About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, October 11, 2018

207. கை நழுவிய வெற்றிக்கனி


கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக்  கூட்டப்பட்ட  செயற்குழுக் கூட்டத்தில் பரந்தாமனுக்கும், குணசீலனுக்கும் கடும்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் பரந்தாமன் சுலபமாக வெற்றி பெற்று விட்டான்.

கட்சித் தலைவர் கரிகாலன் வயது காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போவதாக சில வாரங்கள் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் அவர்  இருவரில் ஒருவரையும் ஆதரிக்காமல் நடுநிலையாக இருந்து தேர்தல் சுமுகமாக நடைபெற உதவி செய்தார்.

பரந்தாமனுக்கு தலைவர் பதவி வாழ்க்கையில் ஒரு லட்சியமாகவே இருந்தது. அதனால் இந்த வெற்றி அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.

பரந்தாமன் தலைவர் பதவி ஏற்க  ஒரு வாரம் கழித்து ஒரு நாள் முடிவு செய்யப்பட்டது.

ரந்தாமன் பதவி ஏற்க வேண்டிய நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஆறு மாதங்களுக்கு முன் பரந்தாமன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்சியின்.கோவை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கனகா  கட்சித் தலைவரிடம் ஒரு மனு அளித்தாள்.  அதை விசாரிப்பதாகவும், இது பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் கரிகாலன் அவளிடம் சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.

ஆனால் சில மணி நேரங்களில் அவள் கொடுத்த கடிதத்தின் புகைப்பட நகல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி விட்டது.

"என்ன செய்யலாம். சொல்லுங்க" என்றார் கரிகாலன்.

"இது பொய் ஐயா" என்றான் பரந்தாமன்.

"இது உண்மையா இருந்தாலும் எனக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்ல. ஆனா இந்தப் புகார் விஷயம் இப்ப நாடு முழுக்கப் பரவிட்டுதே" என்றார் கரிகாலன்.

"தலைவர் தேர்தல்ல தோற்ற ஆத்திரத்தில குணசீலன்தான் இப்படிப் பண்ணி இருப்பாரு."

"இருக்கலாம். இதையெல்லாம் நிரூபிக்க முடியாது. உங்க மேல கொடுக்கப்பட்ட புகாரைக் கூட நிரூபிக்க முடியாது. ஆனா ஜனங்க இது உண்மைதான்னு நினைப்பாங்க. அதோட சம்பவம் நடந்ததா அந்தப் பொண்ணு சொல்ற தேதியில் நீங்க கோயமுத்தூர்ல இருந்திருக்கீங்க. உங்களை வரவேத்தவங்கள்ல அந்தப் பொண்ணும் இருக்கா. ஃபோட்டோ, வீடியோ எல்லாம் இருக்கு. கூட்டத்தில நீங்க அந்தப் பொண்ணை மட்டும் தனியா ஒரு பார்வை பாத்தீங்கன்னு கூட சில பேரு கற்பனை செஞ்சு எழுதுவாங்க! உங்க கிட்ட அப்ப கொடுக்கப்பட்ட நிர்வாகிங்க பட்டியல்ல அவ பேரும் இருக்கு. அந்த லிஸ்ட்லேந்து நீங்க அவ ஃ போன் நம்பரைப் பாத்து அவளுக்கு ஃபோன் பண்ணி அவளை உங்க ரூமுக்குத் தனியா வரச் சொன்னீங்கன்னு அவ சொல்றா."

"அப்படி எதுவும் நடக்கவே இல்லை ஐயா! இதுவரையில் பெண்கள் கிட்ட தப்பா நடந்துக்கிட்டதா என் மேல ஒரு புகார் கூட இல்லை, ஏன் வதந்தி கூட இல்ல. நான் தலைவரா வரக்கூடாதுங்கறதுக்காக கட்சியில என் எதிரிகள் செய்யற சதி இது...."

"கரெக்ட்.. ஆனா அதுதான் நடக்கப் போகுது!"

"என்ன ஐயா சொல்றீங்க?"

"இந்த நிலையில நீங்க எப்படித் தலைவராப் பொறுப்பேற்க முடியும்? கொஞ்ச நாள் எதிலும் கலந்துக்காம ஒதுங்கி இருங்க. மறுபடி உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும். காத்திருங்க."

"அப்ப, தலைவர் யாருங்கய்யா?"

"கொஞ்ச நாளைக்கு நானே தொடர வேண்டியதுதான். இப்ப இருக்கற நிலையில, அதைத் தவிர வேறு வழி இல்லை" என்றார் கரிகாலன்.

"என்னண்ணே, இப்படி ஆயிடுச்சு? " என்றான்  பரந்தாமனின் ஆதரவாளன் சண்முகம்.

பரந்தாமன் பதில் சொல்லவில்லை.

"குணசீலன் பண்ணின சதி அண்ணே!"

பரந்தாமன் இல்லையென்று மௌனமாகத் தலையாட்டினான். அவனே கரிகாலனிடம்  இரண்டு நாட்கள் முன்பு அப்படித்தான் சொன்னான். ஆனால் இந்த இரண்டு நாட்களாக யோசித்ததில் அவனுக்குப் பல்வேறு சிந்தனைகள் தோன்றின. கடைசியில் ஒரு தெளிவு பிறந்தது.

ப்போது பரந்தாமன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். அவன் பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு முன்னோட்டம் போல் பள்ளி நாட்களிலேயே ஐந்தாறு மாணவர்களைக் கூட சேர்த்துக்கொண்டு கட்டுப்பாடில்லாமல் நடந்து வந்தான். அதனால் அவன் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

ஒரு முறை கிருஷ்ணன் அவனைப் பற்றித் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்து விட்டார். அவர் பரந்தாமனை அழைத்துக் கடுமையாகக் கண்டித்து, பள்ளியை விட்டே வெளியேற்றி விடுவேன் என்று எச்சரித்து அனுப்பினார்.

இதனால் பரந்தாமன் கொஞ்சம் நிலை குலைந்து போய் விட்டான். வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்ததால்தானே இப்படி நேர்ந்தது என்று அவர் மீது கோபம் வந்தது. அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்தான்.

அவன் வகுப்பில் ராதா என்று ஒரு மாணவி இருந்தாள் . அவள் படிப்பில் அதிக ஆர்வம் உள்ளவள்,  வகுப்பிலேயே  அதிக மதிப்பெண்கள் வாங்குபவள் என்பதால் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணனுக்கு அவள் மீது கொஞ்சம் அதிக அன்பும் அக்கறையும் உண்டு.  அதை அவர்  வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்.

ஒரு நாள் இரவு பரந்தாமனும், அவன் நண்பர்கள் சிலரும் சுவரேறிக் குதித்து பள்ளிக்கூடத்துக்குள்  நுழைந்து பள்ளிச் சுவர்களில் நான்கைந்து இடங்களில் கிருஷ்ணனையும் ராதையையும் தொடர்பு படுத்தி அநாகரிகமாக சில வாசகங்களைக் கரிக்கட்டையால் எழுதி விட்டு வந்தார்கள். கிருஷ்ணன், ராதா என்ற பெயர்ப்பொருத்தம் வேறு அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

அடுத்த நாள் பள்ளிக்கு வந்த ராதா சுவற்றில் எழுதப்பட்டவற்றைப் பார்த்து விட்டு அழுது கொண்டே வீட்டுக்கு ஓடியவள்தான். அதன் பிறகு அவள் பள்ளிக்கே வரவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு அவள் பெற்றோர் அவளுக்கு வெளியூரில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள் என்ற செய்தி வந்தது.

பரந்தாமன் மீது சந்தேகம் இருந்தாலும், ஆதாரம் இல்லாததால் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமை ஆசிரியர் அவனை மிரட்டிக் கேட்டபோது தான் எழுதவில்லை என்று சாதித்து விட்டான். தலைமையை ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் எச்சரிக்கை செய்து விவகாரத்தை முடித்தார்.

கிருஷ்ணனைப் பழி வாங்க நினைத்து ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு, தன்னை அறியாமல் கெடுதல் செய்து விட்டோமே என்று பரந்தாமனுக்கு அவ்வப்போது தோன்றும். பாவம்! நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பெண். நிறையப் படித்து   நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் உயர்ந்திருக்கலாம்.

அது கிராமம் என்பதால், அவதூறுக்கு பயந்து, அவள் பெற்றோர்கள் அவள் படிப்பை நிறுத்தியதுடன், அவளுக்கு அவசரமாகக் கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள். அவள் திருமண வாழ்க்கை நன்றாக அமைந்ததா என்பது கூட பரந்தாமனுக்குத் தெரியாது.

ப்போது 30 வருடங்களுக்குப் பிறகு அந்த சம்பவம் மனதில் திரைப்படம் போல் ஓடியது. பரந்தாமனுக்கு எதிராக குணசீலனோ யாரோ சதி செய்திருக்கலாம். கடந்த காலத்தில், கட்சிக்குள்ளும் வெளியிலும் அவன் அரசியல் எதிரிகள் செய்த எத்தனையோ சதிகளிலிருந்து அவன் மீண்டு வந்திருக்கிறான்.

ஒரு பறவையின் இறக்கை பட்டதால் ஒரு விமானம் கீழே விழுந்தது போல் அவன் வலுவான அரசியல் தளம் ஒரு பொய்யான குற்றச்சாட்டால் சரிந்து விட்டதற்குக் காரணம் தான் ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு இழைத்த அநீதிதான் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை.

"என்னங்க இப்படி வேகமாத் தலையை ஆட்டறீங்க? அப்ப இது குணசீலன் செஞ்ச சதி இல்லைங்கறீங்களா?" என்றான் சண்முகம்.

பரந்தாமன் நிறுத்தாமல் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டே இருந்தான்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும்.

பொருள்:  
ஒருவர் எந்தப் பகையிலிருந்தும் தப்பி வாழ முடியும். ஆனால் அவர் செய்த தீவினை அவரை விடாது பின் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தும்.

No comments:

Post a Comment