அறிவழகனுக்கு அவன் அலுவலக வேலை தொடர்பாக ஜெர்மனிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது அவன் மனைவி குமுதா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தாள்.
"இது ஒரு பெரிய வாய்ப்புதான். ஒரு வருஷம் அங்கே இருக்கணும்னு சொல்றாங்க. நடுவில வர முடியாது. நீ கர்ப்பமா இருக்கறப்ப உன்னை விட்டுட்டுப் போக மனசு வல்ல. அதனால இந்த வாய்ப்பை வேண்டாம்னு சொல்லிடப் போறேன்" என்றான் அறிவழகன்.
"அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க. ஒரு வருஷம் ஜெர்மனியில போய் வேலை செஞ்சா பணம் அதிகமா வரும் இல்ல?" என்றாள் குமுதா.
"ரொம்ப நிறைய வரும். அது மட்டும் இல்ல. இந்த அனுபவத்தினால எனக்கு வேலையில சீக்கிரமே ப்ரமோஷன் கிடைச்சு பெரிய அளவுக்கு மேல வர முடியும். வேற வேலைக்குப் போகவும் வாய்ப்புக் கிடைக்கும்."
"அப்ப இதில யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? எதிர்காலம் நல்லா இருக்கும்னா கொஞ்ச நாள் கஷ்டப்படறதில தப்பு இல்லையே! எப்படியும் பிரசவத்துக்கு நான் என் அம்மா வீட்டுக்குப் போகணும். கொஞ்சம் முன்னாலேயே போறதா இருக்கட்டும். நீங்க ஜெர்மனிலேந்து வரப்ப என்னோட நம்ம குழந்தையும் உங்களை வரவேற்கத் தயாரா இருக்கும்!" என்றாள் குமுதா மனத்தை திடப்படுத்திக் கொண்டு.
"உன்னை மாதிரி ஒரு மனைவி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்" என்றான் அறிவழகன்.
சென்னை வீட்டைக் காலி செய்து சாமான்களை கிராமத்தில் இருந்த குமுதாவின் வீட்டுக்கு அனுப்பி விட்டு, குமுதாவையும் அவள் வீட்டில் கொண்டு விட்டு விட்டு அறிவழகன் ஜெர்மனிக்குக் கிளம்பிச் சென்றான்.
ஜெர்மனிக்குச் சென்ற பின் வாரம் ஒருமுறை கடிதம் எழுதினான் அறிவழகன். குமுதா இருந்த கிராமத்தில் தொலைபேசி வசதி இல்லை.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கிராமத்துக்கு அருகிலிருந்த நகரத்தில் வசித்த அவர்கள் உறவினரின் நண்பர் வீட்டின் தொலைபேசி இருப்பதை அறிந்து அவர்கள் எண்ணைப் பெற்று அதை அறிவழகனுக்கு எழுதி அவன் தொலைபேசியில் அழைக்கும் நேரத்தை முன்பே முடிவு செய்து கொண்டு , குறிப்பிட்ட நாளில் தன் உறவினர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அவர் நண்பர் வீட்டுக்குச் சென்று சில மணி நேரம் காத்திருந்த பின் அறிவழகனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் அவனிடம் சில நிமிஷங்கள் பேசினாள் குமுதா.
ஒரு புறம் கணவனிடம் பேசியது மகிழ்ச்சியை அளித்தாலும், கருவுற்ற நிலையில் அவனைப் பிரிந்திருக்கும் மனவேதனையை அதிகரிப்பதாகவே அமைந்தது அந்தத் தொலைபேசி உரையாடல்.
"உனக்கு எப்ப வேணும்னாலும் இங்க வந்து பேசலாம்மா!" என்று அவள் உறவினரின் நண்பர் பெருந்தன்மையுடன் கூறினாலும், அது நடைமுறைக்கு உகந்தது இல்லை என்பதைக் குமுதா உணர்ந்திருந்தாள்
வாரம் ஒருமுறை கடிதம் எழுதிக் கொண்டிருந்த அறிவழகனிடமிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சில வாரங்கள் கடிதம் வரவில்லை.
ஒரு மாதம் கழித்து அவன் எழுதிய கடிதத்தில், தனக்கு வேலை அதிகமாக இருந்ததால் எழுத முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்ததோடு, வாராவாரம் எழுத விஷயம் இல்லையன்பதால் இனி அவ்வப்போது தனக்கு நேரம் கிடைக்கும்போதும், முக்கியமான விஷயம் இருந்தால் மட்டுமே எழுதுவதாகவும் அவன் எழுதி இருந்தது குமுதாவுக்கு ஏமாற்றமளித்தது.
குமுதா எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தபோது அவளுக்கு வலி ஏற்பட்டு அவளை அருகிலிருந்த நகரத்திலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். குமுதாவுக்குக் குறைப் பிரசவம் ஏற்பட்டு குழந்தை இறந்து பிறந்தது.
கணவனைப் பிரிந்த நிலையில் குழந்தையும் இறந்து பிறந்தது குமுதாவை மனதளவில் பெரிதும் பாதித்து விட்டது. குழந்தை இறந்து பிறந்ததைக் கணவனுக்கு எழுதினாள். தனக்கு அதிர்ச்சியும் துயரமும் ஏற்பட்டதாக அறிவழகனிடமிருந்து உடனே பதில் வந்தது.
ஆனால் அதற்குப் பிறகு அறிவழகனிடமிருந்து கடிதம் வருவது இன்னும் குறைந்து விட்டது. வந்த கடிதங்களிலும் இயந்திரத்தனமான விசாரிப்புகள் மட்டும்தான் இருந்தன. குழந்தை இறந்த வருத்தத்தில் இருக்கும் தனக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் கணவன் எதுவும் எழுதவில்லையே என்ற ஏக்கம் குமுதாவுக்கு ஏற்பட்டது.
அறிவழகன் ஜெர்மனிக்குச் சென்று ஒரு வருடம் முடிவும் தருவாயில் அவன் திரும்பி வரும் தேதியைக் கேட்டுக் குமுதா அவனுக்கு எழுதினாள். ஆனால் அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.
அறிவழகன் சென்று ஒரு வருடத்த்துக்கு மேல்ஆகி விட்டது.
"மாப்பிள்ளை இத்தனை நேரம் வந்திருக்கணுமே! அவர்கிட்டேந்து தகவல் வரலை. நான் அவங்க ஆஃபீசுக்குப் போய் விசாரிச்சுட்டு வரேன்" என்று சென்னைக்குக் கிளம்பிச் சென்றார் குமுதாவின் தந்தை.
இரண்டு நாள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்தவர், குமுதாவிடம், "அந்த அயோக்கியன் ஒரு மாசம் முன்னாடியே இந்தியாவுக்கு வந்துட்டானாம்மா!" என்றார் கோபத்துடன்.
தன் கணவனை எப்போதும் மாப்பிள்ளை என்றே குறிப்பிடும் அப்பா இப்போது அவனை அயோக்கியன் என்று குறிப்பிட்டதிலிருந்தே ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்ட குமுதா, "என்னப்பா சொல்றீங்க?" என்றாள் தன்னைத் தாக்கப் போகும் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளத் தன்னைத் தயார் செய்து கொண்டவளாக.
"அவனோட வேலை செய்யற ஒரு பெண்ணும் ஜெர்மனிக்கு அவனோட போயிருக்கா. ரெண்டு பேரும் சேர்ந்து ஜெர்மனியில இருக்கறப்ப அவங்களுக்குள்ள நெருக்கம் ஏற்பட்டிருக்கு. இந்தியாவுக்குத் திரும்பறத்துக்கு முன்னாலேயே ரெண்டு பேரும் டெல்லி ஆஃபீசுக்கு மாற்றல் வாங்கிக்கிட்டு ஜெர்மனியிலேந்து நேரா டெல்லிக்கு வந்துட்டாங்களாம்" என்றார் அவள் அப்பா குமுறலுடன்.
"உங்களுக்கு யாருப்பா இதையெல்லாம் சொன்னாங்க?" என்றாள் குமுதா அழுகையை அடக்கிக் கொண்டு.
"அவங்க ஆஃபீஸ்ல எல்லாருக்கும் இது தெரிஞ்சிருக்கும்மா. அங்கே வேலை செய்யற அவன் ஃபிரண்ட் மனோகர்ங்கறவர்தான் இதைச் சொன்னாரு. உனக்கு அவரைத் தெரியுமாமே! உங்க வீட்டுக்கெல்லாம் வந்திருக்காராமே!"
"ஆமாம்ப்பா! அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும். ஜெர்மனிக்குப் போய் ரெண்டு மூணு மாசத்திலேந்தே அவர்கிட்ட ஒரு மாறுதல் இருக்கறதை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். ஏதோ நடக்கப் போகுதுன்னு பயந்துகிட்டுத்தான் இருந்தேன்..."
பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் குரல் விம்மியது. அழுகை உடைத்துக்கொண்டு வந்தது.
சற்று நேரம் மௌனமாக மகள் அழுவதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த அவள் அப்பா, "உன் குழந்தை இறந்து பிறந்தப்ப எல்லாருக்குமே அது ஒரு பெரிய சோகமா இருந்துச்சு. இப்ப நடந்த்தைப் பாப்பறப்ப அது கூட ஒரு விதத்தில நல்லதுதான்னு தோணுது!" என்றார்.
"நான் கர்ப்பமா இருக்கறப்ப என்னைத் தனியா விட்டுட்டு ஜெர்மனிக்குப் போகலைன்னுதான் அவர் சொன்னாரு. நான்தான் பணம் கிடைக்கும், அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், எங்க எதிர்காலத்துக்கு நல்லதுன்னெல்லாம் நினைச்சு அவரைப் போகச் சொன்னேன். எங்க நன்மைக்குன்னு நான் நினைச்சு செஞ்ச காரியம் இப்ப எனக்கே கெடுதலா அமைஞ்சுடுச்சே அப்பா!" என்றாள் குமுதா அழுது கொண்டே.
அறத்துப்பால்
ஊழியல்
அதிகாரம் 38
ஊழ்
குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
பொருள்:
நாம் செல்வம் ஈட்டும் முயற்சியில், சில சமயம், விதிவசத்தால் நல்லவை தீயவையாகும், தீயவை நல்லவையாகும்.