சதீஷுக்கு விழிப்பு வந்தபோது. ஒரு பெரிய அறையில் சோஃபாவில் அமர்ந்திருந்தது தெரிந்தது.
திரும்பிப் பார்த்தபோது, பக்கத்தில் அவன் நண்பன் முரளி. அவனுக்கும் அப்போதுதான் விழிப்பு வந்திருக்கும் போலும். அவனும் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் சதீஷைப் பார்த்தவனாக, "நாம எங்கடா இருக்கோம்?" என்றான்.
"சொர்க்கத்தில்!" என்றது ஒரு பெண் குரல்.
தரையிலிருந்து முளைத்தது போல், அவர்கள் எதிரே ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்.
"சொர்க்கத்திலேயா? நீங்க யாரு?" என்றான் சதீஷ்.
"இரண்டாவது கேள்விக்கு பதில் - நான் உங்கள் ரிலேஷன்ஷிப் மானேஜர் கார்யா. முதல் கேள்விக்கு...."
"கார்யாங்கறதுக்கு பதிலா காவ்யான்னு பே வச்சிருக்கலாம். நீங்க ஒரு காவியம் மாதிரி அவ்வளவு அழகா இருக்கீங்க!" என்றான் முரளி.
"சொர்க்கத்துக்கு வந்தும், பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடும் பழக்கம் போகவில்லையா?" என்றாள் கார்யா, சிரித்தபடி.
"சொர்க்கம்கறீங்க. ஜொள்ளுன்னெல்லாம் பேசறீங்க? அது சரி. நாங்க எப்படி சொர்க்கத்துக்கு வந்தோம்?" என்றான் சதீஷ்.
"இரண்டாவது கேள்விக்கு பதில் - நீங்கள் செய்த புண்ணியத்தால், இறந்த பிறகு நீங்கள் சொர்க்கத்துக்கு வந்திருக்கிறீர்கள். முதல் கேள்விக்கு பதில் - இங்கே வரும் உங்களைப் போன்ற சிலரிடமிருந்து நாங்களும் ஜொள்ளு, லொள்ளு போன்ற நவீன தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்!"
"வந்து..." என்று ஆரம்பித்தான் முரளி.
"உங்கள் மனதில் நிறைய கேள்விகள் இருக்கின்றன. அவற்றை என்னால் படிக்க முடியும். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி விடுகிறேன்.
"நீங்கள் இருவரும் சிறு வயது முதல் ஒன்றாக வளர்ந்து, இறுதி வரை நெருக்கமாக இருந்து வந்த நண்பர்கள். இருவரும் காரில் சென்றபோது, விபத்தில் சிக்கி, ஒன்றாக உயிரிழந்து, ஒன்றாக இங்கே வந்து விட்டீர்கள்.
"உங்கள் பாவ புண்ணியங்களை ஆராய்ந்த எங்கள் பாஸ் சித்ரகுப்தர் உங்களை சொர்க்கத்துக்கு அனுப்பத் தீர்மானித்து, உங்களை இங்கே அனுப்பி விட்டார். நீங்கள் செய்த பாவங்கள் உங்கள் நினைவுக்கு வந்து, 'நமக்கு எப்படி சொர்க்கம் கிடைத்தது?' என்று யோசிக்கிறீர்கள்.
"தற்போது பதவியில் இருக்கும் சித்ரகுப்தர் மிகவும் தாராள மனம் கொண்டவர். அதனால், அவர் பெரிய பாவங்களைத் தவிர மற்றவற்றை மன்னித்து விடுவார். சிறிய நற்செயல்களுக்கும் நிறைய மதிப்புக் கொடுப்பார்.
"அத்துடன், நரகத்தில் இடப் பற்றாக்குறை. அதனாலும், நரகத்துக்கு அனுப்பப்படுபவர்களின் எண்ணிக்கையை நாங்கள் குறைக்க வேண்டி இருக்கிறது. இந்தக் காரணங்களால், நீங்கள் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறீர்கள்."
"இங்கே நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்றான் முரளி.
"ஒன்றும் செய்ய வேண்டாம். சோமபானம் குடித்து விட்டு, சொகுசாக இருக்க வேண்டியதுதான். பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் பாவக்கணக்கில் சேர்ந்து, சொர்க்க வாழ்க்கையின் காலத்தைக் குறைத்து விடும்!
"நீங்கள் தங்க வேண்டிய அறையை ஏற்பாடு செய்து விட்டுச் சற்று நேரத்தில் வருகிறேன். அதுவரை, உங்கள் உலக வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்க்கலாம்.
"எதிரே உள்ள திரையில், உங்கள் இருவர் வாழ்க்கையும் தனித் தனியே ஓடும். இந்தத் தொலைக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியை வேண்டுமானால் பார்க்கலாம்.
"அலுப்புத் தட்டினால், சொர்க்கத்தை சுற்றிப் பாருங்கள். இன்னும் பல கேளிக்கைகள் இங்கே இருக்கின்றன. சற்று நேரம் கழித்து நான் மீண்டும் வந்து உங்களைப் பார்க்கிறேன். இன்னும் சில வாடிக்கையாளர்களை நான் வரவேற்க வேண்டியிருக்கிறது" என்று சொல்லி விட்டு மறைந்தாள் கார்யா.
இரண்டு மணி நேரம் கழித்து, கார்யா மீண்டும் அவர்கள் முன் தோன்றி, "எப்படி இருக்கிறது?" என்றாள்.
"ஒரு சந்தேகம்" என்றான் முரளி.
"உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குத் தெரியும். உங்கள் உலக வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்தானே அது? பல சமயங்களில், சதீஷ் சாலையில் நடந்து செல்லும்போது, ஆடு, மாடு போன்ற பல மிருகங்கள் அவருக்கு வணக்கம் செலுத்துவது போல் தங்கள் காலைத் தூக்கிக் காட்டுகின்றன. அது உங்களுக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா?"
"ஆமாம். ஆனால், ஒரு முறை கூட இப்படி நடந்து நான் பாக்கலியே? நீங்க ஏதாவது கிராஃபிக்ஸ் பண்ணி இருக்கீங்களா?" என்றான் சதீஷ்.
"அவை அந்தப் பிராணிகளின் உள்ளுணர்விலிருந்து நிகழ்ந்தவை. அதனால், அவை அப்போது வெளிப்படவில்லை. இப்போது அந்த உள்ளுணர்வின் வெளிப்பாட்டை உங்களால் பார்க்க முடிகிறது."
"இதுக்கு என்ன காரணம்? எனக்கு அப்படி நடக்கலியே? சதீஷுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மரியாதை?" என்றான் முரளி.
"ஏனென்றால், சதீஷ் புலால் உண்ணாதவர்!" என்றாள் கார்யா.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 26
புலால் மறுத்தல்
குறள் 260கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
No comments:
Post a Comment