
"ஏண்டா, களைச்சுப் போய் வந்திருக்க?" என்றாள் அவன் அம்மா மங்கை.
"ஒண்ணும் இல்லையே!" என்றான் கிரி.
"பள்ளிக்கூடத்தில இன்னிக்கு எங்கேயோ வெளியே அழைச்சுக்கிட்டுப் போகப் போறதா சொன்னாங்களே, அழைச்சுக்கிட்டுப் போனாங்களா?"
"ஆமாம்."
"பஸ்ஸில போயிட்டு வந்திருப்ப. அதான் களைப்பா இருக்கே. தோசை சாப்பிடறியா?"
"இப்ப எதுவும் வேண்டாம்மா" என்று சொல்லி விட்டுத் தன் அறைக்குப் போய் விட்டான் கிரி.
"பள்ளிக்கூடத்தில எங்கே அழைச்சுக்கிட்டுப் போனாங்களாம்?" என்றாள் மங்கையின் மாமியார்.
"அதை நான் கேக்கலே. இங்கிலீஷிலே ஏதோ பேர் சொன்னான், அபீட்டோ என்னவோ. களைச்சுப் போயிருக்கான். அப்புறம் கேட்டுக்கலாம்" என்றாள் மங்கை.
"ராத்திரிக்கு என்ன செய்யப் போற?" என்றாள் மாமியார்.
"பிரியாணிதான்" என்றாள் மங்கை.
இரவு அனைவரும் சாப்பிட உட்கார்ந்தபோது, "இன்னிக்கு, பள்ளிக்கூடத்தில எங்கடா அழைச்சுக்கிட்டுப் போனாங்க?" என்றாள் மங்கை.
"ஒரு அபெட்டாருக்கு அழைச்சுக்கிட்டுப் போனாங்க."
"அப்படின்னா?"
"ஆடு வெட்டற இடம்!" என்றாள் கிரியின் அக்கா சுமதி.
"ஒரு தொழிற்சாலை மாதிரி முறையா, சுத்தமா செய்வாங்க" என்றார் கிரியின் அப்பா சிவமணி.
"இங்கல்லாமா அழைச்சுக்கிட்டுப் போவாங்க? சைவம் சாப்பிடறவங்கள்ளாம் வர மாட்டாங்களே!" என்றாள் மங்கை.
"ஆமாம். சில பேர் வரலை. இது கட்டாயம் இல்லை" என்றான் கிரி.
"அங்க என்ன பாத்தே?"
"ஆடு, மற்ற மிருகங்களை வெட்டி, தோலை உரிச்சு, இறைச்சியை எடுத்து சுத்தம் பண்ணி, கோல்டு ஸ்டோரேஜ்ல வைப்பாங்க. எல்லாம் சுத்தமா, சுகாதாரமா நடக்கும். அப்படித்தானேடா?" என்றார் சிவமணி.
"ஆமாம்ப்பா" என்ற கிரி, தன் தாய் தனக்குப் பரிமாற வந்தபோது, கையைக் குறுக்கே நீட்டி, "பிரியாணி வேண்டாம்மா. வெறும் சோறு இருந்தா போடு. மோர் ஊத்தி சாப்பிட்டுக்கறேன்" என்றான்.
"ஏண்டா? உனக்குத்தான் பிரியாணி ரொம்பப் பிடிக்குமே!"
"இல்லம்மா. இன்னிக்கு அபெட்டார்ல ஒரு ஆட்டைக் கொன்னுட்டு, அது உடம்பிலேந்து இறைச்சி எடுக்கறதைப் பாத்தப்பறம், எனக்கு இறைச்சி சாப்பிடவே பிடிக்கல!" என்றான் கிரி.
துறவறவியல்
அதிகாரம் 26
புலால் மறுத்தல்
குறள் 258செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
குற்றமற்ற அறிவை உடையவர்கள், ஒரு உயிரிலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ண மாட்டார்கள்.
No comments:
Post a Comment