
"என்ன பாட்டு இது? சானலை மாத்துங்க!" என்றாள் சரஸ்வதி.
கோமதிநாயகம் டிவியை செய்தி சானலுக்கு மாற்றினார்.
"என்ன பாட்டு இது? மனுஷனை மனுஷன் சாப்பிடறதாவது! கேக்கவே ஒரு மாதிரி இருக்கு!"
"இந்தப் பாட்டுக்கு அர்த்தம் அது இல்ல" என்றபடியே தொலைக்காட்சியின் ஒலியை அதிகரித்தார் கோமதிநாயகம்.
"இறைச்சி உற்பத்தி சென்ற ஆண்டு 9 சதவீதம் அதிகரித்துள்ளது..." என்றது செய்தி சானல்.
"இது பரவாயில்லையா?" என்று கேட்டபடியே டிவியை நிறுத்தினார் கோமதிநாயகம்.
"ஏங்க, நீங்க சைவம்கறதுக்காக உலகத்தில யாருமே அசைவம் சாப்பிடக் கூடாதா என்ன?"
"அப்படி நினைச்சிருந்தா, அசைவம் சாப்பிடற குடும்பத்தைச் சேர்ந்த உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டிருப்பேனா?"
"ஆமாம். இதையே சொல்லிக்கிட்டிருங்க. நான்தான் கல்யாணம் ஆனப்பறம் அசைவம் சாப்பிடறதை விட்டுட்டேனே! நீங்க எங்க வீட்டுக்கு வரப்பல்லாம், எங்க வீட்டிலேயும் அசைவம் சமைக்கறதில்ல."
"அதெல்லாம் சரிதான். நான் யாரையும் அசைவம் சாப்பிட வேண்டாம்னு சொல்லல. ஆனா, இறைச்சிக்காக உயிர்கள் கொல்லப்படறது எனக்கு வருத்தமா இருக்கு."
"இது உலகத்தோட இயல்புங்க. எல்லா உயிர்களும் வேற உயிர்களைக் கொன்னு தின்னுதான் உயிர் வாழுதுங்க."
"அதுதான் இல்ல. விலங்குகளிலேயே சைவப் பிராணிகள் நிறைய இருக்கு. அவ்வளவு பெரிய யானையே சைவம்தான்."
"பிராணிகளுக்குள்ள சைவம் அசைவம் இருக்கற மாதிரி, மனுஷங்களுக்குள்ளேயும் இருக்காங்க. இது இயல்புதானே?"
"இயல்பா இருக்கலாம். ஆனா, மனுஷங்க நர மாமிசம் திங்கறவங்களா இருந்தா என்ன ஆகும்? இந்தப் பாட்டில வர மாதிரி, மனுஷனை மனுஷன் சாப்பிட்டுக்கிட்டு, நம்மளை நாமே அழிச்சுக்கிட்டிருப்போம்."
"அப்படித்தான் இல்லையே!"
"நீ சொல்றபடி, எல்லா உயிர்களும் மற்ற உயிர்களைத் தின்னு உயிர் வாழற நிலை இருந்தா, உலகத்தில சில பிராணிகள்தான் உயிரோட இருக்கும். அசைவம் சாப்பிடாத உயிர்களோட புண்ணியத்தினாலதான் உலகத்தில இத்தனை உயிர்கள் வாழ்ந்துக்கிட்டிருக்கு."
"ஏங்க, உலகத்தில புண்ணியம், பாவம்னெல்லாம் இருக்கா? பாவம் பண்ணினவங்க மீளாத நரகத்துக்குப் போவாங்களா?"
"அது எனக்குத் தெரியாது. ஆனா, சில பேர் பண்ற புண்ணியம் பல பேரைக் காப்பாத்தும்கறதில எனக்கு நம்பிக்கை உண்டு!" என்றார் கோமதிநாயகம், சரஸ்வதியின் கேள்விக்கு நேரான பதில் சொல்வதைத் தவிர்த்து!
துறவறவியல்
அதிகாரம் 26
புலால் மறுத்தல்
குறள் 255உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
ஊன் உண்ணாதிருத்தல் என்ற அறம் உலகில் இருப்பதால்தான் உலகில் பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. புலால் உண்பவர்களை நரகம் விழுங்கி விடும், வெளியே விடாது.
அருமை . நல்ல கதை. தொடருங்கள், தொடர்கிறேன்.
ReplyDeleteநமது வலைத்தளம் : கூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரையில் (Tab) திறக்கச் செய்வது எப்படி?
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
https://newsigaram.blogspot.com/
திருவள்ளுவருடன் இந்த விஷயத்தில் மாறு பட வேண்டி இருக்கிறது. உலகத்தில் அசைவம் சாப்பிடுவர்களும் சைவம் சாப்பிடுவர்களும் ஓரளவுக்கு சரியான விகிதத்தில் இருக்கிறார்கள். இதில் அசைவம் சாப்பிடுபவர்கள் ஒருவேளை குறைந்தால் சைவம் சாப்பிடுபவர்களுக்கு தேவையான காய்கறிகள் கிடைக்காமல் போகவும் அல்லது விலை அதிகமாக போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதை யோசித்தாவது எங்களை சகித்துக் கொள்ளுங்கள். சிலர் சுத்த சைவம் என்று சொல்லிக்கொள்வது போல நான் சுத்த அசைவம் என்று சொல்லிக்கொள்வது வழக்கம். நன்றி.
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி. அசைவ உணவு விஷயத்தில் திருவள்ளுவரின் கருத்துக்கள் மிகக் கடுமையாக இருக்கின்றன. என் கதைகளில் நான் இந்தக் கடுமையைத் தவிர்த்து, இதை மென்மையாகக் கையாண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். சைவம் அசைவம் என்பது பழக்கத்தின்படி அமைவது, (பெரும்பாலும்) விருப்பத்தின்படி அமைவதல்ல என்பது என் கருத்து. மீண்டும் என் நன்றி,
Delete