About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, June 19, 2015

8. ஓட்டுனர் உரிமம்

"கார் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த டிரைவிங் ஸ்கூலில் சேரலாம்?" என்று கேட்டான் சுனில்.

"நம் பேட்டையில் இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. ஒன்று 'அக்னி டிரைவிங் ஸ்கூல்.' அதில்  கட்டணம் அதிகம். பயிற்சி நேரமும் அதிகம். பெண்ட் எடுத்து விடுவார்கள். சரியாக ஓட்ட வரும் வரை டிரைவிங் டெஸ்டுக்கு அனுப்ப மாட்டார்கள்.

"இன்னொரு பள்ளியின் பெயர் 'ஃபாஸ்ட் டிராக் டிரைவிங் ஸ்கூல்.' இவர்கள் பெயருக்கு ஏற்ப அதி வேகமாகச் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். லைசன்ஸ் உத்தரவாதம். நன்றாக ஓட்டத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, லைசன்ஸ் கிடைத்து விடும். கட்டணமும் குறைவு" என்றான் ராகவ்.

"நான் 'ஃபாஸ்ட் டிராக் டிரைவிங் ஸ்கூலி'லேயே சேர்ந்து கொள்கிறேன். லைசன்ஸ் வாங்கி விட்டால் போதும். அப்புறம் நானே ஓட்டிப் பழகிக் கொள்வேன்" என்றான் சுனில்.

"யோசனை செய்து முடிவு செய். முதலிலேயே நன்றாகக் கற்றுக் கொள்வது நல்லது அல்லவா?"

"இல்லை. எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை."

'ஃபாஸ்ட் டிராக்'கில் சேர்ந்து விரைவிலேயே லைசன்ஸ் வாங்கி விட்டான் சுனில்.

லைசன்ஸ் கைக்கு வந்த அடுத்த நாளே அவன் அப்பா சமீபத்தில்தான் வாங்கியிருந்த காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் சுனில். வீட்டுக்கு அருகில் போக்குவரத்து அதிகம் இல்லாத சாலைகளில் ஓட்டிப் பார்த்தான். ஓரளவு சமாளித்து ஓட்ட முடிந்தது.

இரண்டாவது நாள் காரை எடுத்துக் கொண்டு போக்குவரத்து மிகுந்த சாலைகளுக்குப் போனான். அரை மணி நேர ஓட்டத்தில் தடுமாற்றம்தான் அதிகம் ஏற்பட்டது. 

வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்று நினைத்தபோது கார் சாலைக்கு நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. காருக்குச் சேதம். அவனுக்கும் அடி. அத்துடன் போலீஸில் வழக்குப் பதிவு செய்து விட்டார்கள்.

மருத்துவமனையில் தன்னை வந்து பார்த்த ராகவிடம் சுனில் சொன்னான். "அவசரப்பட்டு விட்டேன். கார் ரிப்பேர், மருத்துவ மனைச் செலவு, வழக்குச் செலவு என்று அப்பாவுக்கு நிறையச் செலவு வைத்து விட்டேன். பத்தாயிரம் ரூபாய் அபராதம்  கட்டினால்தான் வழக்கு முடியும் போல் இருக்கிறது."

"இப்போது வருந்தி என்ன பயன்? எந்த ஒரு பயிற்சி பெறுவதாக இருந்தாலும் திறமை, நாணயம் இரண்டும் உள்ளவர்களிடம்தான் பயிற்சி பெற வேண்டும்" என்றான் ராகவ்.

"எத்தனை மாதம் ஆனாலும் சரி, 'அக்னி டிரைவிங் ஸ்கூலில்' மறுபடியும் பயிற்சி பெற்று அவர்கள் என் கார் ஓட்டும் திறமையை அங்கீகரித்த பிறகுதான் மீண்டும் கார் ஓட்டுவேன்" என்றான் சுனில்.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 8
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

பொருள்:
அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தவர்களால் மட்டுமே பிறவி என்ற இப்பெருங்கடலை நீந்த முடியும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Driving License' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment