About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, January 12, 2016

46. தொலைபேசிச் செய்தி

அதிகாலையில் அழைப்பு மணி கேட்டபோது பால் போடும் பெண்ணாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கதவைத் திறந்தாள் உமா. வாசலில் கிரிஜாவைப் பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது. கிரிஜாவிடம் தெரிந்த படபடப்பைக் கவனித்து அவளை உள்ளே அழைத்து வந்தாள்.

"உன் வீட்டுக்காரரை எழுப்ப முடியுமா? அவசரம்!" என்றாள் கிரிஜா உள்ளே வரும்போதே. அவள் குரல் உடைந்து போயிருந்தது. ஏதாவது கேட்டால் அழுது விடுவாள் போல இருந்தது, அதனால்  அவளை உட்கார வைத்து விட்டு சேகரை அழைத்து வந்தாள் உமா.

சேகரைப் பார்த்ததுமே "என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டார் சார் உங்க நண்பர்!" என்று சொல்லி விட்டுப் பெரிதாக அழத் தொடங்கினாள் கிரிஜா.

அவள் கணவன் ராஜு இரவில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டான் என்பதை அழுகைக்கிடையே சொல்லி முடித்தாள் கிரிஜா.

"கவலைப்படாதீங்க. ராஜு உங்களை விட்டுட்டுப் போயிட மாட்டான்..." என்று சேகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிரிஜா ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள்.

தனக்கு இல்லறத்தில் பற்று இல்லாததால் வேறு ஊருக்குப் போய்த் துறவறம் மேற்கொள்ளப் போவதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டுப் போயிருந்தான் ராஜு.

சேகருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கிரிஜாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பள்ளியில் படிக்கும் தன் பெண்ணையும், பையனையும் எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்று நினைத்து நடுங்கினாள்.

ஒரு வாரம் கழிந்ததும், தன் உறவினர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பதை கிரிஜா புரிந்து கொண்டாள். சேகரும், உமாவும் அவளுக்கு உறுதுணையாகத்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களால் எவ்வளவுதான் உதவ முடியும்? 

கிரிஜாவுக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று பார்ப்பதாக சேகர் சொல்லி இருந்தான். ஆனால் அவனுக்குத் தெரிந்த ஒரு சில இடங்களிலிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை.

யாரோ ஒருவர் இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்ட்டாகத் தொழில் புரியலாம் என்று யோசனை சொல்ல, கிரிஜா அவர் குறிப்பிட்ட இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் ஏஜன்ட்டாகச் சேர்ந்தாள். அதற்கு முன் அப்படி ஒரு நிறுவனம் இருப்பது கூட அவளுக்குத் தெரியாது.

ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களைப் பிடிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. வெட்கத்தை விட்டுத் தன் எல்லா உறவினர்களிடமும் போய்த் தனக்கு உதவி செய்வதற்காகவாவது ஏதாவது பாலிசி எடுத்துக் கொள்ளும்படி கெஞ்சினாள். பெரும்பாலோர் முடியாது என்று சொல்லி விட்டார்கள் - சிலர் வருத்தத்துடனும், சிலர் பணிவுடனும், சிலர் நிர்தாட்சண்யமாகவும். 

ஆயினும், அவள் மீது  இரக்கப்பட்டோ, அவளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ சிலர் எடுத்துக் கொண்ட பாலிசிகள் அவளது சுய தொழிலுக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தன.

உறவினர்கள், நண்பர்கள் வட்டம் முடிந்ததும், அறிமுகம் இல்லாதவர்களை அணுகினால் என்ன என்று கிரிஜாவுக்குத் தோன்றியது. தெரிந்தவர்களிடம் போய்ப் பிச்சை கேட்பது போல் கேட்பதை விடத் தெரியாதவர்களிடம் போய் ஒரு விற்பனையாளராகப் பேசுவது எளிதாக இருக்கும் என்று தோன்றியது.

அலுவலகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பூங்காக்கள், கோவில்கள்  என்று தினமும் சில இடங்களுக்குச் சென்றாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏமாற்றமே கிடைத்தாலும், சில நாட்கள் கழித்து சிலர் பாலிசி எடுத்துக் கொள்ளத் தொடங்கினர்.

சில மாதங்கள் கழித்து அவளுக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. அவளிடம் பாலிசி எடுத்துக் கொண்ட நபர்கள் சொல்லி, அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என்று சிலர் தாங்களாகவே இவளை அணுகினர்.

அவளது கடின உழைப்பும், விடாமுயற்சியும், வாடிக்கையாளர்களிடம் அவள் ஏற்படுத்திக் கொண்ட நல்லெண்ணமும் சேர்ந்து அவளுக்குப் புதிய வாடிக்கையாளர்களும், பழைய வாடிக்கையாளர்களிடம் புதிய பாலிசிகளும் கிடைக்க வழி வகுத்தன. இரண்டு வருட முடிவில் அவளுக்குக் கணிசமான வருமானம் வரத் தொடங்கியது.

சேகர்-உமா குடும்பத்துடனான அவளது நட்பு தொடர்ந்தது. தன் பொருளாதார நிலை உயர்ந்த பிறகும் அவர்களைக் கலந்தாலோசிக்காமல் கிரிஜா எதையும் செய்வதில்லை. சேகர்-உமாவின் பையனும் பெண்ணும் படித்த அதே பள்ளியில்தான் தன் குழந்தைகளையும் படிக்க வைத்தாள்.

சேகர் குடும்பத்தை விடப் பொருளாதார நிலையில் உயர்ந்த பிறகும், தான் அவர்கள் குடும்பத்துக்குக் கடமைப்பட்டவள் போலவே கிரிஜா நடந்து கொண்டாள். அவர்கள் சுயகௌரவம் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்குச் சிறிய உதவிகளை அவ்வப்போது செய்து வந்தாள்.

ராஜு கிரிஜாவை விட்டுப் போய் சுமார் ஐந்து வருடங்கள் ஆகி விட்டன. சேகர் ஒரு நாள் பரபரப்பாக கிரிஜாவைத் தேடி வந்தான். "கிரிஜா, ராஜுவைப் பார்த்தேன்" என்றான்.

"அப்படியா?" என்றாள் கிரிஜா ஆர்வம் இல்லாமல்.

"ஆஃபீஸ் விஷயமா விஜயவாடாவுக்குப் போனபோது அவனைப் பாத்தேன். லெட்டர்ல எழுதிட்டுப் போன மாதிரி அவன் சன்யாசியாகத்தான் இருக்கான். சாரி. இனிமே இருக்கார்னுதான் சொல்லணும். ஏன்னா இப்ப அவர் ஒரு மடத்துக்குத் தலைவரா இருக்கார். அவரைச் சுத்திப் பல சிஷ்யங்க, இன்னும் பல மனுஷங்க!"

"ம்ம்..."

"தற்செயலா ஒரு போஸ்டர்ல அவரோட ஃபோட்டோவைப் பாத்தேன். என்னதான் தாடி மீசையெல்லாம் இருந்தாலும் அவரோட மூஞ்சி எனக்கு அடையாளம் தெரிஞ்சது. மடத்துல ஏதோ ஒரு மீட்டிங். அதுக்குத்தான் போஸ்டர் போட்டிருந்தாங்க. மீட்டிங்குக்குப் போனேன். நல்லாவே பேசினார். நம்ம ராஜுவுக்கு இவ்வளவு ஆன்மீக ஞானம் எப்படி வந்ததுன்னு எனக்கு ஆச்சரியமா இருந்தது.

"மீட்டிங் முடிஞ்சதும் அவரைப் பாத்துப் பேசினேன். எங்கிட்ட பழைய மாதிரிதான் பேசினார். எனக்குத்தான் அவரை 'வா போ'ன்னு பேசறது சங்கடமா இருந்தது. நல்லவேளையா கூட யாரும் இல்லை. மத்தவங்களை வெளியில போகச் சொல்லிட்டுத்தான் எங்கிட்ட பேசினார். உங்களைப் பத்தியெல்லாம் விசாரிச்சார்."

"விசாரிக்காம இருப்பாரா என்ன?"

"சொன்னேன். உங்களோட முன்னேற்றத்தைப் பத்திக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். தன்னோட பிரார்த்தனை வீண் போகலேன்னு  சந்தோஷப்பட்டார்."

"அப்புறம்?"

"அடுத்த மாசம் நம் ஊருக்கு வராராம். நீங்களும் குழந்தைகளும் அவரை அவர் தங்கப் போற மடத்தில சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்னு சொல்லச் சொன்னார்."

"எவ்வளவு பெரிய மனசு அவருக்கு! ஆமாம். உங்ககிட்ட அவரோட ஃபோன் நம்பர் இருக்கா?'

"இருக்கு. பேசறீங்களா?"

"நான் பேசப் போறதில்லை. நீங்க பேசணும், எனக்காக."

"என்ன பேசணும்? சொல்லுங்க."

"நீங்களும் அவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பொருளாதார நிலை, குடும்பச்  சூழ்நிலை உள்ளவங்க. நீங்க உங்க மனைவி குழந்தைகளோட அழகா இல்லறம் நடத்திக்கிட்டிருக்கீங்க. அவர் என்னை விட்டுப் போனதும் நானும் ஒரு மாதிரி சமாளிச்சு கணவர் இல்லாமலேயே இல்லறம் நடத்திக்கிட்டிருக்கேன். நீங்க உங்க குடும்பத்தோடயும், நான் என் குடும்பத்தோடயும் சந்தோஷமா இருக்கோம். துறவறத்தைத் தேடிப் போன உங்க நண்பரும் நம்மளை மாதிரி சந்தோஷமா இருக்காரான்னு முதல்லே கேளுங்க."

"கிரிஜா! அவசரப்படாதீங்க!"

"நீங்க இப்பவே அவருக்கு ஃபோன் பண்ணி இதைக் கேளுங்க. நான் கேக்கச் சொல்றேன்னு சொல்லிக் கேளுங்க."

"நீங்க பக்கத்தில இருக்கீங்கன்னு அவர்கிட்ட சொல்லலாம் இல்லே?"

"அதை அவரே தெரிஞ்சுப்பாரு."

"எப்படி? ஃபோனை நீங்க வாங்கிப் பேசப் போறீங்களா?"

"நீங்க பேசும்போது உங்களுக்கே தெரியும்!"

சேகர் ராஜுவுக்கு ஃபோன் செய்து தயக்கத்துடன் கிரிஜா கேட்கச் சொன்னதை அப்படியே கேட்டான்.

சேகர் பேசி முடித்ததும், மறுமுனையிலிருந்து பதில் வருவதற்கு முன்பே, கிரிஜா சற்றே உரத்த குரலில் பேசினாள்.

"சேகர் சார்! கொஞ்சம் இருங்க. இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவரோட மனச்சாட்சியைத் தட்டி எழுப்பத்தான் இந்தக் கேள்வி. எங்களை ஆதரிக்க வேண்டிய சமயத்தில அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டு இப்ப எங்களை வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கச் சொல்றாரு!

"நாங்க யாரும் ராஜு சுவாமிகள்கிட்ட போய் ஆசீர்வாதம் வாங்கிக்கப் போறதில்லை. அவர் விரும்பினா, சன்யாசத்தை விட்டுட்டு மறுபடி எங்களோட வந்து சேந்தா எங்களுக்கு சந்தோஷம்தான். எனக்குக் கணவரா எங்க குழந்தைகளுக்கு அப்பாவா அவரு  திரும்பக் கெடச்சா அதை விடப் பெரிய சந்தோஷம்  வேறே என்ன இருக்க முடியும்?

"பழசையெல்லாம் நான் கிளற மாட்டேன். அவர் வேலைக்குப் போனாலும் சரி, சொந்தத் தொழில் ஏதாவது செஞ்சாலும் சரி அல்லது வேலைக்குப் போகாம சும்மா இருந்தாலும் சரி. அவர் எப்படி வேணும்னா இருந்துக்கட்டும்.

"கடவுளோட அருளாலயும், உங்களை மாதிரி நல்ல நண்பர்களோட உதவியாலேயும்  நானே என் குடும்பத்துக்குத் தேவையான அளவு சம்பாதிக்கிறேன். கடைசி வரையிலேயும் எங்க எல்லாரையும் என்னால காப்பாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

"உங்க நண்பருக்கு இல்லறத்தில விருப்பம் இருந்தா அவரைத் திரும்பி வரச் சொல்லுங்க. இல்லை துறவியா இருக்கறதுதான் அவருக்கு சந்தோஷம்னா அப்படியே இருந்துட்டுப் போகட்டும். நாங்க ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னா அதுக்கு இந்த ஊரிலேயே நிறைய சாமியாருங்க இருக்காங்க!"

மறுமுனையிலிருந்து நீண்ட நேரத்துக்கு பதில் வரவில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
போஒய்ப் பெறுவ எவன்.

பொருள்:
ஒருவன் அற வழியில் இல்வாழ்க்கை நடத்தினால், (துறவறம் போன்ற)  வேறு வழியில் போய் அவன் பெறுவதற்கு என்ன இருக்கிறது?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












No comments:

Post a Comment