About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, October 26, 2018

217. குழந்தைகள் காப்பகம்

"என்னங்க, கீழே குடியிருக்கறவங்க இந்த மாசம் வீட்டைக் காலி பண்றாங்க. வேற யாருக்காவது வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணுங்க" என்றாள்  சரஸ்வதி.

"கீழே ஒரு குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்" என்றார் நல்லசிவம்.

"பரவாயில்லையே! வேலையில இருந்தப்ப, சம்பளப் பணம், வாடகைப் பணம் எல்லாத்தையும் எடுத்து யார் யாருக்கோ தர்மம் பண்ணிக்கிட்டிருந்தீங்க. இப்ப ரிடயர் ஆனப்பறம், பிசினஸ் பண்ணலாம்னு எண்ணம் வந்திருக்கே! ஆச்சரியம்தான்."

நல்லசிவம் சிரித்தபடி, "இது பிசினஸ் இல்ல. பணம் கொடுத்துக் குழந்தையைக் காப்பகத்தில சேர்க்க முடியாத பெற்றோர் எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்களுக்காக, இலவசமா ஒரு காப்பகம் ஆரம்பிக்கப் போறேன்."

"அதானே பாத்தேன்! திடீர்னு, வேதாளம் முருங்கை மரத்திலேந்து கீழே இறங்கிடுச்சேன்னு ஆச்சரியப்பட்டேன். வேலையில இருந்தப்பவே, வந்த பணத்தையெல்லாம் வாரிக் கொடுத்துக்கிட்டு, ஊருக்கு உழைக்கிறேன்னு ஓய்வில்லாம ஓடிக்கிட்டு இருந்தவராச்சே நீங்க? ஆமாம். வீட்டு வாடகை போச்சு. காப்பகம் நடத்த ஆட்களை வேலைக்கு வைக்கணும், வேற செலவெல்லாம் இருக்கு. அதுக்கெல்லாம் வேற பணம் வேணும். என்ன செய்யப் போறீங்க?"

"இத்தனை நாளா, நம்ப பையங்க பணம் அனுப்பறேன்னு சொல்லச்சே வேண்டாம்னுட்டேன். இப்ப நான் ரிடயர் ஆனப்பறம், ரெண்டு பேரும் ஆளுக்கு இருபதாயிரம் ரூபா அனுப்பறேன்னாங்க. நானும் சரின்னுட்டேன். அந்தப் பணம், என் பென்ஷன்ல நம்ப செலவு போக மீதி உள்ள பணம் இதையெல்லாம் வச்சு சமாளிக்க வேண்டியதுதான். கணக்குப் போட்டுப் பாத்தேன். சமாளிக்கலாம்னு தோணுது"

"ஏங்க, உங்களுக்கென்ன தலையெழுத்தா?" என்றாள் சரஸ்வதி, ஆற்றாமையுடன்.

நல்லசிவம் வெறுமனே சிரித்தார். "உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்" என்றார்.

"என்ன?"

"அது முக்கியமில்லை. நான் இறந்து போனப்பறம் செய்ய வேண்டிய ஏற்பாடு பத்தி..."

"ஏங்க, உங்களுக்கு வயசு இப்பதான் அறுபது ஆகியிருக்கு. இந்தக் காலத்தில நிறைய பேரு தொண்ணூறு வயசுக்கு மேல இருக்காங்க, இப்ப ஏன் இந்தப் பேச்சு?"

"இல்லை..."

"இப்படியெல்லாம் பேசி என்னை வருத்தப்பட வைக்காதீங்க. நீங்க செய்யற காரியங்கள் எதுக்கும் நான் தடை சொல்றதில்ல. அதுக்குக் கைம்மாறாகவாவது இப்படியெல்லாம் பேசாம இருங்க" என்றாள் சரஸ்வதி, கோபத்துடன்.

ஒரு மாதத்தில் குழந்தைகள் காப்பகம் துவக்கப்பட்டுச் சிறப்பாக நடந்து வந்தது.

ல்லசிவத்துக்கு அறுபத்தைந்து வயதானபோது, ஒருநாள் அவர் தூக்கத்திலேயே இறந்து விட்டார்.

ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் மூத்த மகன் சங்கர், உள்ளே அமர்ந்து அழுது கொண்டிருந்த சரஸ்வதியிடம் வந்தான். 

"அம்மா! ஒரு நிமிஷம் இப்படி வரியா?" என்று அவளை இன்னொரு அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அறையில் அமர்ந்திருந்தவரைக் காட்டி, "அம்மா, இவர் ஒரு ஆஸ்பத்திரியிலேந்து வராரு. அப்பா தன் உடல் உறுப்புகளை தானம் செஞ்சிருக்காராம்  ஆனா, நாம சம்மதிச்சாதான், உடலை எடுத்துப் போவாங்களாம். எடுக்கக் கூடிய உடல் உறுப்புகளை எடுத்துக்கிட்டு, அப்புறம் உடலை அனுப்புவாங்க. அதுக்கு சில மணி நேரம் ஆகலாம். நீ சரின்னு சொன்னாதான். உனக்கு இஷ்டம் இல்லேன்னா அப்படியே அடக்கம் பண்ணிடலாம்" என்றான்.

சரஸ்வதி கண்ணை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் யோசித்தாள். தான் இறந்த பிறகு செய்ய வேண்டிய ஏற்பாடு என்று தன் கணவர் தன்னிடம் ஒருமுறை பேச முயன்றதை நினைவு கூர்ந்தாள். 'இதைப் பத்தித்தான் சொல்ல முயற்சி செஞ்சிருப்பாரு போலருக்கு.'

"சங்கர்! உங்கப்பா மத்தவங்களுக்கு உதவி செய்யறதையே முக்கியமா நினைச்சு வாழ்ந்தாரு. உயிரோடு இருந்தப்ப, தன் பணத்தையும், உழைப்பையும் மத்தவங்களுக்காகச் செலவழிச்சாரு. இறந்தப்பறம், தன் உடல் மத்தவங்களுக்குப் பயன்படணும்னு நினைச்சிருக்காரு. அவரு விருப்பப்படி நடந்துக்கறதுதான் அவருக்கு நாம காட்டற மரியாதை. நமக்குப் பெருமையும் கூட!" என்றாள் சரஸ்வதி, ஒரு நிமிடம் தன் துக்கத்தை மறந்தவளாக.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பொருள்:  
பிறருக்கு உதவும் குணம் உள்ளவரிடம் உள்ள செல்வம், தன் எல்லா உறுப்புகளும் பயன்படும் மரம் போன்றது.
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்
























Wednesday, October 24, 2018

216. நாதனின் உயில்

Featured post on IndiBlogger, the biggest community of Indian Bloggers
"அப்பா! நீங்க கஷ்டப்பட்டு ஆரம்பிச்சு, வளர்த்த தொழில் இது. இன்னிக்குத் தொழிலை நல்லா நடத்தி, லாபம் சம்பாதிக்கறோம்னா, அதுக்குக் காரணம் உங்க உழைப்பு. அப்படி இருக்கறப்ப, சம்பாதிக்கறதில பெரும்பகுதியை, இப்படி வாரி விடறீங்களே, இது எதுக்கு? 

"ஏற்கெனவே, தொழிலாளர்களுக்கு மத்த எந்த கம்பெனியிலேயும் கொடுக்கறதை விட அதிக சம்பளம், வசதிகள், அவங்க குழந்தைகள் படிப்பு, கல்யாணத்துக்கு நிதி உதவின்னு அள்ளிக் கொடுக்கறோம். 

"இது போதாதுன்னு, நம்ப தொழிற்சாலை இருக்கற ஊரைத் தத்து எடுத்துக்கிட்டு, அந்த ஊர்ல சாலை அமைக்கிறது, சாக்கடை வெட்டறது, பள்ளிக்கூடம் கட்டறதுன்னு ஏகப்பட்ட பணம் செலவழிக்கறோம். இதுக்கும் மேல, வெளியில பல நிறுவனங்களுக்கு நன்கொடை. இது ரொம்ப அதிகமா இல்லை?" என்றான் சதீஷ்.

"உன் தம்பி என்ன சொல்றான்னு கேக்கலாம்!" என்றார் நாதன்.

"நீங்க செய்யறது சரிதான்னு எனக்குத் தோணுதுப்பா. மத்தவங்களுக்கு மட்டும் இல்லாம, எங்களுக்கும் நீங்க ஒரு முன் உதாரணமா இருக்கீங்கன்னு நினைக்கறேன். உங்களை மாதிரி இன்னும் சில பேர் இருந்தா, இந்த உலகம் ரொம்ப நல்லா இருக்கும்" என்றான் மூர்த்தி.

"சதீஷ்! உன் தம்பிக்குப் புரியறது உனக்குப் புரியல. மத்தவங்களுக்கு உதவணும்கற எண்ணம் உனக்குக் கொஞ்சம் கூட இல்லாதது எனக்கு வருத்தமா இருக்கு" என்றார் நாதன்.

"நாதன்! நான் உங்க வக்கீல் மட்டும் இல்ல, உங்க நண்பரும் கூட. அதனால, நீங்க ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றார் கேசவன்.

நாதன் ஒரு பெருமூச்சு விட்டார்.

"கேசவன்! நான் சுயமா முன்னுக்கு வந்தவன். இன்னிக்கு, வெற்றிகரமா ஒரு தொழிலை நடத்திக்கிட்டு வரேன். என் பிள்ளைங்க ரெண்டு பேரும் பிஸினஸ்ல எனக்கு உதவியா இருக்காங்க.

"எனக்கு வாழ்க்கையில ஒரு கொள்கை உண்டு. என்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு உதவணும்கறதுதான் அது. இத்தனை வருஷமா அப்படித்தான் செஞ்சுக்கிட்டு வந்திருக்கேன். கடவுள் அருளாலே எனக்கு ஓரளவு வசதி இருக்கறதால, என்னால ஓரளவுக்கு மத்தவங்களுக்கு சில உதவிகள் செய்ய முடியுது.

"ஆனா, எனக்கப்புறம் என்ன ஆகும்? என் ரெண்டு பையன்களும் ஒற்றுமையா, திறமையா பிசினஸை நடத்துவங்கதான். ஆனா, ஒரு பிரச்னை இருக்கு. சின்னவன் மூர்த்தி என் மாதிரியே மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறவன். ஆனா, பெரியவனுக்கு இதில கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது. அதனால, இந்த விஷயத்தில ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு வரும். அது எதில போய் முடியும்னு தெரியாது.

"யாருக்கு மத்தவங்களுக்கு உதவற குணம் இருக்கோ, அவன்கிட்டதான் செல்வம், அதிகாரம் இதெல்லாம் இருக்கணும். நான் கடவுளா இருந்தா அப்படித்தான் பண்ணுவேன்! உலகத்தை என்னால மாத்த முடியாது. ஆனா, என்னோட சொத்துக்கள் விஷயத்தில என் விருப்பப்படி ஏற்பாடு பண்ணலாம் இல்லையா?

"என் ரெண்டு வீடுகளை என் ரெண்டு பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒண்ணா கொடுத்துடப் போறேன். பிசினஸை மட்டும் என் ரெண்டாவது மகன் மூர்த்திக்கு 75 சதவீதம், மூத்த மகன் சதீஷுக்கு 25 சதவீதம்னு பிரிக்கப் போறேன், சில நிபந்தனைகளோட."

"என்ன நிபந்தனைகள்"

"பெரிய பையன் சதீஷ் பிசினஸ்ல ஸ்லீப்பிங் பார்ட்னர்தான். நிர்வாகத்தில் அவனுக்கு எந்தப் பங்கோ, உரிமையோ கிடையாது. நிர்வாகம் முழுக்க முழுக்க சின்னவன் மூர்த்தியோட அதிகாரத்திலேயும், கட்டுப்பாட்டிலேயும்தான் இருக்கும். 

"லாபத்தில ஒரு பகுதியை மட்டும் பார்ட்னர்களுக்குப் பிரிச்சுக் கொடுத்துட்டு, மீதியைத் தொழில் வளர்ச்சிக்கும், நன்கொடைகள், சமூகப் பணிகள் மாதிரி விஷயங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள, மூர்த்திக்கு அதிகாரம் உண்டு. 

"லாபத்தில் எத்தனை சதவீதத்தை பார்ட்னர்களுக்குக் கொடுக்கறதுங்கறதை மூர்த்திதான் தீர்மானிக்கணும். வேணும்னா, லாபத்தில் குறைஞ்சது 25 சதவீதத்தையாவது பார்ட்னர்களுக்குக் கொடுக்கணும்னு ஒரு நிபந்தனை போட்டுக்கலாம்.

"பிரிச்சுக் கொடுக்கற லாபத்தில 75 சதவீதம் மூர்த்திக்கு - அவன்தானே பிஸினஸைப் பாத்துக்கறான்? 25 சதவீதம் ஸ்லீப்பிங் பார்ட்னர் சதீஷுக்கு. இதைத் தவிர, என்கிட்டே இருக்கற ரொக்கப் பணம், பங்குகள் மாதிரி விஷயங்கள் ரெண்டு பேருக்கும் பாதிப் பாதி."

"இது உங்க பெரிய பையனுக்குப் பண்ற அநீதி இல்லையா?"

"இல்லை. இப்ப ரெண்டு பேருக்கும் சம்பளம்தான் கொடுக்கறேன். நான் சொல்ற ஏற்பாட்டின்படி, லாபத்தில 25 சதவீத பங்கே இதை விட அதிகமா வரும். அவனுக்கு வீடு கொடுக்கப் போறேன். அதைத் தவிர, அவனுக்குக் கிடைக்கிற ரொக்கப் பணம், பங்குகள் மாதிரி முதலீடுகளோட மதிப்பே பல லட்சங்கள் இருக்கும். 

"அவன் வேணும்னா இந்தப் பணத்தை வச்சு வேற தொழில் ஆரம்பிச்சுக்கட்டுமே! எங்கிட்ட இருக்கற செல்வம் மத்தவங்களுக்குத் தொடர்ந்து பயன்படணும்னா, இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சுதான் ஆகணும். இது மாதிரியே உயில் எழுதிடுங்க" என்றார் நாதன்.

"சரி" என்றார் வக்கீல் கேசவன்.   
றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

பொருள்:  
பிறருக்கு உதவும் சிந்தனை உள்ளவரிடம் செல்வம் சேர்ந்தால், அது ஊரில் அனைவரும் பயன்படுத்தக் கூடிய மரத்தில் பழங்கள் நிறைந்திருப்பதுபோல் ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                  காமத்துப்பால்



Monday, October 22, 2018

215. பசுபதி வீட்டுக் கிணறு

Featured post on IndiBlogger, the biggest community of Indian Bloggers
பசுபதி திண்ணையில் உட்கார்ந்து, தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

பெண்களும், ஆண்களுமாக சிலர் கையில் ஒன்று அல்லது இரண்டு குடங்களை எடுத்துக் கொண்டு, சற்றுத் தொலைவில் இருந்த குளத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர். 

எதிர்ப்புறத்திலிருந்து தண்ணீர் நிரம்பிய குடங்களைத் தூக்கிக் கொண்டு, சிலர் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

பசுபதி குடும்பத்துக்கு இந்த சிரமம் இல்லை. அவர்கள் வீட்டுக் கிணற்றில், எப்போதும் தண்ணீர் இருக்கும். அந்த ஊரில், ஐந்தாறு வீடுகளில் மட்டும்தான் அப்படி. பெரும்பாலான வீடுகளில், கிணறு இல்லை. இன்னும் பலர் வீட்டில் கிணறு இருந்தாலும், அந்தக் கிணறுகளில் தண்ணீர் ஊறுவதில்லை.

இத்தனை பேர், இவ்வளவு தூரம் நடந்து போய், கஷ்டப்பட்டு தண்ணீர் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்க்க, பசுபதிக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.

ஒருநாள், திடீரென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. உள்ளே போய் மனைவியிடம் பேசினார்.

"ஏன் பார்வதி, எல்லாரும் தண்ணி எடுக்க, இவ்வளவு தூரம் குளத்துக்கு நடந்து போய்க் கஷ்டப்படறாங்களே!" என்றார்.

"ஆமாம். என்ன செய்யறது? ஏதோ, நம்ம அதிர்ஷ்டம். நமக்கு அந்தக் கஷ்டம் இல்லை" என்றாள் பார்வதி.

"நம்ம தெருவில் இருக்கறவங்களை, நம்ம கிணத்திலேந்து ஒண்ணு ரெண்டு குடம் தண்ணி எடுத்துக்கலாம்னு சொன்னா என்ன? அவங்க கஷ்டம் குறையும் இல்ல?"

பார்வதி அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள். "ஏன், நம்ப வீட்டுக் கிணத்திலேயும் தண்ணி வத்திப்போய், நானும் குடத்தைத் தூக்கிக்கிட்டு குளத்துக்குப் போகணுமா?" என்றாள்.

"கொஞ்ச நாள் பாக்கலாமே! நம்ப தெருவில இருக்கற ஒரு பத்து பேர்தானே எடுக்கப் போறாங்க?" என்றார் பசுபதி.

"அதுவும், இப்ப கோடைக்காலம்."

"கோடைக்காலத்திலதானே, எல்லாருக்குமே தண்ணிக் கஷ்டம் அதிகமா இருக்கும்?"

"என்னவோ செய்யுங்க. ஆனா ஒண்ணு! கிணத்துல தண்ணி கீழ போயிடுச்சுன்னா, இதை நிறுத்திடணும். அப்புறம் தண்ணி ஊறி வந்து, நமக்கு மட்டும் தண்ணி கிடைக்கறதே பெரும் பாடாயிடும்" என்றாள் பார்வதி, அரை மனதுடன்.

ந்தத் தெருவிலிருந்து பத்துப் பேர் பசுபதி வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துப் போகத் தொடங்கி, ஒரு மாதம் ஆகி விட்டது.

பார்வதி தினம் ஐந்தாறு முறை கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிணற்றின் நீர்மட்டம் இறங்கவில்லை.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

பொருள்:  
உலக நலனை விரும்பிச் செயல்படும் அறிவு படைத்தவனிடம் செல்வம் இருந்தால், அது ஊரில் அனைவரும் பயன்படுத்தும் குளம் தண்ணீரால் நிறைந்தது போலாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                    காமத்துப்பால்

Sunday, October 21, 2018

214. மரணச் செய்தி

"நம்ப ஏரியாவில ஒத்தரு புதுசா வீடு கட்டிக் குடி வந்திருக்காரு. அவரைப் போய்ப் பாத்துட்டு வரலாமா?" என்றான் முரளி 

"சரி" என்றான் சபேஷ்.

இருவரும் சிவராமனின் வீட்டுக்குச் சென்றனர். அவரைப் பார்த்ததும், "சார்! எங்க காலனிக்கு உங்களை வரவேற்கிறோம்!" என்றனர்.

"நீங்க யாரு என்னை வரவேற்கறதுக்கு? இந்த காலனி உங்களுக்குச் சொந்தமா என்ன? நான் இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கி, அதில வீடு கட்டியிருக்கேன்" என்றார் சிவராமன்.

முரளிக்கும், சபேஷுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. "இல்லை சார். நாங்க இந்தக் காலனிக்குள்ள நலவாழ்வு சங்கம்னு ஒண்ணு வச்சிருக்கோம். அதனாலதான், புதுசா வந்திருக்கிற உங்களை வரவேற்று, எங்க சங்கத்தைப் பத்தி சொல்லலாம்னு..." என்றான் சபேஷ்.

"சங்கத்தில சேரும்பீங்க. அப்புறம், சந்தா, நன்கொடைன்னு வசூல் பண்ணுவீங்க. நான் இதையெல்லாம் ஊக்குவிக்கறதல்ல!" என்றார் சிவராமன்.

"நாங்க சந்தா எதுவும் வாங்கறதில்ல சார். இங்க இருக்கறவங்களுக்குத் தேவையான சில நல்ல காரியங்களைச் செய்யறதுக்கும், பிரச்னைகளைத் தீக்கறதுக்கும் உதவறதுதான் எங்க நோக்கம். அவங்க அவங்க தங்களால் முடிஞ்ச அளவுக்குத் தங்களை ஈடுபடுத்திக்கலாம். நன்கொடை கூட, சில சமயம், சில காரியங்களுக்காக, அவங்களா விருப்பப்பட்டுக் கொடுக்கறதுதான்" என்றான் முரளி. 

"என்ன உதவி செய்வீங்க? எங்க வீட்டு சாக்கடை அடைச்சுக்கிடுச்சுன்னு சொன்னா, வந்து சரி பண்ணுவீங்களா?"

"அந்த மாதிரி காரியங்களைக் கூட நாங்க செஞ்சிருக்கோம் சார்!" என்றான் சபேஷ்.

"சரி. எனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா, உங்க கிட்ட கேக்கறேன்" என்றார் சிவராமன், கேலியான குரலில்.

முரளியும், சபேஷும் எழுந்து சென்று விட்டனர். 

அதற்குப் பிறகு, சிலமுறை சங்கத்தின் கூட்டங்களுக்கு சிவராமனை அழைத்தார்கள். அவர் வரவில்லை. சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற சில கொண்டாட்டங்களுக்கு அவரை அழைத்தார்கள். அவர் வரவில்லை.

அவர் அவர்களை அலட்சியம் செய்தாலும், இருவரும் தேவைப்பட்டபோதெல்லாம், அவரை அணுகத் தயங்கியதில்லை.

ஒருமுறை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய, பணம், உணவுப் பொருட்கள், உடைகள் போன்றவற்றைக் கொடுத்து உதவும்படி அவரிடம் கேட்டார்கள். அவர் மறுத்து விட்டார். "இதெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை. நான் ஏன் கொடுக்கணும்?" என்று சொல்லி விட்டார்.

இரண்டு மூன்று வருடங்கள், அவமானத்தைப் பொருட்படுத்தாமல், சந்தர்ப்பம் ஏற்பட்டபோதெல்லாம், அவரை அணுகினார்கள். அதற்குப் பிறகு, அவரைச் சென்று பார்ப்பதை விட்டு விட்டார்கள். 

ல வருடங்கள் ஒடி விட்டன.

ஒரு நாள், முரளியின் நண்பன் கண்ணன் அவனிடம் வந்து, "டேய், முரளி! சிவராமன் போயிட்டாராம்டா!" என்றான்.

"யார் சிவராமன்?" என்றான் முரளி.

"என்னடா, இப்படிக் கேக்கற?  நீயும், சபேஷும் எத்தனை தடவை அவர் வீட்டுக்குப் போயிருப்பீங்க?"

"ஓ, அவரா? சாரி. அவர் எதிலேயும் பட்டுக்காம ஒதுங்கி இருந்ததால, அவர் இருக்கறதையே மறந்துட்டேன். இத்தனை நாள் அவர் இருந்தும், இல்லாத மாதிரிதானே இருந்தாரு? இருந்தாலும், அவர் இறந்ததைக் கேட்க வருத்தமாத்தான் இருக்கு. நாம அவர் வீட்டுக்குப் போய், அவர் உடலுக்கு மரியாதை செலுத்திட்டு, அவங்க குடும்பத்தினர்கிட்ட நம்ம துக்கத்தைத் தெரிவிச்சுட்டுத்தான் வரணும். வா போகலாம்" என்றான் முரளி.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 214
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

பொருள்:  
பிறருக்கு உதவி செய்வது என்னும் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களே உயிர் வாழ்பவர்கள். மற்றவர்கள் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.


பொருட்பால்                                                                                   காமத்துப்பால்















Friday, October 19, 2018

213. 'ஊருக்கு உழைப்பவர்'

அழைப்பு மணி அடித்ததும், ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள்.

"வணக்கம். நான் 'சமூக சாளரம்' பத்திரிகையிலேந்து வரேன். ராமலிங்கம் இருக்காரா?" என்றான் சுரேஷ்.

"அவர் ஊர்ல இல்லையே. உள்ள வாங்க" என்றவள், சுரேஷும், அவனுடன் வந்த நம்பியும் உள்ளே வந்து அமர்ந்ததும், "நான் அவர் மனைவி கல்யாணி. என்ன விஷயம்?" என்றாள்.

"அவரை ஒரு பேட்டி எடுக்கணும்."

"அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டாரே!"

"எங்க பத்திரிகையில, 'ஊருக்கு உழைப்பவர்'ங்கற தலைப்பில, ஒவ்வொரு இதழிலும், சமூக சேவை செய்யற ஒத்தரைப் பத்தி எழுதறோம். உங்க கணவரைப் பத்திக் கேள்விப்பட்டோம்."

"என்ன கேள்விப்பட்டீங்க? அதைச் சொல்லுங்க!" என்றாள் கல்யாணி.

சுரேஷ் நம்பியிடம் திரும்ப, அவன் தன் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து சுரேஷிடம் கொடுத்தான்.

சுரேஷ் அதை ஒரு முறை வேகமாகப் பார்த்து விட்டு, "ராமலிங்கத்தைப் பத்தி, அவருக்குத் தெரிஞ்ச ஒத்தர் எங்களுக்கு எழுதியிருக்கார். அதில இருக்கறதை சொல்றேன். ஏதாவது சரியில்லேன்னா சொல்லுங்க.

"ராமலிங்கம் ஒரு தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்பவே, தன் சக தொழிலாளிகளுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு. யார் வீட்டிலேயாவது கல்யாணம் போன்ற மங்கள காரியமா இருந்தாலும், யாருக்காவது உடம்பு சரியில்லை, மரணம் மாதிரி சோக நிகழ்வுகளா இருந்தாலும், ராமலிங்கம் உதவிக்கு அங்கே போயிடுவார். அதிகம் பழக்கம் இல்லாத சகதொழிலாளிகளுக்குக் கூட உதவுவார். பண உதவி செய்யற அளவுக்கு அப்ப அவருக்கு வசதி இல்லாட்டாலும், ஓடியாடி உதவி செய்வார்.

"அவரோட வேலை செஞ்சவங்க, அவரோட மேலதிகாரிகள் இவர்களுக்கெல்லாம் அவர் மேல ரொம்ப மதிப்பும் அன்பும் உண்டு. அதிகம் படிக்காததால, தொழிலாளியாகவே ரிடயர் ஆயிட்டார். ரிடயர் ஆனப்பறமும், காலையிலிருந்து இரவு வரை, யாருக்காவது உதவி செஞ்சுக்கிட்டேதான் இருப்பார். ஏதாவது வெளியூர்ல வெள்ளம், விபத்து மாதிரி ஏதாவது நடந்தா கூட, உடனே உதவி செய்ய அங்கே ஓடிடுவார். ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரிக்கெல்லாம் ஃபோன் வர மாதிரி, சில சமயம் இவருக்கும் ஃபோன் வரும். இதெல்லாம் சரிதானா?"

"கதை மாதிரி இருக்கு!" என்று சிரித்தாள் கல்யாணி.

"அப்ப, இதெல்லாம் உண்மை இல்லையா?" என்றான் சுரேஷ், அதிர்ச்சியுடன்.

"உண்மைதான். ஆனா, நீங்க கோர்வையா, கதை மாதிரி சொன்னப்ப, எனக்கு கேக்கறதுக்கு சுவாரசியமா இருந்தது. அதான் கதை மாதிரின்னு சொன்னேன். அவர் ரொம்ப அடக்கமானவரு. தான் செஞ்சதையெல்லாம் பத்திப் பேசவே மாட்டாரு. அதுக்கு அவருக்கு நேரமும் கிடையாது. ஏதோ அவசர வேலை மாதிரி எப்பவும் ஓடிக்கிட்டிருப்பாரு. ஆனா, எனக்கு அவரோட நல்ல காரியங்களைப் பத்தி யாராவது சொன்னா, கேக்கப் பெருமையா இருக்கும். நீங்க சொல்றதைக் கேக்கறப்ப, பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு. நீங்க கதை மாதிரி சொன்னது சுவாரஸ்யமாவும் இருக்கு. அதான் அப்படிச் சொன்னேன்!"

"உங்க குடும்ப வாழ்க்கையைப் பத்தி சொல்லுங்க."

'எங்களுக்கு ஒரே பையன். கல்யாணம் ஆகி, மனைவியோட ஜெர்மனியில் இருக்கான். எங்களுக்கு அங்கே போக விருப்பமில்லை. அதனால இங்கேயே இருக்கோம்."

"தப்பா நினைக்காதீங்க. உங்க பையன் உங்களுக்குப் பணம் அனுப்பறாரா?"

"அவன் அனுப்பறதாச சொன்ன பணத்தை, ரெண்டு அனாதை இல்லத்துக்கு மாசாமாசம் அனுப்பச் சொல்லி, அவர் சொல்லிட்டாரு. அவன் அது மாதிரி அனுப்பிக்கிட்டிருக்கான்."

"ஓ! ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு. இப்ப அவர் எங்கே போயிருக்காருன்னு சொல்ல முடியுமா?"

"பொதுவா, அவருக்கு அவர் செய்யற உதவிகளைப் பத்திப் பேசறது பிடிக்காது. இப்ப கூட, நான் இதையெல்லாம் உங்க கிட்ட சொல்றது அவருக்குப் பிடிக்காது. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில ஒரு முதியோர் இல்லம் இருக்கு. அங்கே இருக்கிற ஒரு பெரியவருக்கு டிப்ரஷன். அவர் தனிமையா இருக்கறதாலதான் இப்படி, கூட யாராவது இருந்தா சரியாயிடும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அதனால, மாசத்துக்கு மூணு நாள் இவர் அங்கே போய், அவரோட இருந்துட்டு வருவாரு. மத்த நாட்கள்ள, வேற சில பேர் இப்படி வராங்க போலருக்கு."

"தப்பா நினைச்சுக்காதீங்க. இதுக்கு ஏதாவது பணம் கொடுப்பாங்களா?" என்றான் நம்பி, அவசரமாக. சுரேஷ் அவனை முறைத்தான்.

கல்யாணி சிரித்தபடியே, "இவர் போய் இருக்கற நாட்களுக்கு சாப்பாட்டுச் செலவு போன்ற விஷயங்களுக்கு, கெஸ்ட் சார்ஜுன்னு கொடுக்கணும். அந்தப் பெரியவருக்கு அவ்வளவு வசதி இல்லைன்னு, தான் இருக்கற நாட்களுக்கான கெஸ்ட் சார்ஜை இவரே கொடுக்கறாரு!" என்றாள்.

"சாரி!" என்றான் நம்பி.

பேட்டி முடிந்து வெளியே வந்ததும், "'ஊருக்கு உழைப்பவர்'ங்கற நம்ம தலைப்புக்கு, இவரை விடப் பொருத்தமா வேற யாரும் இருக்க மாட்டாங்க!" என்றான் சுரேஷ்.

"இவரை மாதிரி இன்னொருத்தரை இந்த உலகத்தில பாக்க முடியுமான்னு சந்தேகம்தான்!" என்றான் நம்பி.

"இந்த உலகத்தில மட்டும் இல்ல, தேவலோகம்னு சொல்றாங்களே, அங்கே போனா கூடப் பாக்க முடியாது!" என்றான் சுரேஷ் .

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

பொருள்:  
தேவர் உலகத்திலும், இந்த உலகத்திலும், பிறருக்கு உதவுவதை விடச் சிறந்த ஒன்றைக் காண முடியாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                         காமத்துப்பால்

Tuesday, October 16, 2018

212. லாபத்தில் பங்கு!

"இந்த வருஷம் வருமான வரி போக, பத்து லட்சம் ரூபாய் லாபம் வந்திருக்கு" என்றார் அக்கவுன்டன்ட் கணேசன்.

நிறுவனத்தின் உரிமையாளர் மோகன் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தார்.

"என்ன சார், நீங்க எதிர்பார்த்ததை விடக் குறைச்சலா இருக்கா?"

"இல்ல, வேற ஒரு கணக்கு போட்டுக்கிட்டிருக்கேன். சரி. இந்தக் காலத்தில ஒத்தர் சொந்தமாத் தொழில் ஆரம்பிக்கணும்னா, எவ்வளவு முதலீடு தேவைப்படும்?"

"என்னால சரியா சொல்ல முடியாது சார். தொழிலைப் பொருத்துன்னு நினைக்கிறேன். எதுக்குக் கேக்கறீங்க?"

"பத்தாயிரம் ரூபாயில் ஆரம்பிக்க முடியுமா?"

"தெரியல சார். ரொம்பக் குறைச்சலா இருக்கும்னு நினைக்கிறேன்."

"ஐம்பதாயிரம் ரூபாயில?"

"ஒரு அளவுக்கு முடியும்னு நினைக்கிறேன்."

"அப்ப சரி. ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில, சின்னதா ஒரு தொழில் ஆரம்பிக்க முடியும்னு வச்சுக்கலாமா?"

"எதுக்கு சார் கேக்கறீங்க? யார் ஆரம்பிக்கப் போறாங்க?"

"யாரா வேணும்னா இருக்கலாம். நீங்க கூட ஆரம்பிக்கலாம். என் தொந்தரவு இல்லாம சுதந்திரமா இருக்கலாம்!"

"என்ன சார், என்னை வேலையை விட்டு அனுப்பப் போறீங்களா?" என்றார் கணேசன், சிரித்தபடி. மோகனுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தின் பின்னணியில் அப்படி நடக்காது என்று அவருக்குத் தெரியும்.

"ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு, அதன் மூலமா, வருஷா வருஷம் நமக்கு வர லாபத்தில் பத்து சதவீதத்தை, புதுசாத் தொழில் ஆரம்பிக்க நினைக்கற ரெண்டு மூணு பேருக்கு முதலீடா கொடுத்து உதவலாம்னு நினைக்கிறேன். இந்த வருஷம் நமக்கு லாபம் பத்து லட்சங்கறதால, ஒரு லட்சம் ரூபா நாம கொடுக்க முடியும். அதிக பட்சம் ஐம்பதாயிரம் ரூபாய்ன்னு வச்சுக்கிட்டா, குறைஞ்சது ரெண்டு பேருக்காவது உதவலாம். என்ன சொல்றீங்க?'

"ரொம்பப் பரந்த சிந்தனை சார் இது? ஆனா, யாருக்குக் கொடுக்கப் போறோம், வட்டி எவ்வளவு, கடன் திரும்ப வரட்டா என்ன செய்யறதுன்னுல்லாம் யோசிக்கணுமே!"

"இது முதலீட்டுக்காக நாம கொடுத்து உதவற தொகை. வட்டியெல்லாம் கிடையாது. தொழில் நல்லா வந்தப்பறம், கடன்தொகையை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்தா போதும்."

"ரொம்ப அற்புதமா இருக்கு சார். எனக்குக் கூட அப்ளை பண்ணலாமான்னு சபலம் வருது!"

"குறைஞ்ச முதலீட்டில தொழில் ஆரம்பிக்கறவங்களுக்கு நிதி உதவி கிடைக்கறது கஷ்டம். அவங்களை யாரும் நம்ப மாட்டாங்க. அவங்ககிட்ட அடமானமா கொடுக்க சொத்து இருக்காது. நான் இந்த சிரமத்தையெல்லாம் அனுபவிச்சிருக்கேன். சின்னதா ஆரம்பிச்சு, இந்தப் பத்து வருஷத்தில, பத்து லட்சம் ரூபா லாபம் சம்பாதிக்கிற அளவுக்கு வளந்திருக்கேன்.

"நான் சம்பாதிக்கறதில ஒரு பகுதியை, மத்தவங்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தலாம்னு நினைச்சேன். ரொம்ப நாளாவே, எனக்கு இந்த எண்ணம் உண்டு. இப்ப தொழில் ஸ்டெடி ஆகி, பத்து லட்ச ரூபா லாபம் வந்திருக்கறதால, இப்ப இதை செய்யலாம்னு தோணிச்சு."

"நல்லதுதான் சார். ஆனா, பல பேர் கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டாங்களே."

"டிரஸ்ட்ல ரெண்டு மூணு நிபுணர்களை உறுப்பினர்களாப் போட்டு, வர விண்ணப்பங்களைப் பரிசீலனை செஞ்சு, ரெண்டு மூணு பேரைத் தேர்ந்தெடுக்கப் போறோம். அதனால நம்ப கிட்ட உதவி பெறுகிறவங்க தொழிலை வெற்றிகரமா நடத்தி, கடனைத் திருப்பிக் கொடுப்பாங்கன்னு நம்புவோம். திரும்பி வர பணத்தை, மறுபடி வேற யாருக்காவதுதானே கொடுக்கப் போறோம்?"

"ரொம்ப நல்ல எண்ணம் சார் உங்களுக்கு. ஒவ்வொரு வருஷமும்  நம்ம கம்பெனிக்கு நிறைய லாபம் வந்து, இன்னும் நிறைய பேருக்கு நீங்க உதவி செய்யணும்னு கடவுளை வேண்டிக்கறேன்."

"அது சரி. நீங்க அப்ளை பண்ணப் போறீங்களா?" என்றார் மோகன். சிரித்தபடி.

"இல்ல சார். என் முதலாளி என்னை வேலையை விட்டுப் போக விட மாட்டாரு?"? என்றார் கணேசன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்:  
ஒருவன் முயற்சி செய்து சேர்க்கும் பொருள் எல்லாம், தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                         காமத்துப்பால்
















Monday, October 15, 2018

211. உதவிக்கு வரலாமா?

தன் சொந்த ஊரில் இருந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்று என் மனைவி விரும்பியதால், அந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டோம்.

"கோவிலுக்குப் போறதைத் தவிர, சுந்தரம் மாமாவையும் பாக்கணும்!" என்றாள் மனைவி.

"97"

"அப்படின்னா?"

"97ஆவது தடவையா இதை நீ சொல்ற!"

"நீங்க அவரைப் பாத்தீங்கன்னா, நீங்களும் அவரைப் பத்திப் பேசிக்கிட்டே இருப்பீங்க."

"உலகத்தில மத்தவங்களுக்கு உதவி செய்யறவங்க எத்தனையோ பேரு இருக்காங்க."

"இருக்காங்க. ஆனா, தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு வித்தியாசம் பாக்காம, பதில் உதவி எதிர்பாக்காம உதவி செய்யறவங்க எத்தனை பேரு இருக்காங்க?" என்றாள் மனைவி.

சுந்தரம் என்ற அவள் ஊர்க்காரர், அவள் குடும்பத்துக்கும், மற்ற பலருக்கும் செய்த உதவிகளைப் பற்றிப் பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறாள் என் மனைவி.

"அவரைப் பற்றி நீ 'சுந்தர காண்டம்' னு ஒரு காவியம் எழுதலாம்!" என்று நான் அவளைக் கிண்டல் செய்வதுண்டு. என் மனைவிக்குக் கதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. அதனால், அவள் எதையும் மிகைப்படுத்துவாள் என்று எனக்கு ஒரு கருத்து உண்டு.

என் நல்ல குணங்களைப்(!) பற்றியும் மிகைப்படுத்தி அவள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ! அப்படி இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

நேரே கோவிலுக்குத்தான் போனோம். கோவில் பூட்டி இருந்தது. குருக்கள் வீடு அருகில்தான் இருந்தது. போய் விசாரித்தோம். குருக்கள் அப்போதுதான் கோவிலைப் பூட்டி விட்டுப் பக்கத்து ஊருக்கு பஸ்ஸில் போயிருப்பதாகவும், மாலைதான் வருவார் என்றும் சொன்னார்கள்.

மாலை இன்னொரு இடத்துக்குப் போகலாம் என்று திட்டமிட்டிருந்ததால், என்ன செய்வதென்று யோசித்தோம். முதலில் சுந்தரத்தைப் பார்த்து விட்டு, அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து அவர் வீட்டுக்குப் போனோம்.

"தோப்புக்குப் போயிருக்காரு, இப்ப வந்துடுவாரு. இப்படி உட்காருங்க" என்று பாயை விரித்தாள் அவர் மனைவி. என் மனைவிக்கு அவளை அவ்வளவு பரிச்சயமில்லை போல் தோன்றியது.

"பரவாயில்லை. திண்ணையிலேயே உக்காந்துக்கறோம்" என்று திண்ணையில் உட்கார்ந்தோம். ஐந்து நிமிடத்தில் சுந்தரம் வந்து விட்டார்.

"அடாடா! கலாவா? இதுதாம்மா நீ பொறந்த ஊர்! ஞாபகம் இருக்கா?" என்றார்.

"என்ன மாமா நீங்க!" என்றாள் என் மனைவி.

"உன் அப்பா அம்மா இங்கே இல்லேன்னா, நீ ஊருக்கே வரக்கூடாதா? நாங்கள்ளாம் இல்லை?" என்று உரிமையோடு கோபித்துக் கொண்டவர், "நீங்க நம்ம வீட்டுலதான் சாப்பிடணும். கௌரிகிட்ட சொல்லிட்டு வரேன்" என்று சொல்லி விட்டு உள்ளே போக யத்தனித்தவரைத் தடுத்து, "வேண்டாம் சார். நாங்க டவுன்ல சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சுட்டோம். அவங்க ரெடி பண்ணி இருப்பாங்க" என்றேன் நான்.

"ஏன் அவ்வளவு அவசரம்?" என்று அவர் சொன்னபோதே, ஒரு ஆள் இளநீர்க் குலைகளுடன் வந்தான். அவற்றை வெட்ட ஆரம்பித்தான்.

"உங்களுக்குத்தான். தெரு முனையிலேயே உங்களைப் பாத்துட்டேன். அதான் மறுபடி தோப்புக்குப் போய் இளநீர் வெட்டி எடுத்துக்கிட்டு வரச் சொன்னேன்" என்றார்.

நாங்கள் ஒரு இளநீர் குடித்து முடித்ததும், அந்த ஆள் இன்னொரு இளநீரை வெட்ட ஆரம்பித்தான்.

"போதும்! போதும்!" என்றேன்.

"பரவாயில்ல, குடிங்க! இந்த வெயிலுக்கு அஞ்சாறு இளநீர் குடிச்சா கூட தாகம் அடங்காது. இன்னும் ஒரு இளநீராவது குடிங்க!" என்றவர், "கோயிலுக்குப் போயிட்டு வந்துட்டீங்க இல்ல?" என்றார்.

"கோவில் பூட்டியிருக்கு. குருக்கள் வெளியே போயிட்டாராம்" என்றாள் என் மனைவி.

"அப்படியா?" என்றவர், "சரி. இங்கேயே இருங்க. இதோ வந்துடறேன்" என்று குருக்கள் வீட்டை நோக்கி நடந்தார். 

ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தவர், "குருக்கள் பையன் இருக்கான். சின்னப் பையன். குருக்கள் இல்லாதப்ப, கோயிலைத் திறந்து, விளக்கேத்தி, நைவேத்தியம் எல்லாம் பண்ணுவான். அர்ச்சனை எல்லாம் பண்ணத் தெரியாது. ஆனா, மந்திரம் சொல்லி தீபாராதனை காட்டுவான். நீங்க அவசரமாப் போகணுங்கறதால, அவன்கிட்ட சொல்லி சாமிக்குப் பூ சாத்தி, பழம் நைவேத்தியம் பண்ணி, தீபாராதனை காட்டச் சொல்லி இருக்கேன். அர்ச்சனை பண்ணனும்னா, நீங்க சாயந்திரம் வரை இருந்து, குருக்கள் வந்தப்பறம் அர்ச்சனை பண்ணிக்கிட்டுப் போகலாம்" என்றார்.

கோவிலுக்குப் போகும்போது "பாத்தீங்களா? நமக்கு என்ன வந்ததுன்னு போகாம, எப்படி ஓடியாடி உதவி செய்யறார் பாருங்க!" என்றாள் மனைவி.

"உதவி செய்யற குணம் இருக்குதான். ஆனா, நீ அவருக்குத் தெரிஞ்சவ. வேற யாராவதுன்னா இந்த அளவுக்கு உதவுவார்னு சொல்ல முடியுமா?" என்றேன் நான்.

மனைவி பதில் சொல்லவில்லை.

நாங்கள் கோவிலுக்குப் போனபோது, கோவில் திறந்திருந்தது. குருக்களின் பையன் இருந்தான். இன்னொரு வெளியூர்க்காரரும் அப்போது கோவிலுக்கு வந்திருந்தார்.

கோவிலில் தரிசனம் முடிந்து சுந்தரத்தின் வீட்டுக்கு வந்தபோது, சுந்தரத்தின் ஆள் என் காரைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

"உனக்கு ஏம்ப்பா இந்த வேலையெல்லாம்? ஐயா துடைக்கச் சொன்னாரா?" என்றேன்.

"இல்லீங்க. ஐயா எப்பவும் யாருக்காவது ஏதாவது உதவி செஞ்சுக்கிட்டே இருப்பாரு. அவரைப் பாத்துப் பாத்து எனக்கும் நம்மால முடிஞ்ச உதவியைச் செய்யலாம்னு தோணும். தோப்பில வேலை முடிஞ்சுடுச்சு. சும்மாதான் இருந்தேன். இந்த மண் ரோட்ல வந்ததில கார்ல தூசி படிஞ்சிருந்தது. அதான் துடைச்சேன். எனக்கு காரெல்லாம் துடைச்சுப் பழக்கமில்லை. நைஸ் துணியால மேலாகத்தான் துடைச்சேன்" என்றான் அந்த ஆள்.

"உன் முதலாளிக்கு ஏத்த ஆளா இருக்கியே!" என்றபடி, அவனிடம் ஒரு ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினேன்.

"வேண்டாங்க. காசுக்காக செய்யல. சும்மா நின்னுக்கிட்டிருந்த நேரத்தில கொஞ்சம் துடைச்சேன். அவ்வளவுதான்" என்றான் அவன்.

இதற்குள் சுந்தரம் உள்ளிருந்து வந்தார். "என்ன, தரிசனம் கிடைச்சுதா? வீட்டில உப்புமா பண்ணியிருக்கா. கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் போங்க. டவுன் போற வரையில தாங்கணுமே!" என்றார்.

"வேண்டாம் சார்!" என்றேன் நான். அப்போது, எங்களுடன் கோவிலுக்கு வந்தவர் தெருவில் வந்து கொண்டிருந்தார்.

"வெளியூரா?" என்றார் சுந்தரம், அவரைப் பார்த்து. "கோவிலுக்கு வந்தீங்களா?" என்றார் தொடர்ந்து.

"ஆமாம்" என்றார் அவர்.

"நல்ல வெய்யில். நம்ம வீட்டில சாப்பிட்டுட்டு, ஓய்வெடுத்துட்டு, அப்புறம் போகலாமே!" என்றார் சுந்தரம்.

"இல்ல, நான் போகணும்" என்றார் அவர் நெளிந்தபடி.

"ஒரு இளநீராவது குடிச்சுட்டுப் போங்க" என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, திண்ணையில் இருந்த இளநீர்களில் ஒன்றை எடுத்து வெட்ட ஆரம்பித்தான் அவருடைய ஆள்.

"என்னங்க இது? நான் முன்ன பின்ன தெரியாதவன்!" என்றார் அவர்.

அவர் இளநீர் குடித்து முடித்ததும், "பஸ்லயா போகப் போறீங்க?" என்றார் சுந்தரம்.

"ஆமாம்."

"பஸ் ஸ்டாப் கொஞ்ச தூரம். அதுக்கு முன்னால இங்க ஒரு ஸ்டாப்பிங் இருக்கு. ஆனா. அங்கே தெரிஞ்ச ஆளுங்க நின்னாதான், பஸ்ஸை நிறுத்துவாங்க. நான் அங்கே வந்து உங்களை ஏத்தி விடறேன்" என்றார் சுந்தரம்.

"நான் போய் ஏத்தி விடறேங்க" என்றான் அவர் ஆள்.

"உன்னைப் பாத்தா நிறுத்துவாங்களோ என்னவோ? என்னை இந்த ரூட்ல போற எல்லா பஸ் டிரைவர்களுக்கும் தெரியும்" என்றவர், துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, செருப்பை மாட்டிக் கொள்ளப் போனார்.

"உங்களுக்கு ஏங்க சிரமம்?  நான் பஸ் ஸ்டாப்புக்கே போய்க்கறேன்" என்றார் வெளியூர்க்காரர்.

"நானே என் கார்ல அவரை அழைச்சுக்கிட்டு போயிடறன்" என்றேன் நான், சுந்தரத்திடம். 

வெளியூர்க்காரரிடம் திரும்பி "டவுனுக்குத்தானே போகணும்? நாங்களும் அங்கதான் போறோம்" என்றேன்.

அவர் மௌனமாகத் தலையாட்டினார்.

என் மனைவி என்னைப் பார்த்துப் பெருமையுடன் சிரித்தாள்.

சுந்தரத்தின் உதவும் குணம் எனக்கும் கொஞ்சம் வந்து விட்டதாக நினைத்தாளோ என்னவோ!

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

பொருள்:  
மழை கைம்மாற்றை எதிர்பார்த்துப் பெய்வதில்லை. அந்த மழை போன்ற இயல்புடையவர்களும், பதில் உதவி எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                       காமத்துப்பால்