About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, October 5, 2018

205. கணக்கு பொய்த்தது!

குறைந்த சம்பளம். சலிக்க வைக்கும் அளவுக்கு வேலைச்சுமை. ஆனால் தன் தகுதிக்கும், திறமைக்கும் வேறு நல்ல வேலை கிடைப்பது கடினம் என்று வெங்கடாசலத்துக்குத் தெரியும்.

சம்பளம் குறைவு என்பதால் வீட்டுக்குப் போனாலும் நிம்மதியாக இருக்க முடியாமல் தொந்தரவுகள்.

இந்த நிலையில்தான் எதிர்பாராத விதமாக வெங்கடாசலத்துக்கு ஆஃபீசில் 'கஜானா' பொறுப்பு கிடைத்தது.

இந்தப் பொறுப்பில் இருந்த முதலாளியின் உறவினன் திடீரென்று வேலையை விட்டு விலகி விட்டதால், வெங்கடாசலத்திடம் பொறுப்பைக் கொடுத்தார் முதலாளி. கொடுக்கும்போதே, "பண விஷயத்தில நெருப்பு மாதிரி இருக்கணும். ஏதாவது தப்பு நடந்தா நான் பொறுத்துக்க மாட்டேன்" என்று எச்சரித்திருந்தார்.

ஆரம்பத்தில் வெங்கடாசலம் பயந்து கொண்டேதான் பணத்தைக் கையாண்டான். ஆனால் சில நாட்களிலேயே சில விஷயங்கள் அவனுக்குப் புரிந்தது. சில சில்லறைச் செலவுகளைக் கொஞ்சம் அதிகமாகக் காட்டி சிறிதளவு பணம் 'சம்பாதிக்கலாம்' என்று புரிந்து கொண்டான். 

வவுச்சர் போட முடியாத செலவுகள், அவசரத்துக்கு வெற்று வவுச்சரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு பின்னால் தொகையையும், விவரங்களையும் நிரப்பும் செலவினங்கள் ஆகியவை அவனுக்கு மிக வசதியாக இருந்தன.

மிக கவனமாக சிறிய அளவு மட்டுமே செலவுகளை அதிகம் காட்டினான். கிடைத்த தொகை சிறிதுதான் என்றாலும், வந்த வரை லாபம் என்று நினைத்துக் கொண்டான். 

வேறு யாரும் கணக்குகளைச் சரி பார்க்கும் வழக்கம் இல்லை. வாரம் ஒரு முறை ஒரு பகுதி நேர அக்கவுண்டண்ட் வந்து அவனுடைய கேஷ்புக்கிலிருந்து முறையாக லெட்ஜர்களில் கணக்கு எழுதுவார். 

அவருக்கு விவரங்கள் ஏதும் தெரியாது. 50 ரூபாயோ, 500 ரூபாயோ, கேஷ்புக்கில் என்ன இருக்கிறதோ அதை லெட்ஜர்களில் எழுதுவதுதான் தன் வேலை என்பது போல்தான் அவர் நடந்து கொள்வார்.

அவ்வப்போது முதலாளி திடீரென்று வந்து கேஷ்புக்கைப் பார்ப்பார். ஓரிரு செலவினங்களைக் காட்டி விவரம் கேட்பார். வெங்கடாசலம் விவரம் சொன்னதும் கேட்டுக் கொள்வார். 

தான் கவனமாக இருப்பதாக வெங்கடாசலம் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சரி பார்ப்பது போல் முதலாளி நடந்து கொள்கிறார் என்று வெங்கடாசலம் புரிந்து கொண்டான்.

சில சமயம் முதலாளி தன் சொந்தச் செலவுக்காக அவனிடம் பணம் வாங்கிக் கொள்வார். 500 அல்லது 1000 ரூபாய் வாங்குவார். இதற்கு வவுச்சர் போட்டு முதலாளியிடம் கையெழுத்து வாங்கும் பழக்கம் இல்லை. கேஷ்புக்கில் முதலாளியின் சொந்தக் கணக்கு என்று எழுதிக் கொள்வான். 

அக்கவுண்டண்ட் வந்து கணக்கு எழுதும்போது, மாதம் முழுவதும் வாங்கிய மொத்தத்தொகைக்கு ஒரு வவுச்சர் போட்டு அவரிடம் கையெழுத்து வாங்கி கொள்வார்.

இது போல் வாரம் ஓரிரு முறை அவர் பணம் வாங்கும் வழக்கம் உண்டு.

வெங்கடாசலம் துணிந்து ஒரு காரியம் செய்தான். ஒரு குறிப்பிட்ட வாரத்தில் அவர் ஒரு முறைதான் 500 ரூபாய் வாங்கினார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின் இன்னொரு 500 ரூபாய் வாங்கியதாகக் கணக்கு எழுதி விட்டான். 

500 ரூபாயைப் பணப்பெட்டியிலேயே வைத்திருந்தான். ஒருவேளை முதலாளி கண்டு பிடித்துக் கேட்டால், தவறுதலாக இரண்டு முறை எழுதி விட்டதாகச் சொல்லி, பணம் சரியாக இருப்பதாகச் சொல்லி விடலாம் என்று நினைத்தான். தினமும் பணத்தை எண்ணிச் சரி பார்ப்பது போன்ற வழக்கங்கள் இல்லாததால், வேறு கேள்விகள் வராது.

ஆனால் அது பற்றிப் பேச்சே வரவில்லை. மாத முடிவில் அக்கவுண்டண்ட் மொத்தத் தொகைக்கு வவுச்சர் வாங்கியபோதும் முதலாளி தான் வாங்கியதை விட 500 ரூபாய் அதிகமான தொகை எழுதப்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டுக் கேட்கவில்லை.

தற்கு ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு நாள் மாலை முதலாளி வெங்கடாசலத்தைத் தன் அறைக்கு அழைத்தார்.

"நாளையிலேந்து உனக்கு இங்கே வேலை இல்லை. உனக்குச் சேர வேண்டிய சம்பளத்தைக் கணக்குப் பாத்து இன்னிக்கே கொடுத்துடறேன். வாங்கிட்டுப் போயிடு" என்றார்.

"ஏன் சார், திடீர்னு?" என்றான் வெங்கடாசலம் அதிர்ச்சி அடைந்தவனாக.

"என்னை முட்டாள்னு நெனச்சியா? ஆஃபீஸ்லேந்து நான் வாங்கற பணத்தையெல்லாம் நான் டயரியில் எழுதி வைச்சிருக்கேன். ரெண்டு மாசம் முன்னாடி நீ என் கணக்கில 500 ரூபா அதிகமா எழுதியதை கவனிச்சேன். அப்பவே உன் மேல சந்தேகம் வந்துடுச்சு. அப்புறம் உன் தினசரிக் கணக்குகளைக் கண்காணிச்சேன். எவ்வளவு கொடுக்கற, எவ்வளவு வவுச்சர் போடறன்னு உனக்குத் தெரியாம கண்காணிச்சேன். நீ அப்பப்ப சில செலவுகளை அதிகமா எழுதிப் பணம் திருடறது தெரிஞ்சது. நீ பணம் திருடறது உறுதியானதால உன்னை வேலையை விட்டு அனுப்பறேன்."

"சார்! மன்னிச்சுடுங்க சார். பணக் கஷ்டத்தால தப்புப் பண்ணிட்டேன். இனிமே அப்படிப் பண்ண மாட்டேன், சார். கேஷ் இல்லாம வேற ஏதாவது வேலை கொடுங்க சார். நீங்க வேலையை விட்டு அனுப்பிட்டா நான் நடுத்தெருவுக்கு வந்துடுவேன் சார்!" என்று அழ ஆரம்பித்தான் வெங்கடாசலம்.

"பணக்கஷ்டம்னா திருடலாமா? இப்ப உன்னோட பணக்கஷ்டம் இன்னும் அதிகமாத்தானே ஆகப்போகுது? உன் நிலைமையை நினைச்சுப் பரிதாபப்படறேன். ஆனா என்னால உனக்கு உதவ முடியாது" என்றார் முதலாளி.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் 
இலனாகும் மற்றும் பெயர்த்து.

பொருள்:  
வறுமையின் காரணமாகத் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால், மீண்டும் வறியவன் ஆக நேரிடும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                             காமத்துப்பால்


No comments:

Post a Comment