About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, June 27, 2015

16. புல் கூட முளைக்காது!

"ஏம்ப்பா? இது மானம் பாத்த பூமி. இங்கே மழை பெய்யறதே அபூர்வம். முக்காவாசி பேரு இந்த ஊரை விட்டுப் போயிட்டாங்க. 

"ஏதோ ஊர்ல ரெண்டு மூணு பொதுக்கிணறு இருக்கு. அதுங்கள்ள எண்பது அடி ஆழத்துல தண்ணி இருக்கு. அஞ்சு மைல் தொலைவிலே கடல் இருக்கறதுனால தண்ணி ஊறிக்கிட்டு இருக்கு. அதுவும் ரொம்பக் கடுப்பாத்தான் இருக்கும். 

"இந்த ஊர்ல இருக்கறவங்க கொஞ்சம் பேரும் வேற போக்கிடம் இல்லாமதான் இங்க இருக்காங்க.  பக்கத்து டவுனுக்குப் போய் ஏதோ வேலை, வியாபாரம்னு செஞ்சுக்கிட்டு பொழைப்பை நடத்திக்கிட்டிருக்காங்க. இந்த ஊர்ல வந்து போர்வெல் போட்டுத் தண்ணி எடுத்துத் தோட்டம் போடப் போறேங்கறியே!"

ஊர்ப் பெரியவர் விலாவாரியாகப் பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான் சாமிநாதன்.

"நீங்களே சொல்றீங்க இல்ல, எண்பது அடில தண்ணி இருக்குன்னு? அப்ப போர் போட்டா தண்ணி வராதா? பக்கத்துல கடல் இருக்கறதுனால நிலத்துல தண்ணி ஊறிக்கிட்டே இருக்கும்னும் சொல்றீங்க! அப்படின்னா ஒரு தடவை போர் போட்டா தண்ணி எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லே? 

"இங்கே இருக்கறவங்க யாரும் பணம் செலவழிச்சு போர் போட முயற்சி பண்ணல. தங்களோட வீட்டுல கூடக் கிணறு வெட்டாம, பொதுக் கிணத்திலேயே ராட்டினம் போட்டு, அங்கியே குளிச்சு, துணி தோய்ச்சு, வீட்டுத் தேவைக்கு ரெண்டு மூணு குடம் தண்ணி எடுத்துக்கிட்டுப் போறாங்க. 

"யாருக்கும் பணம் செலவழிச்சு போர் போட வசதி இல்லையோ, மனசு இல்லையோ தெரியலே! நான் இந்த ஊர்க்காரன். நான் துபாய்க்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், என் குடும்பத்துல எல்லோரும் வேற ஊருக்குப் போயிட்டாங்க. இப்ப நான் துபாயிலேருந்து திரும்பி வந்திருக்கேன். 

"நானும் வேற ஊர்ல செட்டில் ஆகியிருக்கலாம். இங்க எனக்குக் கொஞ்சம் நெலம் இருக்கறதுனால அதுல தோட்டம் போட்டு ஏதாவது பயிர் செய்யலாம்னு பாக்கறேன். அப்படிச் செஞ்சா, இந்த ஊரே மாறிடும். இன்னும் ஆறு மாசம் கழிச்சுப் பாருங்க இந்த ஊரு எப்படி இருக்கப் போவுதுன்னு!" என்று சொல்லி விடை பெற்றான் சாமிநாதன்.

'ம்ம். நீ துபாயில சம்பாதிச்சதையெல்லாம் தண்ணியில விடணும்னு விதி இருந்தா அதை யார் தடுக்க முடியும்?' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் பெரியவர்.

அடுத்த சில நாட்களில் சாமிநாதன் சுறுசுறுப்பாக வேலைகளைத் தொடங்கினான். 

முதலில் ஒரு வாட்டர் டிவைனரைத் தருவித்துத் தன் நிலத்தில் எந்த இடத்தில் போர் போட்டால் சரியாக இருக்கும் என்று தேர்வு செய்தான். 

பிறகு போர் இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியும், ஆட்களும் வந்து சேர்ந்தனர். அத்துடன் அவர்கள் குடிக்கப் பல மினரல் வாட்டர் குடுவைகளும் வந்து இறங்கின!

போர் இயந்திரம் ஏக இரைச்சல் போட்டுக் கொண்டு மூன்று நாட்கள் துளையிட்டபின் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு வெளி வந்தது. சாமிநாதன் அனைவருக்கும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடினான். 

நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஊர்ப்பெரியவர் கூட 'ஏது, பய சொன்னதைச் செஞ்சுடுவான் போல இருக்கே!' என்று நினைத்தார்.

அடுத்த நாளே பம்ப்செட்டை நிறுவிக் குழாய்களை அமைத்துத் தற்காலிக மின்சார இணைப்பில் மோட்டாரை இயங்கச் செய்தான் சாமிநாதன். 

குழாயிலிருந்து தண்ணீர் கொட்டியதும் எல்லோரும் கைகொட்டிக் கொண்டாடினர். தண்ணீரின் சுவை கூட அவ்வளவு மோசமாக இல்லை.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே தண்ணீர் நின்று விட்டது. மறுபடியும் மோட்டார் போட்டபோது தண்ணீர் வரவில்லை. 

மினரல் வாட்டர் குடுவைகளிலிருந்து தண்ணீர் ஊற்றி மறுபடி முயற்சி செய்தபோது மீண்டும் தண்ணீர் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் நின்று விட்டது.

சாமிநாதன் கவலையுடன் போர் போட்டவர்களைப் பார்த்தான். 

அவர்களின் தலைவன் தயக்கத்துடன், "சார். நெலத்தில தண்ணி கொஞ்சம்தான் இருக்கும் போல இருக்கு. மறுபடியும் தண்ணி ஊறினால்தான் வரும்" என்றான்.

"எப்ப ஊறும்?" என்றான் சாமிநாதன்.

"நாளைக்கு முயற்சி பண்ணிப் பாருங்க!" என்றான் போர் போட்டவன். 

"பாருங்க!" என்று அவன் சொன்னதிலிருந்து அவன் வேலை முடிந்து விட்டது என்பதும், அடுத்த நாள் அவன் வர மாட்டான் என்பதும் புரிந்தது.

சாமிநாதன் யோசனை செய்யத் துவங்கியபோது ஊர் மக்கள் சிலர் ஓட்டமாக அங்கே வந்தனர்.

 "யோவ், என்ன வேலை ஐயா பண்ணி இருக்கீங்க? எல்லாக் கெணத்திலேயும் தண்ணி கீழ எறங்கிடுச்சு. ராட்டினத்துல இழுத்தா கால் கொடம் கூட வரலே! மறுபடி தண்ணி ஊற எவ்வளவு நாள் ஆகுமோ தெரியல்லியே!" என்றனர் கோபத்துடன்.

நிலைமையைப் புரிந்து கொண்ட போர் ஆசாமி "சார், முதலாளி பாக்கி பணத்தை வாங்கிக்கிட்டு வரச் சொன்னாரு. நாங்க கெளம்பணும். செக் குடுத்தாலும் பரவாயில்லை" என்றான்.

"தம்பி, மழை பெஞ்சாத்தான் தண்ணி! மழை பெய்யாத ஊரில இது மாதிரி முயற்சி எல்லாம் வேணாம்னு நான் அப்பவே சொன்னேன். இப்ப கெணறுகள்ள இருந்த தண்ணியும் போயிடுச்சு. எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?" என்றார் ஊர்ப் பெரியவர்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

பொருள்:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலொழிய இந்த மண்ணில் ஒரு புல் கூட முளைக்காது.

Read 'The Borewell Experiment' the English version of this story.

No comments:

Post a Comment