About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, October 9, 2015

43. ஐந்தில் அடங்கும் ஆறு

"அப்பா! வீட்டுச் செலவு ரொம்ப அதிகமா ஆகுது. அதனால அடுத்த மாசத்திலேருந்து பட்ஜெட் போட்டு செலவு பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்" என்றான் முகுந்தன்.

"நல்லவேளை! செலவு அதிகமா ஆகுதுன்னு நீ ஆரம்பிச்சதும் எங்கே ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைச்சுக்கலாம்னு சொல்லப் போறியோன்னு பயந்துட்டேன்!" என்றார் ராமசாமி.

"அம்மா என்னை ஒரு சாப்பாட்டு ராமனா வளர்த்துட்டாங்கன்னு நீங்கதான் அடிக்கடி சொல்வீங்களே! அப்படி இருக்கச்சே, நான் ஏன் சாப்பாட்டைக் குறைச்சுக்கறதைப் பத்திப் பேசப் போறேன்?" என்றான் முகுந்தன்.

தந்தை மகன் என்ற உறவைத் தாண்டி நண்பர்கள் போல் பேசிக் கொள்வது அவர்கள் இயல்பு.

"ஆமாம், இன்னிக்குத்தானே முதல் தேதி? இந்த மாசத்திலேருந்தே பட்ஜெட் போடலாமே?" என்றார் ராமசாமி.

"இல்லப்பா. பட்ஜெட் போடறத்துக்கு முன்னால எந்தெந்த வகையில எவ்வளவு செலவு ஆகுதுன்னு பாக்கணும். இந்த மாசம் ஆகிற செலவுகளைக் குறிச்சு வச்சுக்கிட்டா அதை வச்சு எந்த வகைகள்ள செலவைக் குறைக்கலாம்னு பார்த்து அடுத்த மாசம் பட்ஜெட் போடலாம். அதனால இன்னியிலிருந்து  செலவுகளைக் குறிச்சு வச்சுக்கணும் நீங்க!"

"ஏண்டா எத்தனையோ வருஷமா செலவுகளைக் குறிச்சு வச்சுக்கன்னு நான் உன்கிட்டே சொல்லிக்கிட்டே வரேன். அதை நீ காதிலேயே  போட்டுக்கல. இப்ப 'செலவுகளைக் குறிச்சு வச்சுக்க'ன்னு நான் சொன்னதை என்கிட்டேயே  திருப்பிச் சொல்றியா?"

"இல்லப்பா!.." என்று இழுத்தான் முகுந்தன்.

"சரி. எல்லார் செய்யற செலவையும் நான் குறிச்சு வச்சுக்கணும் அவ்வளவுதானே?"

"ஆமாம்ப்பா. நீங்கதான் எதையும் விடாம எல்லாத்தையும் கவனமா எழுதி வைப்பீங்க."

"சரி. ஒரு புது நோட்டு கொடு" என்று ஒரு புதிய நோட்டுப் புத்தகத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டார் ராமசாமி.

ந்த மாதக் கடைசியில் "அப்பா! அந்த செலவுக் கணக்கு எழுதின நோட்டைக் காட்டுங்க" என்றான் முகுந்தன்.

தன்னுடைய மடிக்கணினியில் ஏதோ மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த ராமசாமி "கொஞ்சம் இரு!" என்றார்.

"நோட்டை என்னிடம் கொடுத்து விட்டு நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யலாமே!" என்றான் முகுந்தன்.

"இதோ" என்று மடிக் கணினியை அவன் புறம் திருப்பினார் ராமசாமி. செலவுக் கணக்குகள் எக்ஸல் என்னும் மென்பொருள் வடிவத்தில் எழுதப்பட்டிருந்தன. செலவுகளை வகைப்படுத்தி ஒவ்வொரு வகைக்கும் எவ்வளவு செலவு என்று காட்டியது கணினித் திரை.

"ஓ! எக்ஸல்லிலேயே போட்டுட்டீங்களா? புது நோட்டு கேட்டு வாங்கினீங்களே, எதுக்கு?"

"ஸ்ரீராமஜயம் எழுதறதுக்கு! நீ முதல்லே செலவுகளைப் பாரு!"

முகுந்தன் பட்டியலைப் பார்த்தான். "என்னப்பா இது, குலதெய்வம் கோவில் திருவிழான்னு ஐநூறு ரூபாய் போட்டிருக்கு?"

 "நியாயமாப் பாத்தா குலதெய்வம் கோவில் திருவிழாவுக்கு நாம எல்லோரும் நேரில் போயிருக்கணும். அப்படிப் போயிருந்தா ஐயாயிரம் ரூபாயாவது செலவழிஞ்சிருக்கும். அது இயலாததனால ஐநூறு  ரூபா பணம் மட்டும் அனுப்பி வச்சேன்."

"என்னப்பா, இந்தக் காலத்திலே போய் குலதெய்வம் அது இதுன்னுக்கிட்டு?"

"ஏண்டா உலகம் மாறிடுச்சுங்கறதுக்காக வானத்திலே இருக்கிற சூரியன், சந்திரன், நட்சத்திரம் எல்லாம் மாறிடுதா? அதுபோல்தான் நாம செய்ய வேண்டிய கடமைகளும் எப்பவும் மாறாது!"

"கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வேண்டியது கடமையா? வணங்கினால் போதாதா?"

"போதும். ஆனா ஒவ்வொருத்தரும் தங்களோட வசதிக்கேத்தபடி காணிக்கை செலுத்தினாத்தான் கோவில்களை எல்லாம் பராமரிக்க முடியும். வருஷத்துக்கு ஐநூறு ரூபா கோவிலுக்குக் காணிக்கையாக் கொடுக்கறது நம்மளை மாதிரி இருக்கறவங்களால முடியாதது இல்லையே?"

"சரி. ஒத்துக்கறேன். இது மாதிரி வேறே கடமைகள் இருக்கா?"

"இருக்கு. குடும்ப வாழ்க்கையில் இருக்கறவங்க ஐந்து அறநெறிகளைப் பின்பற்றணும். முதலாவது  காலஞ்சென்ற நம் மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் செய்வது. இரண்டாவது தெய்வத்தை வணங்குவது.  . மூன்றாவது தம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது. நான்காவது உறவினர்களை ஆதரிப்பது. ஐந்தாவது நம் குடும்பத்தைப் பேணிக்  காப்பது. 

"மனிதர்களுக்கு ஐந்து புலன்கள் இருக்கிற மாதிரி, மனித வாழ்க்கையிலும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து கிளைகளாக விரிந்திருக்கின்றன. இந்த ஐந்து கிளைக் கடமைகளையும் நிறைவேற்றுவதுதான் அறத்தின் ஆறு (வழி) என்று பெரியோர்கள் வகுத்திருக்கிறார்கள். 

"இந்த வரிசையில நம் மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைதான் முதல்ல இருக்கு. நமக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் கடைசி இடத்தில்தான் இருக்கு!"

"அப்ப, இனிமே ஒவ்வொரு மாசமும் பட்ஜெட் போடும்போது நம்மளோட செலவுகளைத் தீர்மானிக்கறத்துக்கு முன்னால முதல் நான்கு கடமைகளுக்குச் செலவழிக்க வேண்டியது ஏதாவது இருக்குமான்னு பாக்கணும்."

"கரெக்ட்.  உதாரணமா அடுத்த மாசம் என் அப்பா அதாவது உன்னோட தாத்தாவோட திதி (இறந்த தினம்) வருது. அதுக்கு என்ன செய்யணும்னு யோசிச்சு பட்ஜெட்டில பணம் ஒதுக்கணும்."

"சரிப்பா. அடுத்த மாச பட்ஜெட்டில முதல் அயிட்டமா தாத்தா திதிக்கான செலவை எழுதிடறேன்."

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

பொருள்:
மூதாதையர்கள், தெய்வம், விருந்தினர்கள், உறவினர்கள், தனது குடும்பம் என்ற ஐந்து வகையினரையும் ஆதரித்துப் போற்றுதல் என்ற அறநெறியைப் பின்பற்றுவது நம் தலையாய கடமையாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













No comments:

Post a Comment