About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, January 15, 2016

48. குடியும் குடித்தனமும்

"உங்களுக்குக் குடிப்பழக்கம் இருக்குன்னு கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லலையே!" என்றாள் ரம்யா.

"அப்படியா? அப்படின்னா இந்தப் பழக்கம் எனக்கு நம்ம கல்யாணத்துக்கு மறுநாளிலேருந்துதான் ஆரம்பிச்சதுன்னு வச்சுக்கோ!" என்றான் நடராஜ்.

இவனிடம் பேசுவதில் பயன் இருக்காது என்று ரம்யா புரிந்து கொண்டாள். மௌனமாக அவன் குடிப்பழக்கத்தைச் சகித்துக் கொண்டாள். வாழ்க்கை நரகமாகியது. சிறிது காலத்துக்குப் பிறகு இந்த வாழ்க்கையைத் தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று தோன்றியதும் விவாகரத்துக்காக ஒரு பெண் வக்கீலை அணுகினாள்.

வக்கீல் வீட்டுக்கு இரண்டு மூன்று வரை போய் வந்தபோது ஒருமுறை வக்கீல் நளினியின் கணவன் விசுவைச் சந்தித்தாள். விசுவிடம் பேசிக் கொண்டிருந்ததில், நடராஜ் விசுவின் பள்ளி நண்பன் என்றும் ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இருவருக்கும் தொடர்பு விட்டுப் போய் விட்டது என்றும் தெரிந்தது.

தற்செயலாக நடராஜைச் சந்திப்பது போல் விசு அவனைச் சந்தித்தான். பிறகு இரண்டு குடும்பங்களும் சந்தித்துக் கொண்டன. ரம்யாவை முன்பே தெரிந்தது போல் விசுவோ நளினியோ காட்டிக் கொள்ளவில்லை.

பின்பு ஒரு முறை ரம்யா நளினியைத் தனியாகச் சந்தித்தபோது விவாகரத்துக்கு அவசரப்பட வேண்டாம் என்று யோசனை சொன்னாள் நளினி.

இரு குடும்பங்களும் அடிக்கடி சந்தித்துக் கொண்டன. விசு தங்கள் இளவயது நட்பைப் புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டியவனாக நடராஜுடன் அதிக நேரம் செலவழித்தான். நளினியின் ஆலோசனைப்படி ரம்யா நடராஜிடம் அவன் குடிப்பதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தாள்.

ஏழெட்டு மாதங்களில் நடராஜிடம் நிறைய மாறுதல்கள் தெரிந்தன. அவன் குடிப்பழக்கம் வெகுவாகக் குறைந்திருந்தது. குடியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் தோன்றி இருந்தது. முன்பு போல் இல்லாமல் ரம்யாவிடம் அன்பாகவும், கனிவாகவும் பேச ஆரம்பித்தான். தன் நண்பன் விசுவின் குணத்தைப் பற்றியும் அவன் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் உயர்வாகப் பேசினான்.

ரம்யாவுக்குத் தன் விவாகரத்து எண்ணத்தைக் கை விட வேண்டி இருக்கும் என்று தோன்றியது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள்:
மற்றவர்களை அறவழியில் நடக்க வைத்துத் தானும் அறவழியில் நடப்பவரின் இல்வாழ்க்கை தவம் செய்பவர்களின் வாழ்க்கை முறையை விட மேன்மை உடையதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















No comments:

Post a Comment