About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, June 18, 2019

265. குருவும் சீடனும்

''குருவே! ஐந்தாண்டுகளாகத் தங்களிடம் வேதங்கள், இதிகாசங்கள் மற்ற பல விஷயங்களைக் கற்று வருகிறேன். சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்''  

''கேள், அருட்செல்வம்!'' என்றார் குரு.

''தவம் ஏன் செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்?"

''அதற்கு முன்னால் தவம் என்றால் என்னவென்று சொல்.''

அருட்செல்வம் கொஞ்சம் யோசித்து விட்டு, ''புலன்களை அடக்கி மனதை ஒருமுகப்படுத்தி இறைவனைப் பிரார்த்திப்பது'' என்றான். 

''என்னவென்று பிரார்த்திக்க வேண்டும்?''

''எதற்காகத் தவம் இருக்கிறோமோ அது நிறைவேற வேண்டுமென்று.''

"உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லி விட்டாயே! யாரும் எதற்காகவும் தவம் செய்யலாம்!"

''அப்படியானால் சுயநல நோக்கத்துக்காகத் தவம் செய்யலாமா?''

''அசுரர்கள் தீய நோக்கங்களுக்காகத் தவம் செய்திருக்கிறார்களே!''

''தவம் என்ற உயர்ந்த செயல் தீய நோக்கங்களுக்கு உதவும் என்றால், அது எப்படி ஒரு உயர்ந்த செயலாக இருக்க முடியும்?''

''தவம் என்பது ஒரு பயிற்சி. தவம் செய்பவர்கள் தாங்கள் விரும்புவதைப் பெற அது வழி வகுக்கிறது. தவம் செய்பவர்கள் தவறான நோக்கத்துக்காக அதைப் பயன்படுத்தினால் அது அவர்கள் தவறு. நெருப்பு  ஒரு சக்தி. அதை ஒருவன் எதையாவது கொளுத்தப் பயன்படுத்தினால், அதற்கு நெருப்பு என்ன செய்யும்?''

''அப்படியானால், தவம் என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்தது இல்லையா?''

குரு சிரித்து விட்டு, ''இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால் தெய்வீகம் என்றால் என்ன என்று நான் விளக்க வேண்டும்! இப்படிச் சொல்லலாம். தவம் நமக்கு அசாதாரண சக்தியைக் கொடுக்கிறது. அசாதாராணமான எதையும் தெய்வீகம் என்று நினைப்பது நம் இயல்பு!'' என்றார்.

அருட்செல்வம் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, ''குருவே! தவம் என்பது ஒரு பயிற்சி என்று சொன்னீர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா?''

''தவம் என்பது மனத்தை ஒருமுகப்படுத்துவது என்று சொன்னேன். நம் மனத்தை ஒருமுகப்படுத்தி நாம் ஒரு நோக்கத்தை விரும்பும்போது அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் வலுப்படுகின்றன.''

''அப்படியானால் தவம் செய்யும்போது உண்ணாமலும் வேறு வகைகளிலும் உடலை வருத்திக் கொள்கிறோமே, அது ஏன்? மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் போதாதா? உடலை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?''

''நாம் ஒன்றை வேண்டும்போது அதற்கு ஒரு விலை கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். உடலை வருத்திக் கொள்வது போன்ற சிறு துன்பங்கள் நாம் விரும்புவதைப் பெற நாம் கொடுக்க முயலும் விலைதான்.''

''நன்றி குருவே! தவம் என்பது சொர்க்கத்துக்குப் போக நினைப்பவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய செயல் என்று இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.''

''சரி. இப்போது எதற்காகாகவாவது தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயா?'' 

''நான் துறவியாயிற்றே குரு? நான் எதற்கும் ஆசைப்படக் கூடாதே?''

''உனக்காக வேண்டாம். வேறு யாருக்காவது ஏதாவது வேண்டி நீ தவம் செய்யலாமே?''

சற்று நேர மௌனத்துக்குப் பின், ''குருவே! நான் துறவறம் பூண்ட பிறகு என் பெற்றோருக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியவில்லை. எனவே அவர்களுக்கு நிறையச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று வேண்டித் தவம் செய்யப் போகிறேன். செய்யலாம் அல்லவா?'' என்றான் அருட்செல்வம்.

''நிச்சயம் செய்யலாம். அவசியம் செய்யவும் வேண்டும். துறவறம் பூண்டாலும் பெற்றோர் உறவு விட்டுப் போகாது. விரைவிலேயே உன் பெற்றோரிடமிருந்து உனக்கு நல்ல செய்தி வரும். உன் தவத்துக்குப் பலன் ஏற்பட்டிருப்பதை அப்போது நீ புரிந்து கொள்வாய்!'' என்றார் குரு.

''நன்றி குருவே!'' என்றான் அருட்செல்வம்.

''நான்தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்'' என்றார் குரு சிரித்தபடியே.

''என்ன சொல்கிறீர்கள் குருவே?''

''உன்னிடம் பேசிய பிறகுதான் எனக்கும் ஒரு கடமை இருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. இப்போது நம் நாட்டில் கடும் வறட்சி நிலவுகிறது. நாட்டில் மழை பெய்து சுபீட்சம் நிலவ வேண்டும் என்று வேண்டி நான் தவம் செய்யப் போகிறேன்'' என்றார் குரு.

துறவறவியல்
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

பொருள்:  
தவம் செய்வதால் விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியும் என்பதால், இவ்வுலகிலேயே தவம் செய்ய வேண்டும்.
குறள் 266
குறள் 264
பொருட்பால்                                                                                              காமத்துப்பால்













2 comments: