வெளியே போய் விட்டு வந்த சிவாவிடம் ஒரு களைப்பு தெரிந்தது.
"என்னங்க? உடம்பு சரியில்லையா?" என்றாள் அவன் மனைவி சாரதா.
"ஒண்ணுமில்ல!" என்றான் சிவா.
மறுநாள் காலை எழுந்ததும் குளித்து விட்டு, "டாக்டரிடம் போயிட்டு வரேன்" என்று கிளம்பினான் சிவா.
"என்னங்க உடம்புக்கு? நேத்திக்கே கவனிச்சேன். ஒரு மாதிரி சோர்வா இருந்தீங்களே!" என்றாள் அவன் மனைவி சாரதா, பற்றத்துடன்.
"ஒண்ணுமில்ல. நேத்திலேந்து கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருக்கு. ராத்திரி சரியாத் தூங்க முடியல. அதனாலதான், டாக்டர்கிட்ட போகலாம்னு பாத்தேன்."
"இருங்க. நானும் கூட வரேன்!" என்று கிளம்பினாள் சாரதா.
"உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமா இருக்கு. 180 இருக்கு" என்றார் மருத்துவர்.
"எவ்வளவு இருக்கணும்?" என்றாள் சாரதா.
"120 இருக்கணும். 140க்கு மேல போனாலே அதிகம்னு சொல்லுவோம். கவலைப்படாதீங்க. ரத்த அழுத்தம் இந்தக் காலத்தில நிறைய பேருக்கு இருக்கு. மாத்திரை எழுதிக் கொடுக்கறேன். சாப்பிட்டுக்கிட்டிருந்தா சரியாயிடும். சிகரெட், மதுப் பழக்கம் ஏதாவது இருந்தா குறைச்சுக்கணும்."
"இவருக்கு அதெல்லாம் எதுவும் கிடையாதுங்க. காப்பி கூடக் குடிக்கிறதில்ல இவரு" என்றாள் சாரதா.
"அப்ப கவலைப்பட எதுவும் இல்ல. சீக்கிரமே கட்டுப்படுத்திடலாம். சாப்பாட்டில உப்பைக் குறைச்சுக்கங்க. நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செஞ்சா, இன்னும் நல்லா குறையும்" என்றார் டாக்டர், சிரித்தபடி.
"வயசாயிடுச்சுல்ல? இது மாதிரி ஏதாவது வரும்தான். நீ ஒண்ணும் கவலைப்படாதே!" என்றான் சிவா, மனைவியிடம், வீட்டுக்கு வந்ததும்.
"ஏங்க, நாப்பது வயசு ஒரு வயசா? பொதுவா, நீங்க ரொம்ப உற்சாகமா இருக்கறவரு. அஞ்சாறு மாசமாதான் நீங்க வருத்தத்தோடயும், கோபத்தோடயும் இருக்கீங்க. வீட்டில குழந்தைங்க கிட்ட கூட எரிஞ்சு விழறீங்க. அதுக்கு முன்னால நீங்க இப்படி இல்லையே! குழந்தைங்க எங்கிட்ட வந்து அப்பாவுக்கு இப்பல்லாம் ஏன் ரொம்பக் கோபம் வருதுன்னு கேக்கறாங்க! உங்க கோபம்தான் உங்க ரத்த அழுத்தத்துக்குக் காரணமோ என்னவோ!" என்றாள் சாரதா.
சிவா மௌனமாக இருந்தான்.
"பிஸினஸ்ல உங்களை உங்க பார்ட்னர் ஏமாத்திட்டுப் போயிட்டார்ங்கறதனால உங்களுக்கு ஏமாற்றம், கோபம் எல்லாம் இருக்கறது நியாயம்தான். ஆனா, நீங்க அதிலேந்து வெளியே வரணும்ல? நீங்கதான் சமாளிச்சு மறுபடி பிசினஸை ஓரளவுக்கு சரி பண்ணிட்டீங்களே! அப்புறம் ஏன் இந்தக் கோபம் எல்லாம்?"
"என்னதான் நான் நிலைமையை சமாளிச்சுட்டாலும், அவன் ஏமாத்தினதை நினைச்சா, எனக்கு வர கோபம் போக மாட்டேங்குதே!" என்றான் சிவா.
"சரி. அந்தக் கோபத்தை நீங்க யார்கிட்ட காட்டறீங்க? வீட்டில என்கிட்டேயும், குழந்தைங்ககிட்டேயும் காட்டறீங்க. உங்ககிட்ட வேலை செய்யறவங்ககிட்டேயும் காட்டறீங்களோ என்னவோ தெரியாது. அதனால, இப்ப உங்க ஆரோக்கியமே பாதிக்கப்பட்டிருக்கு."
"டாக்டர் உப்பைக் குறைச்சுக்கச் சொன்னார் இல்ல?" என்றான் சிவா.
"ஆமாம். அதுக்கென்ன இப்ப?" என்றாள் சாரதா, கணவன் ஏன் சம்பந்தமில்லாமல் இதைச் சொல்கிறான் என்று புரியாமல்.
"கோபத்தைக் குறைச்சுக்கச் சொல்லியும் அவர் சொல்லி இருக்கணுமில்ல?" என்றான் சிவா, சிரித்தபடி.
"அதான் வீட்டு டாக்டர் நான் சொல்றேனே!" என்றாள் சாரதா, அவன் சிரிப்பில் சேர்ந்து கொண்டு.
"சமையல்ல உப்பை நீ குறைச்சுடுவ. மனசில கோபத்தை நான் குறைச்சுக்கறேன்" என்றான் சிவா.
துறவறவியல்
அதிகாரம் 31
வெகுளாமை
குறள் 305தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
பொருள்:
ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள நினைத்தால், கோபத்தை அடக்க வேண்டும். அப்படி அடக்காவிட்டால், கோபம் தன்னையே அழித்து விடும்.