About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, June 28, 2015

17. கடல் நீர் வற்றும்?

"அப்பா, இன்னிக்கு ஸ்கூல்ல மழை எப்படிப் பெய்யுதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க" என்றான் ரிஷப்.

"எனக்குத் தெரியுமே! 'ஜோ'ன்னுதானே பெய்யும்?" என்றான் அவன் தந்தை முருகன்.

"குழந்தை, தான் ஸ்கூல்ல கத்துக்கிட்டதைச் சொல்ல வரான். அதைக் கேக்காம ஜோக் அடிக்கறீங்க! அவனுக்கு இன்ட்ரஸ்ட் இல்லாம போயிடாதா?" என்று கணவனைக் கடிந்து கொண்ட நிர்மலா, "நீ சொல்லுடா கண்ணா?" என்றாள் மகனிடம், ஆவலை வெளிக்காட்டி.

"வெய்யில் அடிக்குது இல்ல, அந்த சூட்டுல கடல் தண்ணி எல்லாம் ஆவியாகி மேல போயி மேகமா மாறிடும். அந்த மேகம்தான் மழையாப் பெய்யுது" என்று விளக்கினான் ரிஷப்.

"வெரி குட்" என்று மகனை வாரி அணைத்துக் கொண்ட நிர்மலா, "உங்கப்பாவுக்கு இது தெரியாது. நீ சொன்னப்பறம்தான் தெரியும்!" என்றாள்.

ரிஷப் பொங்கி வரும் சிரிப்புடன் அப்பாவைப் பார்த்தான் "உனக்கு இதையெல்லாம் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கலியா அப்பா?"

"நான் ஸ்கூலுக்கே போகலை. டைரக்டா காலேஜுக்குப் போயிட்டேன். உங்கம்மாதான் ஒவ்வொரு கிளாசிலேயும் ரெண்டு வருஷம் இருந்துட்டு வந்தா. அதனால உங்கம்மாவுக்கு இதெல்லாம் நல்லாத் தெரியும்" என்று சொல்லி மனைவியைப் பழி தீர்த்துக் கொண்ட முருகன், மனைவி ஏதும் சொல்வதற்குள் மகனிடம் திரும்பி, "ஆமாம் நான் ஒரு கேள்வி கேக்கறேன், பதில் சொல்லுவியா?" என்றான்.

"கேளு!" என்றான் ரிஷப் உற்சாகமாக.

"கடலிலே இருந்து நிறையத் தண்ணி ஆவியாப் போயிடுது இல்ல, ஆனா, கடல்ல தண்ணி குறையறதே இல்லையே அது ஏன்?"

"ஏன்னா, அந்தத் தண்ணி எல்லாம்தான் மழையா கடலுக்கே திரும்பி வந்துடுதே!" என்றான் ரிஷப்.

"வெரி குட்" என்றான் முருகன். நிர்மலாவின் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

"ஏம்ப்பா, எனக்கு ஒரு டவுட். ஒரு வேளை ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையா மாறாம அப்படியே மேகமா ஆகாயத்துலேயே இருந்துட்டா என்ன ஆகும்?"

"புத்திசாலிடா நீ! அப்படி ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையாத் திரும்பி வரலேன்னா கடல்ல தண்ணி குறைஞ்சு, கடைசில கடலே  வத்திப் போனாலும் போயிடும்" என்றான் முருகன்.

"அப்படி எல்லாம் நடக்காது இல்ல?" என்றான் ரிஷப், அப்படி நடந்தால் தங்களால் பீச்சுக்குப் போக முடியாதே என்ற கவலையுடன்!

"நடக்காது. கவலைப்படாதே. ஆனா நாம ஒண்ணு புரிஞ்சுக்கணும். நாம எவ்வளவோ பணம் செலவழிக்கறோம். மறுபடி நமக்குப் பணம் வரலேன்னா என்ன ஆகும்"

"அப்பறம் நம்மால எதுவும் வாங்க முடியாது."

"கரெக்ட். உங்கம்மாவால ஷாப்பிங் போக முடியாது! உலகத்தில எல்லாமே  போயிட்டுப் போயிட்டுத் திரும்பி வரணும். அப்பதான் உலகம் இயங்கும். நமக்கு மத்தவங்க உதவி செஞ்சா, நாமும் மத்தவங்களுக்கு உதவி செய்யணும். மத்தவங்க செய்யற உதவியை மட்டும் நாம வாங்கி வச்சுக்கிட்டு, நாம யாருக்கும் உதவி செய்யாம இருந்தா, நமக்கு உதவி கெடைக்கறது நின்னு போயிடும்" என்றான் முருகன்.

"பெரிய தத்துவத்தைச் சொல்லிட்டீங்க போங்க!" என்றாள் நிர்மலா கேலியாக.

"கடல் வத்திப் போனாலும் போகும். ஆனா நீ மட்டும் என்னைப் பாராட்டவே மாட்டே!" என்று போலியாகச் சலித்துக் கொண்டான் முருகன்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பொருள்:
கடலிலிருந்து நீரை எடுத்துக் கொண்ட மேகம் அந்த நீரை மழையாகப் பெய்யாமல் போனால், பரந்த கடல் கூடத் தன் நீர் வளத்தை இழந்து விடும்.

Read 'Will the Ocean Ever Become Dry?' the English version of this story.

No comments:

Post a Comment