About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, October 16, 2018

212. லாபத்தில் பங்கு!

"இந்த வருஷம் வருமான வரி போக, பத்து லட்சம் ரூபாய் லாபம் வந்திருக்கு" என்றார் அக்கவுண்டண்ட் கணேசன்.

நிறுவனத்தின் புரொப்ரைட்டர் மோகன் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தார்.

"என்ன சார், நீங்க எதிர்பார்த்ததை விடக் குறைச்சலா இருக்கா?"

"இல்ல, வேற ஒரு கணக்கு போட்டுக்கிட்டிருக்கேன். சரி. இந்தக் காலத்தில ஒத்தர் சொந்தமாத் தொழில் ஆரம்பிக்கணும்னா எவ்வளவு முதலீடு தேவைப்படும்?"

"என்னால சரியா சொல்ல முடியாது சார். தொழிலைப் பொருத்துன்னு நினைக்கிறேன். எதுக்குக் கேக்கறீங்க?"

"பத்தாயிரம் ரூபாயில் ஆரம்பிக்க முடியுமா?"

"தெரியல சார். ரொம்பக் குறைச்சலா இருக்கும்னு நினைக்கிறேன்."

"ஐம்பதாயிரம் ரூபாயில?"

"ஒரு அளவுக்கு முடியும்னு நினைக்கிறேன்."

"ஆங். அப்ப சரி. ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் சின்னதா ஒரு தொழில் ஆரம்பிக்க முடியும்னு வச்சுக்கலாமா?"

"எதுக்கு சார் கேக்கறீங்க? யார் ஆரம்பிக்கப் போறாங்க?"

"யாரா வேணும்னா இருக்கலாம். நீங்க கூட ஆரம்பிக்கலாம். என் தொந்தரவு இல்லாம சுதந்திரமா இருக்கலாம்!"

"என்ன சார், என்னை வேலையை விட்டு அனுப்பப் போறீங்களா?" என்றார் கணேசன், சிரித்தபடி. மோகனுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தின் பின்னணியில் அப்படி நடக்காது என்று அவருக்குத் தெரியும்.

"ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு, அதன் மூலமா, வருஷா வருஷம் நமக்கு வர லாபத்தில் பத்து சதவீதத்தை புதுசாத் தொழில் ஆரம்பிக்க நினைக்கற ரெண்டு மூணு பேருக்கு முதலீடா கொடுத்து உதவலாம்னு நினைக்கிறேன். இந்த வருஷம் நமக்கு லாபம் பத்து லட்சங்கறதால, ஒரு லட்சம் ரூபா நாம கொடுக்க முடியும். அதிக பட்சம் ஐம்பதாயிரம் ரூபாய்ன்னு வச்சுக்கிட்டா குறைஞ்சது ரெண்டு பேருக்காவது உதவலாம். என்ன சொல்றீங்க?'

"ரொம்பப் பரந்த சிந்தனை சார் இது? ஆனா யாருக்குக் கொடுக்கப் போறோம், வட்டி எவ்வளவு, கடன் திரும்ப வரட்டா என்ன செய்யறதுன்னுல்லாம் யோசிக்கணுமே!"

"இது முதலீட்டுக்காக நாம கொடுத்து உதவற தொகை. வட்டியெல்லாம் கிடையாது. தொழில் நல்லா வந்தப்பறம், கடன்தொகையை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்தா போதும்."

"ரொம்ப அற்புதமா இருக்கு சார். எனக்குக் கூட அப்ளை பண்ணலாமான்னு சபலம் வருது!"

"குறைஞ்ச முதலீட்டில தொழில் ஆரம்பிக்கறவங்களுக்கு நிதி உதவி கிடைக்கறது கஷ்டம். அவங்களை யாரும் நம்ப மாட்டாங்க. அவங்க கிட்ட அடமானமா கொடுக்க சொத்து இருக்காது. நான் இந்த சிரமத்தையெல்லாம் அனுபவிச்சிருக்கேன். சின்னதா ஆரம்பிச்சு, இந்தப் பத்து வருஷத்தில, பத்து லட்சம் ரூபா லாபம் சம்பாதிக்கிற அளவுக்கு வளந்திருக்கேன்.

"நான் சம்பாதிக்கறதில ஒரு பகுதியை மத்தவங்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தலாம்னு நினைச்சேன். ரொம்ப நாளாவே எனக்கு இந்த எண்ணம் உண்டு. இப்ப தொழில் ஸ்டெடி ஆகி பத்து லட்ச ரூபா லாபம் வந்திருக்கறதால இப்ப இதை செய்யலாம்னு தோணிச்சு."

"நல்லதுதான் சார். ஆனா பல பேர் கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டாங்களே."

"டிரஸ்ட்ல ரெண்டு மூணு நிபுணர்களை உறுப்பினர்களாப் போட்டு, வர விண்ணப்பங்களைப் பரிசீலனை செஞ்சு, ரெண்டு மூணு பேரைத் தேர்ந்தெடுக்கப் போறோம். அதனால நம்ப கிட்ட உதவி பெறுகிறவங்க தொழிலை வெற்றிகரமாப் பண்ணி கடனைத் திருப்பிக் கொடுப்பாங்கன்னு நம்புவோம். திரும்பி வர பணத்தை மறுபடி வேற யாருக்காவதுதானே கொடுக்கப் போறோம்?"

"ரொம்ப நல்ல எண்ணம் சார் உங்களுக்கு. ஒவ்வொரு வருஷமும்  நம்ம கம்பெனிக்கு நிறைய லாபம் வந்து இன்னும் நிறைய பேருக்கு நீங்க உதவி செய்யணும்னு கடவுளை வேண்டிக்கறேன்."

"அது சரி. நீங்க அப்ளை பண்ணப் போறீங்களா?" என்றார் மோகன் சிரித்தபடி.

"இல்ல சார். என் முதலாளி என்னை வேலையை விட்டுப் போக விட மாட்டாரு?"? என்றார் கணேசன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்:  
ஒருவன் முயற்சி செய்து சேர்க்கும் பொருள் எல்லாம் தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















No comments:

Post a Comment