சக்ரபாணியின் கடையின் சர்க்கரை அதிக வெள்ளையா, அல்லது அவர் அணிந்திருக்கும் வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும் அதிக வெள்ளையா என்று சிலர் விளையாட்டாகப் பேசிக் கொள்ளும் அளவுக்கு, சக்ரபாணி சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்.
தான் எப்போதும் குளித்து விட்டு வெள்ளை ஆடை அணிந்து, தூய்மையுடன் இருப்பது போல், தன் கடை ஊழியர்களும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் சக்ரபாணி. வேலைக்கு வரும்போது, அவர்கள் குளித்து விட்டு சுத்தமான ஆடை அணிந்து வர வேண்டும் என்பது விதிமுறை.
அவர் நடத்தி வந்தது சிறிய மளிகைக் கடையானாலும், ஊழியர்களுக்குச் சீருடை உண்டு. அதைத் துவைத்துத் தூய்மையாக அணிந்து வர, அவர்களுக்கு இலவசமாகத் துணிக்குப் போடும் சோப், சோப் பவுடர் ஆகியவையும் உண்டு (அவர்கள் குளிப்பதற்கான சோப் தவிர!)
கடையில் வேலை செய்யும்போது, வியர்வை வழியும் முகத்துடன் இருக்கக் கூடாது என்பதற்காக, ஊழியர்கள் அவ்வப்போது கடைக்குப் பின் உள்ள குளியலறைக்குச் சென்று முகம் கழுவிக் கொண்டு வர வேண்டும் என்பதும் விதிமுறை.
யாராவது ஊழியர் வியர்வை நிறைந்த முகத்துடன் இருந்தால், "ஏண்டா, உன் மூஞ்சியில வழியற வியர்வை கடையில இருக்கற எண்ணெயில விழுந்து அதை அசுத்தப்படுத்தணுமா? போய் மூஞ்சி கழுவிக் கிட்டு வா, போ!" என்பார் சக்ரபாணி.
சுத்தத்துக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தினாலேயே, அவர் கடையை நாடிப் பலர் வந்தார்கள். வியாபாரமும் நன்றாக நடந்தது.
கதவு தட்டப்பட்ட சத்தம் கேட்டு, சக்ரபாணியின் மனைவி விஜயா, 'இந்தக் காலை நேரத்தில யாராக இருக்கும்?' என்று நினைத்தபடியே கதவைத் திறந்தாள்.
இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். வெளியூர்க்காரர்கள் போல் இருந்தது. ஒருவர் சற்று வயதானவராகவும், இன்னொருவர் இளைஞராகவும் இருந்தனர்.
"சக்ரபாணி இருக்காரா?" என்றார் வயதில் மூத்தவர்.
"கடைக்குக் கிளம்பிக்கிட்டிருக்காரு. நீங்க யாரு?" என்றாள் விஜயா.
இதற்குள் சக்ரபாணியே உள்ளிருந்து ஹாலுக்கு வந்து விட்டார். அப்போதுதான் குளித்து விட்டு, புதிய வெள்ளை உடைகளை அணிந்து பளிச்சென்று இருந்தார்.
"வாங்க. உள்ள வந்து உக்காருங்க" என்றார் சக்ரபாணி.
"நீங்க கடைக்குக் கிளம்பிட்டீங்களா, இல்ல, நேரம் ஆகுமா?" என்றார் முதலில் பேசியவர்.
"டிஃபன் சாப்பிட்டுட்டுக் கிளம்ப வேண்டியதுதான். வாங்க, நீங்களும் டிஃபன் சாப்பிடலாம். உள்ள வாங்க. ஏன் அங்கேயே நிக்கறீங்க?" என்றார் சக்ரபாணி.
"நீங்க சாப்பிட்டுட்டு வாங்க. நாங்க வெயிட் பண்றோம்."
"உள்ள வந்து உக்காருங்க. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்" என்றார் சக்ரபாணி.
"நீங்க சாப்பிட்டுட்டு வாங்க. நாங்க வெயிட் பண்றோம்."
"உள்ள வந்து உக்காருங்க. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்" என்றார் சக்ரபாணி.
அவர்கள் தயக்கத்துடன் உள்ளே வந்தார்கள்.
"ஆமாம், நீங்க என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே?" என்றார் சக்ரபாணி.
"இல்ல. நீங்க சாப்பிட்டுட்டு வாங்க. அப்புறம் பேசலாம்" என்றார் அவர்.
காலை உணவை முடித்துக் கொண்டு, ஐந்தாறு நிமிடங்களில் வெளியே வந்த சக்ரபாணி, அவர்கள் முன் உட்கார்ந்தார். "சொல்லுங்க."
"நாங்க உணவுப் பொருள் வழங்குத் துறையிலேந்து வரோம். நாங்க இன்ஸ்பெக்டர்கள். இது என்னோட ஐடி. உங்க கடையில நீங்க கலப்படக் சரக்கு விக்கறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. உங்க கடையில உள்ள பொருட்களை செக் பண்ணணும். வரீங்களா? கடைக்குப் போகலாம்!" என்றார் அவர்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 28
கூடாவொழுக்கம்
குறள் 278மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
மனத்துக்குள் மாசை வைத்துக் கொண்டு, வெளிப்பார்வைக்கு, நீராடித் தூய்மையானவர் போல் தங்களை வெளிக்காட்டிக் கொண்டு, தங்கள் உண்மையான தன்மையை மறைத்து வாழும் மனிதர் பலர் உள்ளனர்.