எனக்கு முன்னால இருந்த பொண்ணு கூட சகிச்சுக்கிட்டாங்க. நானாவது கல்யாணமாகாதவ. பஸ்ஸில சில பேரு வேணும்னே இடிக்கறதில்லையா? அது மாதிரின்னு நெனச்சுப்பேன். ஆனா அவங்க கல்யாணம் ஆனவங்க. அவங்களே பாவம் சகிச்சுக்கிட்டாங்க. வேலையை விட்டுப் போகும்போது என்கிட்டே அவங்க உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்துட்டாங்க. நீங்களும் கல்யாணம் ஆனவங்கதான்..."

"கல்யாணம் ஆனவங்களா இல்லையாங்கறது முக்கியம் இல்லை. சரி. நீங்க சொன்ன தகவலுக்கு நன்றி."

இரவில் கணவனிடம் இதைப் பற்றிச் சொன்னாள் மாதவி. கணவன் தன்னை வேலையை விட்டு விலகி விடச் சொல்லுவானோ என்று நினைத்தாள். ஆனால் அவன் சற்று கூடப் பதட்டம் இல்லாமல் 'உன்னால இதையெல்லாம் மானேஜ் பண்ண முடியும்!' என்று சொல்லி விட்டான். எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று மாதவிக்குப் புரியவில்லை.

லக்ஷ்மி சொன்னது போலவே மானேஜர் அவளிடம் வழிய ஆரம்பித்தார்.

"உங்க பேரு ரொம்ப செ... அட்ராக்டிவா இருக்கு!" என்றார்.

மாதவி மௌனமாக இருந்தாள்.

அவள் மௌனத்தினால் துணிவு பெற்று, "நான் கவனிச்சிருக்கேன். எல்லாருக்கும் எல்லா உடையும் பொருந்தறதில்ல. ஆனா உனக்கு எல்லா உடையுமே அழகா இருக்கு" என்றார் அவர். தன்னை ஒருமையில் அழைக்கும் உரிமையை அவர் எடுத்துக்கொண்டதை மாதவி கவனித்தாள்.

"சார், ஒரு நிமிஷம். ஃபோன் வந்திருக்கு" என்று மாதவி அவர் அறைக்கு வெளியே சென்று விட்டுச் சற்று நேரம் கழித்து வந்தாள்.

"யாருகிட்டேயிருந்து ஃபோன்?"

மாதவி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், "சொல்லுங்க சார்! ஏதோ கடிதங்களுக்கு பதில் எழுதணும்னு சொன்னீங்களே?" என்றாள்.

"இந்தா! இது உனக்கு ஒரு டெஸ்ட். இந்த லெட்டர்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டு வா. உன் திறமை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்."

'உங்களுக்கும் இது ஒரு டெஸ்ட்தான்' என்று நினைத்துக் கொண்ட மாதவி, சற்று முன்பு வெளியில் போனபோது வீடியோ எடுப்பதற்காக செட் செய்த கைபேசியை வலது கையில் சற்றே பின்புறமாக ஒரு கோணத்தில்  வைத்துக் கொண்டாள். 'இந்தக் கோணத்தில் காட்சி சரியாகப் பதிவாக வேண்டுமே' என்று நினைத்துக் கொண்டாள்.

அவர் கடிதங்களை நீட்டியதும், அவற்றை வாங்க இடது கையை நீட்டினாள்.

"என்ன இடது கையை நீட்டறே! ஆர் யூ லெஃப்ட் ஹேண்டட்?" என்ற மானேஜர், தற்செயலாகக் கை படுவதுபோல் அவள் கையை மணிக்கட்டுக்கு மேல் பற்றினார்.

மாதவி வீடியோ பட்டனை அழுத்தினாள்.

மாதவியிடமிருந்து எதிர்ப்பு வராததால், மானேஜர் அவள் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றினார்.

"கையை எடுங்க சார். வீடியோ எடுத்தாகி விட்டது!" என்றாள் மாதவி.

மானேஜர் பதறிப் போய்க் கையை உதறி, "வாட் இஸ் திஸ்?" என்றார்.

தன் கைபேசியில் பிடிக்கப்பட்ட காட்சியை அவரிடம் காட்டிய மாதவி, "சில வினாடிகளுக்கு முன்னே நடந்ததை வீடியோ எடுத்திருக்கிறேன். உங்க மனைவிகிட்ட காட்டினா சந்தோஷப்படுவாங்க. இதில என்னோட முகம் விழலை. அதனால  யுடியூபில கூடப் போடலாம். நல்லவேளை! கீழேயிருந்து ஒரு ஆங்கிள்ள எடுக்கிறோமே எப்படி வருமோன்னு கவலைப்பட்டேன், நல்லாவே வந்திருக்கு! ஹேட்ஸ் ஆஃப் டு மாடர்ன் டெக்னாலஜி!" 

"உனக்கு என்ன வேணும்?" என்றார் மானேஜர், கோபமும் பயமும் கலந்த குரலில்.

"முதல்ல, இந்த 'வா போ' ங்கறதையெல்லாம் விட்டுட்டு என்னை மரியாதையா அழைக்கணும். அடுத்தது இங்கே வேலை செய்ற பெண்கள் கிட்ட சில்மிஷம் பண்ற வேலையை நிறுத்தணும்."

மானேஜர் என்ன சொல்வதென்று தெரியாமல் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்.

"பயப்படாதீங்க. வேற எந்த விதத்திலேயும் உங்களை நான் பிளாக்மெயில் பண்ண மாட்டேன். உங்க கீழ வேலை செய்யறவள் என்கிற முறையில் உங்ககிட்ட எப்படிப் பணிவோடும் கட்டுப்பாட்டோடும் நடந்துக்கணுமோ அப்படி நடந்துப்பேன்."

அவர் கொடுத்த கடிதங்களை வலது கையில் வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் மாதவி.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

பொருள்:
கற்பு என்னும் உறுதியான பண்பு ஒரு பெண்ணிடம் இருக்குமானால், பெண்ணை விடப் பெருமை உடையது வேறு என்ன இருக்க முடியும்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Madhavi's manouvre' the English version of this story.
  குறள் 56
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















Wednesday, January 27, 2016

53. மனைவி செய்யும் மாயம்!

"அண்ணன் இல்லையா அண்ணி?" என்று வாயிற்படியில் நின்றபடியே கேட்டான் சண்முகம்.

"உங்க அண்ணன் எப்ப நேரத்தோட வீட்டுக்கு வந்திருக்காரு? ஏன், ஏதாவது கடன் கேக்கப் போறீங்களா?" என்றாள் சிவகாமி.

"நான் எப்ப அண்ணன்கிட்ட கடன் கேட்டிருக்கேன்?" என்றான் சண்முகம், அடிபட்டவனாக.

"எனக்கு எப்படித் தெரியும் உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற விவகாரம்? உங்களுக்குக் கடன் கொடுத்தா எங்கிட்ட சொல்லவா போறாரு உங்க அண்ணன்?"

இதற்குள் பழனி வந்து விட்டான். "ஏண்டா வாசல்லேயே நிக்கறே?... ஏம்மா வந்தவங்களை உள்ள கூப்பிடறதுல்ல?"

"அவரு என்ன வெளி ஆளா என்ன? உங்க தம்பிதானே? நான் கூப்பிட்டாத்தான் உள்ளே வருவாரா?" 

சிவகாமி உள்ளே போய் விட்டாள்.

"தம்பிக்கும் எனக்கும் காப்பி கொண்டா" என்றான் பழனி இரைந்து.

பழனியும், சண்முகமும் முன்னறையில் வந்து உட்கார்ந்தார்கள்.

"ஒண்ணுமில்ல அண்ணே! சங்கருக்குக் கல்யாணப் பத்திரிகை அடிக்கணும். அதுல நம்ம குடும்பப் பேரு, தாத்தா பேரு எல்லாம் போடணும் இல்லை? எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாதே! அதுதான் உன்கிட்ட விவரம் கேட்டுக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்."

"சொல்றேன். ஆனா ஒரு விஷயம் உறுத்திக்கிட்டே இருக்கு. உன் பையன் நல்லாப் படிச்சிருக்கான். அவனுக்கு வசதியான இடத்திலேருந்தெல்லாம் பொண்ணு கொடுக்கப் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்களே, நீ ஏன் ஒரு சாதாரணக் குடும்பத்திலேருந்து பொண்ணு எடுக்கற? பொண்ணுக்குப் படிப்பு, வேலை எல்லாம் கூட இல்லை!"

"அண்ணே! நான் கூட அவ்வளவா வசதி இல்லாதவன்தான். என் பொண்டாட்டி வடிவும் ஏழைக் குடும்பத்திலேந்து வந்தவதான். நாங்க சந்தோஷமாத்தானே இருக்கோம்? இன்னும் சொல்லப் போனா, சங்கர் வெளியூர்ல தங்கி இஞ்சினியரிங் படிச்சு இப்ப நல்ல வேலைக்குப் போயிருக்கான்னா அதுக்கு வடிவுதான் காரணம்.

"என்னோட குறைஞ்ச வருமானத்தில குடும்பத்தையும் நடத்தி, நாலு காசு சேத்து, போதாததுக்குக் கடனை உடனை வாங்கி சங்கரைப் படிக்க வச்சது அவதான். அதனாலதான் சங்கருக்குப் பொண்ணு பாக்கும்போதே வசதியான இடமான்னு பாக்கறதை விட, பொண்ணு குடும்பப் பாங்கானவளான்னுதான் பாத்துத் தேர்ந்தெடுத்தோம்.

"சங்கருக்கும் பொண்ணைப் புடிச்சிருக்கு. பொண்ணுக்கும் சங்கரைப் புடிச்சிருக்கு. இப்பல்லாம் நம்ம காலம் மாதிரி இல்ல. சங்கரும் அந்தப் பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னயே அடிக்கடி சந்திச்சுப் பேசி ஒத்தரை ஒத்தரு நல்லாப் புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. வசதியா அண்ணே முக்கியம்? மனசுதானே முக்கியம்!" என்றான் சண்முகம்.

பழனி மனது புண்படக் கூடாதே என்று சண்முகம் சொல்லிக் காட்டாத விஷயங்கள் பழனியின் மனதில் அலை மோதின. பழனி வசதியானவன்தான். ஆனால் சிவகாமியின் பொறுப்பற்ற, யாரையும் மதிக்காத போக்கினால் பழனிக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை.

அவர்களின் ஒரே பெண் கூட அம்மாவின் போக்குப் பிடிக்காமல் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து விட்டு வெளியூரிலேயே வேலை செய்கிறாள். கல்யாணத்தைப் பற்றிப் பிடி கொடுத்துப் பேசுவதில்லை.

தன் பையன் கல்யாண விஷயத்தில் தம்பியின் அணுகுமுறை சரிதான் என்று தோன்றியது பழனிக்கு. தம்பி கேட்ட விவரங்களை ஒரு காகிதத்தில் குறித்துக் கொடுத்தான்.

சண்முகம் விடை பெறும் சமயம்தான் அரை மணி நேரம் ஆகியும் இன்னும் மனைவி காப்பி கொண்டு வரவில்லை என்பது பழனிக்கு நினைவு வந்தது!

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

பொருள்:
மனைவி உயர்ந்த பண்புகளைக் கொண்டவளாக இருந்தால் ஒருவனுக்கு வாழ்க்கையில் இல்லாதது எது? (எல்லாமே இருப்பது போல்தான்.) மனைவி பண்புள்ளவளாக இல்லாவிட்டால், வாழ்க்கையில் இருப்பது எது? (எதுவுமே இல்லாதது போல்தான்.)

இந்தக் கதைக்கான காணொளி இதோ:

Read 'The Magic of a Wife' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Tuesday, January 26, 2016

52. வெற்றி மீது வெற்றி வந்தும்...

பரத் அலுவலகத்துக்கு வந்து தன் அறைக்குள் சென்று அமர்ந்தபோது தொலைபேசி அடித்தது. அவரது உதவியாளர் வந்தனாதான் பேசினாள்.

"சார், டில்லியிலிருந்து தொழில்துறைச் செயலர் மூன்று முறை ஃபோன் செய்து விட்டார். மறுபடியும் அவரிடமிருந்து அழைப்பு வரக் கூடும்...இதோ வந்தே விட்டது!" என்றாள் அவசரமாக.

"கொடுங்கள்!" என்றார் பரத்.

தொழில்துறைச் செயலர் பேசினார். பிரதமருக்குத் தொழில்துறைப்  பிரச்னைகள் பற்றி ஆலோசனை கூற ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கிறதாம். அதில் உறுப்பினர் ஆக பரத்துக்கு விருப்பமா என்று கேட்டார். மாதம் ஒரு நாள் டில்லி சென்று வர வேண்டி இருக்குமாம் - அரசு செலவில்!

"சார், இது ஒரு பெரிய கௌரவம். நான் ஒரு சாதாரணத் தொழில் அதிபர். என்னை மதித்து..."

"இந்தக் குழுவில் புகழ் பெற்ற தொழில் அதிபர்களைச் சேர்ப்பதை விட சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களே இடம் பெற வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்!"

தொழில்துறைச் செயலர் சத்தம் இல்லாமல் ஒரு புகழ் மாலையைச் சூட்டி விட்டார்!

"இது பெரிய கௌரவம், அதிர்ஷ்டம், வாய்ப்பு எல்லாம்!"

"நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் நேரடியாக பதில் சொல்லவில்லை. குழுவின் உறுப்பினராக உங்களுக்கு சம்மதம்தானே?" என்றார்  செயலர், அரசாங்க தோரணையில்.

"சம்மதம்தான்" என்று பரத் சொன்னதும் இதற்காகவே காத்திருந்தது போல் தொலைபேசியை வைத்து விட்டார் அரசுச் செயலர்.

"என் சம்மத்தத்தைக் கேட்டவர் அவர் முடிவைச் சொல்லவில்லையே?" என்ற பரத்தின் கேள்விக்கு சில நிமிடங்களிலேயே ஈ-மெயில் மூலம் பதில் வந்தது - அவரது உறுப்பினர் பதவியை உறுதி செய்து.

அவர் ஈ-மெயிலைப் படித்து முடித்தபோது அவரது கைபேசியில் அழைப்பு வந்தது. மனைவி!

இந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் உற்சாகம் அவரிடம் இல்லை. மாறாக, 'என்ன தலைவலியோ?' என்று நினைத்துக்கொண்டேதான் "ஹலோ, சொல்லு!" என்றார்.

"என்னத்தைச் சொல்ல? உங்க அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னேனே, செய்தீர்களா?"

"இதோ பார், காலையில் ஆஃபீஸ் கிளம்பும்போது ஏதோ சொன்னாய். பேசினால் தகராறு வரும் என்றுதான் பேசாமல் வந்து விட்டேன். இப்போது ஏன் ஆஃபீசுக்கு ஃபோன் செய்கிறாய்?"

"நம்மகிட்டதான் பணம் இருக்கே! நல்ல வசதியான இல்லத்தில உங்கம்மாவைச் சேர்க்க வேண்டியதுதானே?"

"நம்மகிட்டதான் பணம் இருக்கே! நர்ஸ் வச்சு அம்மாவைப் பாத்துக்க நம்மால முடியும். அதைத்தானே செஞ்சுக்கிட்டிருக்கோம்?"

"இங்க பாருங்க, வீட்டில எப்பவும் நர்ஸ் நடமாடிக்கிட்டு! இது ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு. என்னால இதைச் சகிச்சுக்க முடியல."

"முடியலேன்னா நீ போயிடு முதியோர் விடுதிக்கு. உனக்கும் நாப்பது வயசுக்கு மேலே ஆயிடுச்சு இல்லே!"

பரத் கோபமாக ஃபோனை வைத்து விட்டார்.

கைபேசியில் நிறைய அழைப்புகள் வந்திருந்தன. யார், யார் என்று பார்ப்பதற்குள் மேசை மீதிருந்த தொலைபேசி சிணுங்கியது. அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வாழ்த்துச் சொன்னார். இதற்குள் எப்படியோ விஷயம் பரவி விட்டது. கைபேசிக்கு வந்திருந்த அழைப்புகளும் இது பற்றியதாகத்தான் இருக்கும்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அவரை அழைத்து வாழ்த்திய பலர்!

1 மணிக்கு உள்ளே வந்த அவரது செயலர் வந்தனா, "சார். நீங்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதனால் இன்னும் அரை மணி நேரத்துக்கு நான் எந்த அழைப்பையும் உங்களுக்கு அனுப்பப் போவதில்லை. உங்கள் கைபேசியையும் என்னிடம் கொடுங்கள்" என்று அவர் மேசை மீதிருந்த கைபேசியை உரிமையுடன் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முற்பட்டவள் திரும்பி, "வாழ்த்துக்கள் சார், நீங்கள் பிஸியாக இருந்தததால் இத்தனை நேரம் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை" என்றாள்.

"உங்களுக்கு எப்படித் தெரியும்? ஓ, உங்களைத்தான் என் ஈ-மெயிலைப்  பார்க்கச் சொல்லியிருக்கிறேனே! அலுவலகத்தில் எல்லோருக்கும் தெரியுமா?" என்றார் பரத்.

"இன்னும் சொல்லவில்லை சார். நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்."

"சொல்லி விடுங்கள்" என்றார் பரத்.

அப்போதுதான் அவருக்கு விஷயத்தை மனைவியிடம் சொல்லவில்லை என்று நினைவு வந்தது.

'சொல்லி என்ன ஆகப் போகிறது? 'அப்படியா?' என்று ஒரு வார்த்தையில் உற்சாகம் இல்லாமல் பதில் சொல்லி விட்டுத் தனக்கு வேண்டிய விஷயங்களைப் பேசத் தொடங்கி விடுவாள் மனைவி' என்று நினைத்துக் கொண்டார் பரத்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

பொருள்:
மனைவியிடம் குடும்பத்துக்குத் தேவையான பண்புகள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் வேறு எத்தனை சிறப்புகள் இருந்தும் பயனில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Recognitions Galore, But...' the English version of this story.
குறள் 53
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Tuesday, January 19, 2016

51. துணையிருப்பாள் பார்கவி!

"என்னங்க மறக்காம டிஃபன் காரியரை எடுத்துக்கங்க" என்றாள் பார்கவி.

"உனக்கு உடம்பு சரியில்ல. நீ சமைக்க வேண்டாம். நான்  வெளியிலே சாப்பிட்டுக்கறேன்னு சொன்னேனே! எதுக்குக்  காலையிலேயே எழுந்து இதெல்லாம் செய்யறே?" என்றான் கதிரேசன்.

"ஓட்டல்ல ஏதாவது சாப்பிட்டுட்டு உங்களுக்கும் உடம்பு சரியில்லாம போகணுமா? அதோட குழந்தைகளுக்கு எப்படியும் சாப்பாடு கொடுத்து அனுப்பணுமே!"

"உண்மையான காரணம் அது இல்லை. நான் ஓட்டலில் சாப்பிட்டால் காசு செலவழிஞ்சுடுமேன்னுதானே?"

"நீங்களா ஓட்டல்ல சாப்பிடறவரு? நான் டிஃபன் கொடுத்தனுப்பாட்டா நீங்க வெறும் டீயையும் பன்னையும் சாப்பிட்டுட்டு வயித்தை நிரப்பிப்பீங்கன்னு எனக்குத் தெரியாதா?"

கண்களில் ததும்பிய கண்ணீரை மனைவி பார்த்து விடக் கூடாதே என்று கதிரேசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதனால் பார்கவியின் கண்களுக்குள் பொங்கி எழுந்த கண்ணீரை அவனால் பார்க்க முடியவில்லை!

ஒரு வருடம் முன்பு வரை கதிரேசன் ஒரு சிறிய தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருந்தான். தொழிற்பேட்டையில் ஒரு சிறிய ஷெட், அதில் நான்கைந்து இயந்திரங்கள், ஏழெட்டு ஊழியர்கள் என்று ஒரு சிறிய அரசாங்கத்தை நடத்தி வந்தான்.

ஒரு பெரிய தொழில் நிறுவனத்துக்கு சில உதிரி பாகங்களைச் செய்து கொடுத்து வந்தான். தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வந்தன. ஆனால் ஒரு பில்லுக்குப் பணம் வர ஆறு மாதம் ஆகி விடும். மூன்று மாதம் கழித்துத்தான் பணம் கொடுப்போம் என்று ஆரம்பத்தில் அவர்கள் சொன்னபோது தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள் என்பதால் அவன் அதற்கு ஒப்புக் கொண்டான்.

ஆனால் நாளடைவில் மூன்று மாதம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு ஆறு மாதம் ஆகி விட்டது. வங்கிக் கடன் கொஞ்சம், வேறு கடன்கள் கொஞ்சம் என்று வாங்கி, கதிரேசன் சமாளித்து வந்தான்.

பழைய பில்களுக்குப் பணம் வந்து கொண்டிருந்ததால் பணப் புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. வீட்டுச் செலவுக்கு தாரளமாகப் பணம் கொடுத்து வந்தான். காரும் வைத்திருந்தான். ஓரளவுக்கு வசதியான வாழ்க்கை என்றே சொல்ல வேண்டும். பார்கவி வசதியான குடும்பத்திலிருந்து வந்தவள். அதனால் அவள் வசதியாக வாழ வேண்டும் என்ற அக்கறை கதிரேசனிடம் இருந்தது.

எதிர்பாராமல் நிலைமை மாறி விட்டது. அவனுக்கு ஆர்டர் கொடுத்து வந்த பெரிய நிறுவனம் தொடர்ச்சியான பொருளாதார இழப்புகளால் திடீரென்று மூடப்பட்டது. கதிரேசனுக்கு வர வேண்டிய ஆறு மாத பில் பணம் முடங்கிப் போனது.

நிறுவனத் தலைவரை நேரே சந்தித்துக் கதிரேசன் மன்றாடியபோது, நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விட்டதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார். கதிரேசன் போல் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பதாகவும் சொன்னார். ஊழியர்களுக்கே மூன்று மாத சம்பள பாக்கியாம்!

கடன் கொடுத்த வங்கியும், மற்றவர்களும் நெருக்கடி கொடுத்ததால் வேறு நிறுவனங்களிலிருந்து ஆர்டர் வாங்கித் தொழில் நடத்தும் முயற்சியை அவனால் மேற்கொள்ள முடியவில்லை. சொந்த வீடு, கார், மனைவியின் நகைகள் எல்லாவற்றையும் விற்றுக் கடன்களை அடைத்த பிறகு அவன் கையில் எதுவும் மிஞ்சவில்லை.

வேறு வழி இல்லாமல் ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைக்குச் சேர்ந்தான் கதிரேசன். குழந்தைகள், உயர் கல்வி கொடுப்பதாகச் சொல்லி உயர் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த தனியார் பள்ளியிலிருந்து கட்டணம் இல்லாத அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். சிறிதாக ஒரு வாடகை வீடு, குறைந்த பட்ஜெட்டில் வாழ்க்கை என்று மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் வாழ்க்கை திசை மாறியது.

பார்கவியின் தந்தை கதிரேசனைக் குடும்பத்துடன் தங்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்ளும்படி அழைத்தார். வருமானத்துக்கு வழி செய்து தரவும் முன் வந்தார். கதிரேசன் பதில் சொல்லும் முன்பே பார்கவி மறுத்து விட்டாள். "ஒவ்வொருத்தர் வாழ்க்கையை அவங்களேதான் வாழ்ந்துக்கணும் அப்பா" என்று சுருக்கமாக பதில் சொல்லி அவரை அனுப்பி விட்டாள். அவர் போகும்போது அவர் மனம் புண்படக் கூடாதே என்பதற்காக "ஸ்கூல் லீவு விட்டதும் குழந்தைங்களை அனுப்பி வைக்கிறேன்" என்றாள், உறவுச் சங்கிலி அறுந்து விடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக.

அதன் பிறகு பார்கவி தன்னை அடியோடு மாற்றிக் கொண்டாள். வீட்டு வேலைக்கு ஆள், கடைக்குப் போகக் கார் என்று வாழ்ந்து வந்தவள், தன் கையையும் காலையும் அதிகம் நம்ப ஆரம்பித்தாள்.

குழந்தைகளிடம் அவள் அடிக்கடி சிக்கனத்தைப் பற்றிப் பேசியது மறைமுகமாகத் தனக்கும் ஒரு பாடமோ என்று கதிரேசன் நினைத்துக் கொள்வான். 'இவள் மட்டும் நிதி மந்திரியாக இருந்தால் பற்றாக்குறை இல்லாமல் பட்ஜெட் போட்டு நாட்டின் பொருளாதாரத்தை  முன்னேற்றி விடுவாள்' என்று கூடக் கதிரேசன் நினைத்திருக்கிறான்.

எல்லாவற்றையும் விட, வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திருமணத்துக்குப் பிறகும் வசதியாக வாழ்ந்தவளால் எப்படித் தன்னை இந்த அளவுக்கு மாற்றிக் கொள்ள முடிந்தது என்ற வியப்பு அவனை விட்டு நீங்கவில்லை.

கதிரேசன் வேலைக்குக் கிளம்பிய பிறகு பார்கவிக்கு வீட்டு வேலை கொஞ்சம் இருந்தது. அதை விரைவாக முடித்து விட்டு, முகம் கழுவி, புடவை மாற்றிக் கொண்டு கைப்பையை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள்.

பகல் வேலைகளில் அவள் என்ன செய்கிறாள் என்பது கதிரேசனுக்குத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த பணத்தில் அவள் ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்கிறாள். பயிற்சி முடிந்ததும் மிகக் குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே பெண்கள் அழகுக்கலை நிலையம் ஒன்றைத் துவக்கி அதில் கிடைக்கும் வருவாய் மூலம் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பது அவளது திட்டம்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பொருள்: 
தனது குடும்பத்துக்குப் பொருத்தமான நற்பண்புகளைக் கடைப்பிடித்துத் தன் கணவனின் பொருளாதார நிலைக்கு ஏற்ப வாழ்க்கை நடத்துபவளே வாழ்க்கைத் துணை என்று கருதப்படுவாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Bhargavi's Plans' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


Sunday, January 17, 2016

50. மனிதனும் தெய்வமாகலாம்

"அப்பா! அமரர் என்றால் யார்?"

"அமரர் என்றால் தேவர்."

"தேவர் என்றால்?"

"தேவர் என்றால் தேவலோகத்தில் அல்லது சொர்க்கத்தில் இருப்பவர். ஒருவர் இந்த உலகத்தில் இருக்கும்போது நல்ல காரியங்களைச் செய்தால், இறந்த பின் அவர் சொர்க்கத்துக்குச் செல்வார். அங்கே தேவர் போல் வாழ்வார். அதனால்தான் இறந்து போனவர்களை 'அமரர்' என்று சொல்கிறோம். இறந்த பின் அவர் சொர்க்கத்துக்குச் சென்றிருப்பார் என்ற விருப்பத்திலும் நம்பிக்கையிலும் சொல்லப்படுவது இந்த வார்த்தை."

"அப்படியானால் இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாரும் அமரர் இல்லையா?"

"உயிரோடு இருப்பவர்களைக் குறிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை" என்றார் குணசீலன் எச்சரிக்கை உணர்வுடன்.

பள்ளியில் படிக்கும் பத்து வயது மகனின் கேள்வி குணசீலனின் மனதில் திரும்பத் திரும்ப மேலெழும்பிக் கொண்டே இருந்தது. தனக்குத் தெரிந்த மனிதர்கள் பலரை நினைத்துப் பார்த்தார். அவர்களில் யாரையாவது கடவுளுக்கு நிகரானவர்களாகச் சொல்ல முடியுமா? தெரியவில்லை.

அவருக்கு மிகவும் விருப்பமான பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.'

எப்படி?

அந்தப் பாடலிலேயே சில குறிப்புகள் இருந்தன. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தெய்வம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு எவராலாவது வாழ முடியுமா?

அன்று மாலை ஒரு ஆன்மீகச் சொற்பொழிவுக்குச் சென்றார் குணசீலன். சொற்பொழிவாற்றிய அறிஞர் சொன்ன ஒரு விஷயம் குணசீலனின் சிந்தனையைத் தூண்டியது. "விண்ணுலகம் சென்றால் அங்கே அமிர்தம் குடிக்கலாம். அமிர்தம் என்பது என்ன? அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு பானம். இந்த மண்ணுலகத்திலேயே நமக்கு அமிர்தம் கிடைத்தால் இங்கேயே நாம் தேவ வாழ்க்கை வாழலாமே! மரணத்துக்குப் பின் கிடைக்கப் போகும் அமர வாழ்க்கையை எதிர்பார்த்து இருக்க வேண்டாமே! சரி. அந்த அமிர்தம் எங்கே கிடைக்கும்? குளிர்பானங்கள் விற்கும் கடைகளிலோ, மதுபானம் விற்கும் இடங்களிலோ கிடைக்குமா? கிடைக்காது. வாழ்க்கையை ஒரு இனிமையான அனுபவமாகக் கருதி, வாழ்க்கை தரும் சவால்களை எதிர்கொண்டு தன்னால் இயன்ற வரை வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவியாக இருப்பவன் குடிக்கும் தண்ணீர் கூட அமிர்தம்தான். அத்தகைய மனிதர்கள்தான் தேவர்கள் அல்லது அமரர்கள்."

இந்தப் பேச்சு குணசீலனின் சிந்தனையைக் கிளறியது.

சொற்பொழிவாற்றிய பெரியவர் அவர் சொன்னது போன்ற தேவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பாரா? தெரியவில்லை. ஆனால் அவர் மனைவியை அவர் ஒதுக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையாக இருந்தால் அவர் வாழும் வாழ்க்கையை தெய்வீகமான வாழ்க்கை என்று சொல்ல முடியுமா? தனது ஆன்மீகப் பணிக்கு இடையூறு வரக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்ததாக அவர் காரணம் சொல்லலாம், ஆனாலும் அது ஒரு களங்கம்தானே?

இதைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்று அவருக்குத்தோன்றியது.

தன் நண்பர் பூபதியின் வீட்டிற்குச் சென்றார் குணசீலன். பூபதி ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர். அதனால் அவரிடம் அந்த ஆன்மீகச் சொற்பொழிவைப் பற்றிப் பேசி விட்டு மண்ணுலகிலேயே தேவ வாழ்க்கை வாழ்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற தன் ஐயத்தையும் வெளிப்படுத்தினார்.

பூபதிக்கும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை. குணசீலன் தன் கேள்விக்கு விடை கிடைக்காத நிலையில்,யோசனையுடன் விடை பெற்றார்.

குணசீலன் சென்றதும், பூபதியிடம் அவர் மனைவி கேட்டாள். "என்ன உங்க நண்பர் இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் கேட்கறாரு? சந்நியாசி ஆயிடுவார் போல இருக்கே!"

"அப்படி இல்லை. சிறப்பான இல்லற வாழ்க்கை நடத்தறதனாலதான் அவருக்கு இப்படிப்பட்ட சிந்தனையே வந்திருக்கு" என்றார் பூபதி.

"எப்படிச் சொல்றீங்க?"

"இப்ப நான் என்னோட கம்பெனியிலே மானேஜரா இருக்கேன். அதனால இதற்கு அடுத்தபடியான ஜெனரல் மானேஜர் பதவிக்கு உயர முடியுமான்னு யோசிக்கிறேன். நான் ஒரு கிளர்க்கா இருந்தா இப்படிப்பட்ட சிந்தனை எனக்கு வருமா? மனுஷ வாழ்க்கையைச் சிறப்பா வாழறதாலதான் தேவ வாழ்க்கையைப் பற்றி அவரால யோசிக்க முடியுது!"

"அவர் நல்ல மனுஷர்னு தெரியும். ஆனா இல்லற வாழ்க்கையைச் சிறப்பா வாழறாருன்னு எப்படிச் சொல்றீங்க?"

"அரசாங்க வேலையில இருந்தாலும் நேர்மையா இருக்கறதினால மத்த சிலர் மாதிரி அவரால ரொம்ப வசதியான வாழ்க்கை வாழ முடியல. இதனால அவர் மனைவிக்கு அவர் மேல கோபம். தன்னோட கோபத்தை அவங்க தினசரி வாழ்க்கையில பல விதத்திலும் வெளிப்படுத்தறாங்க. ஆனா குணசீலன் அதைப்பத்திக் கொஞ்சம் கூடக் கவலைப்படாம, தன் மனைவிக்கும் மகனுக்கும் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாச் செஞ்சுக்கிட்டிருக்காரு. அதோட இல்லாம மத்தவங்களுக்குத் தன்னால முடிஞ்ச உதவிகளையும் செஞ்சுக்கிட்டிருக்காரு. 

"அவர் மனைவியோட சொந்தக்காரங்க பலருக்கே அவரு நிறைய உதவி செஞ்சிருக்காரு. அது அவர் மனைவிக்கும் தெரியும். ஆனாலும்  அவங்க தன் மனசை மாத்திக்கல! மத்தவங்க மாதிரி தன்னால வசதியா, ஆடம்பரமா வாழ முடியலியேங்கற கோபம் அவங்களுக்கு நிறைய இருக்கு. 

"ஆனா குணசீலன் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம, மனுஷனா இருந்துக்கிட்டே தேவ வாழ்க்கை வாழ முடியுமான்னு சிந்திச்சுக்கிட்டிருக்காருன்னா எப்படிப்பட்ட மனசு அவரோடதுன்னு பாரு!"

அவர் மனைவி மௌனமாக இருந்தாள்.

"அவர் கேட்ட கேள்விக்கு பதில் ரொம்ப சுலபம். மனுஷனா இருந்துக்கிட்டே தெய்வ வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கிறது அவரேதான்! ஆனா நான் இதைச் சொன்னா அவரு ஒத்துக்க மாட்டாரு. அதனாலதான் நான் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாதுன்னு சொன்னேன்!" என்றார் பூபதி.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.


பொருள்:
இந்த உலகத்தில் வாழும் (இல்)வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன் வானில் இருக்கும் தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'In Search of Divinity'
 the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















Saturday, January 16, 2016

49. வெள்ளி விழாவில் வெளிப்பட்ட உணர்வுகள்

"இருபத்தைந்தாவது திருமண விழாவைக் கொண்டாடணுமா என்ன?" என்றான் மாதவன்.

"நான் கொண்டாடச் சொல்லலே! உங்க பொண்ணுதான் சொல்றா!" என்றாள் ரமா.

மாதவனுக்குப் பொதுவாக இது போன்ற கொண்டாட்டங்கள் பிடிப்பதில்லை. மகள் சுகன்யாவின் விருப்பத்துக்காக ஒப்புக் கொண்டான்.

நெருங்கிய உறவினர்களை மட்டும் கூப்பிட்டு ஒரு ஓட்டலில் கொண்டாடினார்கள்.

வந்த உறவினர்கள் பரிசுகள் கொடுத்து வாழ்த்தினார்கள். சிலர் வாழ்த்திப் பேசினார்கள். பிறகு மாதவனையும், ரமாவையும் பேசச் சொன்னார்கள்.

"என்னுடைய கல்யாணம் என் அப்பா அம்மா பார்த்துச் செய்து வைத்தது. என்னைப் பொத்தவரை ரமா எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். என்னைப் பத்தி அவள் என்ன நினைக்கிறாளோ தெரியாது! எனக்கு அவ்வளவா வசதி கிடையாது. ரமாவுக்குப் புடவை, நகைன்னு நான் அதிகமா வாங்கிக் கொடுத்ததில்லை. அவளும் கேட்டதில்லை. எங்களால முடிஞ்ச அளவுக்கு சுகன்யாவை வளர்த்திருக்கோம். அவ நல்லா படிச்சு ஒரு வேலையையும் தேடிக்கிட்டா. இது எனக்குத் திருப்தியா இருக்கு. இருபத்தைந்து வருஷத் திருமண வாழ்க்கை ஒரு சாதனையாங்கறது எனக்குத் தெரியாது. ஆனா நீங்க எல்லாரும் வந்து எங்களை வாழ்த்தியது ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று மாதவன் சுருக்கமாகப் பேசி பலத்த கைதட்டல் பெற்றான்.

பேச மறுத்த ரமாவை வற்புறுத்திப் பேச வைத்தார்கள். அவள் தயக்கத்துடன் பேசினாள். "என்னை அவர் தனக்கு கிடைச்ச அதிர்ஷ்டம்னு சொன்னதும் என் கண்ணில தண்ணி வந்துடுச்சு. எங்களுக்குள்ள அப்பப்ப சண்டை வரும். ஒருவேளை அவருக்கு என்னைப் பிடிக்கலையோ, வேண்டா வெறுப்பாத்தான் குடித்தனம் நடத்தறாரோன்னு நான் சில சமயம் நினைச்சிருக்கேன். நான்தான் அவரைச் சரியாப் புரிஞ்சுக்கலையோன்னு இப்ப நினைக்கிறேன். ஆனா அவர் எப்பவுமே என்கிட்டே கோபமா இருந்தது கிடையாது. சண்டை போட்டா கூட கொஞ்ச  நேரம் கழிச்சு இன்னைக்கு என்ன சமையல்னு கேட்டுக்கிட்டே சமையல்கட்டுக்கு வந்துடுவார்."

பிறகு சுகன்யா பேசினாள். "எங்க அம்மா அப்பா சண்டை போட்டுக்கிட்டது என்னைப் பத்தித்தான். ஆரம்பத்தில நான் சரியாப் படிக்கலை. அதனால என்னை டியூஷனுக்கு அனுப்பணும்னு அம்மா சொல்லுவாங்க. 'டியூஷன் எதுக்கு? நீதான் படிச்சிருக்கியே! நீயே சொல்லிக் கொடுக்கலாமே' ன்னு அப்பா சொல்லுவாரு. 'நீங்களும்தான் படிச்சிருக்கீங்க. நீங்க சொல்லித் தரலாமே'ன்னு அம்மா சொல்லுவாங்க. 'எனக்கு சொல்லித் தரத் தெரியாது'ம்பாரு அப்பா. 'அது மாதிரிதான் எனக்கும். அதனாலதான் டியூஷனுக்கு அனுப்பச் சொல்றேன்'ன்னு அம்மா சொல்லுவாங்க. இது மாதிரி பல சமயங்களில என்னாலதான் அவங்களுக்குள்ள சண்டை வரும். கொஞ்சம் பெரிய கிளாசுக்கு வந்ததும் நல்லாப் படிக்கறது ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டு நானே கஷ்டப்பட்டுப் படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்பறமும் என்னை எந்த கோர்ஸில சேக்கலாம்னு சண்டை போட்டுப்பாங்க. ஆனா நான் எனக்கு இஷ்டப்பட்ட கோர்ஸிலதான் சேர்ந்தேன். இப்ப படிப்பை முடிச்சு வேலையிலும் சேர்ந்தாச்சு. இனிமே அவங்க என்னைப் பத்தி சண்டை போட வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்."

"ஏன் இருக்காது? உன் கல்யாண விஷயமா சண்டை போடுவோமே!" என்றாள் ரமா சிரித்தபடி.

"நீங்க ரெண்டு பேரும் எப்படிப்பட்ட மாப்பிளை பார்க்கறதுன்னு சண்டை போட்டுப்பீங்க. ஆனா உங்க பொண்ணு அவளுக்கு இஷ்டமான படிப்பில சேந்த மாதிரி அவளுக்கு ஏத்த பையனை அவளே தேர்ந்தெடுக்கப் போறா!" என்று யாரோ சொல்ல அங்கே பெரிதாக ஒரு சிரிப்பலை  எழுந்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.


பொருள்:
அறம் என்று கருதப்படுவது இல்வாழ்க்கையே ஆகும். அந்த இல்வாழ்க்கை பிறர் பழித்துப் பேச இடம் கொடுக்காமல் சிறப்பாக இருந்தால் நல்லது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

Read 'Sentiments Expressed During the Silver Jubilee' the English version of this story
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்