
"நீங்க இங்கே வந்து எங்களை சந்தித்துப் பேசினதுக்கு ரொம்ப நன்றி. இன்னிக்கு நாம பேசி முடிச்ச வியாபாரத் தொடர்பு, நமக்குள்ள நீண்ட காலம் நீடிக்கும்னு நம்பறேன். நீங்க ஹோட்டல் ரூமுக்குப் போய் ஓய்வு எடுத்துக்குங்க. ராத்திரி 8 மணிக்கு, உங்களை டின்னருக்கு அழைச்சுக்கிட்டுப் போக, எங்க ஜெனரல் மானேஜர் ஷ்யாம் வருவார். நானே வரணும். ஆனா, இன்னிக்கு என் உறவினர் ஒத்தரோட கல்யாண ரிசப்ஷனுக்கு நான் போக வேண்டி இருக்கு. தப்பா நினைச்சுக்காதீங்க!" என்றார் நிர்வாக இயக்குனர் சுந்தர்.
"அதனால என்ன சார்? எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி எல்லாம்?" என்றார் வாடிக்கையாளர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சபேசன். அவருடன் வந்திருந்த அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்ரீதரும் தலையசைத்து அதை ஆமோதித்தார்.
மறுநாள் காலை அலுவலகத்துக்கு வந்ததும், சுந்தர் ஷ்யாமைத் தன் அறைக்கு அழைத்தார். "சபேசனும் ஸ்ரீதரும் ஊருக்குப் போயிட்டாங்களா? எப்படி ஃபீல் பண்ணினாங்க?" என்றார்.
"ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. காலையில அவங்களை வழியனுப்ப ஏர்போர்ட்டுக்குப் போயிருந்தேன். நாம அவங்களுக்கு
நிறைய முக்கியத்துவம் கொடுத்து, அவங்களை நல்லா கவனிச்சுக்கிட்டதில அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்" என்றார் ஷ்யாம்.
"வெரி குட். நீங்க ஏர்போர்ட்டுக்குப் போனது பெரிய விஷயம். ராத்திரி டின்னர் எப்படி இருந்தது?"
ஷ்யாம் சற்றுத் தயங்கி விட்டு, "ராத்திரி நான் டின்னருக்குப் போகல. டி ஜி எம் பிரகாஷை அனுப்பிச்சுட்டேன். அவர் அவங்களை நல்லா கவனிச்சுக்கிட்டாரு" என்றார்.
"ஏன்? நீங்க அவங்களோட டின்னருக்கு வருவீங்கன்னு நான் சொல்லி இருந்தேனே! உங்களுக்கு வேற வேலை இருந்ததா? அப்படி இருந்தா, முன்னாடியே எங்கிட்ட சொல்லி இருக்கலாமே?" என்றார் சுந்தர், சற்று ஏமாற்றத்துடன்.
"இல்ல சார். அவங்க நான்-வெஜ் சாப்பிடுவாங்க. எனக்கு அவங்களோட உக்காந்து சாப்பிடறது கஷ்டமா இருக்கும். அதனால, சாயந்திரம் அவங்களுக்கு ஃபோன் பண்ணி, அவசரமா ஒரு உறவினரைப் பாக்க ஆஸ்பத்திரிக்குப் போகணும், அதனால டி ஜி எம் பிரகாஷ் வருவார்னு சொல்லி, அவங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிட்டேன். அவங்க தப்பா எடுத்துக்கல. அதுக்காகத்தான், அவங்க எதிர்பார்க்காத விதத்தில, காலையில சீக்கிரமே அவங்க ஹோட்டலுக்குப் போய், அங்கேந்து அவங்களை ஏர்போர்ட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போய் வழி அனுப்பிட்டு வந்தேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்."
"அதெல்லாம் சரிதான். அவங்க நான்-வெஜ் சாப்பிட்டா, பக்கத்தில உக்காந்து வெஜிடேரியன் உணவை சாப்பிடறதில உங்களுக்கு என்ன பிரச்னை? நான் கூட வெஜிடேரியன்தான். நான் எத்தனையோ தடவை நான்-வெஜ் சாப்பிடறவங்களோட சேர்ந்து சாப்பிட்டிருக்கேனே!"
"சாரி சார். இது என்னோட தனிப்பட்ட பிரச்னையா இருக்கலாம். எனக்கு என்னவோ நான்-வெஜ் அயிட்டங்களைப் பாத்தா, உடம்பில ஏற்படற காயங்களைப் பாக்கற மாதிரி இருக்கும். இந்த உணர்வோடு என்னால சாப்பிட முடியாதது மட்டும் இல்ல, பக்கத்தில உக்காந்திருக்கவே முடியாது. அதனாலதான், இது மாதிரி சூழ்நிலைகளை நான் தவிர்த்துடுவேன். சாரி." என்றார் ஷ்யாம்.
"ஓகே. அடுத்த தடவை இது மாதிரி சூழ்நிலைகள் வரும்போது, உங்களை இதில ஈடுபடுத்தக் கூடாதுங்கறதை நான் ஞாபகம் வச்சுக்கறேன்" என்றார் சுந்தர்.
துறவறவியல்
அதிகாரம் 26
புலால் மறுத்தல்
குறள் 257உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
புலால் என்பது இன்னொரு உயிரின் புண் என்று உணர்ந்தோர், புலால் உண்ணாமல் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment