About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, January 10, 2016

45. நல்ல மனம் வாழ்க

"சம்பளப் பணத்தைப் பங்கீடு செய்து விட்டாயா?" என்றான் தாமோதரன்.

"ஆமாம் நீங்கள் கொண்டு வந்து கொடுத்த ஒரு லட்சம் ரூபாயில் பங்கீடு செய்தது போக 80,000 ரூபாய் மீதி இருக்கிறது. இதை எங்கே முதலீடு செய்யலாம்?" என்றாள் வாணி.

தாமோதரன் சிரித்தான், மனைவி விளையாட்டாகப் பேசுகிறாள் என்பதை உணர்ந்ததால். கல்யாணம் ஆன புதிதில் இதே கேள்வியை எகத்தாளமாகக் கேட்டு அவன் மனதைப் புண்படுத்தியவள்தான் வாணி. 

இன்று பத்து வருடக் குடும்ப வாழ்க்கையில் தாமோதரனையும், வாழ்க்கையின் உண்மைகளையும் புரிந்து கொண்டபின் அவள் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது.

"கலாவுக்குப் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும் என்று சொன்னாயே?"

"கடைசித் தேதியை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்."

"கவலைப்படாதே! பணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டேன்"

"நீங்கள் பணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பீர்கள் என்றும் எனக்குத் தெரியும். பணத்தை என்னிடம் கொடுங்கள். இன்றே பள்ளிக்குப் போய்க் கட்டி விடுகிறேன். கையில் இருந்தால் செலவாகி விடும்."

"இன்றுதான் பணம் கைக்கு வரும். என் கைக்கு வந்தவுடன் உன் கைக்கு மாற்றி விடுகிறேன். பணத்தைப் பாதுகாப்பதில் நீதான் கைகாரியாயிற்றே!"

"நேற்று முரசு தொலைக்காட்சியில் 'கை கை மலர்க்கை' என்று ஒரு பழைய பாட்டு போட்டார்கள். பாடல் முழுவதும் 'கை' 'கை' என்று வரும். அந்தப் பாட்டை எழுதியது நீங்கள்தானா?"

"ஆமாம் என்று சொல்லி விடுவேன். அப்புறம் அந்தப் பாட்டுக்கு வந்த பணத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்பாய்! எதற்கு வம்பு? அந்தப் பாட்டை எழுதிய பெருமை வாலிக்கே இருக்கட்டும்!"

மாலையில் தாமோதரன் அலுவலகத்திலிருந்து வந்ததுமே "பணம் கைக்கு வந்ததா?" என்று கேட்கவில்லை வாணி. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் கூடக் கேட்கவில்லை.

சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் பெண் கலா திடீரென்று நினைவு வந்தவளாக, "அப்பா! எங்கள் பள்ளியில் உல்லாசப் பயணம் போகிறோம். ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமாம். ஆனால் போக வேண்டும் என்று கட்டாயம் இல்லை" என்றாள்.

"கட்டாயம் இல்லையாம்! நம் பொருளாதார நிலையை உணர்ந்து பேசுகிறாள் பாருங்கள் உங்கள் பெண்" என்றாள் வாணி.

"பொதுவாகக் குழந்தைகளைக் குறை சொல்லும்போதுதான் கணவனோ மனைவியோ 'உன் பிள்ளை,' 'உன் பெண்' என்று சொல்வார்கள். நீ நம் குழந்தையைப் புகழும்போதே 'உங்கள் பெண்' என்கிறாயே! உனக்குப் பெரிய மனது!" என்றான் தாமோதரன்.

"நான் இப்படிச் சொல்லாவிட்டால் எனக்குப் பெரிய மனது என்று நீங்கள் ஒப்புக்கொண்டிருக்க மாட்டீர்களே!" என்றாள் வாணி. "அது இருக்கட்டும். கட்டாயம் இல்லை என்றால் கலா உல்லாசப் பயணம் போக வேண்டாம் இல்லையா?" என்றாள் தொடர்ந்து.

தாமோதரன் சற்று  நேரம் மௌனமாக இருந்து விட்டு "இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நாம் மகாபலிபுரம் போகலாம்" என்றான்.

"அய்யா ஜாலி!" என்று குதித்தாள் கலா.

"பிக்னிக்கா? புளியோதரை, தயிர்சாதம் எல்லாம் தயார் செய்து விடட்டுமா?" என்றாள் வாணி.

"எதற்கு? நாம்தான் உயர்தர ஓட்டலில் விருந்து சாப்பிடப் போகிறோமே!" என்றான் தாமோதரன்.

கலா உறங்கியதும் வாணி கேட்டாள் "என்ன, பணம் கைக்கு வந்ததா?"

"வந்தது. ஆனால் உடனே கை மாறி விட்டது."

"என் கைக்கல்லவா மாறி இருக்க வேண்டும்?"

"ஆமாம். ஆனால் உன் தங்கைக்குப் போய் விட்டது."

"என்ன சொல்கிறீர்கள்?"

"இன்று என் அலுவலகத்துக்கு  சரவணன் வந்திருந்தார்."

"யார்? சாந்தி வீட்டுக்காரரா?"

"சாட்சாத் உன் தங்கை சாந்தியின் கணவர் சரவணன்தான். பின்னே சிவபெருமானின் பிள்ளை சரவணனா என்னிடம் வந்து கடன் கேட்கப் போகிறார்?"

"கடன் கேட்டாரா?"

"அவர்கள் பையனுக்கும் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டி இருக்கிறதே! அவனுடைய பள்ளியில் இன்றுதான் கடைசி நாளாம். கலாவுக்குப் பணம் கட்டத்தான் இன்னும் ஒரு வாரம் அவகாசம் இருக்கிறதே?"

"உடனே கடன் வாங்கிய பணத்தை நீங்கள் அவரிடம் தூக்கிக் கொடுத்து விட்டீர்களாக்கும்?"

"தூக்கிக் கொடுக்கிற அளவுக்கு அவ்வளவு ஒன்றும் கனமான தொகை இல்லையே அது!"

வாணி மௌனமாக இருந்தாள்.

"தன் கைக்கு வர வேண்டிய பணம் தங்கைக்குப் போய் விட்டதே என்று யோசிக்கிறாயா?"

"இல்லை. இதையே நீங்கள் உங்கள் தங்கைக்குக் கொடுத்திருந்தால் என்னால் இதை இவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டிருக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!"

தாமோதரன் வியப்புடன் வாணியைப் பார்த்தான்.

வாணி இலேசாகச் சிரித்து விட்டு, "சரி கலாவுக்குப் பணம் கட்ட என்ன ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்?" என்றாள்.

"அதுதான் நீயே சொல்லி விட்டாயே! ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!"

ஞாயிறன்று மகாபலிபுரத்தில் கலா மிகவும் உற்சாகமாக இருந்தாள். 'கண்ணனின் வெண்ணெய் உருண்டை' என்று அழைக்கப்படும் மெல்லிய அடித்தளத்தின் மீது பல நூறு ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் பெரிய பாறையைப் பார்த்து வியந்தாள்.

"எப்படி அப்பா! ஏதோ ஒட்ட வைத்த மாதிரி இவ்வளவு சிறிய அடித்தளத்தின் மீது எப்படி இந்த கனமான பாறை நிற்கிறது? அதிசயமாக இருக்கிறதே!" என்றாள்.

"இது என்ன அதிசயம்? ஒல்லிப் பிச்சானாக  இருக்கும் உன் அப்பா எவ்வளவு கனமான பாறையையும் தன் சுண்டு விரலில் தாங்குவார்!" என்றாள் வாணி.

"அதற்குக் காரணம் இந்த ஒல்லிப்பிச்சானை ஒரு கனமான குண்டுப் பிச்சான் தாங்கிக் கொண்டிருப்பதுதான்!" என்றான் தாமோதரன்.

"என்னையா குண்டுப்பிச்சான் என்கிறீர்கள்? அந்தப் பாறையைத் தூக்கி உங்கள் மேல் போட்டு விடுவேன்!" என்றாள் வாணி.

ஆனால் தாமோதரன் மேல் வந்து விழுந்தது அவள் வீசிய சிறு கூழாங்கல்தான்!

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

பொருள்:
இல்வாழ்க்கை அன்பு நிறைந்ததாகவும், அறத்தின் வழியில் செல்வதாகவும் இருக்குமானால், அதுதான் அதன் பண்பு. இல்வாழ்க்கையின் பயனும் அதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















No comments:

Post a Comment