About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, January 13, 2016

47. மணியின் மனக்குழப்பம்

பாலுவும் மணியும் பள்ளி நாட்களிலிருந்தே மற்ற சிறுவர்களிடமிருந்து மாறுபட்டிருந்தனர். ஒழுக்கம், அடக்கம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் மரியாதை, படிப்பில் நாட்டம் என்ற சிறப்பு இயல்புகளால் அவர்கள் இருவரும் மற்ற மாணவர்களால் கிட்டத்தட்ட ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.

இருவரும் வேறு கல்லூரிகளில் படித்து வெவ்வேறு வேலைகளுக்குப் போனாலும் அவர்கள் நட்பு தொடர்ந்தது. இருவரையும் இணைத்தது ஆன்மீகச் சிந்தனை.

பாலுவுக்குத் திருமணம் நிச்சயம் ஆனது. தாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மீகத் தேடலிலேயே வாழ்க்கையைக் கழித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த மணிக்கு பாலுவின் திருமணம் ஒரு அதிர்ச்சிதான்.

ஆயினும்  மணி பாலுவிடம் இது பற்றிப் பேசவில்லை. பாலுவின் மனைவி எப்படி இருப்பாளோ, பாலு தன்னிடம் நட்பு வைத்திருப்பதை விரும்புவாளோ என்ற கவலைகள் மணியிடம் இருந்தன.

ஆனால் பாலுவின் மனைவி மல்லிகாவைப் பார்த்ததும் அவனது ஐயங்கள் மறைந்து விட்டன.

"உங்க நண்பர் உங்களைப் பத்திச் சொல்லி இருக்காரு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னால எப்படி இருந்தீங்களோ அப்படியே  இருங்க. உங்க நட்புக்கு என்னால எந்தப் பிரச்னையும் வராது" என்று முதல் சந்திப்பிலேயே அவனிடம் கூறினாள் மல்லிகா.

ஆயினும் திருமணத்துக்குப் பிறகு பாலுவிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எப்போதும் குடும்பம், மனைவி என்றே பேசிக் கொண்டிருந்தான். மணியோடு செலவிட்ட நேரம் மிகவும் குறைந்து விட்டது. மணி எங்காவது அழைத்தால் கூட வருவதில்லை. பல சமயங்களில் மல்லிகாவே அவனைப் போகச் சொல்லி அனுப்பினாள். இந்த மாற்றங்களைப் பற்றி பாலுவிடம் மணியால் கேட்க முடியவில்லை.

நாளடைவில் மணி தானாகவே பாலுவை அழைப்பதைக் குறைத்துக் கொண்டான். கோவில்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள் என்று அடிக்கடி வெளியூர் செல்ல ஆரம்பித்தான். ஆயினும் மனதுக்குள் எதையோ இழந்து விட்டது போல் தோன்றிக் கொண்டே இருந்தது.

மணிக்குத் தன்மனதில் ஓடும் எண்ணங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அப்போது அவனுக்கு அவன் மாமா ரகுபதியின் நினைவு வந்தது. ஒரு விதத்தில் ரகுபதிதான் மணிக்கு வழிகாட்டி. திருமணம் செய்து கொள்ளாமல் கோவில், ஆன்மிகச் சொற்பொழிவுகள், திருத்தல யாத்திரை என்று வாழ்க்கையைக் கழித்து வந்தவர் அவர். ஐம்பது வயதை நெருங்கிய நிலையில் இருந்தார்.

அரசு அலுவலகத்தில் பணி புரிந்து வந்த அவர் தனது விடுமுறை நாட்களையும் வருமானத்தையும் ஆன்மீகத்துக்காகவே செலவழித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பாலுவையும் தெரியும். அதனால் அவரிடம் தன் மனதில் உள்ள எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து ஒரு விடுமுறை நாளன்று அவர் வீட்டுக்குப் போனான் .

அவரை ஒரு நண்பராக நினைத்துத் தன் எண்ணங்களை அவரிடம் கொட்டினான் .

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு விட்டு, "பாலு என்ன செய்யணும்னு நீ எதிர்பாக்கறே?" என்றார் ரகுபதி.

"தெரியல. ஆனா அவனை இழந்துட்ட மாதிரி இருக்கு."

"பாலு இப்ப கோவிலுக்கெல்லாம் வரதில்லையா?"

"என்னோட வரதில்லை. அவன் மனைவியோட போவான்."

"அப்படித்தானே அவனால செய்ய முடியும்? மனைவயை வீட்டில விட்டுட்டு உன்னோட சுத்தணும்னு எப்படி எதிர்பார்க்க முடியும்?"

"நான் அப்படிச் சொல்லலே!"

"எனக்குப் புரியுது. உனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலே. எதையோ இழந்துட்ட மாதிரி இருக்கு."

"ஆமாம்."

"நீ பாலுவை இழந்துட்டது ஓரளவுக்கு உண்மைதான். அந்த இழப்பை மறக்கறதுக்கு உனக்கு ஒரு வழி இருக்கு."

"என்ன அது?"

"நீயும் கல்யாணம் பண்ணிக்க!"

"இல்லை. நான் கல்யாணமே பண்ணிக்காம கடவுள் பக்தி, சமூக சேவை இதிலெல்லாம் ஈடுபடலாம்னு பாக்கறேன்!"

"அப்படியே செய்யி. ஏன் பாலு உன்னோட அதிகம் வரதில்லேன்னு கவலைப்படற?"

"இல்லை. பாலுவும் என்னை மாதிரியே கல்யாணம் பண்ணிக்காம இருப்பான்னு எதிர்பாத்தேன்."

"நீ சொல்றதிலேருந்து உனக்கு ஒரு துணை தேவைப்படுதுன்னு தெரியுது. இத்தனை நாளா பாலு உனக்குத் துணையா இருந்தான். இனிமே ஒரு பொண்ணைத் துணையா வச்சுக்க வேண்டியதுதான்!"

"இல்லை."

"நீ என்ன சொல்ல வரேன்னு எனக்குப் புரியுது. சின்ன வயசில பல பேருக்கு இது மாதிரி எண்ணங்கள்ளாம் வரும். 'நாம கல்யாணமே பண்ணிக்காம நம்மளைப் பெத்தவங்களையும், கூடப் பிறந்தவங்களையும் காப்பாத்தணும், கல்யாணமே பண்ணிக்காம சமூக சேவை செய்யணும், கல்யாணமே பண்ணிக்காம பக்தி நெறியில ஈடுபடணும், கல்யாணமே பண்ணிக்காம அரசியல்ல சேந்து இந்த நாட்டைத் திருத்தணும், கல்யாணமே பண்ணிக்காம உல்லாசமா வாழணும்' இது மாதிரியெல்லாம்.

"இந்த எல்லா எண்ணங்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும்கறதுதான். கல்யாணம் பண்ணிக்கிட்டா பல பொறுப்புகள் வந்துடும். அதோட மனைவியோட விருப்பத்தையும் அனுசரிச்சு நடக்கணும். இதனால நம்ம லட்சிய வாழ்க்கையை வாழ முடியாது என்கிற சிந்தனை சரியானதுதான்.

"ஆனா நடைமுறையில, ஒரு துணை இல்லாம தனியா இருக்கறது எல்லாராலும் முடியாது. கல்யாணம் பண்ணிக்கிட்டே ஓரளவுக்கு நம்ம லட்சியங்களைப் பின்பற்றுவதுதான் பிராக்டிகலா இருக்கும். கல்யாணம் பண்ணிக்காம நூறு சதவீதம் லட்சியவாதியா இருக்கறதை விடக் கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து சதவீதம் லட்சியவாதியா இருக்கறதுதான் சிறப்பு. அதில கிடைக்கிற மன நிறைவும் சந்தோஷமும் தனியா வாழறதில கிடைக்காது.

"மனசில ஒரு வெறுமையோட இருந்துக்கிட்டு ஆன்மீகத்திலேயோ சமூக சேவையிலோ ஈடுபடறதில ஒரு பயனும் இல்லை. பிரம்மச்சரியம், சன்யாசம் இதெல்லாம் தப்புன்னு நான் சொல்லலே. இதெல்லாம் ஒரு சில பேருக்குத்தான் ஒத்து வரும்."

"உங்களை மாதிரி ஒரு சில பேரா?"

"இல்லேப்பா. நானும் ஒரு வெறுமையை உணர்ந்துக்கிட்டுத்தான் இருக்கேன். இத்தனை நாளா மனசுக்குள்ளேயே புழுங்கிக்கிட்டு இயந்திரம் மாதிரி இருந்துக்கிட்டிருந்தேன். இப்பதான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்."

"என்ன முடிவு?"

"என் ஆஃபீசில வேலை செய்ய ஒரு பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன். அவங்க கணவனை இழந்தவங்க.. அவங்களுக்கும் ஒரு துணை தேவைப்படும்னு நினைச்சு என் விருப்பத்தை அவங்ககிட்ட சொன்னேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. அடுத்த மாசம் எளிமையா எங்க கல்யாணம் நடக்கும். உன்னை நிச்சயமாக் கூப்பிடுவேன்."

மணி சற்று நேரம் மௌனமாக  இருந்தான்.

"உன்னோட எண்ணங்களைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்து வாழக் கூடிய ஒரு பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்க. ஏன், உன்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச பாலுவோட மனிவியே உனக்கு ஏத்த ஒரு பொண்ணாப் பாத்துக் கொடுப்பா. யோசனை செஞ்சு பாரு."

மணி யோசிக்க ஆரம்பித்தான்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.

பொருள்:
இல்லறத்துக்கு உரிய இயல்போடு இல்லற வாழ்க்கை வாழ்பவன், (துறவறம் போன்ற) பிற வழிகளைக் கடைப்பிடித்து இறைவனை அடைய முயற்சி செய்பவர்களை விட உயர்ந்தவன். (வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கூடிய எல்லா வழிகளிலும் தலை சிறந்தது இல்லறமே)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















No comments:

Post a Comment