About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, August 28, 2018

196. வயலும் வாழ்வும்

களத்து மேட்டில் வையாபுரி நின்று கொண்டிருந்தபோது அங்கே சிவா வந்தான்.

"என்னங்க, அறுவடை நடக்குதா?" என்றான் சிவா.

"ஆமாம். உனக்கென்னப்பா? இதையெல்லாம் பத்தி உனக்குக் கவலை இல்லை. நெல்லு நேரா வீட்டுக்கு வந்துடும்!" என்றார் வையாபுரி.

"நான் குத்தகைக்கு விட்டிருக்கேன்னு குத்திக் காட்டறீங்க. குத்தகைக்காரங்க எடுத்துக்கிட்டது போக மீதிதானே வரும்?"

"ஆமாம்ப்பா. அவங்கதானே வேலை செய்யறாங்க? நீ வீட்டில உக்காந்துக்கிட்டு வர நெல்லை வாங்கிப் போட்டுக்கறவன்தானே?"

"என்னங்க கம்யூனிஸ்டு ஆளுங்க மாதிரி பேசறீங்க?"

"நான் கம்யூனிஸ்டு இல்லப்பா. கப்யூனிஸ்ட்கள் என்னை நிலப்பிரபும்பாங்க. ஆனா பாரு, இப்படி வெய்யிலில் வந்து நின்னுக்கிட்டிருக்கேன்."

"எங்கப்பாவும் இப்படி இருந்தவர்தானே!"

"ஆமாம். அவரு பாவம், வயல் வயல்ன்னு எப்பவும் வயக்காட்டிலேயே நின்னுக்கிட்டிருப்பாரு. அவரு கஷ்டப்பட்டு வேலை செஞ்சு உன்னைப் படிக்க வச்சாரு. ஆனா நீ வேலைக்கும் போகல. வயலையும் பாத்துக்கல. பாதி நிலத்தை வித்துப் பணத்தை பாங்க்கில போட்டுட்டு, மீதி நிலத்தைக் குத்தகைக்கு விட்டுட்டு ஹாய்யா வீட்டில உக்காந்திருக்க."

"நான் ஒவ்வொரு தடவை உங்களைப் பார்க்கும்போதும் இப்படியே சொல்றீங்க. பாருங்க, நானும் உங்களை மாதிரி வயக்காட்டுக்கு வந்து வெய்யில்ல நிக்கறேன்!" என்றான் சிவா.

"என்னப்பா, தமாஷ் பண்றியா? உங்கப்பா இப்படித்தான் வேடிக்கையாப் பேசுவாரு. அவருகிட்ட இருந்த இந்த குணம் மட்டும் உங்கிட்ட வந்திருக்கு! ஆமாம், வீட்டில குழந்தைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கற வேலையாவது செய்யறியா?" என்றார் வையாபுரி.

"அதையெல்லாம் என் பொண்டாட்டி பாத்துப்பா. அதுக்குத்தானே படிச்ச பொண்ணாப் பாத்து கட்டிக்கிட்டேன்!"

"கெட்டிக்காரன்தாம்ப்பா நீ! அப்ப வீட்டில என்னதான் செய்யறே?"

"நான் வீட்டில எங்கேங்க இருக்கேன்? இங்க உங்களோட வயல்லதானே நிக்கறேன்!"

"பெரிய ஆளுதாம்ப்பா நீ! உன்னோட பேசி என்னால ஜெயிக்க முடியாது" என்ற வையாபுரி வேறு புறம் திரும்பி, "யாருப்பா அங்க பேசிக்கிட்டு நிக்கறது? இன்னிக்குள்ள வயலை அறுத்து முடிக்கணும்" என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.

சிவா அங்கிருந்து நடந்தான்.

சில நிமிடங்கள் கழித்துத் திரும்பவும் பழைய இடத்துக்கு வந்த வையாபுரி, தன் அருகிலிருந்த ஆளிடம், "எங்கய்யா அவன், போயிட்டானா?" என்றார்.

"அவரு அப்பவே போயிட்டாருங்க" என்றான் அந்த ஆள்.

"இங்கேந்து வேற எங்கியாவது போவான். அங்க நின்னு கொஞ்ச நேரம் வெட்டிப் பேச்சுப் பேசுவான். அப்புறம் யார் வீட்டுக்காவது போய் உக்காந்து பேசிட்டு வருவான். வெட்டிப் பேச்சுப் பேசி மத்தவங்க வேலையைக் கெடுக்கறதுதான் இவன் தொழில்" என்றார் வையாபுரி எரிச்சலுடன்.

"இவர் ஏங்க இப்படி இருக்காரு?" என்றான் அவருடைய ஆள்.

"ம். என்னத்தைச் சொல்றது? வயல்ல எல்லாப் பயிரையும் அறுக்கறோம். எல்லாமா கதிரா இருக்கு? சில பயிர்கள் பதராப் போயிடுது இல்ல? அது மாதிரி மனுஷங்களிலேயும் சில பேரு இருக்காங்க. என்ன செய்ய?" என்றார் வையாபுரி.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 196
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

பொருள்:  
பயனற்ற சொற்களைப் பலமுறை சொல்பவனை மனிதன் என்று சொல்லக் கூடாது. மனிதர்களுக்குள் பதர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment