About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, August 29, 2018

197. 'நல்ல' ஆசிரியர்

புதிதாகப் பள்ளியில் சேர்ந்த தமிழாசிரியர் கந்தனுக்கு மாணவர்களிடையே இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று தலைமையாசிரியர் சுப்பிரமணியன் எதிர்பார்க்கவில்லை.

புதிதாகப் படித்து விட்டு வந்திருப்பவர் என்பதால் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுக்கும் வகையில் அவருக்கு வேலைப் பணி ஒதுக்கி இருந்தாலும், சோதனைமுறையில் ஆறாம் வகுப்பு 'பி' பிரிவுக்கு மட்டும் அவரை வகுப்பெடுக்கச் சொன்னார் தலைமையாசிரியர்.

ஆறாம் வகுப்பு மாணவர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு. அவர் வகுப்பு கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதாக 'பி' பிரிவு மாணவர்கள் வெளியே சொல்ல, 'ஏ' பிரிவில் இருந்த சில மாணவர்கள் 'பி' பிரிவுக்கு வர விரும்பித் தங்கள் பெற்றோர் மூலம் தலைமை ஆசிரியரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், சுப்பிரமணியன் இவற்றை நிராகரித்து விட்டார். 'ஏ' பிரிவு ஆசிரியர் சாமிநாதன் அனுபவமுள்ள நல்ல ஆசிரியர் என்பதைப் பெற்றோர்களுக்கு அவர் எடுத்துச் சொன்னார்.

ஒருமுறை, சுப்பிரமணியன் கந்தனின் வகுப்புக்கு வெளியே நின்று கவனித்தபோது, மாணவர்களும் ஆசிரியரும் சிரித்து உரையாடிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. 

கந்தன் வகுப்பு எடுக்கிறாரா, அல்லது மாணவர்களிடம் அரட்டை அடிக்கிறாரா என்ற சந்தேகம் சுப்பிரமணியன் மனதில் எழுந்தது. ஆயினும், மாணவர்கள் திருப்தியாக இருப்பதுதான் முக்கியம் என்று நினைத்துத் தனது சந்தேகத்தைப் புறம் தள்ளினார் அவர்.

அந்தப் பள்ளியின் வழக்கப்படி, ஆறாம் வகுப்பு அதற்கு மேலும் உள்ள வகுப்புகளுக்கு அரை ஆண்டுத் தேர்வு வினாத்தாள்கள், வேறொரு பள்ளி ஆசிரியரால் அமைக்கப்பட்டு, அவராலேயே திருத்தப்படும் .

அந்த ஆண்டுக்கான அரை ஆண்டுத் தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வந்தன. மதிப்பெண்கள் பட்டியலைப் பார்த்த சுப்பிரமணியனுக்கு அதிர்ச்சி.

ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில், பெரும்பாலான மாணவர்கள் தமிழில் மிகக் குறைந்த மதிப்பெண்களே வாங்கி இருந்தனர். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களில் சிலர் கூட ஃபெயில் மார்க் வாங்கியிருந்தனர்.

சுப்பிரமணியன் மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்.

"சார், பரீட்சையில் கேட்ட கேள்வி எல்லாம் எங்களுக்குப் புதுசா இருந்தது. சார் வகுப்பில அந்தப் பாடமெல்லாம் நடத்தவே இல்லை" என்று  பல மாணவர்களும் சொன்னார்கள்.

"பாடம் நடத்தலையா? அவர் ரொம்ப நல்லா நடத்தறார்னு சொன்னீங்களே."

"சார்! அவர் பொதுவா ஏதாவது சொல்லுவாரு. அது நல்லா இருக்கும்னு எல்லாரும் கேட்டுக்கிட்டிருப்பாங்க. ஆனா, அவர் பாடம் கொஞ்சம்தான் நடத்தினார். மீதியையெல்லாம் எங்களையே படிச்சுக்கச் சொல்லிட்டாரு" என்றான் ஒரு மாணவன் சற்று தைரியமாக. இதுவரை எல்லாத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி வந்த தான், இந்தத் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கும்படி ஆகி விட்டதே என்ற வருத்தம் அவனுக்கு.

சுப்பிரமணியன் கந்தனைக் கூப்பிட்டுப் பேசினார். "ஏன் கந்தன், நீங்க புத்தகத்தில் இருக்கற பாடங்கள் எல்லாத்தையும் நடத்தலியா?" என்றார்.

கந்தன் தயங்கியபடியே, "இல்லை சார். சில பாடங்கள் நடத்தினேன். சிலவற்றை அவங்களையே படிச்சுக்கச் சொல்லிச் சொன்னேன். அப்பதான் சார் அவங்களுக்கு நல்லா மனசில பதியும்" என்றார்.

"கந்தன், நீங்க வகுப்பு எடுக்கறது ஆறாம் வகுப்புக்கு. ஏதோ பி எச் டி. மாணவர்களுக்கு கைடா இருக்கிற மாதிரி பேசறீங்க! வகுப்பில என்னதான் செய்யறீங்க?"

"இல்லை, சார்... பையன்களுக்குத் தமிழ் ஆர்வம் வரணும்கறதுக்காகப் பொதுவா பல விஷயங்களை சொல்லுவேன்."

"பையன்கள்கிட்ட பேசிட்டேன். நீங்க உருப்படியான விஷயங்கள் எதுவும் சொன்ன மாதிரி தெரியல. சும்மா பையன்களோட அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்திருக்கீங்க. அவங்களும் ஜாலியா இருந்திருக்காங்க. இப்ப பரீட்சை எழுதினப்பறம்தான், நீங்க பாடங்களை சரியா சொல்லித் தரலைங்கறது அவங்களுக்குப் புரிஞ்சிருக்கு. நிறைய பேர் எங்கிட்ட வந்து, 'என்னை 'ஏ' செக்‌ஷனுக்கு மாத்திடுங்க'ன்னு சொல்றாங்க."

"சார், சாமிநாதன் சார்கிட்ட எவ்வளவோ தப்பு இருக்கு. அவரு குறுக்கு வழியெல்லாம் சொல்லித் தராரு. உதாரணமா, திருக்குறளுக்குப் பொருள் எழுத வேண்டிய கேள்விக்கு பதில் தெரியாட்டா, கேள்வித்தாளைப் பார்த்து திருக்குறளை அப்படியே எழுதிடுங்க, அதுக்கு ரெண்டு மார்க் கிடைக்கும்'னு சொல்லியிருக்காரு."

"அது தப்பா இருக்கலாம். ஆனா, அவர் பாடம் நடத்தறாரு. உங்களை மாதிரி அரட்டை அடிக்கல. வகுப்புல உக்காந்து மாணவர்கள்கிட்ட வெட்டி அரட்டை அடிக்கிறது பெரிய குத்தம். உங்களை நான் வேலையை விட்டே தூக்கணும். ஆனா, உங்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்கறேன். இனிமேயாவது ஒழுங்காப் பாடம் நடத்தி, ஆண்டுத் தேர்வில, பையங்க நல்ல மார்க் வாங்கும்படி செய்யுங்க. போங்க!" என்றார் சுப்பிரமணியன்.

கந்தன் தலை குனிந்தபடி வெளியேறினார்.

அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று.

பொருள்:  
சான்றோர்கள் அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனற்ற விஷயங்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Popular Teacher' the English version of this story, by the same author.
பொருட்பால்                                                                                      காமத்துப்பால்







Tuesday, August 28, 2018

196. வயலும் வாழ்வும்

களத்து மேட்டில் வையாபுரி நின்று கொண்டிருந்தபோது, அங்கே சிவா வந்தான்.

"என்னங்க, அறுவடை நடக்குதா?" என்றான் சிவா.

"ஆமாம். உனக்கென்னப்பா? இதையெல்லாம் பத்தி உனக்குக் கவலை இல்லை. நெல்லு நேரா வீட்டுக்கு வந்துடும்!" என்றார் வையாபுரி.

"நான் குத்தகைக்கு விட்டிருக்கேன்னு குத்திக் காட்டறீங்க. குத்தகைக்காரங்க எடுத்துக்கிட்டது போக மீதிதானே வரும்?"

"ஆமாம்ப்பா. அவங்கதானே வேலை செய்யறாங்க? நீ வீட்டில உக்காந்துக்கிட்டு, வர நெல்லை வாங்கிப் போட்டுக்கறவன்தானே?"

"என்னங்க, கம்யூனிஸ்டு ஆளுங்க மாதிரி பேசறீங்க?"

"நான் கம்யூனிஸ்டு இல்லப்பா. கம்யூனிஸ்ட்கள் என்னை நிலப்பிரபும்பாங்க. ஆனா பாரு, இப்படி வெய்யிலில் வந்து நின்னுக்கிட்டிருக்கேன்."

"எங்கப்பாவும் இப்படி இருந்தவர்தானே!"

"ஆமாம். அவர் பாவம், வயல் வயல்ன்னு எப்பவும் வயக்காட்டிலேயே நின்னுக்கிட்டிருப்பாரு. அவரு கஷ்டப்பட்டு வேலை செஞ்சு, உன்னைப் படிக்க வச்சாரு. ஆனா, நீ வேலைக்கும் போகல. வயலையும் பாத்துக்கல. பாதி நிலத்தை வித்துப் பணத்தை பாங்க்கில போட்டுட்டு, மீதி நிலத்தைக் குத்தகைக்கு விட்டுட்டு, ஹாய்யா வீட்டில உக்காந்திருக்க."

"நான் ஒவ்வொரு தடவை உங்களைப் பார்க்கும்போதும், இப்படியே சொல்றீங்க. பாருங்க, நானும் உங்களை மாதிரி வயக்காட்டுக்கு வந்து வெய்யில்ல நிக்கறேன்!" என்றான் சிவா.

"என்னப்பா, தமாஷ் பண்றியா? உங்கப்பா இப்படித்தான் வேடிக்கையாப் பேசுவாரு. அவர்கிட்ட இருந்த இந்த குணம் மட்டும் உங்கிட்ட வந்திருக்கு! ஆமாம், வீட்டில குழந்தைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கற வேலையாவது செய்யறியா?" என்றார் வையாபுரி.

"அதையெல்லாம் என் பொண்டாட்டி பாத்துப்பா. அதுக்குத்தானே, படிச்ச பொண்ணாப் பாத்து கட்டிக்கிட்டேன்!"

"கெட்டிக்காரன்தாம்ப்பா நீ! அப்ப, வீட்டில என்னதான் செய்யறே?"

"நான் வீட்டில எங்கேங்க இருக்கேன்? இங்க உங்களோட வயல்லதானே நிக்கறேன்!"

"பெரிய ஆளுதாம்ப்பா நீ! உன்னோட பேசி என்னால ஜெயிக்க முடியாது" என்ற வையாபுரி, வேறு புறம் திரும்பி, "யாருப்பா அங்க பேசிக்கிட்டு நிக்கறது? இன்னிக்குள்ள வயலை அறுத்து முடிக்கணும்" என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.

சிவா அங்கிருந்து நடந்தான்.

சில நிமிடங்கள் கழித்துத் திரும்பவும் பழைய இடத்துக்கு வந்த வையாபுரி, தன் அருகிலிருந்த ஆளிடம், "எங்கய்யா அவன், போயிட்டானா?" என்றார்.

"அவரு அப்பவே போயிட்டாருங்க" என்றான் அந்த ஆள்.

"இங்கேந்து வேற எங்கியாவது போவான். அங்க நின்னு கொஞ்ச நேரம் வெட்டிப் பேச்சுப் பேசுவான். அப்புறம் யார் வீட்டுக்காவது போய் உக்காந்து பேசிட்டு வருவான். வெட்டிப் பேச்சுப் பேசி, மத்தவங்க வேலையைக் கெடுக்கறதுதான் இவன் தொழில்" என்றார் வையாபுரி, எரிச்சலுடன்.

"இவர் ஏங்க இப்படி இருக்காரு?" என்றான் அவருடைய ஆள்.

"ம். என்னத்தைச் சொல்றது? வயல்ல எல்லாப் பயிரையும் அறுக்கறோம். எல்லாமா கதிரா இருக்கு? சில பயிர்கள் பதராப் போயிடுது இல்ல? அது மாதிரி, மனுஷங்களிலேயும் சில பேரு இருக்காங்க. என்ன செய்ய?" என்றார் வையாபுரி.

அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 196
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

பொருள்:  
பயனற்ற சொற்களைப் பலமுறை சொல்பவனை மனிதன் என்று சொல்லக் கூடாது. மனிதர்களுக்குள் பதர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'At the Paddy Fields' the English version of this story, by the same author.
பொருட்பால்                                                                                    காமத்துப்பால்

Sunday, August 26, 2018

195. மனதை மாற்றிய பேச்சு

"நம்ம சபாவில குருமூர்த்தி பேசப் போறாராமே!" என்றாள் கிரிஜா.

"அப்படியா?" என்றான் அவள் கணவன் பரசுராம். "டிவியில கதை பண்ணிக்கிட்டிருந்தவரு, இப்ப மேடையில கதை பண்ணப் போறாரா?"

"உங்களுக்கு அவரைப் பிடிக்காது! டி வியில அவர் நல்லாதானே பேசறாரு?"

"குருமூர்த்தி ஒரு சைக்கியாட்ரிஸ்ட். அவர் எந்த அளவுக்குத் திறமையானவர், எத்தனை பேரை குணமாக்கியிருக்கார்னு எனக்குத் தெரியாது. ஆனா, ஒரு டி வி சேனல்ல, ஒரு நிகழ்ச்சியில, ஃபோன்ல பேசறவங்க கேள்விக்கு அவர் பதில் சொல்றாரு. நான் பார்த்த வரையிலே, அவர் உருப்படியா எதுவும் சொல்றதாத் தெரியல.

"உண்மையில, ஒரு சைக்கியாட்ரிஸ்ட், பிரச்னை உள்ளவங்களை நிறையப் பேசச் சொல்லி, பிரச்னையை ஆழமாப் புரிஞ்சுக்கிட்டுதான், தீர்வு கொடுக்க முடியும். ஆனா, குருமூர்த்தி பொதுவான ஆலோசனைகள் கூடக் கொடுக்கறதில்ல. நகைச்சுவையா ஏதோ சொல்றாரு. 

"மத்தவங்க வெளிப்படையாப் பேசத் தயங்கற பாலியல் தொடர்பான விஷயங்களைக் கொஞ்சம் பச்சையாவே பேசறாரு. அதனாலேயே, அவருக்குக் கொஞ்சம் பாப்புலாரிட்டி வந்திருக்கு!"  

"நீங்க நிகழ்ச்சிக்கு வரப் போறீங்களா, இல்லையா?"

"இல்ல. என்னால அர்த்தமில்லாத பேச்சை, ரெண்டு மணி நேரம் கேக்க முடியாது. சரி, அவர் எதைப் பத்திப் பேசப் போறாராம்?" என்றான் பரசுராம்.

"மனித இயல்புகள்."

"பாத்தியா? மழுப்பலான தலைப்பு. என்ன வேணும்னா பேசிட்டுத் தப்பிச்சுக்கலாம். ஒரு மனோதத்துவ நிபுணர், ஒரு நல்ல தலைப்பில, உருப்படியா சில விஷயங்களைச் சொல்லலாமே!"

"அவர் பேசறதுக்கு முன்னாடியே, அவர் பேச்சு உருப்படியா இருக்காதுன்னு முடிவு பண்ணிட்டீங்களே! நான் போகப் போறேன்" என்றாள் கிரிஜா. 

"போயிட்டு வா. நல்ல ஜோக்கா சொன்னார்னா, எனக்கு சொல்லு!"

நிகழ்ச்சி நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு கிரிஜா கேட்டாள்: "என்னங்க, குருமூர்த்தி பேச்சு எப்படி இருந்ததுன்னு நீங்க கேக்கவேயில்லையே?"

"நீ என்ன சொல்லுவேன்னு தெரியும். அதனாலதான் கேக்கல. சரி, இப்ப கேக்கறேன், சொல்லு. பேச்சு, எப்படி இருந்தது?"

"பரவாயில்லை" என்றாள் கிரிஜா.

"பரவாயில்லையா? பிரமாதமா இருந்ததுன்னு சொல்லுவேன்னு நெனச்சேன். ஏன், ஜோக்கெல்லாம் சொல்லலியா?"

"சொன்னாரு. ஜோக் மட்டும்தான் சொன்னாரு!"

"என்ன, நீயே இப்படிச் சொல்றே?"

"நீங்க சொன்னது சரின்னுதான் தோணுது. ரெண்டு மணி நேரப் பேச்சிலே உருப்படியான விஷயம் எதுவும் இல்ல. சும்மா ஏதோ சொல்லிப் பொழுது போக்கிட்டிருந்தாரு."

"பரவாயில்ல. அவரோட ரசிகையான உனக்கே இப்படித் தோணியிருக்கே! ஆனா, ஜோக் சொல்லிப் பொழுதைக் கழிச்சா, நிறைய பேர் அதை நல்ல பேச்சுன்னுதான் நினைப்பாங்க."

"இல்ல. எல்லோருக்குமே ஏமாற்றமாத்தான் இருந்ததுன்னு நினைக்கிறேன். வெளியில வரச்சே, நிறைய பேரு அது மாதிரிதான் பேசிக்கிட்டாங்க. 'இது மாதிரி பொதுவா பேசறதுன்னா, நான் கூடப் பேசுவேனே, ஒரு நிபுணர் பேசற மாதிரியே இல்லையே'ன்னு ஒத்தர் சொன்னாரு. 'டிவியில ஏதோ சொல்லிச் சமாளிச்சுடறாரு. இங்க தலைப்பு பத்திப் பேசவே இல்லியே, மனித இயல்புகளைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல மனுஷன்'ன்னு ரெண்டு பேரு பேசிக்கிட்டுப் போனாங்க" என்றாள் கிரிஜா.  

"உண்மையில, நேத்திக்கே நான் சபா செயலாளர்கிட்ட இது பத்திக் கேட்டேன். நிறைய பேர் அவர்கிட்ட ஏமாற்றத்தைத் தெரிவிச்சிருக்காங்க. குருமூர்த்தியைக் கூப்பிட்டதே தப்புன்னு அவரு எங்கிட்ட வருத்தப்பட்டு சொன்னாரு. சரி, நீ என்ன சொல்றேன்னு பாக்கலாம்னுதான் பேசாம இருந்தேன்."

"நல்லா இருந்திருந்தா, நானே சொல்லியிருப்பேன். எனக்கே ஏமாத்தமா இருந்ததாலதான், நீங்க கேட்டா சொல்லிக்கலாம்னுட்டுப் பேசாம இருந்தேன்."

"எனக்கு ஆரம்பத்திலேந்தே அவர் மேல நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆனாலும் கூட, ஒத்தர் விஷயம் இல்லாமப் பேசினா, அவருக்கு இருக்கிற நல்ல பேரு போயி, மதிப்பும் குறைஞ்சுடும்னு, இப்பதான் கண்கூடாப் பாக்கறேன்" என்றான் பரசுராம்.    

அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில 
நீர்மை யுடையார் சொலின்.

பொருள்:  
பண்புடையவர் பயனற்ற சொற்களைப் பேசினால், அவருடைய பெருமை, புகழ் இரண்டும் அவரை விட்டு நீங்கி விடும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

Read 'A Speech That Changed Perceptions' the English version of this story, by the same author.

பொருட்பால்                                                                                        காமத்துப்பால்


Tuesday, August 21, 2018

194. ஊர் அறிந்த ரகசியம்

வீட்டுக்குள் நுழையும்போதே, "அம்மா எங்கே?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் விநாயகம்.

"வெளியே போயிருக்காங்க" என்றாள் சுமதி.

"பேத்திக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. இப்ப கூடவா வீட்டில இருக்க மாட்டாங்க?"

"ஏங்க, அவங்க என்ன கல்யாண வேலையா பாக்கப் போறாங்க? அவங்களுக்குப் பொழுது போக வேண்டாமா? யார்கிட்டயாவது போய்ப் பேசிட்டு வருவாங்க."

"இந்த வயசான காலத்துல, அம்மா வீடு வீடாப் போய் அரட்டை அடிச்சுட்டு வரது எனக்குப் பிடிக்கல."

"ஏங்க, வயசானவங்களுக்குப் பொழுது போக இப்படி ஏதாவது செய்யணும்? உங்களுக்கு என்ன இடைஞ்சல் இதில?"

"மாமியாரை விட்டுக் கொடுக்காம பேசற மருமக நீ ஒருத்தியாத்தான் இருப்பே!" என்றான் விநாயகம், சிரித்தபடியே.

அப்போது, பர்வதம் உள்ளே நுழைந்தாள்.

"எங்கம்மா போயிட்டு வரே?" என்றான் விநாயகம், சாதாரணமாக.

"வாசல்ல உக்காந்திருந்தேன். தெருக்கோடியில, ருக்மிணி அவ வீட்டுத் திண்ணையில உக்காந்திருந்தா. அவ வீட்டுக்குப் போய்க் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தேன்" என்றாள் பர்வதம்.

அதற்குப் பிறகு விநாயகம் எதுவும் பேசவில்லை.

விநாயகம் சோர்வுடன் வீட்டுக்கு வந்தான்.

"ஏண்டா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூப்பிட்டாங்கன்னு போயிட்டு வந்தியே, என்ன விஷயம்? சீர் பத்தி ஏதாவது கேட்டாங்களா?" என்றாள் பர்வதம்.

"அது இருக்கட்டும். சுமதி அம்மாவைப் பத்தி யார்கிட்டயாவது சொன்னியா?" என்றான் விநாயகம்.

"சம்பந்தி அம்மாவைப் பத்தி நான் என்ன சொல்லப் போறேன்? அவங்க தங்கமானவங்களாச்சே! அப்படியே சொல்லணும்னாலும், உன்கிட்டத்தான் சொல்லப் போறேன்."

"இல்லேம்மா. நீ தினம் வீடு வீடாப் போய், பல பேர் கிட்ட பேசிட்டு வர. நீ என்ன பேசறேன்னு எனக்குத் தெரியாது."

"என்னடா நீ? நான் ஏதோ பொழுது போக்கறதுக்காக, என்னை மாதிரி உள்ள வயசானவங்க கிட்ட போய், ஏதோ பழங்கதை பேசிட்டு வருவேன். இதுல உனக்கென்ன வந்தது?"

"ஆமாம்மா. பழங்கதை. சுமதியோட அம்மா நம்ம ஜாதி இல்ல. அந்தக் காலத்திலேயே, சுமதியோட அப்பா அவங்களைக் காதலிச்சுக் கல்யாணம் கட்டிக்கிட்டிருக்காரு. இதெல்லாம் பழங்கதைதானே?"

"ஆமாண்டா. அதுக்காகவே, அவங்க வீட்டில பெண் எடுக்கப் பல பேரு தயங்கினாங்க. நான் பழங்காலத்து மனுஷியா இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாம, சுமதியை உனக்குக் கட்டி வச்சேன்."

"அதெல்லாம் சரிதாம்மா. உன்னோட இந்த மனசைப் பாத்து நானே ஆச்சரியப்பட்டிருக்கேன். ஆனா, சுமதி அம்மா வேற ஜாதிங்கறது நம்ம ஊர்ல யாருக்கும் தெரியாது. இப்ப நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கு. நீ யார்கிட்டயாவது சொன்னியா?"

"நான் ஏண்டா சொல்லப் போறேன்?" என்று ஆரம்பித்த பர்வதம், சட்டென்று பல்லைக் கடித்துக் கொண்டாள்.

"சொல்லும்மா. யார் கிட்ட சொன்ன?" என்றான் விநாயகம்.

"ரெண்டு நாள் முன்ன, பேச்சுவாக்கில, குஞ்சம்மா கிட்ட சொன்னேன். ஏதோ பேசும்போது, டக்னு என் வாயிலேந்து வந்துடுச்சு. அதனால என்ன இப்ப?"

"இப்ப என்னவா? குஞ்சம்மாவோட வாயைப் பத்தித்தான் ஊருக்கே தெரியுமே. அவங்க இதை பல பேர் கிட்ட சொல்லி, விஷயம் பக்கத்து ஊர்ல இருக்கற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரைக்கும் போயிடுச்சு."

"அடப்பாவமே!" என்றாள் பர்வதம். "அதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டாங்களா? அவங்களுக்கு விளக்கம் சொல்லி சமாதானப்படுத்திட்டே இல்ல?"

"சமாதானப்படுத்தறதா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஜாதி விசுவாசம் அதிகம் உள்ளவங்க. அவங்களுக்கு ஜாதிதான் முக்கியமாம். நாம கலப்பு ஜாதின்னு சொல்லி கல்யாணத்தையே நிறுத்திட்டாங்க!" என்றான் விநாயகம், குரல் கம்மியபடி.

பர்வதம், சுமதி இருவரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தனர். ஆனால் சுமதி, உடனே சமாளித்துக்கொண்டு, "விடுங்க. கல்யாணத்துக்கப்புறம் இது அவங்களுக்குத் தெரிஞ்சிருஞ்சா, அப்பவும் பிரச்னை பண்ணியிருப்பாங்க. நம்ம பொண்ணுக்கு வேற நல்ல இடம் கிடைக்கும்!" என்றாள்.

ஆனால், பர்வதத்துக்கு மனம் சமாதானமாகவில்லை. "தவளை தன் வாயாலேயே கெடற மாதிரி, வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம, நானே என் பேத்தி கல்யாணம் நின்னு போகக் காரணமா இருந்துட்டேனே!" என்று புலம்ப ஆரம்பித்தாள் அவள்.

அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பொருள்:  
பயனற்ற, பண்பில்லாத சொற்களைப் பலரிடம் பேசுவது அறத்துக்குப் பொருந்தாமல் போய், நன்மைகளை அழிக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Parvatham's Regret' the English version of this story, by the same author.
பொருட்பால்                                                                                      காமத்துப்பால்













Sunday, August 5, 2018

193. ஹலோ டாக்டர்

அந்த மருத்துவமனையில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பொதுவாக, அந்த டாக்டருக்குக் கைராசி உண்டு என்ற கருத்தினாலும், அவரிடம் மருத்துவக் கட்டணம் குறைவு என்பதாலும், அவருடைய மருத்துவமனையில்  எப்போதுமே கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். 

குழந்தைகளுடன் இருந்த பெண்கள், முதியவர்கள், உடல் நலக் குறைவால் சோர்வடைந்திருந்தவர்கள் ஆகியோர் தவிப்புடன் அமர்ந்து தங்கள் முறைக்குக் காத்திருந்தனர்.

சுந்தரத்தின் முறை வந்தபோது, அவர் உள்ளே போனார். அவர் டாக்டருக்கு ஓரளவு பரிச்சயமானவர். அவருக்கு இருந்த இலேசான காய்ச்சலுக்கு, டாக்டர் ஒரு நிமிடத்துக்குள் மருந்து எழுதிக் கொடுத்து விட்டார்.

ஆனால், சுந்தரம் உடனே வெளியே செல்லவில்லை. டாக்டரிடம் வேறு சில விஷயங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார். அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடங்கலினால் மருத்துவமனைக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிக் கேட்டார். தங்கள் மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருப்பதால் தங்களுக்குப் பிரச்னை இல்லை என்றார் டாக்டர்.

"நீங்க ஆஸ்பத்திரி நடத்தறீங்க. வருமானம் வருது. ஜெனரேட்டர் வாங்கி வச்சுக்கலாம். என்னைப் போல் குறைஞ்ச வருமானம் உள்ளவங்க என்ன செய்யறது?" என்றார் சுந்தரம்.

"கஷ்டம்தான்" என்றார் டாக்டர், கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி. 'ஏன், உங்க பிள்ளைங்கதான் நிறைய சம்பாதிக்கறாங்களே, நீங்க இன்வர்ட்டர் வாங்கி வச்சுக்கலாமே!' என்று அவர் கேட்க நினைத்தாலும், பேச்சை வளர்த்த விரும்பவில்லை.

பிறகு, சுந்தரம் வேறு சில பிரச்னைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்த டாக்டர், "சார்! வெளியில நிறைய பேர் வெயிட் பண்றாங்க. நாம அப்புறம் பேசலாமே" என்றார்.

"ஆமாம், ஆமாம்" என்று சுந்தரம் நாற்காலியிலிருந்து எழுந்திருக்க யத்தனித்தார். ஆனால் எழுந்திருக்கவில்லை. "நேத்து அம்மன் கோவில் வழியாப் போய்க்கிட்டிருந்தேன். திருவிழாவுக்கு நன்கொடை கொடுத்தவங்க பேரையெல்லாம் மைக்ல சொல்லிக்கிட்டிருந்தாங்க. நீங்க கூட ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கீங்க போலிருக்கே!" என்றார் சுந்தரம்.

"ஆமாம்" என்று டாக்டர் மீண்டும் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.

கோவில் திருவிழா ஏற்பாடுகளைப் பற்றிச் சில நிமிடங்கள் பேசி விட்டுத்தான் எழுந்தார் சுந்தரம். அறைக்கதவை அடையும் வரை பேசிக் கொண்டே சென்றவர், கதவைப் பாதி திறந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பேசினார்.

அடுத்தாற்போல் உள்ளே செல்ல வேண்டியவர் எழுந்து வந்து அறைக்கதவருகே நின்றார். சுந்தரம் அவருக்கு வழி விடாமல், மேலும் ஓரிரு நிமிடங்கள் டாக்டரிடம் பேசி விட்டுத்தான் வெளியே போனார்.

வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் சுந்தரத்தைப் பார்த்து, "சார்! ஒரு நிமிஷம்" என்று அழைத்தான். அவர் அருகில் வந்துதும் அவரிடம், "ஏன் சார், இவ்வளவு பேர் உடம்பு சரியில்லாதவங்க, வயசானவங்க, பொம்பளைங்க, குழந்தைங்கன்னு இங்க மணிக்கணக்கா உக்காந்துக்கிட்டிருக்கோம். உங்களுக்கு முன்னால போனவங்கள்ளாம் ரெண்டு மூணு நிமிஷத்துல வெளியில வந்துட்டாங்க. நீங்க பத்துப் பதினைஞ்சு நிமிஷம் உள்ள உக்காந்து பேசிட்டு வந்திருக்கீங்க. உங்க உடம்பு கூட நல்லாத்தான் இருக்கு. நீங்க டாக்டர்கிட்ட அரட்டை அடிக்கறதுக்காக, இத்தனை பேரையும் இப்படிக் கஷ்டப்படுத்தியிருக்கீங்களே, இது நியாயமா?" என்றான்.

சுந்தரம் அவனை முறைத்து விட்டு வெளியேறினார்.

அவர் காத்திருந்தவர்களைக் கடந்து வெளியே சென்றபோது, டாக்டரைப் பார்க்கப் பொறுமையுடன், அசௌகரியத்தைப் பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தவர்களின் கண்கள் அவரைக் கோபத்துடன் பார்த்தன. சில குழந்தைகள் தங்கள் அழுகையால் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன.

அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 193
நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித் துரைக்கும் உரை
.

பொருள்:  
ஒருவன் பயனற்ற சொற்களைப் பேசுவது அவன் அறம் இல்லாதவன் என்பதைக் காட்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Hello, Doctor' the English version of this story, by the same author.

பொருட்பால்                                                                                   காமத்துப்பால்