About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, August 29, 2018

197. கற்றது தமிழ்!

புதிதாகப் பள்ளியில் சேர்ந்த தமிழாசிரியர் கந்தனுக்கு மாணவர்களிடையே இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று தலைமையாசிரியர் சுப்பிரமணியன் எதிர்பார்க்கவில்லை.

புதிதாகப் படித்து விட்டு வந்திருப்பவர் என்பதால் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுக்கும் வகையில் அவருக்கு வேலைப் பணி ஒதுக்கி இருந்தாலும், சோதனைமுறையில் ஆறாம் வகுப்பு 'பி' பிரிவுக்கு மட்டும் அவரை வகுப்பெடுக்கச் சொன்னார்.

ஆறாம் வகுப்பு மாணவர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு. அவர் வகுப்பு கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதாக 'பி' பிரிவு மாணவர்கள் வெளியே சொல்ல, 'ஏ' பிரிவில் இருந்த சில மாணவர்கள் 'பி' பிரிவுக்கு வர விரும்பித் தங்கள் பெற்றோர் மூலம் தலைமை ஆசிரியரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், சுப்பிரமணியன் இவற்றை நிராகரித்து விட்டார். 'ஏ' பிரிவு ஆசிரியர் சாமிநாதன் அனுபவமுள்ள நல்ல ஆசிரியர் என்பதைப் பெற்றோர்களுக்கு அவர் எடுத்துச் சொன்னார்.

ஒருமுறை சுப்பிரமணியன் கந்தனின் வகுப்புக்கு வெளியே நின்று கவனித்தபோது, மாணவர்களும் ஆசிரியரும் சிரித்து உரையாடிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. 

கந்தன் வகுப்பு எடுக்கிறாரா, அல்லது மாணவர்களிடம் அரட்டை அடிக்கிறாரா என்ற சந்தேகம் அவர் மனதில் எழுந்தது. ஆயினும் மாணவர்கள் திருப்தியாக இருப்பதுதான் முக்கியம் என்று நினைத்து சந்தேகத்தைப் புறம் தள்ளினார்.

அந்தப் பள்ளியின் வழக்கப்படி, ஆறாம் வகுப்பு அதற்கு மேலும் உள்ள வகுப்புகளுக்கு அரை ஆண்டுத் தேர்வு வினாத்தாள்கள் வேறொரு பள்ளி ஆசிரியரால் அமைக்கப்பட்டு அவராலேயே திருத்தப்படும் .

அந்த ஆண்டு அரை ஆண்டுத் தேர்வு முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வந்தன. மதிப்பெண்கள் பட்டியலைப் பார்த்த சுப்பிரமணியனுக்கு அதிர்ச்சி.

ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில் பெரும்பாலான மாணவர்கள் தமிழில் மிகக் குறைந்த மதிப்பெண்களே வாங்கி இருந்தனர். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களில் கூட சிலர் ஃபெயில் மார்க் வாங்கியிருந்தனர்.

சுப்பிரமணியன் மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்.

"சார், பரீட்சையில் கேட்ட கேள்வி எல்லாம் எங்களுக்குப் புதுசா இருந்தது. சார் வகுப்பில அந்தப் பாடமெல்லாம் நடத்தவே இல்லை" என்று  பல மாணவர்களும் சொன்னார்கள்.

"பாடம் நடத்தலையா? அவர் ரொம்ப நல்லா நடத்தறார்னு சொன்னீங்களே."

"சார்! அவர் பொதுவா ஏதாவது சொல்லுவாரு. அது நல்லா இருக்கும்னு எல்லாரும் கேட்டுக்கிட்டிருப்பாங்க. ஆனா, அவர் பாடம் கொஞ்சம்தான் நடத்தினார். மீதியையெல்லாம் எங்களையே படிச்சுக்கச் சொல்லிட்டாரு" என்றான் ஒரு மாணவன் சற்று தைரியமாக. இது வரை எல்லாத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி வந்த தான், இந்தத் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கும்படி ஆகி விட்டதே என்ற வருத்தம் அவனுக்கு.

சுப்பிரமணியன் கந்தனைக் கூப்பிட்டுப் பேசினார். "ஏன் கந்தன், நீங்க புத்தகத்தில் இருக்கற பாடங்கள் எல்லாத்தையும் நடத்தலியா?" என்றார்.

கந்தன் தயங்கியபடியே, "இல்லை சார். சில பாடங்கள் நடத்தினேன். சிலவற்றை அவங்களையே படிச்சுக்கச் சொல்லிச் சொன்னேன். அப்பத்தான் சார் அவங்களுக்கு நல்லா மனசில பதியும்" என்றார்.

"கந்தன். நீங்க வகுப்பு எடுக்கறது ஆறாம் வகுப்புக்கு. ஏதோ பி எச் டி. மாணவர்களுக்கு கைடா இருக்கிற மாதிரி பேசறீங்க! வகுப்பில என்னதான் செய்யறீங்க?"

"இல்ல சார். பையன்களுக்குத் தமிழ் ஆர்வம் வரணும்கறதுக்காகப் பொதுவா பல விஷயங்களை சொல்லுவேன்."

"பையன்கள் கிட்ட பேசிட்டேன். நீங்க உருப்படியான விஷயங்கள் எதுவும் சொன்ன மாதிரி தெரியல. சும்மா பையன்களோட அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்திருக்கீங்க. அவங்களும் ஜாலியா இருந்திருக்காங்க. இப்ப பரீட்சை எழுதினப்பறம்தான் அவங்களுக்குப் புரியுது. நிறைய பேர் எங்கிட்ட வந்து 'என்னை 'ஏ' செக்‌ஷனுக்கு மாத்திடுங்க'ன்னு சொல்றாங்க."

"சார், சாமிநாதன் சார் கிட்ட எவ்வளவோ தப்பு இருக்கு. அவரு குறுக்கு வழியெல்லாம் சொல்லித் தராரு. உதாரணமா, திருக்குறளுக்குப் பொருள் எழுதச் சொல்லி கேள்வி இருந்தா, பதில் தெரியாட்டா, கேள்வித்தாளைப் பாத்து திருக்குறளை அப்படியே எழுதிடுங்க, அதுக்கு ரெண்டு மார்க் கிடைக்கும்'னு சொல்லியிருக்காரு."

"அது தப்பா இருக்கலாம். ஆனா, அவரு பாடம் நடத்தறாரு. உங்களை மாதிரி அரட்டை அடிக்கல. வகுப்புல உக்காந்து மாணவர்கள் கிட்ட வெட்டி அரட்டை அடிக்கிறது பெரிய குத்தம். உங்களை நான் வேலையை விட்டே தூக்கணும். ஆனா உங்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்கறேன். இனிமேயாவது ஒழுங்காப் பாடம் நடத்தி ஆண்டுத் தேர்வில பையங்க நல்ல மார்க் வாங்கும்படி செய்யுங்க. போங்க!" என்றார் சுப்பிரமணியன்.

கந்தன் தலை குனிந்தபடி வெளியேறினார்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று.

பொருள்:  
சான்றோர்கள் அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனற்ற விஷயங்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்







No comments:

Post a Comment