"எப்படிய்யா இருக்கீங்க?" என்றான் வேலன்
சுந்தரம் பலவீனமாகச் சிரித்தார்.
"எங்களுக்காகப் போராடினத்துக்காக, உங்களை குண்டர் சட்டத்தில் உள்ள வச்சுட்டாங்களே! கடவுளுக்கே அடுக்குமா?"
"இருக்கட்டும். நீங்க எல்லாம் கவனமா இருங்க. நான் ஒத்தன் கைதானது போதும்."
"அது எப்படிங்க? ரோடு போடறதுக்காக விவசாய நிலத்தை எடுத்துக்கறேன்னு சொன்னா சும்மா இருக்க முடியுமா?"
"முடியாது. அதனாலதான் போராடினோம். என்னை குண்டர் சட்டத்தில கைது செஞ்சுட்டாங்க. மத்தவங்க யாருக்கும் இது மாதிரி நடக்கக் கூடாது. அதனாலதான், கொஞ்சம் அடக்கி வாசிங்கன்னு சொல்றேன்."
"அப்ப, இதை அப்படியே விட்டுட முடியுமா?'
"அதான் கோர்ட்ல ஸ்டே வாங்கிட்டமே! அந்த ஆத்திரத்திலதான் என் மேல குண்டர் சட்டம் பாஞ்சிருக்கு. கொஞ்ச நாளைக்கு எதுவும் நடக்காது."
"அவங்க ஸ்டேயை வெகேட் பண்ண வச்சுட்டாங்கன்னா?"
"அதுக்கு ரெண்டு மூணு மாசம் ஆகும். அப்புறம் தேர்தல் வருது. அநேகமா இந்த ஆட்சி போயிடும். புது அரசுல நமக்கு நியாயம் கிடைக்குமான்னு பாப்போம். அதுக்குள்ளே நானும் விடுதலை ஆயிடலாம்."
"அப்ப நான் வரேன்யா?" என்று விடைபெற எத்தனித்த வேலன், அப்போதுதான் கவனித்தவனாக, "என்னய்யா இது? உடம்பில காயங்கள் இருக்கு. உங்களை அடிச்சாங்களா?" என்றான், அதிர்ச்சியுடன்.
சுந்தரம் பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்தார்,
சில மாதங்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பினார் சுந்தரம். அவர் வீட்டுக்கு வந்த பிறகுதான், சிறையில் அவர் மீது பட்ட அடிகள் விளைவித்த காயங்களின் தீவிரம் வேலனுக்கும் மற்றவர்களுக்கும் புரிந்தது.
"நல்லா இருந்த மனுஷரை இப்படி ஆக்கிட்டாங்களே!" என்று புலம்பினாள் சுந்தரத்தின் மனைவி.
"ஐயா! மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கலாம்யா!" என்றான் வேலன் .
"அதெல்லாம் வேண்டாம்" என்று மறுத்து விட்டார் சுந்தரம்.
சில மாதங்கள் கழித்து நடந்த தேர்தலில், வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தது.
புதிய எம் எல் ஏ சுந்தரத்தைப் பார்க்க வந்தார்.
"ஐயா! விவசாய நிலங்களைக் கையகப்படுத்தற திட்டத்தைக் கைவிடறதா முதல்வர் அறிவிச்சுட்டாரு!" என்றார் எம் எல் ஏ.
"ஆமாம். செய்தி பார்த்தேன். முயற்சி எடுத்த உங்களுக்கும், நல்ல முடிவை எடுத்த முதல்வருக்கும் நன்றி!" என்றார் சுந்தரம்.
"உங்களுக்குச் சிறையிலே நடந்த கொடுமையைப் பத்திக் கேள்விப்பட்டேன். முதல்வர் கூட ரொம்ப வருத்தப்பட்டார். நீங்க ஒரு புகார் கொடுத்தீங்கன்னா, ஜெயில் சூப்பிரண்டன்ட்டை உடனே சஸ்பெண்ட் பண்ணி, அவர் மேல விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை கொடுக்கலாம்னு முதல்வர் சொல்லிட்டாரு. உங்ககிட்டேந்து ஒரு புகார் வாங்கிக்கிட்டுப் போகத்தான் வந்திருக்கேன்."
"அதெல்லாம் வேண்டாம்."
"ஏங்க? உங்களுக்குக் கொடுமை செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா?"
"ஜெயில் சூப்பிரென்டென்ட் சஸ்பெண்ட ஆகி, அவர் மேல விசாரணை நடந்து அவருக்கு தண்டனை கிடைக்கறதில எனக்கென்ன சந்தோஷம் இருக்க முடியும்? அவரைக் கூப்பிட்டு எச்சரிக்கை பண்ணி, இனிமே யார்கிட்டயும் இப்படி நடந்துக்கக் கூடாதுன்னு சொல்லிடுங்க. எல்லாச் சிறை அதிகாரிகள்கிட்டேயும் சொல்லிடுங்க. இனிமேலாவது, கைதிகள் இது மாதிரிக் கொடுமைகளுக்கு ஆளாகாம இருக்கட்டும்."
எம் எல் ஏ க்கு சுந்தரத்தின் காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது.
துறவறவியல்
அதிகாரம் 27
தவம்
குறள் 261உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
தனக்கு நேரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதும்தான் தவம் எனப்படும்.
குறள் 262குறள் 260
No comments:
Post a Comment