"நாட்டில் மழை பொய்த்து விட்டது. குடிமக்கள் மிகவும் அல்லல் படுகிறார்கள். எதுவும் செய்ய இயலாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது" என்றான் அரசன் குணவர்மன்.
"அரசே! மழை பெய்தால்தான், நம் நாட்டுக்கு விடிவு பிறக்கும். மழை வேண்டி யாகம் செய்யும் பழக்கம் உண்டு. தாங்கள் அது போல் ஒரு யாகம் செய்யலாம் என்பது என் கருத்து" என்றார் அமைச்சர்.
"உடனே செய்து விடலாம். யாகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்."
"அரசே! விஷ்ணுசித்தர் என்று ஒரு முனிவர் இருக்கிறார். அவர் தவ வலிமை மிகுந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இந்த யாகத்தை நடத்திக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தாங்கள் அவரை நேரில் சந்தித்து, யாகத்தை நடத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்" என்றார் அமைச்சர்.
"நிச்சயமாக. உடனே கிளம்பலாம். நீங்களும் வாருங்கள்" என்றான் அரசன்.
"யாகம் நடத்த வேண்டும் என்று சொன்னது யார்?" என்றார் விஷ்ணுசித்தர்.
அரசர் அமைச்சரைப் பார்க்க, அமைச்சர், தாம் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டோமோ என்று பயந்தபடியே, "அடியேனுடைய கருத்துதான் அது" என்றார்.
"சரி. செய்யலாம்" என்றார் விஷ்ணுசித்தர், சிரித்தபடி.
அரசன் மகிழ்ச்சியுடன், "யாகத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று தாங்கள் தெரிவித்தால், நான் உடனே ஏற்பாடுகளைத் தொடங்கி விடுகிறேன்" என்றான்.
"சொல்கிறேன்" என்ற முனிவர், ஒரு நிமிடம் அரசனை உற்றுப் பார்த்து விட்டு, "மன்னா! நீ புலால் உண்பாயா?" என்றார்.
"வேட்டையாடுவதும், வேட்டையாடிய மிருகங்களின் ஊனைப் புசிப்பதும், அரசர்கள் வழக்கமாகச் செய்வதாயிற்றே!" என்றான் குணவர்மன், தயக்கத்துடன்.
"இந்த யாகம் செய்ய வேண்டுமானால், நீ ஒரு பட்சம், அதாவது பதினைந்து நாட்கள், வேட்டையாடாமல், புலால் உண்ணாமல் இருக்க வேண்டும்."
"சரி, முனிவரே! அப்படியே இருக்கிறேன்" என்றான் அரசன்.
"அதற்குப் பிறகும், நீ வேட்டையாடுவதையும் புலால் உண்ணுவதையும் அடியோடு நிறுத்தி விட வேண்டும். உன்னால் முடியுமா?"
அரசன் சற்று யோசித்து விட்டு, "என் நாட்டு நலனுக்காக நான் இதைச் செய்கிறேன். ஆனால், என் குடும்பத்தினரையும், அரண்மனையில் உள்ள மற்றவர்களையும் இப்படி இருக்கச் செய்வது கடினம்."
"நான் இருக்கச் சொன்னது உன்னை மட்டும்தான். மற்றவர்கள் உன்னைப் பின்பற்ற விரும்பினால், அது அவர்கள் விருப்பம். அத்துடன், நீ வேட்டையாடுவதையும், புலால் உண்ணுவதையும் நிறுத்தி விட்டதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்" என்றார் முனிவர்.
"சரி, முனிவரே! அப்படியே செய்கிறேன்" என்று கூறி விடைபெற்றான் அரசன்.
பதினைந்து நாட்களுக்குப் பிறகு, குணவர்மன் அமைச்சருடன் மீண்டும் வந்து முனிவரைச் சந்தித்தான்.
"நீங்கள் சொன்னபடியே, வேட்டையாடுவதையும், புலால் உண்ணுவதையும் நிறுத்தி விட்டேன், முனிவரே!"
"நல்லது. தொடர்ந்து இதைக் கடைப்பிடிக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா?" என்றார் முனிவர்.
"நிச்சயமாக, முனிவரே! நான் புலால் உண்பதை நிறுத்தியதும், அரண்மனையில் எல்லோருமே நிறுத்தி விட்டார்கள். நான் யாரையும் நிறுத்தத் சொல்லிச் சொல்லவில்லை" என்றான் அரசன்.
"தாங்கள் சொன்னபடி, நாட்டு மக்களுக்கு இதை அறிவித்தோம். அரசர் புலால் உண்ணுவதை நிறுத்தியதைப் பார்த்து, மக்களில் சிலர் கூட புலால் அருந்துவதை விட்டு விட்டார்கள் என்று செய்தி வந்திருக்கிறது, முனிவரே!" என்றார் அமைச்சர்.
"நல்லது. அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி!" என்றார் முனிவர்.
"இன்னொரு வியப்பான, மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் அரண்மனையிலிருந்து கிளம்பியபோது, மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. நீண்ட காலத்துக்குப் பிறகு நாங்கள் பார்த்த காட்சி இது. யாகம் செய்ய வேண்டும் என்று தங்களை அணுகியதுமே, இப்படி ஒரு நல்ல அறிகுறி தோன்றியது எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. யாகத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம், முனிவரே?" என்றான் அரசன்.
"நீ ஏற்கெனவே யாகம் செய்து விட்டாய், மன்னா!" என்றார் முனிவர்.
"என்ன சொல்கிறீர்கள், முனிவரே?"
"பிற உயிர்களைக் கொல்லாமலும், அவற்றின் ஊனை உண்ணாமலும் இருப்பதும் ஒரு வேள்விதான். இதை விடப் பெரிய வேள்வி வேறு எதுவும் இல்லை."
"மழை பெய்வதற்காக யாகம் செய்ய வேண்டுமே?" என்றான் குணவர்மன்.
"யாகம் செய்தால் மழை பெய்யும் என்றால், நீ செய்திருக்கும் அறச்செயலான இந்த யாகத்துக்கும் மழை பெய்யும். மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றி விட்டதாக நீயே சொல்கிறாயே! இந்த அறத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வா. அதுதான், நீ செய்யக் கூடிய மிகப் பெரிய வேள்வி!" என்றார் முனிவர்.
துறவறவியல்
அதிகாரம் 26
புலால் மறுத்தல்
குறள் 259அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
நெய் போன்ற பொருட்களைத் தீயில் இட்டு ஆயிரம் வேள்விகள் செய்வதை விட, ஒரு உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமல் இருப்பது நல்லது.
குறள் 258
No comments:
Post a Comment