About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, December 26, 2015

44. செல்வம் 'சேர்த்த' செல்வம்

'முப்பந்தைந்து வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. இப்போதுதான் அரசு வேலைக்கு உத்தரவு வந்தாற்போல் இருக்கிறது. அடுத்த வாரம் ஒய்வு பெறப் போகிறேன்!'

இரவில் தூக்கம் பிடிக்காதபோது தன் உத்தியோக வாழ்க்கையை அலசிப் பார்த்தான் செல்வம். வேலைக்கு உத்தரவு வந்தபோது 'உன் பெயருக்கு ஏற்றாற்போல் நீ இனி செல்வம்தான்' என்றனர் சுற்றி இருந்தவர்கள். சிலர் அப்போதே அவன் மேல் பொறாமை கொள்ள ஆரம்பித்தனர். சரியான வேலை இன்றி தாய், தம்பிகள், தங்கைகள் என்று பெரும் குடும்பத்தை வைத்துத் தத்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? அவர்கள் 'எதிர்பார்த்த' வாழ்க்கை அவனுக்கு வருவதற்கு முன்பே அப்படி ஒரு பொறாமை!

ஆனால் அவன் வாழ்க்கை மற்றவர்கள் பொறாமைப்படும்படி இல்லை. காரணம் அவன் வேலையை வேலையாகச் செய்தான், வியாபாரமாக இல்லை. அவனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் தோல்வி அடைந்தனர். அவன் மேலதிகாரிகளுக்கும், உடன் பணியாற்றியவர்களுக்கும் அவன் சங்கடமாக இருந்தான். அதனால் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டான். ஆனால் செல்வம் அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் செய்த வேலைக்குத்தான் மாதாமாதம் சம்பளம் வந்து கொண்டிருந்ததே!

வசதியான வாழ்க்கை வாழலாம் என்று ஆரம்பத்தில் கனவு கண்ட அவன் தம்பி தங்கைகள் அவன் மனநிலையை உணர்ந்து அடங்கிப் போனார்கள். அவன் அம்மா கூட 'பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறாயே!' என்று சிலமுறை அவனிடம் குறைப்பட்டுக் கொண்டாலும், 'என் மகன் நேர்மையானவன்!' என்று பெருமை கொண்டாள்.

தம்பி தங்கைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செல்வம் செய்து முடித்தபோது, இடையில் அவன் தாய் மேற்கொண்ட திருமண முயற்சிகளை அவன் ஊக்குவிக்கவில்லை. 

முப்பத்தாறு வயதில் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டான். வறுமையான குடும்பத்திலிருந்து வந்த வள்ளி, அரசு ஊழியரை மணம் செய்து கொண்டு வசதியாக வாழலாம் என்ற கனவுடன் வந்தாள். ஆரம்பத்தில் வாழ்க்கை அவளுக்கு ஏமாற்றம் அளித்தாலும், நல்ல கணவன் கிடைத்தானே என்று ஆறுதல் அடைந்தாள்.

செல்வத்துக்கு மலைப்பாக இருந்தது. சுமாரான வருமானத்தை வைத்துக் கொண்டு எத்தனை செய்து விட்டேன்! தம்பி தங்கைகள் படிப்பு, திருமணம், மாமன் என்ற முறையில் தங்கைகளின் குழந்தைகளுக்கும் பெரியப்பா என்ற 'அந்தஸ்தில்' தம்பி குழந்தைகளுக்கும் செய்த செலவுகள், அம்மாவின் மருத்துவச் செலவு, தனது ஒரே மகளையும் படிக்க வைத்துத் திருமணம் செய்வித்தது, உரிமையுடன் உதவி கேட்ட உறவினர்களுக்கும், 'இவனிடம் கேட்கலாமா?' என்று தயங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தன் சக்திக்கு மீறிச் செய்த உதவிகள்!

'சொந்த வீடு இல்லை, சேமிப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை. நான், மனைவி, தொண்ணுறு வயது அம்மா ஆகிய மூவருக்கும் சிறிதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாதா?'

சாப்பிட உட்கார்ந்தபோது வள்ளி கேட்டாள். "ஏங்க அடுத்த வாரத்திலேருந்து நீங்க ரிடையர் ஆகப் போறிங்க இல்லே?"

'இனிமேல் வருமானம் போதாதே, என்ன செய்யப் போறீங்க? வேறே எங்கயாவது வேலைக்குப் போகப் போறீங்களா? வேலைக்கு யார் கிட்டயாவது சொல்லி வச்சிருக்கீங்களா?' என்று கேட்கப் போகிறாளா?

"ஆமாம். அதுக்கு என்ன?" என்றான் செல்வம். அவள் பதிலை ஊகித்ததில் குரலில் கொஞ்சம் எரிச்சல் வெளிப்பட்டது.

"இத்தனை வருஷமா ஆஃபீஸ், குடும்பம்னு பறந்துக்கிட்டிருந்தீங்க. ஒரு வேளை கூட நிம்மதியா சாப்பிட்டதில்லை. இனிமேயாவது பொறுமையா, நிம்மதியா சாப்பாட்டை ரசிச்சு சாப்பிடுங்க!"

செல்வத்தின் கண்களில் நீர் தளும்பியது. இன்னும் என்ன சந்தோஷம் வேண்டும் வாழ்க்கையில்?

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பொருள்:
பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, பகிர்ந்து உண்பதை வழியாகக் கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்











No comments:

Post a Comment