
"நம்ம சபாவில குருமூர்த்தி பேசப் போறாராமே!" என்றாள் கிரிஜா.
"அப்படியா?" என்றான் அவள் கணவன் பரசுராம். "டிவியில கதை பண்ணிக்கிட்டிருந்தவரு, இப்ப மேடையில கதை பண்ணப் போறாரா?"
"உங்களுக்கு அவரைப் பிடிக்காது! டி வியில அவர் நல்லாதானே பேசறாரு?"
"குருமூர்த்தி ஒரு சைக்கியாட்ரிஸ்ட். அவர் எந்த அளவுக்குத் திறமையானவர், எத்தனை பேரை குணமாக்கியிருக்கார்னு எனக்குத் தெரியாது. ஆனா, ஒரு டி வி சேனல்ல, ஒரு நிகழ்ச்சியில, ஃபோன்ல பேசறவங்க கேள்விக்கு அவர் பதில் சொல்றாரு. நான் பார்த்த வரையிலே, அவர் உருப்படியா எதுவும் சொல்றதாத் தெரியல.
"உண்மையில, ஒரு சைக்கியாட்ரிஸ்ட், பிரச்னை உள்ளவங்களை நிறையப் பேசச் சொல்லி, பிரச்னையை ஆழமாப் புரிஞ்சுக்கிட்டுதான், தீர்வு கொடுக்க முடியும். ஆனா, குருமூர்த்தி பொதுவான ஆலோசனைகள் கூடக் கொடுக்கறதில்ல. நகைச்சுவையா ஏதோ சொல்றாரு.
"மத்தவங்க வெளிப்படையாப் பேசத் தயங்கற பாலியல் தொடர்பான விஷயங்களைக் கொஞ்சம் பச்சையாவே பேசறாரு. அதனாலேயே, அவருக்குக் கொஞ்சம் பாப்புலாரிட்டி வந்திருக்கு!"
"நீங்க நிகழ்ச்சிக்கு வரப் போறீங்களா, இல்லையா?"
"இல்ல. என்னால அர்த்தமில்லாத பேச்சை, ரெண்டு மணி நேரம் கேக்க முடியாது. சரி, அவர் எதைப் பத்திப் பேசப் போறாராம்?" என்றான் பரசுராம்.
"மனித இயல்புகள்."
"பாத்தியா? மழுப்பலான தலைப்பு. என்ன வேணும்னா பேசிட்டுத் தப்பிச்சுக்கலாம். ஒரு மனோதத்துவ நிபுணர், ஒரு நல்ல தலைப்பில, உருப்படியா சில விஷயங்களைச் சொல்லலாமே!"
"அவர் பேசறதுக்கு முன்னாடியே, அவர் பேச்சு உருப்படியா இருக்காதுன்னு முடிவு பண்ணிட்டீங்களே! நான் போகப் போறேன்" என்றாள் கிரிஜா.
"போயிட்டு வா. நல்ல ஜோக்கா சொன்னார்னா, எனக்கு சொல்லு!"
நிகழ்ச்சி நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு கிரிஜா கேட்டாள்: "என்னங்க, குருமூர்த்தி பேச்சு எப்படி இருந்ததுன்னு நீங்க கேக்கவேயில்லையே?"
"நீ என்ன சொல்லுவேன்னு தெரியும். அதனாலதான் கேக்கல. சரி, இப்ப கேக்கறேன், சொல்லு. பேச்சு, எப்படி இருந்தது?"
"பரவாயில்லை" என்றாள் கிரிஜா.
"பரவாயில்லையா? பிரமாதமா இருந்ததுன்னு சொல்லுவேன்னு நெனச்சேன். ஏன், ஜோக்கெல்லாம் சொல்லலியா?"
"சொன்னாரு. ஜோக் மட்டும்தான் சொன்னாரு!"
"என்ன, நீயே இப்படிச் சொல்றே?"
"நீங்க சொன்னது சரின்னுதான் தோணுது. ரெண்டு மணி நேரப் பேச்சிலே உருப்படியான விஷயம் எதுவும் இல்ல. சும்மா ஏதோ சொல்லிப் பொழுது போக்கிட்டிருந்தாரு."
"பரவாயில்ல. அவரோட ரசிகையான உனக்கே இப்படித் தோணியிருக்கே! ஆனா, ஜோக் சொல்லிப் பொழுதைக் கழிச்சா, நிறைய பேர் அதை நல்ல பேச்சுன்னுதான் நினைப்பாங்க."
"இல்ல. எல்லோருக்குமே ஏமாற்றமாத்தான் இருந்ததுன்னு நினைக்கிறேன். வெளியில வரச்சே, நிறைய பேரு அது மாதிரிதான் பேசிக்கிட்டாங்க. 'இது மாதிரி பொதுவா பேசறதுன்னா, நான் கூடப் பேசுவேனே, ஒரு நிபுணர் பேசற மாதிரியே இல்லையே'ன்னு ஒத்தர் சொன்னாரு. 'டிவியில ஏதோ சொல்லிச் சமாளிச்சுடறாரு. இங்க தலைப்பு பத்திப் பேசவே இல்லியே, மனித இயல்புகளைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல மனுஷன்'ன்னு ரெண்டு பேரு பேசிக்கிட்டுப் போனாங்க" என்றாள் கிரிஜா.
"உண்மையில, நேத்திக்கே நான் சபா செயலாளர்கிட்ட இது பத்திக் கேட்டேன். நிறைய பேர் அவர்கிட்ட ஏமாற்றத்தைத் தெரிவிச்சிருக்காங்க. குருமூர்த்தியைக் கூப்பிட்டதே தப்புன்னு அவரு எங்கிட்ட வருத்தப்பட்டு சொன்னாரு. சரி, நீ என்ன சொல்றேன்னு பாக்கலாம்னுதான் பேசாம இருந்தேன்."
"நல்லா இருந்திருந்தா, நானே சொல்லியிருப்பேன். எனக்கே ஏமாத்தமா இருந்ததாலதான், நீங்க கேட்டா சொல்லிக்கலாம்னுட்டுப் பேசாம இருந்தேன்."
"நல்லா இருந்திருந்தா, நானே சொல்லியிருப்பேன். எனக்கே ஏமாத்தமா இருந்ததாலதான், நீங்க கேட்டா சொல்லிக்கலாம்னுட்டுப் பேசாம இருந்தேன்."
"எனக்கு ஆரம்பத்திலேந்தே அவர் மேல நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆனாலும் கூட, ஒத்தர் விஷயம் இல்லாமப் பேசினா, அவருக்கு இருக்கிற நல்ல பேரு போயி, மதிப்பும் குறைஞ்சுடும்னு, இப்பதான் கண்கூடாப் பாக்கறேன்" என்றான் பரசுராம்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 20
பயனில சொல்லாமை
குறள் 195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
பொருள்:
பண்புடையவர் பயனற்ற சொற்களைப் பேசினால், அவருடைய பெருமை, புகழ் இரண்டும் அவரை விட்டு நீங்கி விடும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
எளிமையாகவும், அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி திருமதி பானுமதி அவர்களே.
Delete